மாவீரர் நாளும் கதைகளின் உலாவலும்! …. ஏலையா க. முருகதாசன்.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் நாள் நெருங்கும் போது திரு.வே.பிரபாகரனைப் பற்றி பல கதைகள் உலாவத் தொடங்கிவிடும்..
தமிழீழ விடுதலைக்காக தனது குடும்பத்தையே ஆகுதியாக்கியவர் என்ற செய்தி பலருக்கு வேதனையைத் தந்திருந்தது.
இதில் சிறுவன் செல்வன் பி.பாலச்சந்திரன் சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தி பலரைக் கொதிப்படையச் செய்துமிருந்தது.
காலப் போக்கில் செல்வன் பி.பாலச்சந்திரன் இறக்கவில்லை,திரு.வே.பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிரோடுதான் இருக்கிறார்கள் இவ்வருட மாவீரர் நாளன்று ஏதோ ஒரு நாட்டில் நடைபெறவிருக்கும் மாவீரர் நாளன்று சமூகமளிப்பார்கள் என்ற கதை உலாவத் தொடங்கிவிட்டது.
சிலர் வெளிநாடொன்றில் அவர் எலும்பு சம்பந்தமான மருத்துவப் படிப்பு படிப்பதாகவும் சொல்லி வரும் வேளையில் இன்னும் சிலரோ தாயும் மகளும் இலங்கையில்தான் இருக்கிறார்கள் எனச் சொல்லி வகின்றனர்.இதை திரு:வே.பிரபாகரனின் சகோதரியார் சொன்னதாக ஒரு கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க அண்மையில் பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் திரு.குலம் எழதிய நினைவழியா நாட்கள் என்ற ஒரு நூலை வெளியீடு செய்திருந்தது.
அப்பொழுது அங்கு உரையாற்றிய ஒருவர் இப்படியான கதைகள் உலா வருவதாகவும் தயவு செய்து இப்படியான கதைகளை நம்பாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார்.
இலங்கைத் தமிழர்களை எப்படியெல்லாம் குழப்பலாம் என்பதை உலகமே அறிந்து வைத்திருக்கின்றது.இலங்கை அரசுடன் நேசக்கரம் நீட்டி தமிழருக்கான பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்று எத்தனிக்கும் காலங்களில் இத்தகு கதைகள் உலா வருவதும் எடுக்;கப்படும் முயற்சிகளுக்கு அவை தடைக்கல்லாக இருப்பதும் நீர்த்துப் போவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் விடயமாகும்.
இப்படியான கதை உலாவலுக்கு இந்திய புலனாய்வப் பிரிவும் காரணமாக இருக்கலாம் என்பது ஒரு சாராரின் கருத்தாகவும் இருக்கின்றது.
இத்தகு கதை உலாவல் புடிச்ச முயலுக்கு மூன்று காலென்று நிற்போரை புளகாங்கிதம் கொள்ள வைத்து மெய்சிலிரிக்க வைத்து சன்னதம் ஆட வைக்கப் போகின்றது.நடந்து முடிந்த சம்பவங்களின் பயனாக பெறப்பட்ட விடயங்களை கற்பனைப்படுத்திப் பார்க்காமல் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்காமல் யதார்த்த நிலையை உணர்ந்து அதற்குத் தக்கதாக புத்திசாலித்தனமாக அரசியல் செய்வதே ஒரு இனத்திற்கு நல்லது.
ஒரு இனத்தை இழிச்சவாயர்களாக்குவதற்கு விடாமலிருப்பதே அறிவுபூர்வமான இனத்துக்குரிய காத்திரமாகும்.
வேண்டுமென்றே பொய்களைப் பரப்பிவிடுவதும் அந்தப் பொய்களை நம்பி இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என கற்பனையில் மூழ்குவதும் இலங்கைத் தமிழரின் குணாம்சமாகிவிட்டது.
சொல்லுவார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி என்ன என்று இலங்கைத் தமிழர் தமக்குத் தாமே கேள்வி கேட்க வேண்டும்.
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
என்பதற்கொப்ப இலங்கைத் தமிழர் தம்மை ஒழுங்கமைத்துக் கொள்ளல் வேண்டும்.
![]()