இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் அங்கத்தினர் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடு!

உலகம் முழுவதும் பரவலாக வாழ்கின்ற இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் அங்கத்தினர் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் ஒரு காலக்கெடுவுக்குள் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசிடம் வேண்டுகோள். இது இன்னும் ஆறு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இருக்க வேண்டும்.

இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பின் அங்கத்தினர் உலகம் முழுவதும் பரவலாக வாழ்கின்றனர். இவர்களது முக்கிய நோக்கம் இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், முடிந்தளவு அவர்களின் குறைகளைக் களைவதுமாகும்.

இலங்கையில் செயல் திறனுள்ள மாகாண சபைகளை அமைப்பதற்காக உடனடியாக தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது இன்றைய நிலையில் தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக இருத்தல் வேண்டும். கடந்த பதினான்கு ஆண்டுகளில் தமிழர்கள் மேற்கொண்ட அனைத்து அரசியல் முயற்சிகளும் சமூகத்தை பெரியளவில் முன்னோக்கிக் கொண்டு செல்லவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. தற்போதைய அரசியல் யதார்த்தத்தின் கீழ், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல்படுத்தவல்ல ஓர் செயற்படும் மாகாணசபையினால் மட்டுமே இதனை அடைய முடியுமென பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர். இதற்கான தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், வடக்கு மற்றும் கிழக்கில் மாகாணசபைத் தேர்தலை ஒரு திட்டவட்டமான கால எல்லைக்குள் நடத்துவதற்கும் உறுதியான வாக்குறுதியை வழங்குமாறு கடந்த மே மாதம் 15 ஆம் திகதி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மாகாணசபைத் தேர்தல் நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலீடுகள் மற்றும் ஈடுபாடுகளை ஈர்ப்பதற்காக ஒன்றிணைந்து செயல்படுவது பற்றிய விடயங்களை ஆராய்வதற்காக ‘இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு’ (WTSL) இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வமாக உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை தேர்தல்களை ஏன் விரைவில் நடத்த வேண்டும்?

1. ஆயுதப்போர் முடிவடைந்து 14 வருடங்களாகியும் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்மக்களின் பொருளாதார, சமூக, வாழ்வாதார, இருப்புப் பிரச்சினைகள் மற்றும் இன்னல்கள் ஆகியவை இன்னமும் தீரவில்லை. மாறாக, இலங்கைத் தொல்பொருள் திணைக்களம், மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்கள், இனவாத அமைப்புகள் ஆகியவற்றின் தீவிர இன, மத, பொருளாதார, இட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினால் நிலைமைகள் இன்னமும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. அத்துடன் கட்டுப்பாடற்ற சமூகச் சீர்கேடுகள் தமிழ்ச் சமுதாயத்தின் அத்திவாரத்தையே ஆட்டங் கண்டு உருக்குலைக்கும் நிலைமையே நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

2. இந்த இழிநிலைமைகளுக்கு மிகவும் முக்கிய காரணம் வடக்கு-–கிழக்கு வாழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தியும், பாதுகாத்தும், பேணியும் இயங்குவதானதும் செயற்திறனும் கொண்ட அரசியல் கட்டமைப்பு ஒன்று இல்லாமையே.

3. இத்தகைய அரசியல் கட்டமைப்பிற்கான தமிழர்களின் கோரிக்கைளாக “சுயநிர்ணயம்”, “தனியரசு”, “சமஷ்டி”, “இணைந்த வடக்கு-கிழக்கு”, “புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் உள்ளடங்கலான சர்வஜன வாக்கெடுப்பு”, ஆகிய பல்வேறு தீர்வு யோசனைகள் தமிழ்த்தரப்பினர்களால் முன்வைக்கப்படுகின்றன.

4. இந்த வெவ்வேறு கோரிக்கைகளுக்கு நியாயங்கள் பல இருக்கின்றன. இருப்பினும், நியாயம், விருப்பம் என்பனவற்றைத் தாண்டி, உள்நாடு, அண்டைய நாடுகள், மற்றும் சர்வதேசங்களின் சமகால யதார்த்தங்கள், நிதர்சனங்கள், நடைமுறைச் சாத்தியங்களையும் அவதானிக்கவேண்டும். காலம் தாழ்த்துவதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கவனத்தில் கொள்ளவேண்டியது வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மீது உண்மையான கரிசனைகள் கொண்ட அனைவரதும் பாரிய பொறுப்பாகும்.

