கதைகள்

நடுகைக்காரி! …. 46 …. ஏலையா க.முருகதாசன்.

சிறு காய்ச்சல் என்றாலும் பள்ளிக்கூடம் வராமல் போர்த்துக்கட்டிக் கொண்டு வீட்டில் படுத்திருக்கும் ஞானம்,தன்னைப் பார்க்காமல் இருக்க முடியாத நிலையில் பள்ளிக்கூடம் வநதிருப்பதை நினைச்சு புஸ்பகலா அவனைக் கனிவுடனும் அக்கறையுடனும் பார்த்தாள்.

சிரட்டையைக் கொண்டு வந்து அதில் மருந்தை உரசிக் குடித்ததை நினைத்து „இப்படியும் ஒருவனா „ என அவன் மீது பரிதாபப்பட்டாள்.

உனக்கும் எனக்குமிடையில் இருப்பது சக வகுப்பு மாணவி, ஒரு தோழி என்பது மட்டுந்தான் என்று சொல்லிக் கொண்டிருந்த ஞானம் தன்னை ஆழமாகக் காதலிக்கத் தொடங்கிவிட்டான் என்பதை உணர்ந்தவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் முட்டி நிற்க உணர்ச்சிவசப்படுதலுடன் வந்த அழுகையை அடக்க முடியாதவளாக சொண்டுகள் இரண்டையும் அழுகையை அடக்குவதற்காக உள்ளிளுத்துப் பற்களால் கடித்தபடி ஞானத்தை; திரும்பிப் பார்க்கிறாள்.

„ஏன் அழுகிறீர்கள்’என்று புஸ்பகலாவை மெதுவாகக் கேட்க „பிறகு சொல்கிறேன் நீங்கள் என்னுடன் இறுதிவரை இருப்பீர்கள்தானே’ என்று விம்மியவள் மற்ற மாணவர்கள் தம்மைக் கவனிப்பார்களே என்பதைப் பற்றிக் கொஞ்சமும் பயம் இல்லாதவளாக இருந்தாள்.

முதல் வகுப்பு தொடங்குவத்ற்கான மணி அடித்ததும் வகுப்பாசிரியர் வந்திடுவார் என்பதால் மாணவர்கள் அமைதியாகினர்.வகுப்பாசிரியரான செல்லத்துரை மாஸ்ரர் நல்லவர்,மாணவர்களோடு பகிடிக் கதைகளைக் கதைத்துத்தான் பாடம் நடத்துகிறவர்.

மகாஜனாவில் செல்லத்துரை என்ற பெயரில் இரண்டு ஆசிரியர்கள் இருந்தார்கள்.ஒருவர் வெள்ளை.மற்றவர் ஞானம் புஸ்பகலாவின் வகுப்பாசிரியர்.அவர் கறுப்பானவர் என்பதால் அவரைக கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் என்றும்,மற்றவரை வெள்ளைச் செல்லத்துரை மாஸ்ரர் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் தமக்குள் விளித்துக் கதைத்துக் கொள்வார்கள்.

கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் வகுப்பாசிரியர் மட்டுமல்ல எண்கணித ஆசிரியரும் அவர்தான்,ஆங்கில ஆசிரியரும் அவர்தான்.

இரண்டு பாடங்களையும் கவனமாக கூர்ந்து படித்தால்தான் அவை இரண்டையும் சுலபமாக விளங்கிக் கொள்ள முடியம்.

கறுவல் செல்லத்துரை மாஸ்ரர் வகுப்புக்குள் நுழையும் போதே ஒரு செருமலுடன் வருவார்.அவர் வெள்ளை, வெளிர்நிற மஞ்சள் சட்டை, வெளிர்நிற நீலச் சட்டை அல்லது சாம்பல் நிறச் சட்டையையே போடுவார்.

அரைக்கைச் சட்டையும் வேட்டியுந்தான் அவருடைய உடைகள்.சட்டைப் பைக்குள் ஒரு கைகுட்டை வைச்சிருப்பார்.அதையும் அயேன் பண்ணித்தான் முக்கோணமாக மடிச்சு வைச்சிருப்பார்

சட்டையின் கை அயேன் பண்ணின மடிப்புத் தெரியுமளவுக்கு சட்டை கசங்காமல் இருக்கும்.பச்சை நிறம் அல்லது சிவப்பு நிற கரை போட்ட மல் வேட்டிதான் உடுப்பார்.

நீலம் போட்டு தோய்ச்ச பளிச்சென்ற தன்மை வெள்ளை வேட்டியில் தெரியும்.கறுவல் செல்லத்துரை மாஸ்ரரின் உயரமான தோற்றமும், அவர் உடுத்தியிருந்த நேர்த்தியான உடையும் அவரைக் கம்பீரமாகவே காட்டும்.

மாணவர்களுக்கு, அவர் பகிடிவிட்டு பாடம் எடுப்பதும்,நேர்த்தியாக உடை உடுத்திருப்பதும் நன்றாகவே பிடிச்சிருந்தது.ரென்னிஸ் விளையாடும் போது மட்டும் வெள்ளை அரைக் காற்சட்டையும் கைவைச்ச ரீசேர்ட்டும் போட்டிருப்பார்.

அவர் மாணவர்களுக்கு அடிப்பதே இல்லை.ஆனால் மொனிற்றர் தனபாலசிங்கம் செல்லத்துரை மாஸ்ரர் வகுப்புக்குள் வருவதற்கு முன்பே மேசையில் பிரம்பு, சோக்கு ,டஸ்ரர் என எல்லாவற்றையும் அலுமாரிக்குள்ளிருந்து எடுத்து வைச்சிடுவான்.

கிழமையில் திங்கள் புதன் வெள்ளி நாட்களில் முதல் பாடமே எண் கணிதந்தான்.ஞானத்துக்கு எண்கணிதம் என்றால் குட்டானுக்குள் பனங்கட்டிப் பாகை ஊற்றி அது கட்டியாவதற்கு முன் கைவிரலை குட்டானுக்குளள் விட்டு அள்ளிச் சாப்பிடும் போது சூடும் சுவையும் சேர்ந்து ஒரு உருசி இருக்குமே அப்படித்தான் அவனக்கு அந்தப் பாடத்தில் விருப்பம்.

ஆங்கிலப் பாடத்திலும் அவனுக்கு,இளநீருக்குள் வழுக்களை வறுகிப் போட்டு,எழுமிச்சம் புளி கொஞ்சம் விட்டு பனங்கட்டியும் போட்டுக் குடிச்சால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உருசி ஆங்கிலப் பாடத்தில்.

இரண்டு பாடங்களிலும் உள்ள விருப்பத்தை இப்படித்தான் அவன் உவமைப்படுத்திச் நண்பர்களுக்குச் சொல்லுவான்.

அதற்கு கொஞ்சம் நேர்மாறு புஸ்பகலா.ஆனால் மோசமில்லை.எண்கணித வகுப்புக்கு புஸ்பகலா வைச்ச பெயர் பாவற்காய் வகுப்பு.ஆங்கில வகுப்புக்கு அவள் வைச்ச பெயர் புளியம்பழ வகுப்பு.

செருமிக் கொண்டே சிறு புன்னகையுடன் வகுப்புக்குள் நுழையும் செல்லத்துரை மாஸ்ரர் உடனடியாகப் படிப்பிக்கத் தொடங்க மாட்டார்.அவர் ஒரு திரைப்படப் பிரியர் தான் பார்த்த படங்களின் கதையை அங்கையும் இங்கையுமாகச் சொல்லி நடிகர் நடிகைகளின் அழகை வர்ணிச்சு மாணவர்களை ஒரு கலகலப்பான மனநிலைக்கு கொண்டு வந்ததன் பின்பு லேஞ்சியாiலை வாயைத் துடைச்சுப் போட்டுப் படிப்பமோ இல்லாட்டிக் கதைப்பமோ என்று மாணவர்களைக் கேட்க „படிப்பம் சேர்’ என்று மாணவர்கள் ஒரே குரலில் சொல்வார்கள்.

இரண்டு மூன்று கணக்குளின் செய் முறையை விளங்கப்படுத்திப் போட்டு „இருந்து செய்யுங்கோ என்று சொல்லிப் போட்டு கக்கூசுக்குப் போயிட்டு அதாலை கண்ரீனுக்குப் போய் சங்கரப்பிள்ளையிட்டை ஒரு ரீ குடிச்சிட்டு வருவார்.

ஞானம் அதற்கிடையிலை புஸ்பகலாவுக்கு கணக்கு எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் குடுத்திடுவான்.ஞானத்தைக் கேட்டு மற்ற மாணவர்களும் சரியாகக் கணக்குகளைச் செய்து முடித்திருப்பார்கள்.கணக்கெல்லாவற்றையும் மாணவர்கள் ஞானத்தைக் கேட்டுச் செய்திருப்பார்கள் என்று தெரிஞ்சாலும் அதைக் காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

புஸ்பகலா எண்கணித வகுப்புக்கு பாவற்காய் வகுப்பென்றும் ஆங்கில வகுப்புக்கு புளியம்பழ வகுப்பென்றும் பெயர் வைச்சது செல்லத்துரை மாஸ்ரருக்கும் தெரியும்.அதோடை ஞானமும் புஸ்பகலாவும் காதலிக்கிற விசயத்தையும் அறிஞ்சு வைச்சிருந்தார்.

படிப்பித்துக் கொண்டோ அல்லது கொப்பிகளைத் திருத்திக் கொண்டே கதை சொல்வதில் அதுவும் ,இரட்டை அர்த்தத்தில் கதைக்கிறதில் அவரை மிஞ்ச ஆள் இல்லை.

அவர் ஸ்ராப் ரூமில் இருந்தால் அங்கை சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது.வயது வந்தாவர்களுக்கான கதைகளைச் சொல்வதில் அவர் வல்லவனுக்கு வல்லவன்.

வகுப்புக்குள் நுழைஞ்சதும், புஸ்பகலாவைப் பார்த்து கணக்குக் கொப்பியை கொண்டுவரச் சொல்ல,அவளும் கொப்பியைக் குடுத்திட்டு மேசையோடு நிற்க,எண்கணித வகுப்புக்கு பாவற்காய் என்று பெயர் வைச்ச புஸ்பலாவை கடைக்கண்ணாலை பார்த்துக் கொண்டு,’மெய்யே ஞானம் உங்கடை தோட்டத்திலை பாவற்காய் காய்க்கத் துடங்கிட்டுதோ என்று கேட்க,’இல்லைச் சேர் இப்பத்தான் பூக்கத் தொடங்கியிருக்குது „ என்று ஞானம் சொல்ல,’ஓமோம் இப்பத்தானே மலரத் துடங்கியிருக்குது „ என்று ஞானம் புஸ்பகலாவின் காதலை இணைச்சுச் சொன்னதை தன்னையும் ஞானத்தையுந்தான் சொல்லுகிறார் தனக்குத்தான் மாஸ்ரர் நக்ககலடிக்கிறார் என்று தெரிஞ்ச புஸ்பகலா முகத்தை திருப்பி வந்த சிரிப்பை கையால் பொத்தி அடக்கியபடி நிற்க,’மெய்யே ஞானம் பாவற்காய் கறிக்கு பழப்புளி கரைச்சு விட்டால் நல்லதெண்டு சொல்லுகினம் உண்மையோ’ என்று கேட்க,தன்னையும் புஸ்பகலாவையுந்தான் செல்லத்துரை மாஸ்ரர் சொல்லுகிறார் என்று தெரிந்தும் அவருக்கு மேலாலை ஞானம்’ „ஓம் சேர் பாவற்காய்க்கு கொஞ்சம் இளநீர் விட்டுக் கொஞ்சம் நல்லெண்ணையும் பழப்புளியும் கரைச்சு விட்டு பொடு பொடுக்க சமைச்சால் அருமையாக இருக்கும் சேர்’ என்று ஞானம் சொல்ல,கணக்கைத் திருத்திய கொப்பியைக் கொடுக்க,புஸ்பகலா தலையைக் குனிஞ்சபடி தனது வாங்கிலை போயிருக்க’உனக்கென்ன ஞானம் நீ குடுத்து வைச்சனி பாவற்காய் கைவசம் இருக்குது,பழப்புளி கைவசம் இருக்குது போதாதற்கு மாலைதீவு இளநியும் கைவசம் வைச்சிருக்காய்,இந்த வயசிலையே சுக்கிர வசியத்திலை இருக்கிறாய்’ என்று சொல்ல,புஸ்பகலாவின் முகம் சிவக்கிறது.அவள் மெதுவாக ஞானத்தைப்

பார்க்கிறாள்.அவள் பார்ப்பதைக் கண்ட செல்லத்துரை மாஸ்ரர்,ஒவ்வொரு மாணவ மாணவிகளைக் கூப்பிட்டு கணக்குகளைப் பார்த்துச் சரி போட்டுக் குடுத்தபடியே’ கதிரேசம்பிள்ளை மாஸ்ரரிட்டை இப்ப இராமாயணந்தானே படிக்கிறியள் அதிலை அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்தானே படிக்கிறியள்,நான் அவளை அதுதான் என்ரை மனுசியை எப்ப நோக்கினன் என்று தெரியுமோ தாலி கட்டேக்கத்தான்,அதுவும் மனுசி தலையைக் குனிஞ்சு கொண்டு இருந்துது’.

நான்தான் அவளைக் குனிஞ்சு பார்த்தனான்.அண்டைக்கு குனிஞ்சதுதான் இன்றுவரையும் குனிஞ்சு கொண்டுதான் இருக்கிறன்.நாசமறுவாங்கள் மனுசியை மணவறையிலைதான் காட்டினாங்கள்.நான் ஆரை நாசமறுவாங்கள்; என்று சொன்னனான் என்று தெரியுமோ வேறை யார் என்ரை மனுசியைப் பெத்ததுகளைத்தான் என்றவர், ஞானம் நீ குடுத்து வைச்சனி இப்பவே சுக்கிரன் உனக்குப் பக்கத்திலை பார்க்கிற மாதிரித் தந்திட்டான் என்று சிரிக்காமல் செல்லத்துரை மாஸ்ரர் சொல்ல,அவரின் வாயைக் கிளறவெண்டு’ ஏன் சேர் என்னை குடுத்து வைச்சவன் என்று சொல்றியள் என்று கேட்க,’உனக்கென்ன குறை பாவற்காய் இருக்கு,பழப்புளி இருக்கு பதமான இளநி இருக்கு,நல்லாயப் படிக்கிறாய் அதுதான் சொன்னனான் என்று சொல்ல, மாஸ்ரரின் இரட்டை அர்த்தக் கதையை விளங்கின புஸ்பகலா தiiயைக் குனிஞ்சபடி வெட்கத்தடனிருக்க,மொனிற்றர் தனபாலசிங்கம் சிரிப்பை அடக்க முடியாமல் பிலத்துச் சிரிக்க, செல்லத்துரை மாஸ்ரர் „நான் என்ன தங்கவேலு மாதிரி கொமடிக் கதை கதைக்கிறேனே „ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வகுப்பு முடிவதற்கான மணி அடிக்கிறது.

வகுப்பைவிட்டுப் போகும் போது லஞ்சுக்கு அடுத்தது இங்கிலிஸ்தானே நான் வர கொஞ்சம் லேற்றாகும் புத்தகத்தை எடுத்துப் படிச்சுக் கொண்டிருங்கோ’ என்று சொல்லிக் கொண்டே போகிறார் செல்லுத்துரை மாஸ்ரர்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *