கட்டுரைகள்

யார் எழுத்தாளன்? … ( கிறுக்கல் ஆறு ) ….. சங்கர சுப்பிரமணியன்.

எனது நண்பர் ஒருவர் என்னிடம்வேடிக்கையாகச் சொல்லி சிரிப்பார். தமிழர் கோவில் கட்டுபவரை ஸ்பதி என்பார்கள். வீடு கட்டுபவரை கொத்தனார் என்பார்கள். இருவரும் கட்டிடவேலை செய்பவர்கள் என்பதை மறந்துவிட்டு ஸ்தபதி என்ற சொல்லில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்பான். எனக்கு அப்போது பாரதியார் சொன்ன வரிகள்தான் நினைவில் வந்துமோதும். நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சுபொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே நெஞ்சு பொறுக்குதில்லையே என்பதே அவ்வரிகள்.உண்மையில் இருவரும் கல்லில் பணிபுரிபவர்களே. ஆனால் ஆகமம், சிற்ப நுணுக்கங்கள், வடமொழி பற்றிய அறிதல் போன்றவற்றை உள்ளடக்கி ஸ்தபதி என்று கூறும்போது புலகாங்கிதம் அடைந்து விடுகிறார்கள். இதற்கு மனிதனின் மனப்பாங்குதான் காரணம். மாடு நமக்கு பயன்படும் பிராணி என்பதே உண்மை. ஆனால் ஒருவரை மாடு மாதிரி வருகிறான் என்றால் வெகுண்டெழுகிறார். அவரையேசற்று பெருமிதமாக எண்ணும்படி பசு மாதிரி வருகிறார் என்றால் பசுவும் மாடுதான் என்பதை மறந்து புலகாங்கிதம் அடைந்து விடுகிறார் அல்லவா?.தமிழ் இனத்தை பொருத்தமட்டில் இருண்ட காலத்திற்கு பின்னரே பல வீழ்ச்சிகளை சந்தித்தனர். ஆரம்பகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கி இருந்திருக்கிறார்கள். அதிலும் ஆணும் பெண்ணும் சிறந்து விளக்கியிருக்கிறார்கள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனென்றால் ஔவையார் போன்ற எத்தனையோ பெண்புலவர்கள் இருந்திருக்கிறார்கள். அதன்பின் வெகுகாலமாகவே கல்விகற்கும் உரிமை எல்லோருக்கும் வழங்கப்படாமல் இருந்திருக்கிறது.இந்த அடிப்படை உண்மை தெரியாத சிலர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்து என்ன? தமிழரின் வரலாற்றை சரிவரப் புரிந்து கொள்ளாமல் ஏதோ தமிழரின்வரலாறு என்பது களப்பிரர் காலத்துக்கு பின் மட்டுமே என எண்ணி கதைவிட்டுக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு இனத்துக்குமே வீழ்ச்சி என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்றாகும். சான்றாக ரோமப்பேரரசு ஆங்கிலேயப் பேரரசு போன்றவற்றை சொல்லலாம்.இதனால் ரோமப் பேரரசும் ஆங்கிலேயப் பேரரசும் வெற்றி கண்டதேயில்லை என கண் மூடித்தனமாக சொல்லிவிடமுடியிமா? ஆனால் சிலர் தமிழர் வரலாற்றை களப்பிரர் காலத்திற்கு பின் மட்டும் எடுத்துக்கொண்டு தமிழர் தம்மை வீரர் என்று வீணாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். களப்பிரரைத் தொடர்ந்து பல்லவர்கள் அதன்பின் விஜயநகர பேரரசு, நாயக்க மன்னர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் படையெடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியவர்கள் என்றெல்லாம் எழுதிவருகிறார்கள்.அதுமட்டுமா? அதற்கு சான்றாக அரண்மனை போன்றவைகளெல்லாம் அவர்களுக்கு கிடையாது என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழர் வரலாறு முழுவதையும் படித்துத் தெரிந்து கொள்ளாதவர்களை என்னவென்று சொல்வது? ஒரு இனத்தைப்பற்றி எழுதவேண்டும் என்றால் வேற்றினத்தானாலும் பரவாயில்லை அவன் நடுநலையாளனாக இருக்கவேண்டும். ஒரு இனத்தின்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவராலோ அல்லது அந்த இனத்தின்மீது அதீத பற்றுள்ளவராலோ உண்மையை மறைக்காமல் எழுத முடியாது.இப்படி எழுத்தாளர்களில் பலவகை. அடுத்ததாக எல்லா எழுத்தாளர்களும் மற்ற எழுத்தாளர்களின் நூல்களையும் படிக்கிறார்களா? என்று எண்ணியபோது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் தமிழருவி மணியனும் எழுத்தாளர் சுஜாதாவும் சந்தித்து கொண்டபோது சுஜாதா மணியனிடம் என்னுடைய நூல்கள் எதையெல்லாம் படித்திருக்கிறீர்கள் என்றாராம். அதற்கு மணியனிடம் இருத்து வந்த பதில் ஒரு நூலைக்கூட படித்ததில்லை என்பதுதான்.இந்தப் பதிலை சுஜதா சற்றும் எதிர்பார்க்கவில்லை.தொடர்ந்த அவர்கள் உரையாடலில் அப்படியானால் யாருடைய நூலை எல்லாம் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தமிழருவி மணியன் நா. பார்த்தசாரதி, தி. ஜானகிராமன் என மூன்று எழுத்தாளர்கள் நூல்களை மட்டுமே படித்ததாக கூறியிருக்கிறார். மணியன் கூற்றிலும் நியாயம் இருப்பதாகவே எண்ணுகிறேன். ஒவ்வொரு மனிதன் வாழும் சமகாலத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் எத்தனையோ நூல்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை எழுத்தாளர்கள் எழுதிய அத்தனை நூல்களையும் வாசிப்பதென்பது சாத்தியமற்றதே.இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால் தலைசிறந்த நூல்களே சந்தையில் எடுபடுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆதலால் கண்டதையும் எழுதி நூலாக வெளியிடாமல் கருத்துக்கள் கொண்டவற்றை நூலாக வெளியிட்டால்தான் ஊடகங்கள் மிகுந்த இந்நாளில் எடுபடும். வேண்டுமானால் இத்தனை நூல்களை வெளியிட்டுள்ளேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த வாசிப்புவேறு. இன்றைய நிலை வேறு. உணவமுறை தொடங்கி அன்றாடமனிதவாழ்வில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கல்வி கற்கும் முறைதொட்டு மருத்துவ சிகிச்சைவரை பல முன்னேற்றங்களையும் வேறுபாடுகளையும் வாழ்க்கை முறையில் புகுத்தியுள்ளான். இதனை எழுத்திலும் படைப்பிலும் புகுத்திவிட்டான். அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டான்.இதை ஒரு சான்றுடன் விளக்குகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நான் பெங்களூரில் வாழ்ந்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை விடியும்போதும் சொல்லமுடியா இன்பமானதாக இருக்கும். விடுமுறை என்பதுடன் அன்று அதிகாலையிலேயே குமுதம் கல்கண்டு இதழ்கள் அலசூரில் உள்ள சமங்கலி ஸ்டோருக்கு வந்தவிடும். அங்கே அவ்விதழ்கள் திருவிழாவின்போது தொங்க விடப்படும் தோரணங்கள் போன்று தொங்க விடப்பட்டிருக்கும்.காலை எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்தவுடன் குமுதம் கல்கண்டை வாங்கிவந்த பின்தான் காபி குடிப்பேன். அந்த காபி கிடைக்கவேண்டுமெனில் எனது அண்ணியிடம்தான் முதலில் குமுதத்தைக் கொடுக்க வேண்டும். அதன் பிறகாவது எனக்கு கிடைக்குமா என்றால் அதுதான் இல்லை. என் அக்கா மதியசமையலில் செய்யவேண்டிய உதவியை காரணம்காட்டி அண்ணியிடமிருந்து குமுதத்தை அபகரித்து விடுவாள். அந்த சமயத்தில் கல்கண்டுதான் எனக்கு கைகொடுக்கும்.இப்படியாக மியூசிகல் சேர் முடிவடைந்து எல்லோரும் அரைகுறையாகப் படித்துமே என் கையில் வருவதற்குள் வானொலியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். இன்று கல்கண்டு இதழ் காணாமல் போய்விட்டது. செல்வச் செழிப்புடனுள்ள இல்லத்தில் வளரும் குழந்தைக்கு பொன்வண்ணக் கிண்ணத்தில் பால்கஞ்சியாக இருந்த குமுதம் இன்று கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்ட கலயமாக மாறி தோற்றமளிக்கிறது.-சங்கர சுப்பிரமணியன்.(கிறுக்கப்படும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *