ஊர் முழ வேட்டி!…. சிறுகதை…. 6 …. அண்டனூர் சுரா.

குகன் கொலைக்குத் தானுமொரு காரணமென நினைத்தாள் சுகந்தி. அவளது
உள்ளக்கிடக்கை அப்படியாகச் சொல்லி உரல் உலக்கையாக இடித்துக்கொண்டது. அவளது மனஅசை உள்ளுக்குள் வெந்து வெளியில் அழுகையாக முட்டியது.
குகன் கொலையை விடவும் கொலைக்கான காரணம் அவளை ரொம்பவே வதைத்தது. அவளது நெஞ்சாங்கூட்டுக்குள் அனல் மூட்டி, நாசித்துளைகள் வழியே வெங்கனல் சுழன்றது. அக்கொலை குறித்து உள்ளுக்குள் புழுங்கி ஊமையாக அழுதவள் மனத்தால் அழுகிக்கொண்டிருந்தாள். மன அழுகலின் முடை நாற்றம் கபாலத்திற்குள் வேகு கட்டியது.
குகன் குறித்து யாரிடமேனும் சொல்லி அழவேண்டும் போலிருந்தது. யாரிடம் சொல்வதென அவள் வாசலில் நின்று அவள் வீட்டையொட்டி ஒடுங்கியோடும் ஒழுங்கையில் போகிறவர் வருகிறவர்களைப் பார்த்தாள். கொலைக்குக் காரணம் தானெனத் தெரிய வருகையில் தன் அப்பன் என்னாவார் என்பதை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதை நினைக்கையில் நாக்கில் எச்சிலோடு எச்சிலாகச் சுரந்த சொற்கள் நாக்கின் அடியில் கரைந்து பனித்து தொண்டைக்குள் இறங்கின.
குகனை அவள் ஒரு தலைக்காதலனாக விரும்பியது அவளுக்கும் நிழலுக்கும் தெரிந்த ரகசியமாக இருந்தது. இதயம் என்ன விரும்புகிறது, என்று பல நேரம் மூளைக்குத் தெரியாததைப் போலக் குகன் மீது அவள் கொண்ட காதல் இருந்தது. அவன் மீதான மன ஈர்ப்பு காதலா, அன்பா, பாசமா அல்லது இதற்குள் அடங்காத வேறொன்றா என்கிற முடிவுக்கு அவளால் வரமுடியவில்லை. இன்னதென்று பிரித்தறிய முடியாத அந்த ஈர்ப்பை அவள் காதல் என்றே நம்பினாள். அவளது மனத்தரையில் குகனின் முகம் விழுந்ததும் அவளையும் அறியாமல் காதல் செடியாக முளைத்து வளர்ந்து விழித்திரையின் வழியே எட்டிப் பார்த்தது.
கண்கள் வெளிப்படுத்தும் காதல் உணர்வை அவளால் உதடுகளின் வழியே வெளிப்படுத்த முடியவில்லை. அப்பன் வெளுத்தத் துணிகளுக்குக் கூலி வாங்கச் செல்கையில் அவன் முன் வெட்கமுற்றும் கால் கட்டை விரலால் வட்டங்கட்டியும் காதல் சமிக்ஞை செய்தாள். இந்தச் சமிக்ஞை அவளைத் தவிர யார் பார்வையிலும் விழுந்திருக்கவில்லை.
குகன் இப்போது உயிரோடு இல்லை என்பதை அவளால் நினைக்கவோ, மனதிற்குள் உருட்டவோ முடியவில்லை. அவன் மீதான அவளது காதலை வாயுடைத்துச் சொல்வதற்குள்ளாக சூனியமாகிப் போனதை நினைக்கையில் நெஞ்சுமேட்டில் பாறாங்கல் ஏறி இறங்கியது.
குகன் குறித்து யாரிடமேனும் சொல்லி அழுதிட நினைத்தாள் சுகந்தி. அவளாக இதை யாரிடம் சொல்வது? யாரும் கேட்காமல் தான்தோன்றியாக இதை யாரிடம் சொல்ல முடியும், மனதிற்குள் அசைபோட்டவள் குகனது முகத்தையும் அவனுடனான கடைசித் தருணத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்தாள். அவனது பரந்து விரிந்த கருத்த முகம் குதிரைக்கால் குளம்படியில் பட்டு கருப்புக் குடைக் காளான் உடைவதைப் போன்று உடைந்தது.
குகனின் கொலை அவளது மனதை நெருஞ்சியாக அறுத்தது. முள் தலைக்குள் வளர்ந்து கபாலத்திற்குள் வதைத்தது. அவன் குறித்த நினைவுகளால் அவளது தலை வெடித்துவிடுவதைப்
போலிருந்தது. சுகந்தி வீட்டிற்குள்ளாக முடங்கிக் கிடந்தாள். அவள் வீட்டுச் சேவலின் கூவல் நச்சுப்பாம்பைத் தின்றுவிட்டு அகவும் மயிலின் அரவமாகக் கேட்டது.
ஊர் குகன் கொலையுண்ட கதையை மூச்சுக்கட்டி பேசியது. யாரும் அக்கொலையுடன் சுகந்தியைத் தொடர்புபடுத்தி பேசவில்லை. ஆனாலும் அக்கொலையுடன் அவளைத் தொடர்புபடுத்திக் கொண்டாள். முடுக்குத் தெருவில், முச்சந்தியில் பலரும் அவளது பெயரைச் சுட்டி உரக்கப் பேசுவதாக கற்பனை செய்தாள். அதனால் அவளது தூக்கத்தின் மென்னிழை அறுந்து, இமை குருத்துகளில் முட்கள் முளைத்தன.
குகன் மேலத்தெரு குடிவளைவில் இரத்தமும் சகதியுமாக இறந்துகிடந்ததைக் கீழத்தெரு ஜனங்கள் கண்களில் வயிற்றைக் கட்டி பார்த்து வந்தார்கள். தன் குஞ்சில் ஒன்றை இழந்துவிட்ட காக்கைகளின் கரை ஓலமாய் அத்தெரு சஞ்சலத்தது. ஒரு தலைமுறை தூக்கம் துக்கம் கட்டிக்கொண்டு இமைகளுக்குள் வருத்தி உருட்டியது.
வாங்கரிவாளால் அவன் முதுகில் வெட்டுப்பட்டு கிடந்தான். அரிவாளின் மூக்கு முதுகில் ஆழமாக இறங்கியிருந்தது. கொத்திய அரிவாளைக் கொத்தியவனால் கூட உருவி எடுக்க முடியவில்லை. அரிவாள் அவனது முதுகில் முளைத்த வாலாக இருந்தது. இரத்தம் பீறிட்டு தரை நனைந்திருந்தது. குப்புற விழுந்ததில் தாவங்கொட்டை கல்லில் அடிபட்டு இரண்டு பற்கள் உதிர்ந்து, முகவாய் அமுக்கடி வாங்கியிருந்தது. கண்கள், நெற்றி, தலையில் இரத்தக்களறி. அவனது நாக்கு கடாப் பற்களுக்கிடையில் தள்ளியிருந்தது.
தன்னை பின்புறமாக மறைந்து நின்று கொத்தியவன் யாரென்று குகன் பார்த்திருப்பானோ, இல்லையோ! ஆனால் இந்தக் கோழைத்தனமான வேலையை யார் செய்திருப்பாரென்று அவன் ஊகித்திருப்பான்.
அவன் இறந்து பல மணி நேரம் கழித்தே நாய்கள் தெருவுக்குள் ஊளையிட்டன. காக்கைகள் வட்டங்கட்டி கரைந்தன.
சுகந்தி அப்போது குழம்புச்சட்டியில் படிந்திருந்த கடுப்பானில் ஓராப்பைச் சோற்றிட்டு, பிசைந்து, உருட்டி வாய்க்கு எறியப் போகையில் அலறல் ஓலமாகக் கேட்டது.
“அய்யோ, குகன் நம்மள விட்டுட்டு போய்ட்டான்டியோ” ஒருவர் ஓலமிடுகையில் வானம் இரத்தக் களறியாக மேற்கில் சுருண்டுக் கொண்டிருந்தது.
” என்னடியே சொல்றே?” ஊரும் வாயும் பதறி கேட்டன.
அவனது தாய் கடம்பி மார்பிலும் வயிற்றிலும் குத்திக்கொண்டு ஈரக்குலை நடுங்க பைத்தியம் கொண்டவளாட்டம் அலறி அடித்துக்கொண்டு அவன் இறந்து கிடந்த திசையை நோக்கிக் குறிப்பறிந்து ஓடினாள். அவள் பின்னே மொத்த கீழத்தெரு ஜனங்களும் அரிக்காடாய் ஓடினார்கள்.
கையில் கடுப்பான் உருண்டை வைத்திருந்த சுகந்தி, கடுப்பானை வாசலில் எறிந்துவிட்டு, வெளியே ஓடி வந்தாள். தெருவே ஈரக்குடலைக் கையில் பிடித்துக்கொண்டு மேலத்தெருவை நோக்கி ஓடியது. ” குகனுக்கு என்னாச்சு, எப்படியாச்சு,?” குற்றுயிரும் கொலை உயிருமாகக் கேட்டாள் சுகந்தி.
” செத்துப் பொயிட்டான்டி” என்றதும் சுகந்தியின் தலையில் கோடை இடி இறங்கியது. அவளால் ஓடவோ, பாயவோ முடியவில்லை. “ அவன் மீது நான் வச்ச ஆசையில கொள்ளி விழுந்துருச்சே” என்றவளாய் தலையில் அடித்துக்கொண்டு அதே இடத்தில் சரிந்தாள்.
குகனுக்கும் ராயனின் அக்கா மகள் குண்டலிக்கும் தொடுப்பு என்பதாக ஊருக்குள் அரசல்புரசலான பேச்சு இருந்தது. மேய்ச்சல் தரிசுக் காட்டில் சப்பாத்திக் கள்ளிகளில் குகன் – குண்டலி இருவரின் பெயரும்
எழுதப்பட்டிருந்ததைச் சுகந்தி ஒரு நாள் பார்த்திருந்தாள். குண்டலி என்கிற பெயரைச் சப்பாத்தி முள்ளால் கிறுக்கி அழித்துவிட்டு அவன் பெயரையொட்டி அவளது பெயர் சுகந்தியை எழுதிக் கொண்டாள்.
குகன் – குண்டலி பெயர்களைக் கள்ளிக்குக் கள்ளி எழுதிச் சென்றது குகனோ, குண்டலியோ அல்ல. அவர்களுடன் ஆடு, மாடுகள் மேய்க்கும் அவன் சோட்டுப் பையன்கள். சாரையோடு நாகத்தை இணைத்தும் புனைந்தும் பேசிப் பழகிய இவர்களுக்கு குண்டலியோடு குகனை முடிச்சிட்டுப் பேசி ஊருக்குள் கிடுக்கிட்டி அடித்தார்கள்.
மேய்ச்சல் காடு முழுவதும் குகன் – குண்டலி இருவரின் பெயரும் எழுதிக்கிடக்கிறது, என்பதைக் கேள்வியுற்ற ராயன் வாங்கரிவாளால் கள்ளிகளை வெட்டிச் சாய்த்தான். அவனது கோபம் கள்ளியின் மீதோ இதை எழுதியவர்கள் மீதோ இருந்திருக்கவில்லை. குண்டலி பெயரையொட்டியிருந்த குகன் மீதிருந்தது. மேய்ச்சல் காட்டுக் கள்ளியோடு அப்பெயர் நின்றுவிடவில்லை. ஊர்க் குளத்தங்கரை, கோவில், பாலக்கட்டைகளிலும் அப்பெயர் எழுதிக் கிடந்தன.![]()
குகன் எருமைகள் மேய்ப்பவன். குண்டலி பசுவும் காளைகளையும் மேய்த்தாள். எருமை மேயும் தரிசுக்காட்டை அவள் தேடி வந்ததற்கு அவனது திடகாத்திரம் காரணமாக இருந்தது. பசுவும் காளையும் மேம்புல் மேயவும் எருமைகள் காய்ந்த புற்களைத் தரையோடு கரண்டுவதுமாக இருந்தன. இரு வகை மாடுகளும் புல்லைத் தின்று வீடு திரும்பி ஒன்றுபோல அசைபோடுவதாக இருந்தாலும் பசுவும் எருமையும் ஒன்றல்ல என்று எருமைக்குத் தெரிந்ததைப் போல குகனுக்கும் தெரிந்தது. குகன், தான் கீழத்தெரான் என்பதை நினைத்து அவளிடமிருந்து அவன் விலகினான். அவன் விலக, அவனை நோக்கி இவள் அதிகம் ஊர்ந்தாள்.