5. மேற்குறிப்பிட்ட அரசியல் கோரிக்கைகளை எய்துவதானால், இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் ஆதரவும், அங்கீகாரமும் பெறப்பட்டு இலங்கை அரசியல்யாப்பில் ஏற்படுத்தக்கூடிய மாற்றம் மூலமாகவே அது சாத்தியமாகும் என்பதும், வேறு வழிகள் எதுவும் இல்லை என்பதுமே உண்மை நிலைமையாகும். அத்தகைய அரசியல்யாப்பு மாற்றம் இன்றைய இன அரசியல் சூழலில் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதுவும் தெள்ளத்தெளிவான விடயமாகும்.

6. ஆகையால், நாம் விரும்பியோ, விரும்பாமலோ, தற்போதைக்கு மாகாணசபை நிர்வாகமே ஓரளவேனும் உகந்த தீர்வாகும். இதில் நிவர்த்தி செய்யப்படவேண்டிய பல குறைபாடுகளும் பலவீனங்களும் நிச்சயமாக உண்டெனினும், வடக்கு-கிழக்கு வாழ் மக்கள்வசமுள்ள ஏற்கனவே அரசியல்யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு அரசியல் நிர்வாகக்கட்டமைப்பு இந்த மாகாணசபை முறைமையே.

7. மாகாணசபைத் தேர்தல்களை நீண்ட காலங்களாக நடத்தாமல் இருப்பது பல்வேறு பொருளாதார, சமூக, மற்றும் தமிழர்களின் இருப்பு சம்பந்தமான பிரச்சினைகளையும், பேரழிவுகளையும் உருவாக்குகிறது. இந்த மாகாணசபைகளை மறுபடியும் இயங்கவைத்து, அவை நிர்வாகத் திறமைகள் கொண்டவர்களால் செயற்திறன் மிக்கவையாக நடத்தப்பட்டு, அவற்றின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் குறிப்பாக அடையாளங் கண்டு, அரசியல் மற்றும் நீதிமன்றங்கள் மூலமான முன்னெடுப்புகளால் சீர்செய்து நடைமுறைப்படுத்துவதே எம் முன்னால் உள்ள நிதர்சனமான ஒரேயொரு நடைமுறைத் தேர்வாகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை கணிசமாக உருவாக்கும். மேலும் சமூக பிரச்சனைகளைக் குறைப்பதுடன், புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் இது வழிவகுக்கும்.

8. சுவாமி விவேகானந்தரின் “இலக்குகளை வைத்து எதையும் அடையாமல், ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஒரு நோக்கத்தில் கவனம் செலுத்துங்கள்” என்ற கூற்றும், திருவள்ளுவரின் “பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்” –– அதாவது “ஒரு செயலை, அதன் தாற்பரியம், அதற்கு வேண்டிய கருவிகள், தகுந்த காலம், அதற்கான வல்லமை, பொருத்தமான இடம் ஆகிய ஐந்து நிலைமைகளையும் மயக்கமில்லாது தெளிவாக எண்ணிய பின்னரே மேற்கொள்ள வேண்டும்” என்ற நல்மாந்தருக்கு அறிவுறுத்தும் குறளும் இங்கு நினைவுகூரத் தகுந்தவையாகும். மாகாணசபைக்கான தேர்தல்களை சாக்குப்போக்குகள் கூறாது தாமதமின்றி நடத்த இலங்கை ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் நாம் வலியுறுத்தவேண்டிய நேரமிது.

9. இத்தேர்தல்கள் வடக்கு-கிழக்கு மாகாண சபைகளுக்கு மட்டுமல்லாமல் இதர மாகாணங்களுக்கும் என்பதால் அது மற்றைய இன மக்களுக்கும் பயனுள்ள தேர்தலாக அமையும், ஜனநாயக விழுமியங்கள் நிலைநிறுத்தப்படும், அரசியல்யாப்பு முறையாக கடைப்பிடிக்கப்படும், மற்றும் சர்வாதிகாரத் தன்னிச்சை ஆட்சிக்கான நகர்வுகளைத் தடைப்படுத்தும். மேலும் தற்போதைய ஆட்சியாளர்களை விடுத்து ஒரு இளந்தலைமுறையினரின் அரசியல் பங்களிப்பையும், அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்க வாய்ப்பளிக்கும். தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாகாணசபை தீர்வாக அமையாதெனினும், பொருளாதாரம், கல்வி, சமூகம், அதிகாரப் பகிர்வு ஆகியனவற்றின் வளர்ச்சிகளில் கவனம் செலுத்தவும், சட்டமீறான பல் இன, மத, காணி ஆக்கிரமிப்பு சம்பந்தமான பிரச்சினைகளின் வீச்சைத் தணிக்கவும், அனைத்துத் தமிழர்களுக்கும் ஓரளவாவது செழிப்பை கொண்டுவரவும் வழிவகுக்கும்.

10. “இத்தேர்தல்கள் வேண்டாம்” எனச்சொல்பவர்கள் தாங்களோ, தங்கள் கட்சிகளோ இத்தேர்தல்களில் தோற்றுவிடுமோ என்ற ஐயத்தில் உழல்பவர்களாகவும், மேற்குறிப்பிட்ட நற்பயன்களுக்கு எதிரானவர்களாகவுமே கருதப்படுவர். அப்படியான நிலைப்பாடுள்ள வடக்கிலும் தெற்கிலும் உள்ள சகல தரப்பினருக்கும் இது பொருந்தும். இலங்கை ஜனாதிபதியோ, அரசாங்க அங்கத்தினர்களோ அல்லது அதிகாரத் தலைமைகளோ இத்தேர்தலை நடத்த முன்வரும் பட்சத்தில் அதனால் இவர்களுக்கும் அரசியல் பலன்கள் உண்டாகும்.

11. இவ்விடயத்தில் புலம்பெயர் மக்களாகிய எமக்கு பாரிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. மக்களுக்கு உதவ வேண்டும் என்ற இலக்கின் பின்னால் நமது ஒற்றுமையைக் காண்பிக்க நன் நம்பிக்கையை வளர்த்தல் வேண்டும். வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நலன் கருதி, துரிதகதியில் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலமைகளை சீர்செய்யவேண்டும். தொடர்ந்தும் காலத்தைக் கடத்துவதனால் நிலைமை மேலும் மோசமடையும். எனவே, எதுவித காலதாமதமும் இன்றி தக்க முயற்சிகளை முன்னெடுக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அதற்கு இப்போது அத்தியாவசியமானதும் உடனடியானதுமான எமது கடமையும் பொறுப்பும் வடகிழக்கில் ஆவது தேர்தலை நடாத்துமாறு அரசியல் அதிகார மையங்களை, குறிப்பாக ஜனாதிபதியையும், சகலதரப்பு அரசியல் தலைமைகளையும் கேட்டுக்கொள்வதும், அழுத்தங்களையும் உந்துதல்களையும் கொடுப்பதுமாகும். மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு மாகாண அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், சரியான அணுகுமுறைகள் மற்றும் தொடர்ச்சியான உந்துதல்களூடாக 13வது திருத்தச்சட்டத்தின் பிற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை, குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை, முழுமையாக அமுல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசுக்கு நாம் சர்வதேச ஆதரவுடன் அழுத்தம் கொடுக்க முடியும். இது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கும்போதும் , இயங்கும்போதும்தான்,அதற்கான செயற்பாடுகள் அரசியல் திகளால் முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களில் வட மாகாணசபைக்கு ஒரு ஐந்து வருட பதவிக் காலமும், கிழக்கு மாகாணசபைக்கு இரண்டு பதவிக் காலங்களும் இருந்தன. இதில் பல்வேறு நன்மைகள், தீமைகள், பிரச்சினைகள் இருந்தன. எனினும், மத்திய அரசின் கடும்போக்கு கொள்கைகளும், மாகாணசபை ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மை, தமிழ்த்தரப்பினரது உள்ளக அரசியல் குழறுபடிகள், தற்குறித்தனங்கள் ஆகியனவும் தீமைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணமாக இருந்தன என்பதும் உண்மையே. அவை மீண்டும் தொடராது பார்க்க வேண்டியதேயன்றி, மாகாணசபைத் தேர்தல்களை எதிர்ப்பதானது தொட்டியின் தண்ணீர் அழுக்காகி விட்டது என்பதற்காக அத்தண்ணீருடன் சேர்த்துப் பிள்ளையையும் வீசிவிடும் செயலுக்கு ஒப்பாகும்.

எனவே,

· புலம்பெயர் மக்களாகிய நாம் இலங்கை அரசாங்கத்தையும், குறிப்பாக தற்போதைய ஜனாதிபதியையும் மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்புகள் சம்பந்தகமாக கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும், அதில் வெற்றியடையவும், பாரியளவிலான மக்கள் ஆதரவையும் கையொப்பங்களையும் பெற எண்ணியுள்ளோம்.

· ஆரம்பக் கட்டமாக தற்போதைய அரசியலமைப்பின் கீழ் எமது மக்களுக்குச் செய்யக்கூடிய பொருளாதார, சமூக வளர்ச்சியையும், செழுமையையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

· நாம் இலங்கையிலோ அல்லது ஏனைய நாடுகளிலோ உள்ள எந்தவொரு கட்சிக்கும், அமைப்புக்கும் அல்லது குழுவுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயற்பட மாட்டோம் என்றும், மாகாணசபைத் தேர்தலின் ஜனநாயகச் செயற்பாடுகளுக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் தனி நபரோ கட்சி பேதமோ இன்றி முழுமையாக ஆதரவளிப்போம் என்பதையும், மாகாணசபைகளின் உடனடியான தேர்தலுக்காக மாத்திரம் கையெழுத்துப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் என்பதையும் உறுதிப்படுத்துகிறோம்.

· மாகாணசபை நமக்குக் கிடைத்த வெண்கலத்தட்டாக மட்டுமே இருந்தாலும், தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் அமுலிலுள்ள இந்த நிர்வாகமுறையை உபயோகிக்காது விடுவதும் உடைக்க முயல்வதும் சரியான செயலாகாது. இந்நிர்வாக முறைமைக்கு ஒருசில மெருகூட்டல்கள் தேவை. அதுவரை அதைச் செயற்திறனுடன் பயன்படுத்துவதே விவேகமாகும். மாறாக, அதை முறையாகப் பயன்படுத்தாமல் தங்கத்தட்டுதான் வேண்டுமெனக் கோருவது தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நலன்சார் அறிவுடமையாகாது. நாம் அனைவரும் இவ்வழிகளில் சிந்திக்க ஆரம்பித்தால் நமது இலக்கை என்றோ ஒருநாள் அடைய முடியும் என்பது எமது திடமான நம்பிக்கையாகும்.

· குறைந்தபட்சம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகள் தேர்தலையாவது வைக்குமாறு நாம் அரசுக்கு விடும் கோரிக்கை, நாட்டின் தற்போதைய நிதி நிலையில் பாரிய எதிர்விளைவை ஏற்படுத்தாது. ஏறத்தாழ கடந்த 7 ஆண்டுகளாக வட மாகாணசபை இயங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு தேர்தல்களை நடத்துவது இளைய வேட்பாளர்களையும் புதிய தலைமுறையையும் எதிர்கால தேர்தல்களில் ஊக்கமுடன் ஈடுபட வைக்கும். தமிழ்மக்களின் நலன் சார்ந்த எமது இம்முன்னெடுப்புகள் வெற்றியடைவதற்கு தயவுசெய்து உங்கள் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

ராஜ் சிவநாதன்

இணைப்பாளர், இலங்கைவாழ் தமிழர் நலன்விரும்பிகள் அமைப்பு (WTSL)

Australia/Sri-Lanka/Singapore/India/Canada/Europe/UK/USA 29 May, 2023 (wtsl@myyahoo.com)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *