நடுகைக்காரி! …. 66 …. ஏலையா க.முருகதாசன்.

(ஆற்றா மாக்காள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டினி ஞாலத்து வாழ்வோர் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே
-மணிமேகலை)
பக்கத்து வகுப்பில் சமயபாடம் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியை தர்மேஸ்வரி வகுப்பு ஆரம்பித்ததம் சமய பாடப் புத்தகத்தில் உள்ள தேவாரங்களை வாசித்து அதன் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
சமண சமயத்தில் இருந்து மீண்டும் சைவசமயத்துக்கு மாறிய திருநாவுக்கரசரை சுண்ணாம்பு அறையில் பூட்டிய பல்லவ மன்னனின் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த அசிரியை தர்மேஸ்வரி மாசில் வீணையும் மாலை மதியமும் என்ற வரிகளை மாணவர்களுக்குச் சொன்னாலும் அவரின் காது கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொன்ன கீரிமலைக் கதையைக் காதைக் கூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார்.
படிக்கிற பிள்ளையளைக் கெடுக்கிற மாதிரி அருவருக்கத்தக்க கதையளை,அதுவும் குமர்ப்பிள்ளையள் படிக்கிற வகுப்பிலை சொல்லிக் கொண்டிருக்கிறார் இன்றைக்கு இதை ஸ்ராப் ரூமிலை வைச்சு எல்லாரிட்டையும் சொல்ல வேண்டும் வாறது வரட்டும் இவருக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் விடுறதில்லை வாறது வரட்டும் என்று முடிவெடுக்னகிறார் ஆசிரியை தர்மேஸ்வரி.
எல்லா வகுப்புகளும் சுவரால் பிரிக்கப்பட்டிருந்தாலும் வகுப்பின் கூரைக்கும் சுவருக்கும் இடையில் அரை மீற்றர் இடைவெளி இருக்கும்.
இந்த இடைவெளியில்தான் இரண்டு வகுப்புகளுக்கு ஒன்றாக ஒலிபெருக்கிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கும்;,காலை மாலையில் தேவாரம் சொல்வதாக இருந்தாலென்ன அதிபர் ஏதாவது அறிவித்தல்களைச் சொல்வதாகவிருந்தாலும் இந்த ஒலிபெருக்கிப் பெட்டி மூலமாக மாணவர்கள் ஆசிரியர்கள் கேடடுக் கொள்வார்கள்.
இந்த இடைவெளிக்குள்ளாலைதான் அடுத்த வகுப்பில் பாடங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஆசிரிய ஆசிரியைகளில் குரல் பக்கத்து வகுப்புக்குக் கேட்கும்.
ஏற்கனவே கறுவல் செல்லத்தரை மாஸ்ரரைப் பற்றி, அவர் மாணவர்களுக்கு படிப்பிக்கிற நேரத்தைவிட தேவையில்லாத வம்புக் கதைகளைச் சொல்லி நேரத்தை வீணடிக்கிறார் என ஒரு குற்றச்சாட்டு அரசல்புரசலாக கொலிஜ்ஜில் உலா வந்து கொண்டிருந்தது.
எந்தக் கடுமையாக பாடமாகவிருந்தாலும் அதை எளிதாக விளங்குகிற மாதிரி மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் கறுவல் செல்லத்தரை மாஸ்ரர் கெட்டிக்காரர்.
மாணவர்கள் எப்பொழுதும் குதூகல மனத்தோடு இருக்க வேண்டும்.ஐயோ இந்தப் பாடமா என்று அந்தப் பாட ஆசிரியர் வகுப்புக்;குள் நுழைந்தவுடனேயே மாணவர்கள் பதட்டமடையக்கூடாது என்று நினைப்பவர.;
ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் எப்ப நாற்பத்தைந்து நிமிசம் முடியும் எனக் காத்திருந்து பாடம் முடிவடைவதற்கான மணி அடித்ததும் அப்பாடா என மனசுக்குள் மகிழும் மாணவர்களாக தனது வகுப்ப மாணவர்கள் இருக்கக்கூடாது அவர்கள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியான கதைகளைச் சொல்லி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்துவார்.
