கங்காரு தேசம் – 3 …! ஶ்ரீரஞ்சனி

மெல்பேர்ன் விமானநிலையத்தில் பாமினி வழியனுப்பிவிட சிட்னிவிமானநிலையத்தில் விஜி வந்து என்னைச் சந்திருந்தா. பாமினிவீட்டுத் தோடையைப் பார்த்துப் பிரமித்துப்போயிருந்த நான், விஜியின்வீட்டில் செழித்தோங்கிருந்த மாமரத்தையும் வாழைகளையும் பார்த்தும்அதிலேயே சில நிமிடங்கள் நின்றுவிட்டேன். அவுஸ்திரேலியாவுக்குப்புலம்பெயர்ந்திருக்கலாமே என மீளவும் ஆதங்கமாகவிருந்தது.விஜியின் மனம் மட்டுமன்றி வீடும் விசாலமானதாகவேஇருந்தது. காலையில் சுப்ரபாதம் கேட்டுக்கொண்டு ருசிமிக்க மசாலாதேநீர் பருகுவதும்,பின்னர் விஜி பரிமாறும் விதம்விதமான சாப்பாட்டைவயிறாராச் சாப்பிடுவதும், அதன்பின்னர் ஊர் சுற்றிவிட்டு வெளியில்சாப்பிடுவதுமாகப் பொழுது ரம்மியமாகப் போனது.

சோலைபோல எங்குமே பூச்செடிகளால் சூழப்பட்டிருந்த TheGrounds of Alexandria என்ற உணவகத்தில் ஒரு நாள் உணவருந்தினோம்.அது மனதுக்கும் மிகவும் உவப்பாகவிருந்தது. அங்கெடுத்திருந்தபடங்களை FBஇல் விஜி பகிர்ந்ததும், நான் சிட்னியில் நிற்கிறேன்என்பதை அறிந்த ஜெயந்தி தங்களின் வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தார்.ஒரே காலத்தில் மகாஜனாவில் படித்திருந்த ஜெயந்தியைப் பின்னர்கொழும்பில், ஆசிரியர்களுக்கான பட்டறை ஒன்றின்போதுகடைசியாகச் சந்தித்திருக்கிறேன். தொலைத்த உறவுகளுடன் மீளவும்இணைய உதவிசெய்கின்றFBஇன் தயவால் 35 வருடங்களின் பின்னர்மீளவும் நாம் சந்தித்தோம்.

இலக்கிய விழா ஒன்றைச் சிட்னியிலும் ஒழுங்குசெய்திருந்தமையால் பூபதி அண்ணாவும் அங்கு வந்திருந்தார். அவரைப்பேட்டிகண்ட SBS ரேமண்ட் செல்வராஜா என்னையும் பேட்டிகாண்பதற்கான ஒழுங்குகளைப் பூபதி அண்ணா செய்திருந்தார்.
அந்த நேர்காணலின்போது, 10 நிமிடத்துக்குள் கிட்டத்தட்ட 10கேள்விகளுக்கு அவசரமாகப் பதிலளிக்க வேண்டியிருந்ததுவேறுபட்டதொரு அனுபவமாக இருந்தது.

சிட்னி விழாவில் எனது நூலுக்கான அறிமுகத்தைக் கவிஞர்செளந்தரி கணேசன் மிகச் சிறப்பாகச் செய்திருந்தா. சபையினர்அனைவரையும் தன்பால் கட்டிப்போடும் பேச்சுத் திறன் அவவில்நிறைந்திருந்தது. ‘ஒன்றே வேறே’ பற்றி விமர்சனம்செய்யக்கிடைத்ததில் மகிழ்ச்சியடைவதாக அவ கூறினாலும், அவஅதனை அறிமுகம் செய்தது என் அதிஷ்டமே!முருகபூபதி அண்ணாவின் ‘கதைத்தொகுப்பின் கதை’ என்றநூலுக்கான கானா பிரபாவின் விமர்சனத்தை அம்பிகா அசோகபாலன்என்ற மாணவி வாசித்தா. அவவின் தமிழ் உச்சரிப்புத் திறனும்வாசிப்புத் திறனும் அதிசயப்பட வைத்தன. எழுத்தாளர்களான காவலூர்ராஜதுரை, நீர்வை பொன்னையன், தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன்,வீரகேசரி ஊடகவியலாளர் கார்மேகம் போன்றோரின் பிள்ளைகளைப்பூபதி அண்ணா அறிமுகப்படுத்தியிருந்தார்.
“அக்காவை எழுதவிட்டிட்டு நாங்க எல்லாவேலையும் செய்வம்,அக்கா இடையில எங்காவது அகன்றால் ஓடிப்போய் எழுதினதைவாசிப்பம், திருத்தவேணும், இப்ப வாசிக்காதே என அக்கா சொல்லுவா,”
எனத் தாமரைச்செல்வியின் தங்கை எழுத்தாளர் விமல் பரம்கூறியபோது, எழுத்தாளர்களின் குடும்பத்தவர்களில் இப்படிஎத்தனைபேர் ஆதரவாகவிருக்கிறார்கள், அக்கா அதிஷ்டசாலிதான் எனமனமார வாழ்த்தினேன்.

அங்கிருந்து விஜியின் குடும்பத்தினரின் விருந்தொன்றுக்குஐங்கரன் விக்னேஸ்வரா என்னைக் கூட்டிச்சென்றார். அவரின்தந்தையாரான டொக்டர் விக்னேஸ்வராவிடம் நாங்கள் சிகிச்சைக்காகச்சென்றிருக்கிறோம் என்பதை நினைத்தபோது பூமியின் வடிவம்தட்டையல்ல என்பது மீளவும் நிரூபணமானது.
விருந்தில் விஜிக்கருகே போயிருந்தபோது முன்னாலிருந்ததுசகமாணவி நளினி என்பதை நம்பமுடியவில்லை. அவவுடனானஉரையாடலின்போது காய்கறிகள் எதையும் அவர்கள் வாங்குவதில்லைஎன்றும், அவர்களின் வளவுக்குள்ளே எல்லாம் இருக்கின்றதென்றும்அறிந்தபோது அவுஸ்திரேலியாவில் வாழ்வோரில் சற்றுப்பொறாமையாக இருந்தது.

அடுத்தநாள் பூபாலசிங்கம், அவரின் மனைவி தவராணி,மகாகவியின் மகள் இனியாள் எனச் சில மகாஜனன்களுடன் தாயகம்வானொலி விக்கி, மதியவுணவுக்கு கூட்டிச்சென்றிருந்தார்.அதுவரையில் ரொறன்ரோவில் இருப்பதுபோல, தமிழ்ப்பெயரட்டைகளுடன் அடுக்கடுக்காகத் தமிழ்க் கடைகள்அவுஸ்திரேலியாவில் இல்லையோ என யோசித்த என்னை,‘நாமிருக்கிறோம் பார்’ என எங்கும் தமிழ் மணமும் தமிழ்ஒலியுமாகவிருந்த அந்த வீதி வரவேற்றது.

தனியே பயணம்செய்த நான் மீளவும் ரொறன்ரோவுக்குவரும்போதாவது சேர்ந்து வரவேண்டுமென மகள் அபியும் சிட்னிக்குவந்துசேர்ந்திருந்தா. அவ வந்தன்று ஓயாமல் அலைகள் ஆரவாரம்செய்துகொண்டிருந்த கடலையும், கடற்கரை முழுவதும் அற்புதமானகலைவடிவங்களின் கண்காட்சியையும் பார்த்து மகிழ்ந்தோம். பின்னர்அருகருகேயிருக்கும் ஒப்ரா ஹவுஸ், துறைமுகம், துறைமுகப் பாலம்எனச் சிட்னியில் பெயர்பெற்ற இடங்களைத் தரிசித்தோம். இந்தியன்படத்தில் வரும் ‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ என்றபாடல் இங்கேதான் படமாக்கப்பட்டிருந்தது.

அபி ஒரு தாவரவுண்ணி, விலங்குகளை அடைத்துவைத்துப்பார்க்கக்கூடாதென்று நினைப்பவ. அதனால் அவுஸ்திரேலியவிலங்குகளை அவற்றின் வாழிடத்தில் பார்க்கலாமெனவிளம்பரப்படுத்தியிருந்த சேவையொன்றுக்கு இங்கிருந்தே முன்பதிவுசெய்திருந்தா. நாங்களும் உற்சாகமாகச் சென்றிருந்தோம்.கங்காருகளைக் கண்டதும் மனமெங்கும் ஆர்ப்பரித்தது.அவ்வளவுதான். வேறெந்த விலங்கையும் பார்க்கமுடியாதெனக்காரணம் சொன்னனர். அது அசல் பகல் கொள்ளையாகவேபோய்விட்டது. “எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற சேர்ச்சுக்குப்போயிருந்தால் இதைவிடக் கனக்கக் கங்காருக்களைப்பார்த்திருக்கலாம்” என விஜி சிரித்தா.
அடுத்த நாள் மழைக்காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள்,நீர்வீழ்ச்சிகள் என வெவ்வேறு தரைத்தோற்றங்கள் சங்கமித்திருக்கும்இடத்திலிருக்கும் Blue Mountainsக்குப் போயிருந்தோம். யூகலிப்ரஸ்மரங்கள் நிறைந்திருக்கும் பகுதியில் அந்தக் குன்றுகள் இருப்பதால்,யூகலிப்ரஸ் இலைகளிலிருந்து வெளியேறும் எண்ணெய்த்துளிகளிலும்,சூழவிருக்கும் நீர்நிலைகளிலிருந்து ஆவியாகும் நீராவியிலும் சூரியஒளி பட்டுதெறிக்கும்போது, அவை நீலமாகக் காட்சியளிக்கின்றன.குறுகிய அலைநீளமுள்ள நீலநிறமே அதிகம் சிதறடிக்கப்படுவதால்வானமும் கடலும் நீலமாக இருப்பதைப்போல அவையும் நீலமாகஇருப்பதால் அவை நீல மலைகள் என்றழைக்கப்படுகின்றன.

அத்துடன் மூன்று மலைக்குன்றுகள் ஒன்றாகவிருப்பதால்அவற்றை மூன்று சகோதரிகள் என்றும் கூறுவர். அந்த மலைகள்தொடர்பான தொன்மங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானதாக இருப்பதுமூன்று மகள்களையும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மந்திரவாதிஒருவர் அவர்களை மலையாக்கியிருக்கிறார் என்பதுதான். பின்னர்அவரும் தப்பவேண்டியிருந்தபோது கிளியாக உருமாறி தனதுமந்திரக்கோலை வாயில் காவிக்கொண்டு பறந்தபோது, மந்திரக்கோலைஅவர் தவறவிட்டுவிட்டதால் மூன்று சகோதரிகளும் இன்னும்மலையாகவே உள்ளனர் என்கிறது அந்தத் தொன்மங்கள்.ஒரு காலத்தில் கைதிகளைத்தான் அவுஸ்திரேலியாவுக்குஅனுப்பினார்களாம் என்பதால் அங்கிருப்பவர்கள் அவர்களின்வாரிசுகளே என அந்த நாட்டைப் பற்றிச் சிலருக்கொரு தாழ்வானஅபிப்பிராயம் இருக்கிறது.
ஆனால், அதன் காலநிலையை,அங்கிருக்கும் வசதிகளை அறிந்தால் அது வாழ்வதற்கு சிறந்ததொருநாடென்பது தெரியும். (அதற்காகக் கனடா நல்ல நாடு இல்லையெனச்சொல்லவில்லை. என்னதான் குளிர் இருந்தாலும் இங்குவாழக்கிடைத்தது பெரும்பாக்கியமென்றே நான் சொல்வேன்.)அவுஸ்திரேலியாவில் மழை நிலத்தை நனைக்குமளவில்தான்பெய்யுமென எழுத்தாளர் ஜெயமோகன் அவரது பயணக் கட்டுரையில்எழுதியிருக்கிறார். ஆனால் அவுஸ்திரேலியாவில் நான் சென்றஇடங்கள் அனைத்திலும் எந்த நாளும் மழையாகவே இருந்தது.
வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்திருந்தனர், ரயில் உள்ளடங்கலாகப்போக்குவரத்தும் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்தது.அவுஸ்ரேலியாவில் மழைக்காடுகள் முதல் பாலைவனம் ஈறாகவேறுபட்ட தரைத்தோற்றங்களும் காலநிலையும் இருக்கிறது என்பதேஉண்மை.
அவுஸ்ரேலியாவிலிருக்கும் தாவரவியல் பூங்காக்களைஅனுபவிப்பதற்குக் கட்டணம் ஏதுமில்லை என்பதும் மின்சக்தியைச்சேமித்து பூமியின் வளத்துக்கு உதவும்வகையில் dryer இல்லாமல்ஊரில் செய்வதுபோல உடுப்புக்களை அந்த மக்கள் வெளியில்தான்காயவிடுகிறார்கள் என்பதும் அங்குள்ள வேறு சில சிறப்புகள். மேலும்லண்டனைப் போல அங்கும் credit card ஐப் பயன்படுத்தி எந்தரெயினிலும் பஸ்சிலும் போக்குவரத்துச் செய்யமுடியுமென்பதுஇன்னொரு அனுகூலமாக இருந்தது. இங்கென்றால் பொதுப்போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு சரியான அளவில்பணமோ அல்லது ஒரு ரொக்கனோ அல்லது presto card ஒன்றோவைத்திருக்க வேண்டுமென்பது சிலவேளைகளில் அசெளகரியமாகஇருப்பதுண்டு.
எனக்கு அங்கு பிடிக்காமலிருந்தது விடயங்களில் ஒன்றுவீட்டுக்குள்ளும் குளிராகவிருப்பதால் நன்கு உடுத்தித்தான்இருக்கவேண்டும். மற்றது கழிவறை தனித்திருப்பதால் கழுவுவதற்குகுளியலறைக்குச் செல்லவேண்டும்.
அடுத்ததாக கல்வி தொடர்பாகப் பார்த்தால், ரொறன்ரோவில்இருப்பதுபோல gifted என மாணவர்களை இனம்கண்டு பாடவிதானத்தைஅவர்களுக்கேற்ற வகையில் சவாலுடையதாக மாற்றிக் கற்பிக்கும்அமைப்பு அங்கில்லை, மாறாக லண்டனில் இருக்கும் gramer schoolsபோல மெல்பேர்ன் மற்றும் சிட்னியில் தரமான பாடசாலைகள் எனக்கருதப்படும் selective schools இருக்கின்றன. மாணவர் ஒருவரின்புத்திக்கூர்மையே gifted இனம்காணலில் பயன்படுத்தப்படுவதால்அதற்காகத் தயார்செய்யமுடியாது, ஆனால் selective schoolsகளில்இடம்பிடிப்பதற்காக தனிப்பட்ட ரியூசன்களுக்கு மாணவர்களைக்கொண்டோடித் திரியும் பெற்றோரையும் அவர்களின் அழுத்தம்நிறைந்த வாழ்வைப் பற்றியும் கேள்விப்பட்டேன். என் தொழில்ஆசிரியர் என்பதாலும் எங்களின் குடும்பப் பெறுமானங்களில் கல்விமுதலிடத்தை வகிப்பதாலும் நாங்கள் ரொறன்ரோவில் இருக்கிறோம்என்பதில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் அவுஸ்ரேலியாவில்மாணவர்களுக்கு வழங்கப்படும் பணமான Ausstudyஐ இங்குவழங்கப்படும் child tax உடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன்.அவ்வாறே பல்கலைக்கழத்தில் இருப்பவர்களுக்கு இங்குள்ள OSAPபோன்ற உதவி அங்கும் கிடைக்கிறது. டொக்டர் ஞானசேகரன் அவரதுபயணக்கதையில் இலங்கையில் பெற்றோர் கஷ்டப்பட்டுப்படிப்பிப்பதால் பின்னர் பிள்ளைகள் பெற்றோரைப் பராமரிக்கிறார்கள்.அவுஸ்ரேலியாவில் அரசாங்கம் படிப்பிப்பதால் அங்கு நிலைமைஅப்படியில்லை என எழுதியுள்ளார். ஆனால் இலங்கையில்பல்கலைக்கழகக் கல்வி இலவசமானது, அத்துடன் அங்கும் வருமானம்குறைந்தவர்களுக்கு மாதமாதம் ஒரு குறித்த தொகையை அரசாங்கம்கொடுக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியது. உதாரணத்துக்கு,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நானிருந்தபோது இருப்பிடம், கல்வியாவுமே இலவசமானவையாகவே இருந்தன. என் பெற்றோர் அரசஊழியர்களாக இருந்ததால் வருடத்தில் மூன்று முறை இலவசமாகதெல்லிப்பழைக்கு ரயிலில் பயணிக்கக்கூடியதாகவும் இருந்தது.சாப்பாட்டுக்கு மட்டுமே செலவிருந்தது, ஆனால் இங்கு என்பிள்ளைகளுக்கு எல்லாமே கட்டணம் செலுத்தவேண்டியவையாகவேஉள்ளன. எனவே அந்த ஒப்பீடு சரியானதெனச் சொல்லமுடியாது.
அதற்கு கலாசார மாற்றத்தை வேண்டுமானால் குறைகூறலாம்.மேலும் கனடாவைப் போலன்றி இலங்கையிலும் லண்டனிலும்இருப்பதுபோல அவுஸ்ரேலியாவில் உயர்தரப் பாடசாலையிலிருந்துநேரடியாக மருத்துவக் கல்லூரிக்குப் போகமுடிகிறது. அதனால் அங்கும்நான்கு வருடப் பல்கலைக்கழகச் செலவு மீதமாகிறது எனலாம்.மணியனின் பயணக்கட்டுரைகளை அந்த நாட்களில்வாசித்தபோது அப்படி ஒன்றை நானும் எழுதுவேனெனநினைத்திருக்கவில்லை. இதை எழுதக் கிடைத்த சந்தர்ப்பத்துக்கும்,இதனை முழுமையாகப் பிரசுரிக்கும் அக்னி குஞ்சு வலைத்தளத்துக்கும்,என் நூலை இரண்டு இடங்களில் அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தப்பயணத்துக்குச் சிறப்புச் சேர்த்த பூபதி அண்ணாவுக்கும் மிக்கநன்றியுடையேன்.
-முற்றும்
![]()