புலம்பெயர் தமிழருடன் பகை மறத்தலும் முரண் அறுத்தலும்!…. அவதானி.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், கடும் பிரயாசையுடன் உழைத்து, பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு, எங்கே வாழ்ந்தாலும் தங்கள் அடையாளத்தையும் முடிந்தவரையில் தக்கவைத்தவாறு, கல்வி, சமூகம், வர்த்தகம், கலை, இலக்கியம், ஊடகம், இதழியல் , தன்னார்வத் தொண்டு, சமயம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முன்னிறுத்தி உருவாக்கிய புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா, எதிர்வரும் நவம்பர் மாதம் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவரது அரசின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நவம்பரில் நடக்கவிருக்கும் இந்த நேரடிச் சந்திப்புக்கு முன்னோட்டமாக தற்போது மெய் நிகர் ஊடாகவும் பேச்சுவார்த்தைகள் புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளுடன் நடப்பதாகவும் இச்செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிகவும் நல்ல செய்திதான். ஆனால், இந்த செய்திக்குப் பின்னால், இழையோடியிருக்கும் பல்வேறு விடயங்களை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காண்பிக்கவேண்டிய தேவையும் உருவாகியிருக்கிறது.
சந்திப்புகள் – பேச்சுவார்த்தைகள் – கலந்துரையாடல்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை. அத்துடன் உள்நாட்டு, சர்வதேச அரசியல் அரங்குகளிலும், ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளிலும் இவை நடந்துவருகின்றன.
அதன்மூலம் கருத்து முரண்பாடுகளை களைய முடியும். பகை மறக்கமுடியும் என்ற நம்பிக்கைதான் பொதுவாகவே மனதிலிருக்கும்.
நாட்டுக்கு நாடு சண்டை மூளும்போது, பல்வேறு இழப்புகளுக்கும் பின்னரே சர்வதேச அழுத்தங்களை அடுத்து, சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன.
உதாரணமாக இந்திய – சீன யுத்தம், இந்திய – பாக்கிஸ்தான் யுத்தம், வியட்நாம் – அமெரிக்கா யுத்தம் என்பவற்றினை முடிவுக்கு கொண்டுவந்தது இந்தப் பேச்சுவார்த்தைகள்தான்.
இலங்கையிலும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன..? என்பதை அறிந்திருக்கின்றோம்.
திம்பு முதல், நோர்வே வரையில் எத்தனை சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன…?
இறுதியில் நடந்தது என்ன…? பல்லாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டு, மக்கள் தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் உடல்கள் ஊனமாக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டு, எண்ணிக்கை சொல்ல முடியாத குழந்தைகள் தமது குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்து , பெண்கள் விதவைகளாகித்தான் போரும் முடிவுக்கு வந்தது.?!
ராஜபக்ஷ சகோதரர்களின் நிர்வாகச்சீர்கேட்டு அரசியலினால், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து, மக்கள் பசி, பட்டினியோடு வீதிக்கு வந்து போராடியதையடுத்து, ஆட்சிபீடத்தின் தலைவரது வாசஸ்தலம் , தலைமை அலுவலகம் என்பன முற்றுகையிடப்பட்டு, அந்த அதிபரே நாட்டை விட்டு ஓடிய நிலையில் எதிர்பாரதவகையில் 134 பேரின் வாக்கோடு அதிபர் பதவிக்கு வந்துள்ளவர்தான், தற்போது புலம்பெயர்ந்து சென்ற மக்கள் வெளிநாடுகளில் உருவாக்கியிருக்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு முன்வந்துள்ளார்.
சோலியான் குடுமி சும்மா ஆடாது ! என்பார்கள். காரணம் இன்றி காரியம் இல்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் எனவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தவர்கள்தான் புலம்பெயர் தமிழ் அமைப்பினர்.
அவர்கள் அத்துடன் நிற்கவில்லை.
தங்களது தன்னார்வத் தொண்டுகளையும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொண்டு வந்தவர்கள்
குறிப்பாக நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 2004 இறுதியில் வடக்கில் முல்லைத்தீவு பிரதேசத்திலும், கிழக்கில் அம்பாறை பிரதேசத்திலும் நிகழ்ந்த சுநாமி கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவினர்.
கடந்த சில வருடங்களாக நாட்டில் நீடித்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் கஷ்டமுறும் தமது உறவுகளுக்கும் அவர்கள் உதவிவருகின்றனர்.
அவ்வாறு மனிதாபிமான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துவரும் புலம்பெயர் தமிழர்களால் கடந்த 35 வருட காலத்துள்
உருவாக்கியிருக்கும் பல்வேறு அமைப்புகளுடனும்தான் இலங்கையின் தற்போதைய அதிபர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்துள்ளார்.
எந்தெந்த நாடுகள்…? பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, கனடா.
இந்த நாடுகளுக்கு இலங்கைத் தமிழர்கள் ஏன் தப்பியோடிச் செல்லநேர்ந்தது..? என்ற கேள்விக்கான பதில்களைத் தேடுவதற்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கும் எவரும் பாடம் நடத்தவேண்டிய அவசியம் இல்லை.
ஆறேழு தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையர்கள் பிரித்தானியாவுக்கு மேற்கல்விக்காக சென்றனர். முக்கியமாக அவர்கள் ஒக்ஸ்போர்ட், கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகங்களுக்கு சென்றனர் . அவ்வாறு சென்றவர்களில் சிலர் பின்னாளில் அரசியல் அரங்கிலும் பிரகாசித்தனர்.
அதில் முக்கியமாக இரண்டு சிங்களத் தலைவர்களை குறிப்பிடலாம். ஒருவர் எஸ். டபிள்யூ.
ஆர். டீ. பண்டாரநாயக்கா. மற்றவர் ஜே. ஆர். ஜெயவர்தனா.
இவர்கள் கற்ற மேலைத்தேய கல்வியிலிருந்தும் – இவர்கள் அந்த நாட்டில் கண்ட அரசியல் முறைமையிலிருந்தும் பெற்ற அனுபவத்தை, தாயகம் திரும்பி அரசியலில் பிரவேசித்தபோது பயன்படுத்தினார்களா….?
இந்த இரண்டுபேரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு, தேசத்தின் தலைவர்களாக மாறிய பின்னர்தானே இலங்கையில் இனமுரண்பாடும் இனப்பகையும் உருவாகி, கலவரங்கள் வெடித்து, இனவிடுதலைப் போராட்டமும் தொடர்ந்து, பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பல இலட்சம் மக்கள் ஏதிலிகளாக நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு ஓடினர்.
ஏதிலிகளாக ஓடிய மக்கள் தாம் புகலிடம் பெற்று வாழும் அந்நிய நாடுகளில் உருவாக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், ஜே. ஆர். ஜெயவர்தனாவின் உறவு முறையில் வந்த ஒரு வாரிசு இப்போது பேச்சுவார்த்தைக்கு தயாராகியிருக்கிறார்.
1958 – 1977 – 1981 – 1983 ஆண்டுகளை இந்த வாரிசும் கடந்துதான் வந்தவர். இதில் 1977 – 1981 – 1983 காலப்பகுதியில் இவரும் ஜே.ஆரின். அமைச்சரவையில் இருந்தவர்தான்.
இக்காலப்பகுதியில்தான், தற்போது இவர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகியிருக்கும் பிரித்தானியா, நோர்வே,
அவுஸ்திரேலியா, கனடா முதலான நாடுகளுக்கு தமிழ்மக்கள் உயிர் அச்சுறுத்தலுடன் தப்பிச்சென்றனர்.
அவ்வாறு சென்றவர்கள்தான் தாம் புகலிடம்பெற்ற நாடுகளில் தமிழ் அமைப்புகளை உருவாக்கினர். தமது சந்ததிகளின் எதிர்காலத்திற்காக கல்விச்சாலைகளையும் வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி முதலான ஊடகங்களையும், வர்த்தக ஸ்தாபனங்களையும் தொழிற்சாலைகளையும் வழிபடுவதற்கு ஆலயங்களையும் உருவாக்கினர்.
பேரினவாதம் இவர்களை துரத்தியடித்தது. அந்த பேரினவாதத்தின் இன்றைய பிரதிநிதிகள், நாட்டில் மீள முடியாத பொருளாதார நெருக்கடி வந்தவுடன் நாட்டை விட்டு தப்பிச்சென்ற தமிழ் மக்களினால் கடும் பிரயாசைக்கும் உழைப்புக்கும் மத்தியில் உருவாக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு முன்வந்துள்ளனர்.
இது பகை மறத்தலா..? முரண் அறுத்தலா..? அல்லது, ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காண்பிக்கப்போகும் மற்றும் ஒரு நாடகமா..?
பொறுத்திருந்து பார்ப்போம் !
இதற்கு முன்னரும் பல நாடகங்களை பார்த்தவர்கள் அல்லவா இந்தத் தமிழ் மக்கள். இதனையும் பார்த்துவிடுவார்கள்.
—0—
![]()