இதே கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் எட்டாம் வகுப்பிற்கும் ஆங்கிலம் பாடம் எடுக்கிறவர்;.ஆனால் அந்த வகுப்பில் எஸ்.எஸ்.சி வகுப்பு மாணவர்களோடு முசுப்பாத்தியாகக் கதைப்பது போல கதைப்பது இல்லை.
அவர்களோடும் கதைப்பார் அது கோவில் சம்பந்தமாக இருக்கும்.வெள்ளிக்கிழமைகளில் யார் யார்இன்றைக்கு அப்பா அம்மாவோடு கோவிலுக்குப் போவீர்கள் என்று கேட்பார்.
ஓவ்வொரு மாணவனையும் பார்த்து என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்பார்.சில மாணவர்கள் தனக்குப் பிட்டுப் பிடிக்கும் என்பார்கள்,சிலர் இடியப்பம் பிடிக்கும் என்பார்கள்,சிலர் தோசை பிடிக்கும் என்பார்கள்.
கோப்பையில் போட்ட சாப்பாட்டின் மி;ச்த்தை என்ன செய்வீர்கள் என்று கேட்டால் மாணவர்கள் கொட்டுவம் இல்லாட்டில் நாய்க்குப் போடுவம் என்று மாணவ மாணவிகள் சொன்னால் அப்படியெல்லாம் கொட்டக்கூடாது,அம்மாவிட்டைச் சொல்லி அளவாகப் போட்டு சாப்பிட வேணும் என்பார்.
சில நாடுகளிலை ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத வறுமை நிலைகளில் பல பேர் இருக்கினம்,உங்கடை அப்பா கஷ்டப்பட்டு உழகை;க உங்கடை அம்மா உருசியான சாப்பாடெல்லாம் சமைச்சுத் தாறா அதை மனசிலை வைச்சு சாப்பாட்டைக் கொட்டக்கூடாது ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும் உயிர்காக்கும் கவசம் என்று கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்ல மாணவன் ஒருவன் சேர் உணவுதான் நாம் உயிரோடிருப்பதற்குக் காரணமா என்று கேட்க உணவுதான் நாம் உயிரோடிருப்பதற்குக் காரணம்,நாம் உண்ணும் உணவு செமிபாடடையும் போது,எமது இரைப்பையோடும் குடலோடும் அமைந்த சிறிய நுண்மையான உறுப்புக்கள் உறிஞ்சி எடுத்து அதனை இரத்தமாக மாற்றகின்றன.
ஓவ்வொருவருடைய எலும்புக்குளளும்; இருக்கும் மச்சை என்ற பொருளே இரத்தத்தை உற்பத்தி செய்கிறது என்றவர் நான் இப்ப ஒரு பாடலைச் சொல்கிறன்,ஆனால் இது உங்களுடைய தமிழ்ப் பாடத்தில் இல்லை,இருந்தாலும் உணவின் முக்கியத்துவத்தை சொல்லும் பாடல் இது
மணிமேகலை என்ற புத்தகத்தில் இது பாடலாக இருக்கிறது,நீங்கள் பத்தாம் வகுப்பில் இதைப் படிப்பீர்கள் என்றவர் மணிமேகலையில் வரும்
ஆற்றா மாக்காள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
மண்டினி ஞாலத்து வாழ்வோர் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தேரே
என்று சொன்னவர் மாணவர்களுக்கு பாடல் முழுவதையும் விளங்கப்படுத்தாமல் பசியால் வாடுபவர்களுக்கு பசி போக்க உணவளிப்பது என்பது அவர்கள் உயிரோடிருப்பதற்கே,அதனால்தான் இப்பாடலின் கடைசி வரியாகவுள்ள உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என சொல்லி விளங்கப்படுத்தியவர் சாப்பாடு உருசியில்லாவிட்டாலும் உணவுக்கு மதிப்புக் கொடுத்து சாப்பிட வேணும் கொட்டக்கூடாது என்று சொல்ல இனிமேல் நீங்கள் சொன்னமாதிரி நடப்பம் சேர் என்ற மாணவன் ஒருவன் எதையோ சாப்பிடடுக் கொண்டே சொல்வதைக் கண்டுபிடித்தவர் என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்க அவனுக்குப் பக்கத்தில் இருந்த மாணவன் சேர் புழுக்கொடியல் தின்கிறான் என்கிறான்.
வகுப்பு நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது என்றவர் தின்கிறது என்று சொல்லக்கூடாது சாப்பிடுகிறது என்றுதான் சொல்ல வேணும்.தின்கிறது என்பது ஆடு மாடு குழை திண்பது என்று வரும்.மனிதர்கள் என்றால் சாப்பிடுவது என்றுதான் வரும் என்று விளங்கப்படுத்தினார்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு என்னென்ன புத்திமதிகளைச் சொல்ல வேணுமோ அதை பாடத்தின் நடுவில் சொல்வதும் பத்தாம் வகுப்பு மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்த எதையெல்லாம் சொல்ல வேணுமோ அவற்றை எந்தவிதமான முசுப்பாத்தி உணர்வும் இல்லாமல் யதார்த்தமாக சொல்வதில் அவர் வல்லவர்தான்.
அவர் நாடகங்களை எழுதி இயக்குவதிலும் கெட்டிக்காரர்.அதனால் அவர் சம்பவங்களை இயல்பாகச் சொல்லுவார்,சிரிக்காமல் இரசிக்கும்படி சொல்லுவார்.
வகுப்பில் மட்டுந்தான் மாணவர்களோடு இப்படிக் கதைப்பார்.வகுப்புக்கு வெளியே தனது வகுப்பு மாணவ மாணவிகளை நெத்திமூட்டில் சந்தித்தாலும் அவர்கள் வேறு வகுப்பு மாணவர்கள் போலவும் அவர்கள் யாரோ நான் யாரோ என்பது போலவும் நடந்து கொள்வார்.வகுப்பில் தான் கதைத்த விடயங்களை தன்னைக் கண்டதும் நினைவுபடுத்துவதான சூழ்நிலையை முகபாவத்தாலேயோ அர்த்தமான சிரிப்பாலையோ ஏற்படுத்தமாட்டார்.
எட்டாம் வகுப்பில் படிப்பிக்கிற கறுவல் செல்லத்துரை மாஸ்ரரா பத்தாம் வகுப்பில் படிப்பிக்கிறவர் என வியப்படைய வைப்பார்,மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் போல இருக்கும் அவரின் நடத்தை.
மாணவர்களைப் பேச்சாலும் நடத்தையாலும் கட்டிப் போடுபவர்தான் கறுவல் செல்லத்துரை மாஸ்ரர்.
மத்தியானச் சாப்பாடு முடிந்ததன் பின்பு வீட்டுக்குப் போய் சாப்பிடாத ஆசிரிய ஆசிரியைகளும்,வீட்டுக்குப் போய் சாப்பிட்டிட்டு கெதியிலை வரும் ஆசிரியர்களும் ஸ்ராப் றூமில் கூடிக் கதைப்பது வழக்கம்.
ஓவ்வொருவரும் தமது மாணவர்களைப் பற்றியும்,அரசியல் சமூகம் பற்றியும் இன்னும் கோவில்குளம் பற்றியும் கதைப்பார்கள்.அதில் வாக்குவாதங்களும் ஏற்படும்.கொஞ்சம் தடித்த வார்த்தைகளையும் சிலர் பயன்படுத்தவார்கள்.
கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் தனது அனுபவத்தை பகிர்ந்து கதைத்ததை ஒட்டுக் கேட்ட ஆசிரியை தர்மேஸ்வரி கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் மாணவர் விடுதியில் சாப்பிட்டு வருவதற்கிடையில் அங்கிருந்தவர்களுக்குச் சொல்ல,சிலர் அதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.ஆனால் சிலர் இண்டைக்கு அவரிட்டை கேட்டாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் ஸ்ராப் றூமுக்குள் நுழைகிறார்.
(தொடரும்)
![]()