கட்டுரைகள்

யார் எழுத்தாளன்?…. கிறுக்கல்….9 …. சங்கர சுப்பிரமணியன்.

ஒரு திருமணம் அல்லது காதணி விழாவுக்குபோகின்றோம் அங்கு ஐந்தாறுபேர் ஒரு படத்தை பார்த்திருந்தால் அதைப்பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள். தேவைப்படும் தருணத்தில் மட்டுமே அந்நிகழ்வில் கவனம் செலுத்துவார்கள். மற்றபடி அவர்கள் பகிர்வெல்லாம் இந்த படத்திற்கு சண்டைக் காட்சிகள் அவசியமில்லை. இந்த பாடல் கருத்துமிக்கதாகவும் இடத்திற்கு ஏற்றவாறும் சேர்த்துள்ளார்கள். எடிட்டிங் செய்ததைக் கண்டுபிடிக்கவே முடியாதமாதிரி அற்புதமான திறமை. ஒளிப்பதிவு சில இடங்களில் பிசுறு அடிக்கிறது போன்று அவர்கள் படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்.இதயேதான் ஒரு நூலைப்படித்த பத்துபேர் சேர்ந்துகொண்டு அதைப்பற்றி விவாதிப்பார்கள். எழுத்தாளரின் முற்போக்கு சிந்தனை நீரோடைபோல் நூல்முழுக்கபாய்ந்து செல்கிறது என்பார் ஒருவர். இன்னொருவர் அவரது முற்போக்கு சிந்தனை கமலாவின் கையைப் பிடிக்கும்போது சற்றே நொறுங்கிப் போகிறது என்பார். சீதாராமன்கல்யாணியை அவ்வளவு நேரம் பரிமாளாவின் வீட்டில் தங்க வைத்ததில் இருந்தே கதையை சாதுர்யமாக முகம் சுளிக்கவைக்காது நகர்த்திச் செல்கிறார் என்பார்.இவ்வாறுதான் அனுபவத்தை அந்த நூலைச்சுற்றி சுற்றி வந்து அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். அதைத்தாண்டி அவர்களால் என்ன செய்து விடமுடியும்? இவ்வாறு விவாதம் பண்ணுபவர்களிலும் பசிக்கு விவாதிப்பவர்களும் உண்டு ருசிக்கு விவாதம் பண்ணுபவர்களும் உண்டு. என்ன குழம்புகுறீர்களா? திரைப்பட ரசிகர்களில் குறிப்பிட்ட நடிகர்களுக்கென்று ரசிகர்கள்இருப்பதுபோல் இவர்களிலும் இருக்கிறார்கள். இதில் குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கமாட்டார்கள்.ஆனால் இந்த ரசிகர்களே அவர்களின் நடிகர் நடித்து படங்களே வராதபோது பசிக்கு சாப்பிடுவதுபோல் மற்ற நடிகர்களின் படங்களையும் பார்ப்பார்கள். இதேபோல் நூல்களைப் பொழுதுபோக்குக்காகபடிப்பவர்களுக்கும் அவர்களுக்கென்று பிடித்தமான எழுத்தாளர்கள் இருப்பார்கள். இந்த எழுத்தாளர்களின் நூலைப்பற்றி விவாதிக்கும்போது தவறாது கலந்து கொள்வார்கள். அதுவே மற்ற எழுத்தாளர்களின் நூலைப்பற்றி விவாதித்தால் ஆர்வம் காட்டமாட்டார்கள். அல்லது வேறு நிகழ்ச்சிகளே இல்லாதபோது பசிக்காக சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல் கலந்து கொள்பவர்களும் உண்டு.மற்றபடி இந்த வாசித்ததை பகிர்ந்து கொள்வதென்பது நல்ல பொழுது போக்கு. பொழுது போக்காக சூதாட்ட விடுதிக்குபோவது ஒன்றுமில்லாத உருப்படியற்ற படங்களுக்கு சென்று பணத்தை விரயம் பண்ணுவது நண்பர்களுடன் சேர்நது மதுவருந்தி மகிழ்வது ஒன்றுமில்லாமல் ஊர்வம்பு பேசுவது மற்றும் மற்றவர்களைப்பற்றி புறம் கூறுவதன்று இல்லாமல் நண்பர்களுடன் படித்த நூலைப்பற்றி விவாதித்து பொழுது போக்குவதென்பது ஆரோக்கியமானதே.திருமணங்கள் போன்ற விழாக்களில் திரைப்படத்தை பற்றி விவாதிப்பது நடந்து முடிந்த கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றி அலசுவது அரசியல் பேசுவது என்பதெல்லால் அந்த இடத்தில் அப்போது யதார்த்தமாக நடப்பது. ஆனால் நூலைப்பற்றி விவாதிப்பதென்பது இடம் நேரம் நூல் போன்றவற்றை தேர்ந்தெடுத்த்து அதன்பின் கூடி விவாதிப்பதாகும். ஒன்றில் விவாதிப்பதற்காக நேரம் குறித்து பொழுதைப் போக்குவது. மற்றொன்றில் பொழுதைப் போக்குவதற்காக விவாதிப்பது.நூல் விவாதத்திலும்  நேர்மை கையாளப் படவேண்டும். தமக்கு பிடித்த எழுத்தாளர்கள் என்பதற்காக எழுத்துக்கே துரோகம் இழைத்தபடி விவாதம் செய்பவர்களும் இங்குண்டு. குப்பை திரைப்படம் என்றாலும் தமக்கு பிடித்த நடிகர்கள் நடித்திருந்தால் அதை ஆகா ஓகோ என்று புகழும் ரசிகர்கள் போலத்தான் இவர்களும். எல்லோரும் மனிதர்கள்தானே. அதைப்போன்று நேர்மையான எழுத்தாளர்களை கண்டு கொள்ளாதவர்களும் இந்த விவாதக் குழுவில் இருப்பார்கள்.இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். கற்பனைக் கதை மற்றும் நூல்கள்எழுதுபவர்களும் உண்டு. வரலாற்று நாவல்கள் எழுதுவோரும் உண்டு. கற்பனை கதைகளையோ நாவல்களையோ எழுத்தாளர்களால் எழுதமுடியும். ஆனால் வரலாற்று நாவல்களை எல்லோராலும் எழுதிவிட முடியாது. காரணம் வரலாற்றுச் சான்றுகளை சரியாகக் கொடுக்கவேண்டும். அதற்கு கல்வெட்டு, புதைந்த எச்சங்கள், செப்பேடுகள் மற்றும் அங்கீகரிக்ப்பட்ட வரலாற்று ஆவணங்கள் போன்றவற்றின் துணையோடுதான் சிறப்பாக எழுதமுடியும்.சிலர் வரலாற்றில் கற்பனையைக் கலந்து புதினங்களைப் படைப்பார்கள். அதில் தவறில்லை. அதில் உண்மைத்தன்மை சீர்கெடும்போது அதை சிறந்த புதினம் என்று இலக்கியவாதிகளும் வரலாற்றாய்வார்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இப்படிப்பட்ட புதினங்களை பாமரமக்கள் அதன் நடையினால் தலையில் தூக்கிவத்துக் கொண்டாடுவார்கள. பாவம் இந்த மக்கள். அவர்களது இனத்தின் வரலாறு சிதைக்கப்பட்டு இனத்தையே கொச்சைப் படுத்தியிருப்பது அவர்களுக்கு புரியாது.இப்படிப்பட்ட வரலாற்றைச் சிதைக்கும் நூல்களை மதுவுக்கு ஒப்பிடலாம். மதுதரும் போதையால் அதை விரும்பி அருந்தி உடல் ஆரோக்கியத்தையே கெடுப்பது போன்றே இவ்வகை புதினங்கள் நம் இனவரலாற்றை சிதைத்து அழிக்கிறது என்ற உண்மையை அறியாமல் அந்நூலின் கற்பனையிலும் நடையிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் பாத்திரப் படைப்பிலும் மயங்கிக் கிடப்பார்கள்.தமிழ்தேசிய பேரியக்கத் தலைவரும் எழுத்தாளருமான பெ. மணியரசன் வேடிக்கையாக ஒன்றைச் சொல்லுவார். சாம்பார் வைக்கலாம். கருவாட்டுக் குழம்பும் வைக்கலாம். இரண்டும் இல்லாமல் கருவாட்டுச் சாம்பார் வைப்பது எப்படி? என்பார். அதை நான் இங்கு இந்த நூல்களுடன் ஒப்பிடுகிறேன். கற்னையாக புதினங்களைப் படைக்கலாம். வரலாற்றைச் சிதைக்காமல் வரலாற்றுப் புதினங்கள் படைக்கலாம். அவற்றை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.வரலாற்றைச் சிதைத்து ஒரு இனத்தைக் கொச்சைப்படுத்தி கற்பனையையும் கலந்து எழுதினால் அது கற்பனை நாவலா அல்லது வரலாற்று நாவலா? அது இரண்டுங்கெட்டானாக கருவாட்டுச் சாம்பார் போன்றுதான் ஆகிவிடும். சில சமயங்களில் இந்தமாதிரி படைப்புக்கள் பெரும் வரவேற்பை பெற்று விடுவதுண்டு. ஒவ்வொரு மதுவுக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. பல மதுக்களை கலந்து காக்டெயில் ஆகும்போது அது பெரும் வரவேற்பைப் பெற்றுவிடுகிறதல்லவா அதைப் போன்றுதான்.இந்த மாதிரி படைப்புக்களை அம்பலப்படுத்தும்போது இனப்பற்று அற்றவர்கள் புலம்பத் தொடங்கி விடுவார்கள். நூலை நூலாகப் பாருங்கள் என்று இலவச அறிவுரைகள் வானளாவ இருக்கும். இவர்களுக்கு ஒன்றைச் சொல்லலாம். எங்கோ ஒரு கொலை நடக்கிறது? சமுதாயத்தில் கொலை கொள்ளைகள் நடப்பதை தவிர்க்க இயலாது என்பார்கள். அதே கொலையும் கொள்ளையும் தன்குடும்பத்தில் நடந்தால் அதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்களா?அதைப்பற்றி சிறிதும் கவலையடைய மாட்டார்களா? அப்படியிருப்பின் அவர்களின் பொற்பாதங்களில் பூக்களை வைக்கலாம். தமிழில் ஒரு பழமொழி உண்டு. தலைவலியும் நோவும் தனக்கு வந்தால்தான் புரியும் என்பதே அது. சிலர் யார் துன்படைந்நாலும் வருந்துவார்கள். சிலர் மற்றோர் துன்பத்தை கண்டு கொள்ளமாட்டார்கள். விருப்பு வெறுப்பின்றி தன் இனம் தாங்கொனா துயரடையும்போது வருந்துபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படிப் பட்டவர்கள் தன் இனத்தின் வரலாற்றைச் சிதைத்து கொச்சைப்படுத்தும் படைப்புக்களை ஏற்கமாட்டார்கள். -சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *