நாட்டுக்கோழி போலிருந்த பாடிபில்டர்கள், பிராய்லர் கோழியானது எப்படி?…

சமீபத்தில் வெளியான ஓர் அதிர்ச்சித் தகவல் பிரிட்டன் ஃபிட்னஸ் ஆர்வலர்களை உலுக்கியது. பிரிட்டனில் 10 லட்சம் ஜிம் வாடிக்கையாளர்கள் ஸ்டீராய்டு எனப்படும் ஊக்கமருந்தை ஜிம் பயிற்சிக்காகப் பயன்படுத்துவதாக அந்நாட்டு போதைத் தடுப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்மை குறைவு, தலை வழுக்கை, விந்தணுக் குறைபாடு, சிறுநீரக மற்றும் கல்லீறல் கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை சந்திக்கும் இந்த ஸ்டீராய்டு பயனாளர்கள், தங்கள் வாழ்வில் கடைசி நாட்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இவ்வளவு பெரிய ஆபத்தை அளிக்கும் ஸ்டீராய்டுகள் தொடர்ந்து ஏன் புழக்கத்தில் உள்ளன, இவற்றைப் பயன்படுத்துவோரது நோக்கம் என்ன போன்ற பல கேள்விகள் உங்களுக்குள் எழக்கூடமல்லவா? ஸ்டீராய்டு பயன்பாடு குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

1900-களின் துவக்கத்தில் பாடிபில்டிங் துறை ஸ்டீராய்டுகள் அற்ற இயற்கை பாடிபில்டிங்கை ஊக்குவித்தது. இதனால் அப்போதைய பாடிபில்டர்களுக்கு சூப்பர்மேன், பேட்மேன், அயர்ன்மேன்போல இயல்பான கட்டுடற்மேனி இருந்தது. பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், ஆப்ஸ், தொடைத்தசைகள், பிட்டத்தசைகள், மார்பு உள்ளிட்டவை கச்சிதமான அளவில் இருந்தன.

சத்தான புரத உணவுகளை உட்கொண்டு தசைகளை இயற்கை வழியில் முறுக்கேற்றி அட்லஸ் உள்ளிட்ட கிரேக்க கடவுள் சிலைகள் போன்ற தோற்றத்தைப் பெற்றவர்களாக இருந்தனர், அப்போதைய பாடிபில்டர்கள். காலப்போக்கில் பாடிபில்டிங் துறையின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவே, இத்துறைக்குள் பலவித சத்து பவுடர்களும் ஊக்க மருந்துகளும் வைட்டமின், தாது மாத்திரைகளும் சட்டப்பூர்வமாகவோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ நுழையத் துவங்கின. ஸ்டீராய்டு ஊக்கமருந்துகள் ஊசி, மாத்திரை, சிரப், ப்ரோட்டீன் பவுடர் வடிவங்களில் பாடி பில்டர்கள் உடலில் கலக்கத் துவங்கின.

ஸ்டீராய்டு உட்கொண்டு ஆண்மை ஹார்மோனான ரெஸ்டாஸ்டிரான் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதன் மூலமாக பாடிபில்டர்கள் தாங்கள் உண்ணும் உணவுமூலம் கிடைக்கும் புரதத்தை உடலில் அதிகமாகத் தக்கவைத்துக்கொண்டனர். இதனால் இவர்கள் கடுமையான ஜிம் பயிற்சி மேற்கொள்ளும்போது கலோரிகள் எரிக்கப்பட்டு அதீத புரதம் அவர்களது உடற்தசைகளில் தங்கியது. இதனால் நாட்டுக்கோழிபோல இருந்த பாடிபில்டர்கள் காலப்போக்கில் பிராய்லர் கோழிபோல பருத்த வயிறு, அளவுக்கதிகமான உடற்தசைகளுடன் பெரிதாகத் துவங்கினர்.

அர்னால்டு ஸ்வாஸ்னேகர், ரானி கால்மென், ரோனி விங்க்லர் உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற பாடி பில்டர்களும் ஸ்டீராய்டை எடுத்துக்கொண்டவர்கள்தான். சட்டத்துக்குட்பட்ட சப்ளிமெண்டுகளையும், ஸ்டீராய்டுகளையும் தான் 80களில் எடுத்துக்கொண்டதாகவும் இளைஞர்கள் இதேபோல சட்டத்துக்குட்பட்ட ஸ்டீராய்டுகளை அளவாக எடுத்துக்கொள்ளலாமெனவும் பேட்டியொன்றில் கூறியுள்ளார் பாடிபில்டிங் துறையின் கடவுளாக மதிக்கப்படும் அர்னால்டு..!

பெரிய தசைகளுக்கு மிஸ்டர் ஒலிம்பியா உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் நடுவர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு, போட்டியாளர்களின் மதிப்புகளைக் கூட்டியது. இதனால் ஸ்டீராய்டு பாடிபில்டர்கள் பரிசுக் கோப்பைகளையும் பல மில்லியன் டாலர் பணத்தையும் அள்ளிச் சென்றனர். கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் உள்ளதுபோல பாடிபில்டிங் துறையில் ஸ்டீராய்டு பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் அதிகளவில் இல்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம். ஸ்டீராய்டு தடுப்பு சோதனை என்கிற பெயரில் கடமைக்கு சில சோதனைகள் போட்டி துவங்கும் முன்னர் நடத்தப்படும். இதில் சுலபமாகத் தேர்ச்சியடையும் பாடி பில்டர்கள் பலர், போட்டிக்குள் நுழைந்து பரிசைத் தட்டிச் சென்றனர்.

தற்போது ஸ்டீராய்டு பயன்பாடற்ற இயற்கை பாடிபில்டிங் பிரபலமடைந்து வருகிறது. ஆனாலும் சர்வதேச அரங்கில் ஸ்டீராய்டு பாடிபில்டர்களே ஜொலித்து வருகின்றனர். இதன் விளைவாக ஒரு காலத்தில் சூப்பர் ஹீரோக்கள்போல ஸ்லிம் ஆகக் காட்சியளித்த பாடி பில்டர்கள், தற்போது தானோஸ், ஹல்க் உள்ளிட்ட வில்லன்கள் போல புடைத்த நரம்புகளுடனும் பெரிய தசைகளுடனும் காட்சியளிக்கின்றனர்.

ஸ்டீராய்டு பயன்பாட்டால் தங்கள் உயிரே போகும் அபாயம் உள்ளது எனத் தெரிந்தும், பல பாடி பில்டர்கள் போட்டி நெருங்க நெருங்க, பணம், புகழ், ஊடக வெளிச்சத்துக்கு ஆசைப்பட்டு இவற்றைப் பயன்படுத்தத் துவங்குகின்றனர். இதன்விளைவாக 50 வயதுக்குள் பல முன்னாள் பாடி பில்டிங் சாம்பியன்கள் அகால மரணத்தைத் தழுவுவதுதான் வேதனைக்குரிய விஷயம். பிரிட்டனின் போதைத் தடுப்புத் துறை பல கோடி ரூபாய் புழங்கும் ஸ்டீராய்டு தயாரிப்பு, விநியோக மற்றும் விற்பனைத் துறைகளுக்கு பலவித கட்டுப்பாடுகளை வைத்துள்ள நிலையிலும் அங்குள்ள 30 வயதுக்குட்பட்ட பல இளம் பாடிபில்டர்கள் ஸ்டீராய்டு பயன்பாட்டால் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button