கவிதைகள்

“எப்பெயர் சொல்லி நான் உன்னை அழைக்க” …. கவிதை …. முல்லைஅமுதன்.

மனித தலைகளாய் வயல்வெளிகள்
நிறைந்திருக்க…கடவுளின் வயல் இதுவென்றார்கள்.
புனித நூல் ஒன்றை கையில் திணித்துச் சென்றவன்
தூரத்தில் அவர்களுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தான்.
நூலின் உள்ளே அனைத்தும் இரத்த வரலாறுகளாய் சொற்கள்….
உயரே எரிந்துகொண்டிருக்கும்
சூரியன் தன்னை ஒளித்து..மறைந்து பார்ப்பது போலிருந்தது..
கையில் கூரிய ஆயுதத்தைக் கொடுத்து
அந்த மானைக் கொண்டுவா என்கிறாள் மனைவி.
என் கைப்பையில் கஞ்சாவைப் புதைத்துவிட்டு,
குற்றவாளி என்றார்கள்.
ஆங்காங்கே யார்யாரோவெல்லாம்
மலைப்பிரசங்கம் செய்கிறார்கள்.
எப்பெயர் சொல்லி நான் உன்னை அழைக்க?
நண்பனா?துரோகியா??
நண்பனை தூரமாக்கிக்கொள்கிறேன்.
துரோகியை பக்கத்தில் அழைக்கிறேன்.
உன் கைகளால் நான் இறந்திடல் வேண்டும் என்பது
தலையின் எழுத்து என்பது விதியாயிற்று.
இந்த வன்மம் நிறைந்த உலகில்
புதைக்கப்படுகையில்..
யாராவது குற்றம் செய்தவர்கள்
என்
உடல் மீது மண்ணை வாரி எறியலாம்.


முல்லைஅமுதன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *