கட்டுரைகள்
பஞ்சாபில் மீண்டும் எழுச்சிபெறும் காலிஸ்தான் கோரிக்கை!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

சீக்கிய தனிநாடு கோரிக்கையின் வரலாற்றுப் பின்னணி…..
இந்தியாவின் “உணவு கூடையாக” திகழ்ந்து வரும் பஞ்சாப் மாநிலம், ஒப்பீட்டளவில் வளர்ச்சியான மாநிலமாக விளங்கினாலும், அங்கே தற்போது வேலையின்மை பிரச்சனைகளும், விவசாய பிரச்னைகளும் அதன் சமூக மற்றும் பொருளாதார நிலையை சுருக்கி விட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பஞ்சாப் :இந்தியாவின் உணவு கூடை

சமீபத்தில், அம்ரித் பால் சிங்கின் ஆதரவாளர் ஒருவர் பல வழக்குகளில் கைதானார். ஆனால், சிங்கின் ஆதரவாளர்கள் போலீஸ் ஸ்டேஷனை ஆயுதங்களுடன் முற்றுகையிட்ட நிலையில், நீதிமன்றம் வாயிலாக போலீசார் அவரை விடுவித்தனர். மாநில முதல்வர் பகவந்த் சிங் மானால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த அம்ரித்பால் சிங், முன்பு தொழில் நிமித்தம் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். நிகழ் காலத்தில் இந்தியா திரும்பி வந்து காலிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரித்து வருகிறார். இவர் தொடர்பாக மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருவதோடு, இவரால் பெரும் பிரச்னை வரும் என எச்சரிக்கையும் அளித்துள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அம்ரித்பால் சிங் எனும் சீக்கிய மத பிரமுகர், நாடு திரும்பிய ஒரு மாத காலத்தில், ”வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
”வாரிஸ் பஞ்சாப் டி” – பஞ்சாபின்வாரிசுகள்
1984இல் கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே சீக்கிய தலைவரை பார்த்து உத்வேகம் அடைந்தவர் தற்போது அம்ரித்பால் சிங் எனும் இளம் சீக்கிய பிரமுகர். சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டுமென கூறி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே, 1980ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். பின் 1984ஆம் ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் மூலம் அவர் கொல்லப்பட்டார்.
ஆனால், பஞ்சாபில் இப்போது ‘ஆம் ஆத்மி கட்சி’ ஆட்சி நடத்தும் நிலையில், காலிஸ்தான் பிரிவினை வாதம் மீண்டும் தலைதுாக்கியுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பிரதமர் மோடி மிகவும் கவலை அடைந்துள்ளார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி வந்தவுடன், இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத சக்திகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை தடுத்தது. 
இந்நிலையில், காலிஸ்தான் தீவிரவாதம் மீண்டும் தலைதுாக்கினால் பல பிரச்னைகள் எழுந்து, பஞ்சாபிலும், அகில இந்திய அளவிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்னை கெட்டுவிடும் என இந்திய மத்திய அரசு ஊகிக்கின்றது.
காலிஸ்தானுக்காக பிரசாரம் :
பிந்தரன்வாலேவிற்கு அடுத்து அம்ரித் பால் சிங் தான் காலிஸ்தானுக்காக தற்போது தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். 30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் இயக்கத்தின் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுபாடு, அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் போதைப்பொருட்கள் போன்ற பிரச்சனைகளுக்கு, சீக்கியர்களுக்கென தனி தேசம் ஒதுக்கப்படுவதே தீர்வாக அமையும் என அம்ரித்பால் சிங் பேசி வருகிறார்.
காலிஸ்தான் தீவிரவாத எழுச்சி:
தற்போது பஞ்சாபில் ஆட்சிக்கு வந்துள்ள ஆம் ஆத்மி கட்சி, மறைமுகமாக காலிஸ்தான் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது. அதனால் தான் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
1980களில் சீக்கியர்களுக்கு தனி தேசம் வேண்டுமென எழுந்த இந்த கிளர்ச்சி, பத்தாண்டுகள் வரை நீடித்து வந்தது. இந்த காலகட்டத்தில், பல முக்கிய தலைவர்களும், பொது மக்களும் பாதிக்கப்பட்டனர். பல இளம் சீக்கியர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையால் ஏற்பட்ட காயங்களின் சுவடுகளை பஞ்சாப் மாநிலம் இன்றும் சுமந்து கொண்டு தான் இருக்கிறது.
சீக்கியர்களுக்கு தனி நாடு:
சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டும் என கூறப்படும் கோரிக்கை இன்னும் தொடர்ந்து வந்தாலும், 1990களில் அந்த கோரிக்கை அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. பஞ்சாபில் உள்ள அனைத்து மக்களும் அம்ரித்பால் சிங் போன்றோருக்கும், இது போன்ற வன்முறைக்கும் ஆதரவு அளிக்கவில்லை.
குரு நானக் தேவ் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கும் பர்மிந்தர் சிங் கூற்றுப்படி இப்போது சீக்கிய தனி தேசம் வேண்டுமென கூறுவோரின் எண்ணிக்கை மிகவும் சொற்ப அளவிலேயே இருக்கிறது என்கிறார் அவர்.
வாரிஸ் பஞ்சாப் டி” ( பஞ்சாப்பின் வாரிசுகள் )
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துபாயிலிருந்து இந்தியா திரும்பிய அம்ரித்பால் சிங், அவர் அடுத்த ஒரு மாத காலத்தில், ”வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பிற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஒரு இனப்படுகொலை செய்வதற்கு அவர்களது தேசத்தையோ, கிராமங்களையோ அழிக்க வேண்டும் என்று தேவையில்லை. அவர்களது கலாசார பாரம்பரியங்களிலிருந்து அந்த மக்களை பிரிப்பதும், பின்னர் அவர்களது மதங்களிலிருந்து பிரிப்பதும் இனப்படுகொலைதான்” என்கிற அம்ரித்பால் சிங்கின் கூற்றால் இந்திய மத்திய அரசின் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளார்.
காலிஸ்தான் உருவாக்க பின்னணி:
காலிஸ்தான் (Khalistan movement) என்பது சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது தான் காலிஸ்தான் இயக்கம்.
பஞ்சாபில் 1970களின் இறுதியில் தொடங்கிய கிளர்ச்சியானது காலிஸ்தான் கோரிக்கையாக எழுந்தது. கிளர்ச்சிக்கான அடிப்படைக் காரணங்கள் மிகவும் சிக்கலானவை. முதன்மைக் காரணங்களாக சீக்கியத்திற்கும் பஞ்சாபி மொழிக்கும் போதிய அங்கீகாரம் வழங்காததும் 1947இலிருந்து ஆட்சியிலிருந்த இந்தியக் காங்கிரசு அரசின் அக்கறையின்மை என சீக்கியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தி மொழி திணிப்பு :
1950களில் பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளும் பஞ்சாபி மாணவர்களுக்கு இந்தி கற்பித்ததால் பெற்றோர்களும் சமூகத் தலைவர்களும் கவலையுற்றனர். மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும் பஞ்சாபின் அலுவல்மொழியாக பஞ்சாபியை மீளமைக்கவும் பஞ்சாப் தனிமாநில இயக்கம் துவங்கப்பட்டது. பஞ்சாப் தனிமாநில இயக்கத்தை ஏப்ரல் 14, 1955 அன்று இந்திய அரசு தடை செய்தது.
இந்தக் காலகட்டத்தில் சீக்கியர்கள் பெரும் கேலிகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாயினர் என்பதை மறுக்க முடியாது. அமைதிவழியில் போராடியவர்களும் அப்பாவி மக்கள் தடிகளாலும் கற்களாலும் அடிக்கப்பட்டனர்; பலர் கைதாயினர், சீக்கிய கோயில்களில் தேடுதல் வேட்டை நடந்து, சேதமாக்கப்பட்டது.
பஞ்சாப் மாகாணம் சீக்கியர்களின் பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்திய நிலப்பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வருவருதற்கு முன் சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதிகளை சீக்கிய அரச பரம்பரையினர் ஆண்டனர். இந்திய பாகிஸ்தானிய பிரிவினைக்குப் பின் பெருமளவில் சீக்கியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்திற்கு குடியேறினர்.
மொழிவாரி மாநில எழுச்சி :
பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் அடிப்படையில் அதிக சீக்கியர்கள் வகித்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என அகாலி தளம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்திய அரசு முதலில் இதை நிராகரித்தாலும் பின்னர் நடந்த தொடர் கோரிக்கைகளாலும் வன்முறைச் சம்பவங்களாலும் இந்திய ஒன்றிய அரசு இதற்கு உடன்பட்டது. ஆனால் தங்களுக்கு அதிக அதிகாரம் ஒன்றிய அரசால் தரப்படவில்லை என்ற காரணத்தால் காலிஸ்தான் தேசிய இயக்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. காலிஸ்தானுக்கு என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஆதரவு திரட்ட முயற்சித்தது. 1980களில் காலிஸ்தான் அமைப்பால், காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்கப்பட்டு அதற்கெனத் தனி நாணயத்தையும் அஞ்சல் தலையையும் வெளியிட்டதும் அறிந்ததே.
உலகளாவிய வாக்கெடுப்பு :
இந்தியாவில் சீக்கிய மக்கள் தங்கள் தனநாட்டு கோரிக்கையை வலுப்படுத்த உலகளாவிய ரீதியில் நடந்த காலிஸ்தான் வாக்கெடுப்புகளை நடாத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் 31, 2021 அன்று இங்கிலாந்தில் இருந்து தொடங்கிய வாக்கெடுப்பு சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி முழுவதும் பல நகரங்களில் நடைபெற்று, சுமார் 450,000 சீக்கியர்கள் வாக்களித்துள்ளனர்.
பஞ்சாப் வாக்கெடுப்பு ஆணையம் (PRC), வாக்கெடுப்புகள் மற்றும் நேரடி ஜனநாயகம் குறித்த அணிசேரா நிபுணர்களின் குழுவானது, வாக்களிக்கும் நடைமுறையை வெளிப்படைத்தன்மையையும், சர்வதேச அளவிலான நேர்மையான தேர்தல் என இணங்கி உறுதிப்படுத்துகிறது.
காலிஸ்தான் பொது வாக்கெடுப்பை அதிகாரபூர்வமாக எந்தவொரு மேற்கத்தய நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. ஆயினும் பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ள “காலிஸ்தான் வாக்கெடுப்பு” முடிந்து போன காலிஸ்தான் பிரச்சினையை மீண்டும் தூண்டிவிட்டு இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் சீக்கியர்கள் அனைவரும் அமைதியான முறையில், தேசிய ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து வருகிறார்கள் என இந்திய அரசு கூறினாலும், புலம் பெயர் சீக்கிய மக்களால் நடைபெறவுள்ள சுதந்திர தாயகத்திற்கான காலிஸ்தான் வாக்கெடுப்பும், ”வாரிஸ் பஞ்சாப் டி”
அம்ரித்பால் சிங் எனும் சீக்கிய மத பிரமுகரின் வருகையும் இந்திய
அரசியலில் மட்டுமல்ல, சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
![]()