கட்டுரைகள்

“வசப்படுதல்” ….. ஏலையா க.முருகதாசன்.

 வசப்படுதல் என்பது எல்லா மனிதர்களையுமே ஆக்கிரமித்து நிற்கும் ஒரு உளவியல் தன்மையாகும்.

இந்த வசப்படுதல் என்பதில் ஒரு குறிப்பிட்ட சமூகமோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனமோதான் இதில் உள்ளடங்கியவர்கள் என்று சொல்ல முடியாது.

ஓட்டுமொத்த மனிதர்களுமே வசப்படுத்தலினால் உள்வாங்கப்பட்டவர்கள்தான்.

வசப்படுத்தலுக்கு எது காரணம் என்று ஆய்வு செய்கிற போது முக்கிய விடயமாகக் கருதப்படுவது எமது மனவடக்கவின்மையேதான் என்பது தெளிவாகின்றது.

இரசிப்புத்தன்மை எப்பொழுதும் மனதை இதப்படுத்தும்,பதப்படுத்தும்,உற்சாகத்தைக் கொடுக்கும்.

ஆனால் வசப்படுத்தல் மூலமாக் ஒருவர் தன்னை மனநோயரளி; நிலைக்கு ஒத்து நிலைக்கு அவரை அறியாமலே வந்துவிடுவார்.

உலக மக்கள் அனைவரிடமும் இந்நிலை இருந்த போதும்.ஆனால் வசப்படுதலுக்கும் வசப்படுத்தலுக்கும் காரணமாகவும் அதன் தாக்கம் கூடிக்குறைந்தும் இருப்பதற்க அந்தந்த இனக்குழுமங்களின் பண்பாட்டு விழுமியங்களும் அதற்கு அடிப்படையாக இருக்கின்றது.

இன வாரியாகவும்,மொழி வாரியாகவும்,மத வாரியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ள மக்கள் குழுமங்களில் வசப்படுதலும் வசப்படுத்தலும் வேறு வேறு விளைவுகளாகவே இருக்கின்றன.

இன்றைய சமகால தமிழரின் நிலவரத்தை அவர்களின் நாளாந்த வாழ்க்கையோடு ஒப்பிடுகையில்,அன்றாடம் அவர்ளின் செயல்பாடுகளைக் கவனிக்கையில் தமது வாழ்வு சார்ந்த பணிகளை ஒப்பிடுகையில் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களும் அவரவர் மனதில் பெரும் ஆட்சி செய்து வருவதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.

திரைப்படங்களைவிட தொலைக்காட்சி நாடகங்கள் தமிழர்கள் மத்தியில் பெரும் வசப்படுதலைச் செய்து வருகின்றன.

தொலைக்காட்சிச் செயல்பாடு என்பதும் அதில் இடம்பெறும் நிகழ்வுகள் எனள்பதும் ஒருபுறம் அவை யாவும் மக்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என்ற போதும் இன்னொரு புறம் அவை ஒரு வணிகமும் ஆகும் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

இன்று தொலைக்காட்சிச் சேவைகள் அதிகரித்து வருகின்றன.இந்த அதிகரிப்பினால் தத்தமது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வைப்பதற்காக மக்களின் மனங்களை கிளர்ந்தெழச் செய்து அவர்களை வசப்படுத்த பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தொலைக்காட்சி நாடகங்கள் மீது எம்மவர்கள் போதை மருந்து பயன்படுத்தியவர் போன்று ஒருவித இசைவாக்கத்திற்கு உட்பட்டவர்களாக வசப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

தொலைக்காட்சி நாடகங்களில் சிலர் வைத்துள்ள பற்று வியப்பைத் தருவதாக இருக்கின்றது.அவரவர் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நாடகங்களைப்: பற்றியே எந்நேரமும் உரையாடுவது தொட்டு நித்திரைக்குப் போகும் நேரத்தில்கூட நாளைக்கு தாம் பார்க்கும் நாடகத்தின் அடுத்த கட்டம் அல்லது தொடர் எப்படியாக அமைந்திருக்கும் என்பதை நினைத்துக் கொள்வதால் ஒழுங்கான நித்திரையில்லாமல் தவிப்பவர்களும் உண்டு.

தொலைபேசி உரையாடல்களில் தமது இரத்த உறவு உறவினர்களுக்கு தமது நண்பர்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல் மனம் வருந்துதல் போன்று,அவள் சுபாங்கி என்ன ஆட்டம் பேபாடுகிறாள் பார் அவளின்ரை முகத்திரை கெதியிலை கிழியும் என்பது போலவும்,அவா என்ன திறமான பொம்பிளையே மணவாளன் அடிக்கடி வந்து போறான் புருசன் வீட்டிலை இல்லாத நேரம் பார்த்து,இவனைத்தான் அவள் காதலித்தவள் கல்யாணம் செய்யவென்றிருக்கு கடைசியிலை குழும்பிப் போச்சு,ஏன் சுபாங்கியின்ரை பருசன் மட்டுமே திறமானவனே அவரும் அப்படியும் இப்படியுந்தான் என்று தாம் பார்க்கும் சீரியல்களில் வசப்பட்டு அதுபற்றியே சதா பேசிக் கொள்வோரைப் பார்க்க முடிகின்றது.

அடுப்படிக்குள் சமையல் வேலையில் ஈடுபடும் போதுகூட தொலைபேசியை ஒலிபெருக்கி முறையில் வைத்துவிட்டு பேசுவதும் பேச்சுக்கிடையில் உப்புப் பேபாடவில்லை என்று நினைத்துக் கொண்டு இரண்டாவது முறையும் கறிக்கு உப்புப போடுவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

இதில் ஆண்களும் சளைத்தவர்கள் அல்லஅவர்கள் அமசடக்கான இரகசியக் கள்ளர்கள்.தாம் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதே இல்லை எனப் பலரைக் குறை சொல்லி நம்ப வைத்துவிட்டு இரகசியமாக பார்ப்பார்கள்.

இவர்களில் பலர் இப்பத்தைய சீரியல்கள் பார்க்கிற மாதிரியா இருக்கிறது என உத்தமபுத்திரர்கள் போல் கதைத்துவிட்டு நசுக்கிடாமல் பார்ப்பவர்களும் உண்டு.

இந்தப் பூனையும் பால் குடிக்குமா,மிதிச்ச இடத்துப் புல்லும் சாகாத மனிதர் இவர் போல் யார் உளரோ என்பது போல நடந்து கொள்வார்கள்.

இத்தகையவர்களே அதிக வசப்படுத்தலுக்கு உட்பட்டவர்களாகவிருப்பார்கள்.

ஒரு திருமண விழாவில் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி எமக்கு நன்கு தெரிந்த கணவனும் மனைவியும் வருவதைக் கண்டு எமது இடத்தில் இடம் இருப்பதைக் சுட்டிக்காட்டி இருக்கச் சொன்னோம்.அவர்களும் இருந்தார்கள்.

உபசரித்துக் கொடுக்கப்பட்ட பலகாரத்துடன் அவரவர் விருப்பத்திற்கேற்ப கோப்பியையோ தேநீரையோ வாங்கிக் குடித்தபடி பலதும் பத்துமாக சிரித்துச் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தோம்.

நேரஞ் செல்லச் செல்ல நண்பர் இருப்புக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தார்.அவரின் முகத்தில் அவர் தவிப்பது தெரிந்தது.அவர்,நேரம் பன்னிரண்டரையாகுது சாப்பாட்டைக் குடுக்கிறாங்கள் இல்லை,ஐயரும் தான் படிச்ச மந்திரங்களைச் சொல்வதற்கென்றே வந்திருக்கிறார் போல,கெதியிலை தாலியைக் கட்டுவிக்கிறதுக்கு எனக்குப் பின்னேரம் எவ்வளவு அலுவல்கள் இருக்குது.

தாலி கட்டி முடிஞ்சுதென்றால் இவங்கள் சாப்பாட்டையும் கெதியிலை கொடுத்திட்டாங்களென்றால் மேடையிலை ஏறி நின்று காசைக் கொடுத்து படமும் எடுத்திட்டம் என்றால் கெதியிலை வீட்டை போயிடலாம் என்று புறுபுறுத்தக் கொண்டிருந்தார்.

கணவனின் பொறுமையின்மையப் பார்த்து மனைவியால் ஒன்றம் செய்ய முடியவில்லை அவரால் புன்னகைக்கத்தான் முடிந்தது.நண்பரோ உணவு ஒத்துக் கொள்ளாமல் வயிறு பிசையுமே அப்படி ஒரு முகபாவனையில் இருந்தார்.இருக்கையில் ஒழுங்காக இருக்கவும் அவரால் முடியவில்லை.

அவரைப் பார்க்க எனக்கே பொறுக்கவில்லை,ஏன் இவர் இப்படி குழம்புகிறார் என்று மனைவியிடம் கேட்க,மனைவி அவரிட்டையே கேளுங்கள் என்று சிரித்தார்.

நண்பர் எழும்பிப் போய்ச் சாப்பாடு போட்டுக் கொடுப்பதற்கு ஆயத்தப்படுத்தும் இடம் வரை போவதும் திரும்பி வந்து இருந்தபடியே விசரங்கள் லூசுகள் இன்னும் சாப்பாடு வரவில்லையாம் இனி எப்ப சாப்பாடு வந்து எப்ப சாப்பிட்டு என்று அலுத்துக் கொண்டிருந்தவர் இஞ்சரப்பா இது சரி வராது மக் டொனாசிலை ஏதாவது வாங்கிக் கொண்டு போவம் நேற்றையான் புட்டுக் கிடக்குதல்லே அதுக்கு முட்டையைப் பொரிச்சுக் புட்டுக்குள்ளை போட்டு கிளறி அதையும் சாப்பிடுவம் காசை பொம்பிளையின்ரை தாயின்ரை கையிலை குடுத்திட்டு வா என்று மனைவிக்குச் சொல்லி படபடுத்துக் கொண்டிருந்தார்.

இவர் ஏன் இவ்வளவு கடுகடுக்கிறார் அப்படி என்னதான் பெரிய அலுவல் இவருக்கு பின்னேரம் இருக்கப் போகுது என்று எங்களையும் யோசிக்க வைத்தவர் அடிக்கொருதரம் கைத்தொலைபேசியை எடுப்பதும் எதையோ பார்ப்பதுமாக இருந்தார்.

பொறுமையின் எல்லையைத் தொட்ட அவர்,நந்தினி சொன்னவளல்லே இண்டைக்கு எல்லாத்தையும் வெட்டவெளிச்சமாக்குவன் என்று எனக்கு நேற்றே தெரியும் எல்லாத்துக்கும் காரணம் நடராஜன் என்று அவர் சொல்ல நான் ஏதோ அவருடைய சொந்தக்காரரின் பிரச்சினை போல அதுதான் அவர் போகவேணும் என்று அவசரப்படுகிறார் என்று நினைத்துக் கொண்டு,யார் நந்தினி அவருக்கு என்ன பிரச்சினை உங்கடை சொந்;தக்காரரா என்று கேட்க,அவரின் மனைவி என்ரை மனுசன் நந்தினி சீரியலைச் சொல்லுகிறார் மூன்று மணிக்கு அது ஒளிபரப்பாகும் அதைப் பார்க்காட்டில் என்ரை மனுசனுக்கு நிம்மதியே இருக்காது என்றார்.

அதுதான் அவர் காலிலை சுடுதண்ணி ஊத்தினமாதிரி அந்தரப்பட்டவரோ என்று கேட்டு பலமாக வாய்விட்டுச் சிரிக்க எனது மனைவி இப்பிடிச் சிரிக்காதீர்கள் என்று தொடையில் கிள்ளினார்.

நண்பர் தொலைக்காட்சி நாடகங்கள் பார்ப்பதில் போதை மருந்துக்கு உட்பட்டவர் போன்று வசப்பட்டுவிட்டார்.

தொலைக்காட்சி நாடகங்களில் இலயித்து வசப்படுபவர்கள் நாளாந்த வீட்டு வேலைகளைச் செம்மையாகச் செய்வதில்iஈல,அரையும் குறையுமாக பேருக்கு செய்வதும் அதனால் கணவன் மனைவிக்கிடையில் சச்சரவுகள் ஏற்படுவதும் உண்டு.

இன்னும் சிலர் தமது கைத்தொலைபேசிகளில் இரவு முழுவதும் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்துவிட்டு அடுத்த நாள் பகல் பன்ளனிரண்டு மணிக்கு நித்திரை விட்டு எழும்புபவர்களும் உண்டு.

இதைவிட பஸ்,ரயில் பிரயாணங்களின்; போதுமகூட ; தமது கைத்தொலைபேசிகளில் தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பவர்களும் உண்டு.

இவையாவும் வசப்படுதலேயாகும்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்.வசப்படுதல் என்பதும் ஒருவித மனநோயேதான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *