பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது- அமெரிக்கா கருத்து-
இஸ்ரேலிற்கு பாரம்பரியமாக ஆதரவை வெளியிட்டு வந்த நாடுகளால் இஸ்ரேல் தற்போது இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இஸ்ரேல் தனிமைப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராஜதந்திரரீதியில் தனிமைப்படுத்தப்படுவது குறித்து கரிசனையடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்துள்ளார்.
இது நியாயமான கேள்வி சர்வதேச அமைப்புகளில் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இஸ்ரேலிற்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு கடந்தகாலங்களில் ஆதரவை வெளியிட்ட குரல்கள் கூடவேறுதிசையில் பயணிக்கின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இது எங்களிற்கு கரிசனையளிக்கின்றது இது இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை பாதுகாக்கும் மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை ஹமாசை தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் மூலமே இஸ்ரேல் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதை தவிர்க்க முடியும் என சுலிவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது எனவும் அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.