கட்டுரைகள்

யார் எழுத்தாளன்!…. கிறுக்கல்…11…. சங்கர சுப்பிரமணியன்.

நான் சொல்வது சிலருக்கு சரியில்லாததாகதோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை. நூல்களை எல்லாம் பணம் கொடுத்து வாங்கும் வசதி பாட்டாளி மக்களுக்கு கிடையாது. அவர்கள் பணம் கொடுத்து ஏன் நூல்களை வாங்கவேண்டும் நூல் நிலையம் சென்று புத்தகங்களைப் பெறலாமே என்று கேட்கலாம். ஆனால் இந்த பாட்டாளி மக்கள் வாழுமிடம் எல்லாம் நூல்நிலையங்கள் இருக்கும் இடமாக இருக்காது.நூல்நிலையம் சென்று நூல்களை பெறும் அளவுக்கு அவர்கள் சூழ்நிலையும் இருக்காது.அவர்களிடம் சென்று நூல் ஏதாவது படித்தீர்களா என்று கேட்டால் என் பாடே பெரிய பாடாக இருக்கிறது இதில் நான் புத்தகத்தை எங்கே சென்று படிப்பது. என் வாசிப்பெல்லாம் தினசரிகளை வாசிப்பதோடு சரி என்பார்கள். பாட்டாளி மக்கள், வியாபாரிகள், பெரும் செல்வந்தர்கள் போன்றவர்கள் எந்த அளவுக்கு புத்தகங்களை படிக்கிறார்கள்?பெரும் செல்வந்தர்களாக வியாபாரம் செய்து பொருளீட்டுக் கொண்டுருப்பவர்கள்அல்லது வியாபார நிறுவங்களில் இருப்பவர்கள் நூல்களைப்படித்துக் கொண்டே இருப்பார்களா? அவர்களது சொந்த அலுவல்களைப் பார்க்கவே பர்சனல் அஸிஸ்டண்ட் வைத்திருப்பவர்கள் படிப்பார்களா? படிப்பார்கள்? எப்பவாவது படிப்பார்கள். அவர்களிடம் சென்று சமீபத்தில் என்ன நூலைப் படித்து முடித்தீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். அட போங்க நீங்க ஒன்னு? அதுக் கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது? என்ற உண்மையை ஒப்புக் கொள்வார்கள்?அல்லது ஏதாவது சமீபத்தில் பிரபலமான ஒரு நூலின் பெயரைச் சொல்லி அதை வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை என்பார்கள் அல்லதுபடிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பார்கள். ஆதலால் கஞ்சிக்காக போராடுபவனுக்கும்கல்லாக்கட்ட ஓடிக்கொண்டு இருப்பவனுக்கும் அவற்றிற்கு நேரமில்லாத போது வள்ளுவன் சொன்ன செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதைப்போல சிறிது வாசிப்புக்கும் ஈயப்படும்.எனக்கு எழுதப் பிடிக்கும். ஆதலால் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். எனது எழுத்தை விரும்புபவர்கள் படிப்பார்கள். பிடிக்காதவர்கள் பெயரைப்பார்த்தவுடன் கடந்து செல்வார்கள். எனது எழுத்துக்களை நான் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் விரும்பியதில்லை. அவற்றை எல்லாம் பிற்கால சந்ததிகள் படிக்கவேண்டும் என்ற காரணத்தைக் காட்டி நூல் வெளியிட்டு பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு நான் பெரிய எழுத்தாளனும் இல்லை.நான் எழுதுவதை எங்கோ ஒருவராவது படிக்கிறார் என்ற நிலை இருக்கும்வரை எழுதலாம். அதில் நல்ல கருத்து இருந்தால் அந்த ஒருவர் பலருக்கு கடத்தலாம். அதுபிற்கால சந்ததியினருக்கும் கடத்தப் படலாம். தீ பற்றி எரிய ஒரு சிறு தீப்பொறி ஒன்றே போதும். ஓராயிரம் தீப்பொறிகளோஒரு தீப்பந்தமோ தேவையல்ல என்ற கொள்கையுடையவன் நான்.அக்கினிக்குஞ்சொன்றை கண்டேன் அதை ஆங்கிடை பொந்திலே வைத்தேன் என்று பாரதியே பாடியுள்ளான் அல்லவா? கொழுந்து விட்டுஎரியும்  தீப்பந்தம்கூட தீயை பற்ற வைக்க முடியாமல் போவதுண்டு. நல்ல கருத்துக்கள் இல்லாதுபோனால் அற்ப ஆயுளில் அதுவே அணைந்து விடும்.