வடமேல் மாகாணத்தில் முதலீடு செய்யத் தயாராகும் இந்தியா
இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்று வடமேல் மாகாணத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்க இந்திய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்
அதன்படி, இந்தியாவின் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் தலைமையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Fortress உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கடந்த 30ஆம் தேதி வடமேற்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் நசீர் அகமட்டை சந்தித்து வடமேற்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியிருந்தனர்.
வடமேற்கு மாகாணத்தை நாட்டின் கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி மையமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து வளங்களும் இந்த மாகாணத்தில் இருப்பதாகவும், மாகாணத்தில் முதலீடு செய்ய விரும்பும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநரிடம் கோரிக்கை
தகவல் தொழில்நுட்பம், இயற்கை எரிவாயு உற்பத்தி, ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி போன்ற துறைகளில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவித்த இந்திய முதலீட்டாளர்கள், அதற்குத் தேவையான பின்னணியையும் வசதிகளையும் செய்து தருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இம்மாதம் 19ஆம் திகதி 70க்கும் மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் குழுவொன்று வந்து வடமேற்கு மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயவுள்ளதாக முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளது.
அமுல் பால் நிறுவனம்
பல வருடங்களுக்கு முன்னர் வடமேல் மாகாண சபை இயங்கிக்கொண்டிருந்த போது இந்தியாவின் பிரபல அமுல் பால் நிறுவனம் வடமேல் மாகாண சபையுடன் இணைந்து மாவத்தகம பிரதேசத்தில் பால் உற்பத்தி நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததுடன் அதற்கு தேவையான காணிகளை கூட அவதானித்து தெரிவு செய்திருந்தது.
எனினும், பல்வேறு காரணங்களால் முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இலங்கையில் இத் திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.