மேய்ச்சல் காட்டில் காளை ஏக்காரமிட்டுக்கொண்டு பசுவின் மீது ஏறி விழுந்தது. அப்போது அவன் கடைக்கண்ணால் பார்த்து முன் பற்களால் சிரித்தான். அவன் சிரிப்பில் வெட்கி, உருகி வழிந்தாள். அவள் மேய்க்கும் காளையை எருமைகள் மேயும் பக்கமாகத் திருப்பி எருமையின் மீது காளைகளைத் தாவ ஏவுவாள். எருமை அமைதியின் சொரூபமாய், இரண்டடிகள் ஓடி, அதன் போக்கில் மேய்ந்தன. எருமையைப் போலவே அதை மேய்க்கும் குகன் குணாம்சம் கொண்டவனாக இருந்தான். அவனுக்கு அவனே ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு எருமைகளை மேய்த்து வீடு திரும்பினான்.
குகனுக்குக் குண்டலியின் மீது ஈர்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் அதை வெளியில் காட்டக்கூடாதவனாக இருந்தான். அவள் என்ன சொன்னாலும் ஒரு காதினில் வாங்கி வீட்டில் அசைபோடுகிறவனாக இருந்தான். இரவில் அவனுக்கு அவனையும் மீறி இச்சைகள் பிரவாகமெடுக்கும். நாக்கு சொட்டாரமிடும். அவளை வாஞ்சோடு அணைக்கவும் எல்லை மீறவும் உடம்பால் தூண்டப்படுவான். அவள் குறித்த நினைவுகள் அவன் மீது பனியைப் போலப் படர்ந்து அவனைத் திக்குமுக்காடச் செய்யும். இரவு வதைகளை மறுநாள் மேய்ச்சல் தரிசில் நேரில் காட்டிவிட எத்தனிப்பான். ஆனால் பொழுது விடிந்ததும் எருமையின் குணாம்சத்தைக் கொண்டவனாக மாறிவிடுவான். அவள் மீதான ஏக்கத்தவிப்புகள் பெட்டிப்பாம்பாய் அடங்க எருமைகளின் தலைக்குனிவு அவனுக்கும் வந்துவிடும்.
ஊர்த்துணியை வெளுக்க கீழத்தெரு குடிகளால் குடி வைக்கப்பட்டிருந்த வண்ணார் சடையன், ஊர்த் துணியைச் செங்குளத்தில் வெளுத்துக் கொடுப்பவராக இருந்தார். செங்குளம் என்பது செம்மண் குளம். குளத்திற்குள் யாரேனும் இறங்கினால் குளம் செம்புலமெடுக்கும். வெள்ளை சட்டை, வேட்டிகளை அதில் நனைத்து எடுத்தால் வெள்ளை வேட்டி காவி வேட்டியாகிவிடும்.
மேலை, நடுத்தெருவிற்கென்று தனி வண்ணார் இருந்தார். இவர் ஊர்த் துணிகளை மாரியம்மன் குளத்தில் வெளுப்பதாக இருந்தார். மாரியம்மன் குளம் அல்லி, தாமரை, தண்டை, நாணல்,…எனப் பூத்துக்
குலுங்கும் குளம். பாலைப் போன்ற தெளிந்த நீர்க்குளம் என்பதால் அக்குளத்தை ஊரார்கள் வெங்குளமென்று அழைத்து வந்தார்கள். ஊர்க்குடியானவர்கள் வேட்டியை அத்தண்ணீரில் நனைத்து, பிழிந்தால் வேட்டியிலிருந்து பால் ஒழுகுவதைப் போல தண்ணீர் ஒழுகும். மேலை, நடுத்தெரு மக்கள் மட்டுமே இந்தக் குளத்தில் புழங்குவதாக இருந்தார்கள்.
சடையன் வாரம் ஒரு நாள் கீழத்தெரு துணிகளை எடுத்து உவர்மண்ணால் ஊற வைத்து செங்குளத்தில் துவைக்கிறவர். அவரைப் பொறுத்த வரைக்கும் தூய்மை என்பது செம்மை கலந்த ஓரளவு வெண்மை என்பதாக இருந்தது. துணிகளைத் துவைத்து, உலர்த்தி உரியவரிடம் ஒப்படைப்பது மட்டும்தான் அவரது வேலை. வெளுத்தத் துணிகளுக்குக் கூலியைக் கேட்டுப்பெறுவது அவரது மகள் சுகந்திதான்.
தமிழ் மாதம் பிறக்கும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கோணிச்சாக்கை எடுத்துக்கொண்டு கூலி வாங்க வீடு வீடாகச் செல்வாள். “ ஐயா, அம்மா, அண்ணே…” என்றபடி வாசலில் நிற்பாள். இரட்டைச் சடை. நேர் வகிடு. மேலுதட்டில் சின்னதாக ஒரு மச்சம்,.. யாவும் அவளைக் கூட்டிக்கொண்டு முன்னே செல்லும்.
வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடக்கும் அவளுக்கு அந்த ஒரு நாள் அவளது முகத்தில் பன்னீர்த் தெளிக்கும். அவள் கூலிக்கேட்டுச் செல்லும் வீடுகளில் கஞ்சியோ, நீராகாரமோ தருவார்கள். கஞ்சி ஊற்றும் பெண்களிடம் அவளையும் அறியாமல் அன்பு வழியும். ஒட்டுத்திண்ணையின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டு அவளது அம்மா வயதொத்த பெண்களிடம் பேச்சுக்கொடுப்பாள். அந்த வீட்டில் குழந்தைகள் இருந்தால் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவாள். அப்பன் வெளுத்தத் துணிக்குக் கூலி வாங்குவது இரண்டாவது பட்சம். ஊர்த்தெருவைச் சுற்றி வருவதும் குழந்தைகளை வாரியள்ளி கொஞ்சுவதுமே அவளது முதல் வேலையாக இருக்கும். கொடுக்கும் கூலியை வாங்கிக்கொள்வாள். சிலர் கிள்ளிக்கொடுப்பர். சிலர் அள்ளிக்கொடுப்பர். அவளது கைக்கு வரும் பணம், சில்லறைக் காசுகள் அவளுக்குப் பெரிதாகத் தெரியும். சிரித்து, குறுநகை பூத்து நன்றி தெரிவிப்பாள். கொடுக்கும் கூலியை நோட்டில் எழுதிக்கொள்வாள்.
ஒவ்வொரு வீடாகக் கூலி வாங்கிக்கொண்டு குகன் வீட்டுக்குச் செல்கையில் அவளையும் அறியாமல் வெட்கம் சூழ்ந்து கொள்ளும். குகன் அவளைக் கண்டுவிட்டால், மேய்ச்சலுக்குச் செல்லும் எருமைகளின் அலாதி தொற்றிக்கொள்ளும். அவளுடன் அத்தனை வாஞ்சையோடு உரையாடுவான். சில நேரம் இரட்டை அர்த்தத்தில் கதையாடுவான். அவளுக்கான கூலியை அவன் அத்தனை சடுதியில் கொடுத்துவிட மாட்டான். “மச்சான் கூலி கொடுங்க” எனக் கேட்கச் சொல்லி அவளிடம் பிடிவாதம் காட்டுவான். அவள் வெட்கத்தில் சிவந்தவளாய், “கூலியக் கொடுங்கண்ணே, நான் அடுத்த வீட்டுக்குப் போவணும்” என்பாள். அவளை அவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கமாட்டான். இன்னும் சத்தவடம் அவளிடம் பேசி பொழுதைக் கழிப்பான்.
” வீட்டுக்குள்ளே வா. நீ எதிர்பார்க்காத கூலியத் தர்றேன் ” என்பான்.
” உங்க அம்மா இருக்கிறப்ப, கூப்பிடுங்க வர்றேன் ” என்பாள்.
இதுபோன்ற உரையாடல் அவளுக்கும் பிடிக்கவே செய்யும். ஊர்க்கண் பார்த்துவிட்டால் பார்க்கும் கண்களில் பரு முளைத்துவிடுமே எனப் பயந்தவளாய் அவனிடம் தயங்கியே பேசுவாள். அவளுக்குள் எழும் அச்சத்தில் ஒரு காலை மறு காலால் மிதித்துக் கொள்வாள். கைகள் ஒன்றையொன்று பிசைந்துகொள்ளும். அவளது கால்கள் அடுத்த வீட்டுக்குச் செல்ல எத்தனித்தாலும் மனம் அவனையே சுற்றி வட்டமிடும்.
கடைசியாக சுகந்தி குகன் வீட்டு வாசலில் நின்று, ” அண்ணே சுகந்தி வந்திருக்கேன் ” என்கையில், “மச்சானுக்கிட்ட கூலி வாங்க வந்திருக்கே” என பின்னொட்டைச் சொல்லிச் சிரித்தான் குகன்.
சுகந்தி நத்தை ஓடுகளாய் சிரித்தவள், ” அண்ணனுக்கிட்ட ” என்றாள். குகன் வீட்டுக்குள் சென்று, அவனது நாலு முழம் வேட்டியை எடுத்து வந்து அவளிடம் விரித்துக் காட்டினான்.
“உன் அப்பன் அதான் என் மாமனார் வெளுத்த வெளுப்புல வெள்ள வேட்டிக் காவி வேட்டியாயிருச்சு” என்றவன் விரித்திருந்த வேட்டியைச் சுருட்டி அவளது கைக்குள் திணித்தவனாய் அவளது பின் கையைத்
தடவிப் பார்த்தான். அவள் கையை முறுக்கிக் கொடுத்தாள். அவனது தொடுதலில் அவளது உடம்பு வியர்த்துக் கொட்டியது. பதிலுக்கு அவனது கையைத் தடவிக் கொடுக்கணும் போலிருந்தது. சுகந்தி அவனது வேட்டியை எடுத்து விரித்துப் பார்த்தாள். வேட்டியில் வெண்த்தனம் மறைந்து காவிப்போன்ற நிறத்தால் மாலை பொழுது தெரிந்தது.
குகன் அவளை வெறிக்கப் பார்த்தபடி இருந்தான். அவனை வெட்கம் கலந்த தொனிப்பில் பார்த்தவன், ” என் அப்பன் என்ன செய்யும். ஊர்த்துணிய வெளுக்குற குளம் அப்படி” என்றவளாய் வேட்டியை அத்தனை அழகாக மடித்து, கன்னத்தில் அணைத்தாள். அவளது செய்கையால் குகன் முகம் மலர்ந்து குறுநகை புரிந்தான்.
” அது எனக்குத் தெரியாது. என் வேட்டி எனக்கு வெள்ளையா வேணும். நீ இதை வெளுத்துக்கொடு” என எகடாசி பேசியவன் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தான். அவளது கொடும்புகள் வெட்கத்தால் சிவந்தன.
” இந்த வேட்டிய வெங்கொளத்துல வெளுத்தாத்தே உண்டு ”
” எந்த கொளத்துல நீ வெளுப்பியோ, என் வேட்டி எனக்கு வெள்ளையா வேணும்”
சுகந்தி வேட்டியை நூலாம்படையைப் போல கையில் சுருட்டினாள். ” நீங்க மேய்க்கிற எரும மேய்ச்சலுக்கு இந்த வெளுப்பு பத்தாதாக்கும்?” என்றவள் ‘க்கும் ‘ என்பதை அழுந்த உச்சரித்தாள்.
” இந்த வேட்டியக் கட்டிக்கிட்டு எருமெதே மேய்ப்பாங்கலா?”
” பின்னே, மேலத்தெரு ஆம்பளைங்களாட்டம் வேட்டிய முழங்காலுக்கும் மேலே தூக்கிக் கட்டிக்கிட்டு போவீங்களாக்கும்” என்பதை அவள் சிரிக்காமல் சொல்லியிருந்தாள்.
சுகந்தியிடமிருந்து இப்படியான ஒரு பதிலைக் குகன் எதிர்பார்க்காதவனாய், தலைச்சுற்றி நின்றான்.
” வேட்டிய வெளுப்பா வெளுக்கச் சொன்னா, இப்படி ஜால்சாப்பு பேசுற நீ”
” நீங்க சொல்றதாட்டம் இந்த வேட்டிய நான் வெளுத்துத் தாரேன். அப்படி வெளுத்துத் தந்தா நீங்க மேலத்தெரு ஆம்பளயாட்டம் வேட்டிய மடிச்சித் கட்டிக்கிட்டு நடப்பீங்களா?”
குகன் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டான். அவன் கடி அவனுக்கு வலித்தது. அந்த வலியினூடே சொன்னான். “நீ வெளுத்துக்கொடு. நான் தினமொரு வேட்டியில நடந்துகாட்றேன்” என்றவன் விரல்களைச் சொடுக்கிக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான்.
குகன் நடுத்தெருவில் வெட்டுண்டு இறந்த செய்தி மூன்றாம் நாளும் அவனை வெட்டிக் கொன்ற ராயனின் வாக்குமூலம் அடுத்த நாளும் பத்திரிக்கை செய்தியாக வந்தன.
ராயனின் வாக்குமூலத்தைச் சுகந்தி உள்ளூர அசைபோட்டுப் பார்த்தாள். வாக்குமூலம் அவளது தொண்டைக்குள் சிக்கின. ” எங்கத் தெரு ஆம்பளையாட்டம் அவன் விதம் விதமாக வேட்டிய வெளுத்துக் கட்டினான். கட்டிய வேட்டிய மரியாதயில்லாம முழங்காலுக்கும் மேலே தூக்கிக்கட்டினான். அவன் செய்தது, என்னைக் கோவப்படுத்தியது. அதனாலே அவனை நான் வெட்டினேன்”, என ராயன் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கீழத்தெரு ஜனங்கள் மெல்லாமல் விழுங்கி அதை மறுத்தவர்கள், குண்டலையும் குகனும் மேய்ச்சல் தரிசில் பேசிக்கொண்டதைத் தொடுப்புப் பழக்கமென நினைத்து வெட்டிக்கொன்றதாக காவல்துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார்கள்.
மேலத்தெரு ஜனங்கள் ராயன் சொன்னதையே சொன்னார்கள். மயில்கண் வேட்டி, சரிகை வேட்டி, சார வேட்டி, குச்சு வேட்டி, முண்டு வேட்டி,..என எங்களுக்குப் போட்டியாக கட்டினான். அதையும் முழங்காலுக்கும்
மேலாகத் தூக்கிக்கட்டினான், அதனாலேயே அவன் கொலையுண்டான், என்பதாகச் சொல்லி, குண்டலியின் கற்புக்குக் களங்கம் வராமல் பார்த்துக்கொண்டார்கள்.
சுகந்தியின் மனத்தராசில் குகனும் அவனது கொலைக்கான காரணமும் ஏறி இறங்கின. அவனது மரணத்திற்குக் காரணம் தான் வெளுத்த வேட்டியா, குண்டலியா எனத் தெரியாமல் இருதலமணியமாகத் தவித்தவள் ஓரிரு நாளில் தானே காரணமென்கிற முடிவுக்கு வந்தாள். அப்படியாகவே அவளது மனப்பல்லி கவுளி சொல்லியது. குகனை அவள் மனதிற்குள் பதியமிட்டு அவன் குறித்த நினைவுகளை மீட்டெடுத்தாள். ஆழ்மன ஈரத்தில் குகன் செடியாக முளைத்து நாசி, கண்களின் வழியே எட்டிப் பார்த்தான்.
ஒரு நாள் சுகந்தியின் அப்பன் சடையன் அவளது நடத்தை மாற்றத்தைக் குறிப்பறிந்து கேட்கையில் குகன் சாவுக்குத் தானே காரணமென்கிற செய்தியைச் சொன்னாள். அதைக்கேட்டு அவர் அதிர்ந்து போனார். மகளது வாயை இறுகப் பொத்தி அவளைக் குலுக்கி எடுத்தவர் சொன்ன வாயில் நான்கைந்து அடிகள் கொடுத்தார். மகள் பகிர்ந்து கொண்ட செய்தி அவரைக் கலவரத்தில் ஆழ்த்துவதாக இருந்தது. தனக்குத் தெரியாமல் குகனின் வேட்டியைக் குடியான ஜனங்கள் புழங்கும் குளத்தில் துவைத்த செய்தியை உள்வாங்குகையில் மென்மெல்லிய பயம் அவரைக் கவ்வியது. ஊர்க் குடியானவர் தெருவின் கோபத்திற்கு மகள் ஆளாகிவிட்டதாக நினைத்தவர் இச்செய்தி, மேலத்தெருவுக்குத் தெரியக் கூடாதெனக் கெஞ்சி, மன்றாடி கேட்டுக்கொண்டார்.![]()
சடையன் ஊர்த்துணி எடுப்பதை முற்றிலும் நிறுத்தியிருந்தார். தன் மகள் வெளுத்த வேட்டியால் ஒருவன் கொலையானதை நினைக்கையில் அவரது ஆழ்மனம் குற்றவுணர்வு கொண்டது. அவர் நெஞ்சுக்குள் வெந்து, கண்களில் கனன்றார். தன் மகளை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குப் போய்விட நினைத்தார்.
கீழத்தெரு ஜனங்கள் அவரிடம் எப்படியெல்லாமோ கேட்டுக்கொண்டும் அவரது செவி மடல்கள் தாழ்வதாக இல்லை. ஊரார்கள் அவரவர் துணிகளைக் செங்குளத்தில் துவைத்துக் கட்டுவதாக இருந்தார்கள். அவர்களது வேட்டிகளைப் பார்த்தாள் சுகந்தி. வேட்டிகள் அவர்கள் யாரென்றும் எந்தத் தெருவாசிகள் என்றும் சொல்லாமல் சொல்லின.
சுகந்தி அப்பன் சடையனிடம் ஊர்த்துணி எடுக்கச் சொல்லி பிடிவாதம் செய்தாள். அவளது வேண்டலைச் சடையன் துவைத்தத் துணியைக் காற்றில் உதறுவதைப்போல உதறச் செய்தார்.
கீழத்தெரு ஆண்கள் காவி வேட்டியைப் போல வெள்ளை வேட்டியை உடுத்திச் செல்வது, சுகந்தி கண்களை உறுத்தின. தன் அப்பன் வெளுக்காத ஊர்த்துணியை இனி நான் வெளுக்கிறேன் என்கிற முடிவுக்கு வந்தாள். கொலையுண்டு மாய்ந்துபோன குகன் நினைவாக இதை நான் செய்கிறேன் என்றாள். இதைத் தொண்டூழியமாகச் செய்யாமல் ஒரு தொழிலாகச் செய்ய சபதமேற்றாள். வெளுக்கும் கூலிக்குத் தினை, தவசம் பெறாமல் பணத்தை மட்டுமே பெற முடிவெடுத்தாள். துணிகளை வீட்டுக்கு வீடு போய் எடுக்காமல் அவர்களே வீடு தேடி வந்து தந்தால் வெளுத்துத் தருவதாகச் சொன்னாள்.
அவளைத் தேடி கீழத்தெரு துணிகள் வந்து சேர்ந்தன. துணிகளைப் பொதியாகக் கட்டிக்கொண்டு குளத்தங்கரைக்குச் சென்றாள். அவளது அப்பன் வழக்கமாகத் துவைக்கும் செங்குளத்திற்கு செல்லாமல் மேலத் தெருவையொட்டியிருக்கும் வெங்குளத்தடிக்குள் இறங்கினாள்.
துணிகளை உவர்மண்ணில் ஊற வைத்து, தெப்பளங்கட்டி அடித்துத் துவைத்து வெளுத்தாள். அவள் துணிகளை அடித்துத் துவைக்கையில், குகனும் அவனுடனான உரையாடலும் நினைவுக்கு வந்தன. அவனுடன் பேசுவதைப்போல, அவளுக்கு அவளே பேசிக்கொண்டு துணிகளை வெளுத்தவள் வெளுத்த வேட்டிகளுக்கு நீலச் சாயமேற்றி தொடிக் கயிற்றில் காயப்போட்டாள். வேட்டிகள் காற்றில் அளாவிக் காய்ந்தது, கொக்குகள் நீல வானத்தில் சரம் சரமாகப் பறப்பதைப் போலிருந்தன….
அண்டனூர் சுரா.
![]()