என் உடம்பில் கடைசியாக ஒரு துளி இரத்தம் இருக்கும்வரை இனத்துக்காக போராடுவேன் என்பார்களே அல்லது இம்மண்ணில் கடைசித் தமிழன் இருக்கும்வரை உரிமைக்காக போராடுவான் என்பார்களே அதுபோன்று ஒரு இலட்சியமாக எழுதலாம். ஆனால் இனப்பற்று மொழிப்பற்று அற்றவர்களுக்கு அது பகடியாகவும் தோன்றலாம். அப்படி பற்றில்லாதவர்கள் பகடியும் செய்யலாம்.எழுதுகிறோம் என்பதற்காக அவற்றையெல்லாம் நூலாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாததற்கும் காரணம் உண்டு. மகாகவி பாரதியாரின் எண்ணற்ற கையெழுத்துப் பிரதிகள் இன்னும் அச்சில் ஏற்றப்பட்டு நூல் வடிவம் அடையாமல் கிடப்பில் உள்ளன. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைத் தொடர்ந்து எத்தனைப் படைப்புக்களைத் தந்தார்? பக்திமான்கள் சொல்வார்களே ஒருவாசகம் என்றாலும் திருவாசகம் போல் வருமா என்று. அதுபோல் ஒரு படைப்பு என்றாலும் அது திருக்குறள் போலாகுமா?திருவள்ளுவர் நிறைய எழுதி இடவில்லை. தமிழில் பழமொழிக்கும் பஞ்சமில்லை. ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள். ஆனால் அந்த நான்கு பிள்ளைகளில் ஒருவர்கூட தாயைக் காப்பாற்றவில்லை. ஒரே ஒரு ராணி பெற்றால் ஒன்பதுபிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை…உருப்படியில்லை என்ற கதைதான். ஆனால் இன்னொரு தாய்க்கு ஒரே ஒரு பிள்ளை. அவன் தாயை ராணி மாதிரி வைத்துப் பார்த்துக் கொள்கிறான். முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ என்பது போல் அப்படியொரு பிள்ளை அவன்.இப்போது அந்த நான்கு பிள்ளைக்காரி ஒரு பிள்ளைக்காரியைப் பார்த்து சொன்னாளாம். அதுதான் பழமொழி. ஒரு பிள்ளை பெத்தவளுக்கு உறியில சோறு, நான்குபிள்ளைகளைப் பெத்தவளுக்கு நடுச்சந்தியில் சோறு. இந்த உறியில சோறு மாதிரி திருவள்ளுவருக்கு திருக்குறள். அந்த திருக்குறளே தீயில் இருந்து தப்பியதால்தான் இன்று திருமறையாய் திகழ்கிறது.உடனே நம்ம மாடசாமி அண்ணாச்சி அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். தலையில் எழுதிவைத்தால்தான் நடக்கும். எல்லாம் விதிப்பயன் என்று கீறல் விழுந்த இசைத்தட்டு போல் விதிப்பலனுக்கு இலவச விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிடுவார். விதி, கர்மா, ஆத்மா எல்லாம் வைதீகம் விரித்த வலை என்றால் அண்ணாச்சிக்கு பொசுக்குனு மூக்குக்கு மேல கோபம் வந்து விடும். ஒரு நாள் அண்ணாச்சியை வேப்ப மரத்துக்கு அடியில் வைத்து கொஞ்சம் வைத்தியம் செய்தேன்.சிகிச்சை ஆரம்பமாகியது. அண்ணாச்சி, ஆதிசங்கரர் இறைவன் நம்மோடு இருக்கிறான் என்றார். அதை அத்வைதம் என்றார். மத்வாச்சாரியார் நமக்கு முன்னும் நமக்கு பின்னும் இறைவன் இருப்பதால் நாம் வேறு இறைவன் வேறு என்றார். அதற்கு துவைதம் என்றார். இராமானுசர் இறைவன் நம்மோடு இருக்கிறான் என்பதையும் நாம் வேறு இறைவன் வேறு என்பதையும் ஏற்கிறார்.ஆனால் அதை விசிஷ்டாத்வைதம் என்கிறார். இப்போது சொல்லுங்கள் இதில் எது சரி அண்ணாச்சி இறைவன் எங்குதான் இருக்கிறேன் என்றேன்.சற்றுநேரம் பேந்தப் பேந்த விழித்தவர்,இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான், அவன் இருந்தால் இந்த உலகத்திலே எங்கே வாழ்கிறான்? நான் ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை, நான் நாத்திகன் ஆனேன் அவன் பயப்படவில்லை என்று பாடியவர் சிறிதுநேரம் விட்டு பாட்டாலே புத்திசொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார், பாட்டுக்கு நான் பாடுபட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம்தான் என்று இளையராஜா போல் பாட்டாலே பதிலளித்தார்.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *