கட்டுரைகள்

லித்துவேனியாவில் நேட்டோ உச்சி மாநாடு! உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமா?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

லித்துவேனியாவில் நேட்டோ நாடுகள் உச்சி மாநாட்டில் உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுமா என பலரும் அங்கலாய்த்துள்ளனர்.
நேட்டோ தலைவர்கள் இக் கூட்டணியில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
நேட்டோ கூட்டமைப்பின் மாநாடு தொடங்கும் முன்னர் பேசிய நேட்டோவின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோ கூட்டணியை மாற்றுவதற்கும் அதன் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் எனக் கூறினார்.
இந்த புதிய முடிவுகள், ஒரு புதிய மூலோபாயக் கருத்தை உள்ளடக்கியிருக்கும், அதாவது அதிக போட்டி மற்றும் ஆபத்தான உலகில் நேட்டோவை எவ்வாறு எதிர்காலத்தில் கொண்டு செல்வது என்பதற்கான வரைபடமாக இருக்கும் என்றார்.
உக்ரேனிய போர் முனையில் தோல்வியைத் தடுக்க, ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ துருப்புக்களை நேரடியாக ஈடுபடுத்த வேண்டுமென்ற பின்னணியில் நேட்டோ உச்சி மாநாடு நடக்க உள்ளது.
நேட்டோ மேலும் விரிவாக்கம் :
‘நேட்டோ’ (NATO) வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு, சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்ற காலத்தில் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய நாடுகளின் கூட்டு  பாதுகாப்பு அமைப்பாக உருவாக்கப் பட்டது .
ஆரம்பத்தில் நேட்டோ 1949ல் உருவாக்கப் பட்டபோது 12 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. தற்போது 31 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன . சோவியத் யூனியன் வீழ்ந்து, பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் ,14 புதிய நாடுகள் உறுப்பு நாடுகளாக நேட்டோவில் இணைக்கப் பட்டன.
இதன் பின் நேட்டோ கிழக்கு ஐரோப்பா நோக்கி விரிவடைந்து வந்ததுடன் ரஷ்யாவின் எதிர்ப்பை சம்பாதித்தது. யுகோஸ்லாவியா, ஆப்கானிஸ் தான், லிபியா மற்றும் பல நாடுகளில் நடைபெற்ற யுத்தங்களில் நேட்டோ தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. ஈராக்கில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற யுத்தத்திலும் நேட்டோ பங்காளியாக இருந்துள்ளது.
சோவியத் யூனியன் வீழ்ந்த பிறகு, அதன் தலைமையிலான வார்சா (WARSAW) ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் நேட்டோ கலைக்கப்படுவதற்கு பதிலாக மேலும் விரிவாக்கம் அடைந்து வருகிறது.
இதே வேளை ஆக்கஸ் (AUKUS) எனும் ஆஸ்திரேலியா, பிரிட்டன் அமெரிக்கா ராணுவக் கூட்டணி , குவாட் (QUAD) என்ற அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய ராணுவ கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன.
அமெரிக்கா ரஷ்யாவுடன் நேரடி போர்:
கடந்த சில வருடங்களாக உக்ரேனை நேட்டோவில் நிரந்தரமாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நேட்டோவின் வில்னியஸ் உச்சி மாநாடு, ரஷ்யாவுக்கு எதிரான அதன் போரை விரிவாக்க ஒப்புதல் வழங்கும். இது நடந்தால், உக்ரேன் நேட்டோவின் ஷரத்து 5 இன் கீழ் வந்து விட்டது என்பதே இதன் அர்த்தமாக இருக்கும். இதன் விளைவாக, அமெரிக்கா ரஷ்யாவுடன் போரில் இறங்க அந்த உடன்படிக்கையின்படி கடமைப்பட்டுள்ளது என்பதே அதன் அர்த்தமாக இருக்கும்.
இந்த ஆண்டு நேட்டோ உச்சிமாநாட்டில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளை நேட்டோ உறுப்பினராக சேர்ப்பது மற்றொரு முக்கிய அம்சமாக உள்ளது.
மறுபுறம், நேட்டோ உறுப்புரிமையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முனைப்பில் உக்ரைன் லட்சியமாக கொண்டுள்ளது.
இந்த நேட்டோ மாநாட்டிலும் உக்ரைன் பற்றி தான் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
ஆனாலும், நேட்டோவை கிழக்கு வரை விரிவாக்கம் செய்யும் வகையில் படைகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதான் ரஷியாவை மேலும் சீண்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாக உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது.
லித்துவேனியா தலைநகரான வில்னிசில் நடைபெறும் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கான போர் தொடங்கி 500 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இந்த போர் உலகம் முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்வீடன் நேட்டோவில் இணைவு :
இந்த உச்சி மாநாட்டில் உக்ரைன் மற்றும் ஸ்வீடன் நாடுகளை நேட்டோவில் இணைப்பது குறித்த விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல உக்ரைனுக்கு க்ளஸ்டர் வகை வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது குறித்தும் அதை பயன்படுத்த உக்ரைன் இசைவு தெரிவித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
ஆண்டு கணக்கில் உக்ரைன், ரஷ்ய போர் நீடிப்பது பொருளாதார ரீதியில் அனைத்து உலக நாடுகளுக்கும் நல்லதல்ல என வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், நேட்டோ உச்சி மாநாடு போரை முடிவுக்கு கொண்டு வருமா அல்லது போரை மேலும் தீவிரமாக்குமா என்பது குறித்து உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
எதிர்காலத்தில் உக்ரைனை நேட்டோவில் இணைப்பது பற்றி இக்கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 31 நேட்டோ உறுப்பு நாடுகளும் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை வழங்கவுள்ளன.
ரஷ்யாவுடனான யுத்தம் முடிவுற்றதும் நேட்டோவில் உக்ரைன் இணையலாம் என்ற அறிவிப்பை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்வீடனை நேட்டோவில் இணைப்பதற்கு துருக்கி தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. நீண்டகாலமாகவே குர்தீஷ் போராளிகளை ஆதரிப்பதாக கூறி நேட்டோவில் இணைய விடாமல் ஸ்வீடனுக்கு துருக்கி ஆதரவு வழங்கவில்லை. எனவே, துருக்கியின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து ஸ்வீடனை ஆதரிக்க துருக்கி முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *