கதைகள்

இரட்டைப்பட்டுச் சங்கிலி!…. ( குறுநாவல் )…. பகுதி 2 …. முல்லைஅமுதன்.

மறுநாள் விசும்பல் ஒலி கேட்டது…..

மூலையில் அரிக்கேன் விளக்கு தன் ஒளியை சற்று தணிந்தே இருந்தது.காதைக் கூர்மையாக்கி உற்றுக்கேட்கையில் மெல்ல மெல்ல அது அப்பாவின் விசும்பல் ஒலியாக நெஞ்சுள் இறங்கி இறுக்கியது.அப்பா அழுது நாம் பார்த்ததில்லை.அம்மா அழுதது ஞாபகம்.அப்பா அப்படியில்லை.அப்பா திடகாத்திரமான உடல்வாகு கொண்டவர் இல்லை.நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை என்றும் சொல்லிவிடமுடியாது.ஆனால் மன உறுதி அதிகம் அவரிடம் இருந்தது.எத்தனை கஷ்டங்களை கடந்துவந்தவர் தனிமரமாக உணர்ந்திருப்பாரோ?குமர்ப்பிள்ளைகளை எப்படி அவர்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது?நண்பர்களை நம்பி ஏமாந்த கதையை நினைத்திருப்பாரோ? எழுந்து கிட்டப்போய் ஆறுதல் சொல்லும் வயதில் நாம் இல்லை.சிலவேளை அவருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தலாம்.அன்றைய இரவு மெதுவாகவே நகர்வது போலிருந்தது.முற்றத்து பிலா மரக்கிளைகளிலூடாக இலைகளை விலத்தியபடி சந்திரன் ஒளி காட்டிக்கொண்டிருந்தான்.

சுந்தரம் வீட்டுக்கிணற்றிலிருந்து தவளை கத்தும் சத்தம் தெளிவாகக்கெட்டது.சுந்தரம் வீட்டுக்கிணற்றில்தான் தண்ணீர் அள்ளுவோம்.அப்போது கிணறு வெட்டப்படவில்லை.குடிப்பதற்கு மட்டும் ஐயாத்துரை மாமாவின் வீட்டிற்குப் போவோம்..

வீட்டை விட்டு வெளியே போய் தண்ணிர் அள்ளவோ,குளிக்கவோ கூச்சமாகவோ,சங்கடமாகவோ இருக்கும்.பிறகு ஒருவாறு சின்னையாவின் காணிக்குள் இருந்த கிணற்றைத் துப்பரவாக்கி அதில் குளிக்கத்தொடங்கினோம்.பெரும்பாலும் தண்ணீரைச் சுடவைத்தே குடித்தோம்.அந்த கிணற்றடி பூவரசமரத்தில் அப்பா ஒரு உடைந்த கண்ணாடியை வைத்து சேவ் எடுப்பார்.அப்பா மீசையுடன் பார்த்ததில்லை.அப்பாவுக்கு மீசை வைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்துப்பார்த்து நமக்குள்ளே சிரித்ததும் உண்டு.

அப்பாவிற்கு மாறி மாறி சிப்ட் எனவேலை வரும்.அதிகமாக இரவு வேலையே கிடைக்கும்.பலவருடங்களாக இப்படித்தான்.அதுதான் கோபம் அதிகமாக வருகிறது என அம்மா சொல்லுவாள்.அப்பாவை புரிந்தவளாதலால் அப்பாவுடன் குடும்பம் நடத்துகிறாள்.

தனக்கென பிள்ளைகள் வந்ததும்,தனது குடும்பம் மீதான அளவிற்கதிகான ஈடுபாடு அதிகமாகியது..அப்பா தானுண்டு என்றிருந்தாலும் யாரிடமும் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படவில்லை.

அம்மா குடும்பத்தில் கடைசிப்பெண்.மூத்தவர்களெல்லாம் திருமணமாகி அவர்களின் குழந்தைகளையும் பராமரிக்கின்ற பொறுப்பும் அம்மாவின் மீதே விழுந்தது.அப்பாவைத் திருமணம் செய்யும்வரை அதுதொடர்ந்தது.இப்போது தனக்கும் குழந்தைகள் கிடைத்ததும் தனித்த தீவாகிப்போவதாக உணர்ந்தாள்.எனினும் வெளிக்காட்டவில்லை.

அம்மா அசல் கிராமத்திலிருந்து வந்தவள்.அப்பா போகுமிடமெல்லாம் மௌனமாக நடக்கின்ற பண்பே அவளை உயர்த்திக்காட்டியது.அப்பாவின் கோபம் பழகிவிட்டது.ஆரம்பத்தில் அழுதாலும் அது பழகிவிட இப்போதெல்லாம் அப்பாவின் கோபத்தை சட்டை செய்வதில்லை.அப்பாவும் கெட்டவரில்லை.அவருடன் வேலை பார்ப்பவர்கள் போல குடிப்பதில்லை.தூரப் பயணங்களில் மட்டும் திறி ரோஸஸ் புகைப்பார்.மற்றப்படி தொடவேமாட்டார்.நன்றாக வாசிப்பார்.ஆனால் யாழ்ப்பாணம் வந்தபின் அது கொஞ்சம் குறைந்துவீட்டது போலிருந்தது.வேலை முடிந்து வந்தால் ஏதோ ஒரு வேலை காத்திருக்கும்.திருகோணமலையில் நிறைய நேரம் இருந்தது.அங்கு அம்மா சிறிய அளவில் வீட்டுத்தோட்டம் வைத்திருந்தாள்.சைவக்கடையில் இடியப்பம்,தோசை,அப்பம் என வாங்கி காலை உணவாக்கிவிடுவாள்.மாலையில் கல்பணிஸ்,சுடச்சுட பாணை பேக்கரியில் வாங்கிவைத்திருப்பாள்.அப்பாவிற்கு உள்ளூர மகிழ்வார்.சிறுவயது குறும்புகள்,குழப்படிகளாகி அப்பாவிற்கு அவ்வப்போது கோபத்தை ஏற்படுத்திவிடும்.அம்மா அடிவிழுவதைத் தடுப்பாள்.சில சமயம் ஒதுங்கிவிடுவாள்.ஒருநாள் கோபத்தில் சுடவைத்த கம்பியை எனது கைகளில் சூடுவைத்துவிட ஓவென்று அழத்தொடங்கிவிட்டேன்..பக்கத்துவிட்டு மாமி வந்து மக்னீசியாவை காயத்தில் பூசிவிட்டாள்.

‘சூடு வைத்தால்தான் திருந்துங்கள்’ அப்பாவின் வாதம்.ஜோன் மாவும் மகளை குழப்படி என்று சாக்கில் கட்டி கடலில் எறியவென தூக்கிக்கொண்டு செல்ல அப்பா தடுத்துவிட்டார்.

‘ஆளுக்கொரு சட்டம்’ அம்மா உள்ளூர நினைத்திருப்பாளோ? ஜோன் மாமாவின் மனைவி அம்மாவை பரிதாபமாக பார்த்தாள்.அதில் வேறொரு அர்த்தம் தொனித்தது.’உவர் வெருட்டுறார்..ஆரும் பெத்த பிள்ளையை எறிவினமே…மேளை பயமுறுத்தவே இப்படி ஒரு நாடகம்’

அம்மா உள்ளே சென்றுவிடுவாள்.

அம்மா யாருடனும் அரட்டை அடிக்கமாட்டாள்.வெளியில் வந்து உடகாருத்து ஜோன் மாமி கதைகள் சொல்லும் போது சிறுவர்கள் கேட்போம்..அதிகமாய் பேய்க்கதைகள் தான் சொல்லுவார்.கதைகள் சொல்லாத நாளென்றால் மாமி ஊரில் இல்லை என்றே அர்த்தம்.

அம்மா மற்றப் பெண்களைப்போல தன்னை அலங்கரித்துக்கொள்பவல்ல.அப்பாவும் அப்படி எதிர்பார்ப்பவரல்ல.புஞ்சி பண்டாவின் மனைவி வலிய வந்து தனக்குத்தெரிந்த தமிழில் கொஞ்சும் மொழியில் அம்மாவுடன் கதைப்பாள்.தனக்குத் தெரிந்த பலகாரங்கள் செய்யும் முறைகளைச் சொல்லிக்கொடுப்பாள்.தான் வீட்டில் செய்தவைகளையும் கொண்டுவந்து கொடுப்பாள்.அம்மாவிற்கு அவளைப்பிடித்துப்போயிற்று. கொஞ்ச காலம் தான்..அவளுக்குப் புற்றுநோய் என்று ஊருக்குப்போனவள் திரும்பிவரவேயில்லை.அம்மா மிகுந்த கவலையுற்றாள்.அதற்கொரு இன்னொரு காரணமும் இருந்தது. கடைசித்தங்கை பிறந்தபின் அம்மாவிற்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வந்திருப்பதாக சொல்லி சத்திரசிகிச்சை மூலம் கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள்.அதனல்தான் புஞ்சிபண்டாவின் மனைவியின் நட்பு இல்லையென்றான பின் கவலைகொண்டமை இயல்புதான்.மற்றப் பெண்களுடன் புன்னகை ஒன்றையே நட்பாய் தருவாள்.மாலையானதும் சாக்கு ஒன்றை எடுத்து குவார்ட்டஸிற்கு முன்னாலுள்ள புல்தரையில் உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பேன் பார்ப்பதும்,அரட்டையடிப்பதுமாய் இருக்க அம்மாஅவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றையாய் பதில்சொல அவர்களும் சலிப்பாகி அதிகம் பேசமாட்டார்கள்.நாங்கள் கோல்போஸ்டாக இரண்டு கல்லை வைத்து கால்பந்து விளையாடுவோம்.

விடுமுறையில் யாழ்ப்பாணம் போகையில் வெளிநாடுகளில் இருந்து வருவது போல வரவேற்பு இருக்கும்.ஒரு வித இனம்புரியாத மகிழ்ச்சி அங்கு இருந்தது.அப்பாவின் முடிவால் மகிழ்ந்துவிடும் மனநிலை இல்லை.அப்பாவிற்குள்ளும் ஏதோ ஒன்று நோய் வடிவில் ஒரு மாற்றத்தை,அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்.நீண்ட காலமாக அவர் தீர்மானித்துமிருக்கலாம்.வாகனத்தில் ஒவ்வொன்றாய் பொருட்களை ஏற்றுகையில் அப்பாவின் கைகளின் நடுக்கம் இருந்தது.பிரிவின் ஆற்றாமையாகவும் இருக்கலாம்.இங்கு யாரும் நிரந்தரமில்லையே.இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தொழில் நிமித்தம் வந்திருப்பவர்களே.உறவுகள் போல பழகினாலும் ஒருகட்டத்தில் பிரிந்து அவரவர் ஊர்களுக்குச் சென்றும் விடுவர்.இவை அப்போது நமக்குப் புரிந்திருக்கவில்லை.அப்பா தீர்மானமாக இருந்தார்.

ஆனால் ஊர் வந்ததும் அந்த அனுபவம் இல்லை..அம்மாவும் தன்னை குடும்பவட்டத்திற்குள் முற்றாக அர்ப்பணித்துக்கொண்டாள் என்றே சொல்லலாம்.பாவம் அம்மா..

இப்போது அப்பாச்சி கதைகள் சொல்லும் போது அம்மாவும் கேட்டபடி சமையலில் கவனத்தைச் செலுத்தியபடி இருப்பாள்.எதுவும் பேசமாட்டாள்.

அடி வளவிற்குள் காவோலைகள் உரசும் சத்தம் கேட்டது.அப்பா வேலைக்குப் போக ஆயத்தமானர்.அம்மா சாப்பாட்டை பார்சலாகக் கட்டி அப்பாவிடம் கொடுத்தாள்.அப்பாச்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாடு ஒண்டை வாங்கினால் பால் வாங்குற காசு மிச்சம்.அம்மாவின் நினைப்பு அப்பாவிடம் சேர்ந்திருக்கவேண்டும்..சின்னத்துரை மாடு ஒண்டை வாங்கித்தருவதாகவும் அப்பா சொல்லிக்கொண்டது காதில் கேட்டது.திருகோணமலையில் இருந்தகாலத்தில் கிண்ணியாவிலிருந்து வரும் தயிரை விருப்பமாக வாங்கிக் குடிப்போம்.சின்னதாய் பால் டின்னில் போட்டு 40 சதத்திற்கு கிடைக்கும்.ருசியாகவும் இருக்கும்.புஹாரியிடம் சொன்னால் கன்றுடன் மாட்டைக் கொண்டுவந்து தருவார்.15 ரூபாய் மாதம் வாங்குவார்.நாங்களே சாப்பாடு போடவேணும்..பால் வற்ற மாட்டையும்,கன்றையும் கொடுத்துவிடவேணும்.அவரிடம் நிறைய மாடுகள் இருந்ததாகச் சொல்லுவார்கள்.

அதிகாலையிலேயே எழுந்துகொள்ளும் அம்மா எறும்பு மொய்த்திருந்த இடங்களையெல்லாம் விளக்குமாற்றால் மணலால் மூடிவிட்டு கூட்டத்தொடங்குவாள்.சிலநேரங்களில் தங்கள அந்த வேலையைச் செய்வார்கள்.இரவு முழுதும் ஊர்வனநடந்துசென்ற அடையாளங்கள் ஆங்காங்கே இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

அப்பாவின் சைக்கிள் படலையைத் தாண்டிச்செல்லும் சத்தம் கேட்டது.

‘அப்பாடா’ என வீடு கலகலப்பானது.சத்தம் போட்டு பாட அப்பாச்சி சிரித்தபடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

முன்பெல்லாம் பத்திரிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்குபற்ற அப்பா உதவுவார்.அம்மாவும் தனக்குத்தெரிந்த பதில்களையும் சொல்லுவாள்.வீட்டில் வானொலி இருக்கவில்லை.எப்போதாவாது யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உறவுக்காரர்கள் வந்து நிற்கும்போது அவர்கள் கொண்டுவரும் ரான்ஸ்ஸிஸ்டர் ரேடியோவில் பாட்டுக்கேட்போம்.அவர்கள் போனதும் அதுவும் இல்லை.பக்கத்து வீடுகளில் எப்பவாவது ஒலிக்கும்.சிலசமயங்களில் அவை கிறிஸ்தவ பாடல்களாகவோ,இஸ்லாமிய பாடல்களாகவோ இருக்கும்.அப்பாவும் நல்ல படங்கள் எனில் கூட்டிப்போவார்.அவரின் வருமானத்திற்கு கட்டுபடியாகாமல் இருந்திருக்கலாம்.அவரின் வாழ்வியற்சூழல் அவற்றிற்குப் பழக்கபாடாமல் இருந்திருக்கலாம்.அப்பாவின் மீது கோபம் வரவேயில்லை.அப்பா எப்போது நல்ல அப்பாவாகவே இருந்திருக்கிறார்.

பயணத்தால் அப்பா வந்தாரென்றால் நிறைய வாங்கிவருவார்.பெரும்பாலும் சாப்பாட்டுச்சாமான்களாகத்தானிருக்கும்.யாழ்ப்பாணம் போய் வந்தால் பனங்கிழங்கு,ஒடியல்,குரக்கன்மா, நெல்லி ரசம் ,பனங்கட்டி மறக்காமல் வாங்கிவருவார்.யாழ்ப்பாணம் வந்தபின் றம்புட்டான்,ஜம்புக்காய்,தயிர்,பொரி உருண்டை என பல தன் பைகளில் அடைத்து வாங்கிவந்துவிடுவார்.

அப்பா பன்குளம் போன இரு நாட்களும் பின் வளவுப்பக்கம் போகவில்லை.கொட்டிலுக்குள் இருக்கமுடியவில்லை.பெரியய்யாவின் வீட்டில்போய் தங்கவும் மனதுவரவில்லை.கட்டிய குறையில் கிடந்த வீட்டு விறாந்தையில் கறையான்,கற்குவியல்களுக்கிடையில் பொழுதைக்கழ்க்கவேண்டிவந்தது.அப்போது யாரோ தங்கள் மாடுகளைக் கொண்டுவந்த கட்டியிருந்தது புரிந்தது..பூரணம் மாமியாகத்தான் இருக்கவேண்டும்.அவள் கேட்பதில்லை.நாம் கேட்டால் ஏதேதோ சொல்லி மழுப்பிவிடுவாள்.அன்றும் அவள் சொல்லி மழுப்பினாள்.கோபமாக வந்தது.மாடு வீட்டின் பின்பக்கத்தை அலங்கோலப்படுத்தியிருந்தது.சாணியின் மணம் வேறு.. அப்பாவிடம் சொல்லி பூரணம் மாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும் என்று நினைத்தால் எதுவும் சொல்லமாட்டார்.’ஏன் வீணாய் சண்டை..’

யாழ்ப்பாணத்திற்கு வந்தபின் நேரமின்றி யாவரும் அலைவதை உணர்ந்தோம்.

அப்பா வேலைக்குப்போகவும்,வீடுவந்ததும் வளவைச் சுத்தம் செய்வதும்,வேலிகளைச் சரிசெய்வதும்,ஆடு மாடு,நாய் என வந்ததும் யாவரும் ஓய்வின்றியே நகர்ந்தனர்.

அப்பா இரவானதும் படுக்கையைச் சுற்றிச் சரசரக்கும்.அப்பா டோர்ச்லைட்டுடன் வெளியில் போய் பார்ப்பார்.பாம்பு சிலசமயம் போர்வைக்கு மேலால் போகும்.அசையாமல் படுத்திருப்போம்.எப்படித்தான் மண்ணெண்ணையை சுற்ற ஊற்றினாலும் பாம்பு,பூச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியவில்லை.

பகலில் பற்றரிகளை கழற்றி வெயிலில் காயவைத்துவிட்டு இரவானதும் டோர்ச்சை தயார் பண்ணிவிடுவார்

‘பேய் குடியிருக்கிற வளவு’ என்று அயலவர் சொல்லுவது உண்மையோ.

‘யாரும் பொன்விங்குகளுடன் பிறப்பதில்லை’ யாரோ போகிறப்போக்கில் சொல்லிப்போவது இன்றும் கேட்டது..வீதியில் சந்தைக்குப்போகும் ஒற்றைமாட்டுவண்டிலின் ஒலி…இரண்டு மூன்று வாழைக்குலைகளை பின் கரியலில் கட்டியபடி பலன்ஸ் தளராமல் போகும் புண்ணியமூர்த்தி…ஊ..ஊ என்று மூச்சுவிட்டபடி உடைகளைத் தோய்க்கும் முன்வீட்டு ஆழ்வான்..வீதி கலகலப்பாக இருக்கும்.காலை இப்படி விரியும்..மதியம் மீன்காரகளின் குரல் ஓங்கி ஒலிக்க வீதிக்கு வந்துவிடும் அம்மாக்கள்…மாலையில் தள்ளுவண்டியில் மணக்க மணக்க பணிஸ்,பாண்,,கல் பணிஸ் என கூவி விற்கும் பெரேரா…கூடவே பழைய கீறல் விழுந்த பாடல்களை ஒலித்தபடி எங்களுக்காகவே வருவது போல வரும் ஐஸ்கிரீம் வான்…

ஆறுமணியானதும் வீதி அடங்கிவிடும்..தட தட்வென புகையிரத செல்லும் ஒலி இங்கு இல்லை.ஓடிச் சென்று ஒரு சதத்தை தண்டவாளத்தில் வைத்துவிட்டு அது நசிந்து போய் கிடப்பதை ரசிக்கின்ற உணர்வு…பயணிகளை கைகளைக் காட்டியபடி குதூகலிக்கும் அனுபவம் இங்கில்லாமல் போனது கவலை.. புகையிரதப்பயணம் வாய்க்கவில்லை..யாழ்ப்பாணத்தில் புறப்பட்டால் சுற்றிப்போகும்.ஆங்காங்கே வேறு வேறு புகையிரதங்களில் மாறவேண்டுமாம்.பஸ் பிரயாணம் வசதியானது.செலவும் குறைவு.சுவாரஸ்யம் நிறைந்தது..ஆனால் புகையிரதத்தில் பயணிப்பவர்களைப் பார்க்க பொறாமையாக இருக்கும்.

எங்கள் வீட்டில் வானொலி இல்லையாதலால் பாடல்களைக் கேட்கும் ஆசை நிறைவேறவில்லை.தண்ணீர் அள்ளப்போகும் போது ஐயாத்துரை மாமா வீட்டின் பின்புறம்சுருட்டுச்சுற்றுவோ கேட்க வானொலி நெடுநேரம் ஒலிக்கும்.கொஞ்ச நேரம் நின்று

கேட்கலாம்.என்றாலும் கூச்சம்.. ‘பொம்பிளைப்பிள்ளகள் இருக்கிற இடம்’ போவதும் நிறுத்தப்பட்டது. ஒன்றுவிட்ட அண்ணர் வாங்கித் தரும்வரைக்கும் வானொலி தூரமாகத்தான் இருந்தது.

பெரியய்யா வீட்டில் இருந்து படிக்கும்போது வானொலியைத் தொடப்பயம்.அடிவிழும்..ஆனால் மாலை நாலு மணியானதும் ரங்கநாதன் மாஸ்டர் வந்து வானொலியைத் திருகித் திருகி வானொலி கேட்பார்.அவரைப்பார்க்க பொறாமையாக இருக்கும்.அக்கா தேநீர் கொடுப்பாள்.தையல் மெசினில் தைத்தபடி பாடல்களைச் சிலாகிப்பார்.அக்காவுக்கும் பாடல்களுடன் பாடகர்களும் அத்துப்படி..அக்கா ரங்கநாதன் மாஸ்டரை விரும்புகிறாளோ? ரங்கநாதன் மாஸ்டர் ஒருதலையாக….நல்ல நண்பர்களாகவோ இருக்கலாமே..அவருக்கு இருந்த உரிமை எனக்கில்லையே என்று வலிக்கும்.. நிறைய திரைப்படப்பாடல் புத்தகங்களை கொண்டுவந்து கொடுப்பார்.மேசையில் குவிந்திருக்கும்.அக்கா அவற்றை எடுத்துப்படிப்பதை பார்த்ததில்லை. சில சமயங்களில் பாடல் ஒலிக்க ஆண் குரலில் ரங்கநாதன் மாஸ்டர் பாட தொடர்ந்து அக்கா பாடுவாள்.கிட்ட என்னை அனுமதிக்க மாட்டார்கள்..’ஓடு’ என விரட்டுவார்கள். எனக்கும் பாடவருமே..அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குள் என்னவாவது இருந்துவிட்டுப் போகட்டுமே. அக்காவிற்கு திருமணமாகியிருக்கவில்லை.தரகர் அடிக்கடி குறிப்புக்களைக் கொண்டுவந்து கொடுப்பதும்,ஒண்டும் சரிவராமல் தரகருக்கு பணத்தை இறைத்ததும் தனிக்கதை.ஒருவகையில் அக்கா பாவம் தான்.திருமண வயதைக் கடந்தும் இன்னும் திருமணம் செய்யும் காலம் அவருக்கு காலம் தந்துவிடைவில்லை போலும்.

வீட்டுப்பின்னால் போய் கறிவேப்பில்லை மர இலைகளை இழுத்து உதிரவிட்டபடி உரத்த குரலில் பாட பக்கத்து வீட்டும் நாய் சத்தமாய் குரைக்கும்.

அக்காவை ஏனோ பிடிக்காமல் போனது.

அக்காவிற்கு என்ன கோபமோ என் மீது…ஏதாவது சொல்லி பெரியய்யாவிடம் கோள்மூட்டி அடிவாங்கித் தந்துவிடுவாள்.ஒருமுறை கழிப்பறையில் பீடித்துண்டு இருந்தது என்று சொல்லிவிட்டாள்.பெரியயாவிடம் ‘நான் பீடி குடிக்கவில்லை’ என்று அழுது குழறியும் விடவில்லை.பூவரசம் தடி பிய்யும் வரை விளாசிவிட்டார்.’அக்கா எப்ப சாகும்?’அழுகையுடன் காயங்களைப் பார்த்துப் பொருமுவேன்..’அம்மா..அம்மா…’ காயங்கள் தடித்துச் சிவந்திருந்தன.

ஒருநாள் கழிப்பறையிலிருந்து புகை வந்துகொண்டிருப்பதை அக்கா கவனித்துவிட்டாள்.நான் இல்லை என்று தெரிந்து கொண்டு யார் அது எனக் கண்டறியக் காத்திருந்தாள்.ஒவ்வொரு நாள் காலையிலும் மலம் எடுக்கவருபவர் தான் உள்ளிருந்து வந்தார்.அக்காவைக் கண்டு தலையைச் சொறிந்துகொண்டான்.அக்கா எதுவும் சொல்லவில்லை.மௌனமாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.அதுபற்றி பெரியய்யாவிடம் சொன்னதாகவும் தெரியவில்லை.எனக்கும் ஒரு ஆறுதல். கழிப்பறையில் பீடித்துண்டு இருந்ததாகச் சொல்லி அம்மாவிடம் சொல்லி,அதனால் அடியும் விழுந்தது ஞாபகம் வந்தது.வீணாக சந்தேகப்பட்டு கோள்சொல்லி அடிவாங்கியும் தந்திருந்ததும்,இப்போது அதற்காக மன்னிப்பும் கேட்கவும் இல்லை..அவள் மீதான கோபம் இன்னும் அதிகரித்தது. ‘நாசமாய் போ’

அப்பா அதிகமாக வேட்டி கட்டுவதில்லை.தூரப்பயணம் என்றால் கட்டுவார்.ஊருக்குள்ள செத்தவீடு எனில் சரத்துடன் தான் போவார்.எனக்கும் வேட்டி கட்டிப்பார்க்க ஆசைதான்.அதற்கான காலம் அமையவில்லை.பெரியய்யா பென்சனில் வந்தபிறகு வேட்டியே அணிவார்.வேட்டியைத்தோய்த்து காயவிட்டுவிட்டு கோவணத்துடனேயே வளவுக்குள் திரிவார்.அப்பாவிற்கு அதில் சங்கடமுண்டு.அண்ணரிடம் எப்படிச் சொல்வது?.சொல்லவில்லை.உடம்பெல்லாம் சுள்ளென்று வெயில் கொளுத்தும்.அம்மா,தங்கைகள் இருக்க…அதுவும் துரிதமாக தன் வளவிற்குள் கொட்டில் என்றாலும் போட்டு சென்றுவிடவேண்டுமென்று அப்பா

நினைத்திருக்கலாம்.வீரபத்திரர்கோயில் திருவிழாவிற்குப் போக நினைத்தபோது அப்பா தனது வேட்டியைத்தந்து ‘கட்டிக்கொண்டுபோ’ என்று சொல்லிவிட்டார்.திருவிழாவிற்கு காற்சட்டையுடன் போனால்தான் சௌகரியமாக இருக்கும்.அதற்குப் பல காரணங்கள் இருந்தும் மச்சாள்மார் வருவினம் என்பதே முக்கிய காரணம்…அப்பாவிற்காக மௌனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டேன்.பெரியய்யா வீட்டில் இருந்தபோதும் என் வயதொத்தவர்களின் முன்னே நிர்வாணமாக்கிவிட்டு வேட்டியை கட்டிவிட்டார். வெட்கமாக இருந்தது.அன்று முழுவதும் சந்தோசமாக இருக்கவில்லை.இப்போது மீசை அரும்பியிருக்கிற வயது…இதில் அப்பாவின் தலையீடு அசௌகரியமாக இருந்தது..ஆனால் அப்பாவின் கோபம்…மச்சாள்மாரிடம் போய் பேசிக்கொள்வதில் சிரமம் இருப்பதை உணர கனநேரம் பிடிக்கவில்லை.மாச்சாள்மார் யாரோ சில பெடியள்களுடன் பேசிக்கொண்டு போவதைக் கண்டதும் வேட்டியின் மேல் கோபமே வந்தது.அப்பாவின் மீதான கோபம் இருப்பினும் அப்பாவின் மீதுள்ள பாசமே அதிகமாக உள்ளது.

அன்று பெரியய்யா வர அம்மா பாயை எடுத்துப்போட்டாள்.அதில் உட்கார்ந்தார்.தளப்பாடங்கள் பெரியய்யாவின் வீட்டிலிருந்து இன்னும் எடுத்துவந்திருக்கவில்லை.ஆதலினால் பாய் தான் விருந்தினர்க்கான ஆசனம்.

நிலத்தில் காலை நீட்டியோ,சப்பாணி கட்டியோ உட்காருவது சுவாரஸ்யம் தரும் செயல்தான்..புல்வெளியில் உடகார்ந்துகொள்வது…கடற்கரை மணலில் காலாற நடந்துவிட்டு கொஞ்சம் உட்காருவது….செம்மண் தரையில் அல்லது படங்கு விரிக்கப்பட்ட நிலத்தில் உட்கார்ந்து நாடகம் பார்ப்பது..கோவில் வீதிகளில் மேளச்சமா,கண்ணன் கோஸ்டி,சின்னமேளம் நடக்கையில் கோயில் மதில் முதுகைச் சாத்தியபடி காலைப் பரப்பி உடகார்ந்தால்…

அம்மா தேநீர் கொடுத்தாள். உறிஞ்சத்தொடங்கினார்.அக்காவைப் பற்றி…செம்மணி வயலைப் பற்றி,பிலாவடி வயல் பற்றியெல்லாம் கதையாகச் சொல்லிவிட்டு பேசாமல் முற்றத்து நாவல் மரத்தை வெறித்துப்பார்த்துவிட்டுச் சொன்னார்..’உவங்கள் எல்லாம் சேர்ந்து சூத்திரகிணற்றுப் பங்கை பிரிச்சாங்கள்.தனக்கு ஒண்டும் தரேல்ல’ என்றார்.அப்பாவிற்கே கிடைக்கவில்லை என்று அம்மாவிற்குத்தெரியும்..அம்மா எதுவும் சொல்லவில்லை.அம்மாவிற்கு கதை சொல்வது போல சொல்லிக்கொண்டிருந்தார்.சகோதரங்களின் சொத்துக்களை அடாத்தா அமுக்கிக்கொண்டவர்…சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுக்கப்பார்க்கிறார் என அம்மா நினைத்தாள்.இப்படிக் கதைக்கிறார் என அப்பாவிற்கும் சொல்லி ஊதிப் பெருப்பிக்க அம்மா விரும்புவதில்லை.

பழுத்து விழுந்த பனம்பழம் வெடித்து சிதறியது மாதிரிக்கிடந்தது.வெகு நேரமாகியதில் இலையான்கள் மொய்த்தவண்ணமிருந்தன..மணம் சூழலைக் குலைத்தது.அப்பா கவனமாகப் பொறுக்கி அம்மாவிடம் கொடுத்து பிள்ளைகளுக்கு பணியாரம் செய்து கொடுக்கச்சொன்னார்.நமக்கு வாய் ஊறும்…

அப்பா வளவின் மூலையில் மண் குவித்து பனங்கொட்டைகளை அழகாக அடுக்கிவைத்தால் மாதங்களாக பனங்கிழங்கு தயாராகிவிடும்.பனங்கிழங்கு புட்டுப்பானையில் ஏறிவிடும்.அம்மாவையே வாய் ஊற பார்த்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்போம்.யாரும் வந்துவிடக்கூடது என்பதில் கனமாய் இருப்போம்.பங்கு கொடுக்கவேண்டும்…நாவூறுபட்டால் சாப்பிடமுடியாது போய்விடும்.ஆனாலும்நேரம் பார்த்து பெரியய்யாவோ,பூரணம் மாமியோ வந்துவிடுவார்கள்.ஒளித்துவிடமுடியாதபடி மணம் காட்டிக்கொடுத்துவிடும்..ஒரு பங்கு அன்று குறைந்துவிடும்…

அம்மா குளிச்சுச் சுத்தமாகச் சமைப்பாள்.வெள்ளிக்கிழமைகளில் காகத்திற்கும் பூவரசம் இலையில் சோறுவைப்பாள்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினை பெரிதுதான்..அவரிடம் இருக்கும் பணத்தைச் செலவழிக்கவே தயக்கம் காட்டுவார்.பெரியம்மா இறந்தபின் தனியாகவே வாழ்கிறார்.அக்காவிற்காக வரன் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை…அக்காவிற்குள் கொஞ்சம்

பணத்திமிரும் இருப்பதும் வரன் அமையாதது காரணம்..சமைப்பதற்கு அப்பாச்சி உதவியாக இருந்தார்.அப்பாச்சியும் இங்கு வந்துவிட்டார்.பெரியய்யா நினைத்திருந்தால் வீட்டுக்கடனுக்கு உதவியிருக்கலாம்.அப்பா பணத்திற்காக அலைந்ததும்.ஒவ்வொன்றாய் விற்று கடனை சரி செய்யமுயன்றதும் அவருக்குத் தெரியாமலில்லை.அவர் போகும் போது அம்மா அக்காவிற்கும் சாப்பாடு கட்டிக்கொடுத்தாள்.அவரும் எதுவும் பேசாமல் வாங்கிக்கொண்டு போனார்.எமக்கு கோபம்.அம்மா கோபப்படவில்லை.அப்பாச்சி புறுபுறுத்தாள். ‘இருக்கிற காசுக்கு சாப்பாட்டை ஓடருக்கு சாப்பிடலாம்..வேலைக்கு யாரையும் வைத்திருக்கலாம்..நீ பழக்கிவிட அது நெடுக வரப்போகுது’அப்பாச்சியின் புறுபுறுப்பு நியாயம் எனவே பட்டது.அம்மா மௌனமாக பெரிய வாளியில் அள்ளிவைக்கபட்டிருந்த வாளித்தண்ணியில் சட்டிபானைகளை கழுவத் தொடங்கிவிட்டாள். வெளியே வந்த பெரியய்யா அப்பாச்சியின் காதில் ஏதோ சொல்லிச் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. அப்பாச்சி சாவகாசமான ஒருநாளில் ‘தான் அங்கை போட்டு வாறன்’ என்று சொல்லிப் புறப்பட்டாள்.

திரும்பிவந்துவிடுவார் என்று அப்பா நம்பியிருந்தார்.நாலைந்து நாட்களின் பின் வளவு பார்க்கவருவது போல வந்தார் அப்பாச்சி..போய்விட்டார்.அவர் இருப்பதும் போவதும் அவரின் விருப்பம் என்றாலும் அங்கு போவதற்கான காரணத்தையும் சொல்லவில்லை.

பழைய புன்னகை இருக்கவில்லை என்பது மட்டும் புரிந்தது.என்னவோ நடந்திருக்கிறது?என்னவென்றுதான் புரியவில்லை..வயதும் ஒரு காரணமாயுமிருக்கலாமென்று அப்பா எதுவும் கேட்கவில்லை.சிலநாட்கள் கழித்து அம்மாவிடம் ‘நாளைக்கு வா..சங்கிலியைத் தாறன்’ என்று மட்டும் சொல்லிசென்றார்.அப்பாவின் உழைப்ப்பில் வாங்கியநகைகளில் இரட்டைப்பாட்டுச் சங்கிலியை அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.மற்றதை சித்தாப்பவிடம் கொடுக்கவேண்டும்..அவரே தனது செத்தவீட்டுச் செலவைப் பார்ப்பார் என்றும் சொல்லியிருந்தார்.

அம்மா தான் போவதாக இருந்தது.அம்மாவுடன் நானும் போனேன்.முற்றத்தில் நாவல் பழங்கள் சிதறிக்கிடந்தன.நேற்று தங்கைகள் சில்லுக்கோடு விளையாடிய அடையாளம் மாறாமல் இருந்தது.

அன்று அப்பாச்சியைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.அழுதிருப்பாள் போலும்.

முன்பொருநாள் தனக்குக் காணி எழுதித்தரவில்லை என அப்பாச்சியை அடித்துத் துன்புறுத்தியதாக தகவல் கிடைக்கவும்,அப்பா அவசரம் அவசரமாக பஸ் எடுத்துவந்து பார்த்தால் ஒன்றும் நடவாததுபோல் சூழல் இருக்கும்.ஆனாலும் அப்பா ஊகித்துக் கொள்வார்.அப்பாச்சியின் முகம் வலியினைக் காட்டிக்கொடுத்துவிடும்.நோவெண்ணை வாங்கிக்கொடுத்துவிட்டு அன்று மாலையே திரும்பிவிடுவார்.இப்போதும் அடிவிழுந்திருக்குமோ?நாங்கள் குடியிருக்கும் காணியையும் தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் பெரியய்யா.சகோதரர்களுக்கு கஷ்டத்தில் உதுவதாகக் கூறி அவர்களிடமிருந்து காணிகளையும்,நகைகளையும் கையகப்படுத்திவிடுவார்.அதுமாதிரி அப்பாவிற்குத் தருவதாகச் சொன்ன இரட்டைப்பட்டுச் சங்கிலியையும் கொடுக்க பெரியய்யா அனுமதிக்கவில்லை என்பதையே சூழல் உணர்த்தியது.

‘அடிச்சிருப்பாரோ?உந்த மனுசன் ஏன் இப்படி?’ கோபமாக வந்தது..முற்றத்து மணலை காலால் கீறிக்கொண்டிருந்தேன்.

‘இந்தச் சீமைக்கிளுவன் தடியைப் பிடுங்கி சாத்தினால் என்ன?’ ‘நீஎப்ப பெரிய மனுஷனாகினனி?’பெரியய்யா கேட்கலாம்.அம்மா கொப்பரிட்ட வேண்டிப்போடுவாய்’ என்றும் சொல்வாள்.’அதுக்குள்ள வளந்திட்டியோ?’

பேசாமல் இருந்தேன்.அம்மாவின் அழுகை அதிகரிக்க அப்பாச்சி தன் கையாலாகாத் தனத்தை எண்ணி தனக்குள் உடைந்தாள். மஞ்சவண்ணத்தடிகளால் வேலிபோட்டு நாலைந்து வரிச்சு கிடுகுகளால் வரியப்பட்டிருந்த உள்வேலிக்கப்பால் வைக்கல் குவியல்

உயரமாகத்தெரிந்தது.கிட்டடியிலதான் கதிரறுத்து..வைக்கலை கொண்டுவந்து குவித்திருப்பார்கள்.ஓடிப்போய் ஏறிக்குத்திக்க ஆசைதான். வைக்கல் குவியலில் ஏறிக்குதிக்கையில் ஏற்படுகிற இன்பம் ஒரு சுகம்தான்..சுணைக்கும் என்பதெல்லாம் பிறகு…குதூகலம் மீள வராது.முந்தி ஏறிவிளையாடி அடிவாங்கியதும் ஞாபகம் வந்தது. அப்ப இருந்தநிலையில் கோபம் என்மீது திரும்பலாம் என மௌனமானேன்.

பெரியய்யாவின் வீடு பெரிய வீடுதான்.ஆனால் அங்கு இதயம் இருக்கவேயில்லை.உள்ளே போக எவருக்கும் சம்மதம் இருந்ததில்லை.உள்ளேயிருந்து சன்னல்வழியே வெளியே பார்க்கையில் சிறையிலிருப்பது போல இருக்கும் என்பதை அறிவேன்.அப்பாச்சியின் வயிற்றுப்பிள்ளகள் தான்.ஆனாலும் எத்தனை வேறுபாடு..அப்பா மட்டும் மனிதனாக எனக்குத் தெரிந்தமை வியப்பைத்தரவில்லை.அப்பா அப்படித்தான் வாழ்கிறார்.எங்களுக்கும் அப்படித்தானே வழிநடத்துகிறார்.அப்பாவின் கைகளில் பணம் புரண்டதில்லைதான்.ஆனாலும் பலருக்கும் அப்பாவைத் தெரிந்திருக்கிறதே..

‘அப்பா வராதது நல்லது தான்..வீணாய் சண்டை வந்திருக்கும்’அம்மாவின் முகம் சோகத்தில் இருந்தது….நெற்றிச்சுருக்கத்திலிருந்து தெரிந்தது.

ஒரே பாதையில் பயணித்தாலும் அவரவர் மனதில் ஒத்த கருத்துக்கள் அமையாது போனால் பாதை சீராக இருக்காது.

அம்மா எப்போதும் அப்பாவின் மனதைப் புரிந்தவளாகவே பயணம் செய்கிறாள்.வாழ்க்கையெனும் பாக்குவெட்டியின் கூர்மையில் நசுங்கிவிடாதபடியான நிதானமும் இருந்தது.கடைசிப் பெண்ணாகப் பிறந்ததினால் ஏற்கனவே திருமணமாகிய அக்காக்களின் குழந்தைகளுடன் தன்னையும் ஐக்கியப்படுத்தி வாழப்பழகிகொண்டமையும்,விவசாயத்தைக் கவனிக்கும் தந்தைக்கு உதவியாகவும் இருந்தமையினால் அப்பாவுடன் வாழ தன்னைச் செப்பனிட்டுக்கொண்டாள்.அப்பாவின் பொறுமையை நிதானத்துடன் கையாளவும்,கோபத்தை மௌன அழுகையுடன் நகர்ந்து கொள்ளவும் முடிந்திருக்கிறது.சில எல்லைகளை மற்றப் பெண்களைப்போல உடைத்துக்கொள்ளாதவளாவும் இருந்தாள் என்பதே உண்மை.

அம்மாவின் கண்கள் உள்நோக்கியே அமைந்திருக்கும்.புருவ மயிர் தடித்திருக்கும்..நல்ல நிறம்…அவளளவில் அழகுதான்…நமக்கு அம்மா ஆதலால்..அழகிதான்…

கண்மூடி விழிப்பதற்குள் எல்லாம் நடந்துமுடிந்துவிடுவது காலம் இட்ட கட்டளை போலும்…நெடு நேரமாக அழுதுகொண்டிருந்தவள் உரல் வைத்து இடிக்கும் பகுதியில் கிடந்த மண்ணை எடுத்து வீசிவிட்டு நடந்தாள்.

‘நீங்கள் நல்லா இருக்கமாட்டியள்.ஆற்றையேன் சொத்துக்களை அடாத்தா அமத்திப்போட்டு நல்லாயிருப்பியளே.வரச்சொன்னபடியால்தானே வந்தனாங்கள்…உங்கட உந்தச் சங்கிலி இல்லையெண்டால் நாங்கள் செத்துப்போயிடமாட்டம்.வாறம்..எங்களுக்கும் காலம் வரும்..’

அம்மா அப்படிப் பேசிப் பார்த்ததில்லை.

அம்மாவின் கோபம் அவளின் நடையில் தெரிந்தது.ஒழுங்கை கிறவல் மண்ணும் சுட்டது போலிருந்தது. நாம் வந்திருக்கக்கூடாது.இப்படியொரு சூழல் வந்திருக்காது.யாரின் பிழையெனினும் ஜென்மப் பகையாகிவிட்டதே..யாரும் கொண்டுவந்ததுமில்லை..கொண்டு போவதும் இல்லைதான்.என்றாலும் மனிதன் தவறிழைத்தபடியே இருப்பதேன்? கிராமசபையால் றோட்டு போடவென்று ஓரமாகக் கொட்டப்பட்டிருந்த கற்குவியல் ஒழுங்கையிலும் சிதறிக்கிடந்தது.

தூரமாக வந்த சோமண்ணை வையவர் கோயில் ஒழுங்கைக்குள் திரும்பினார்.அவர் கண்டிருப்பாரோ? கண்டிருந்தால் நின்று கதைத்திருப்பார்.நல்ல மனிதர்.வீதியால் போகும்போதே

அவரின் சைக்கிள் கிரிச்..கிரிச் சத்தத்தினால் அவர்தான் எனத் தெரிந்துவிடும். அம்மாவும் கனக்கக் கதைக்காட்டிலும் தெரிந்தவர் எனில் புன்னகைப்பார்.இன்று அம்மாவின் முகம் அழுகையும்,கோபமும் அழகாய் இல்லாமல் இருந்ததோ?

அம்மா நல்ல நிறம்.அம்மாவின் சகோதரிகள் கொஞ்சம் நிறம் குறைவு.மாமாவும் அம்மாவைப்போல நல்ல நிறம்.வீட்டில் கடைக்குட்டியாதலால் செல்லமாக வளர்ந்திருக்கலாம்.வயலில்,தோட்டத்தில் விளைவது வீட்டில் நிறைந்துகிடந்திருப்பதால் சாப்பாட்டிற்குக் குறைவிருந்திருக்காது.கஷ்டம் என்று தெரியாவிட்டாலும் நன்றாக இருந்திருப்பாள்.

அம்மா எப்போதும் நடு உச்சி பிரித்து அழகாக தலைவாரி பெரிதாக குங்குமப்பொட்டிட்டே வெளிக்கிடுவாள்.பழைய நூல் சேலையத்தவிர வேறெதுவும் கட்டிப்பார்த்ததில்லை.ஆடம்பரப்பிரியையுமில்லை.அதே அம்மா பரக்கப் பரக்க நடந்துகொண்டிருந்தாள்.ஏமாற்றம்…அலைக்கழிப்பு..கோபம் அவளைச் சூழ வேலிகட்டியிருந்த சூழலை மாற்ற எண்ணி பாட்டொன்றை முணுமுணுத்தேன்.அம்மாவின் முறை தொடரமுடியவில்லை..பொன்னம்மா வீட்டு நாயும் தன்பங்கிற்கு குரைத்து ஓய்ந்தது.

நாய் வெளியே வராது.கருக்குமட்டைகளினால் அழகாக வரிசையாக அடுக்கி அழகாய்த் தெரிந்தது.அந்த வரிச்சை மீறி நாய் வந்துவிடாது.ஆனாலும் நாய் இரண்டு தடவை கடிவாங்கிய அனுபவம் கொஞ்சம் பயம். அம்மா எதையும் சட்டை செய்யாமல் நடந்தாள்.

அம்மாவிடம் பேச்சுகொடுத்தால் வேலிமட்டையைப் பிடுங்கி அடித்தாலும் அடிப்பாள்.கிறவல் மண் அம்மாவின் கால்களில் படிந்திருந்தது.வேலிவரிச்சில் கிடந்த ஈக்கிளை உருவி எடுத்து பல்லை தோண்டமுனைந்தேன்..அப்புக்காத்து வெளிவளவிற்குள் யாரோ பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.மனது துருதுருத்தது.விளையாடப் போகும் நிலையில் இல்லை என்பதும் வருத்தமாக இருந்தது.

வாழ்க்கை பலருக்கு சுவாரஸ்யத்தை தருவதில்லை போலும்.

நாட்கள் கடந்தன.

வெளிக்கதவு அதிகமான நேரங்களில் சாத்துவதில்லை.விறாந்தையைக் கூட்டியபடி வந்த தங்கைக்கு விறாந்தையில் குந்தியிருந்த அப்பாச்க்cஇயைக் கண்டதும் அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் அடைந்தாள்.புன்னகைத்தபடி ‘உள்ள வாங்கோவன்’ என்றவளிடம் மறுவார்த்தை பேசாமல் ‘இந்தா..கொம்மாட்டைக்கொடு’ என்று சொல்லிய்படி இரட்டைப்பட்டுச்சங்கிலியை கொடுத்தாள்.வாங்கச் சங்கடப்பட்டாலும் வாங்க்காமலும் இருக்கமுடியவில்லை தங்கைக்கு.தருவது அப்பாச்சியல்லவா?ஆனாலும் இதற்காகத்தானே அண்டைக்குப் பிரச்சினை வந்தது’ என்றும் நினைத்தாள்.உள்ளே போய் சங்கிலியை தேயிலைப் பேணிக்குள் அடைத்துவிட்டு, தேநீருடன் வந்தாள்.அதற்குள் அப்பாச்சி சென்றுவிட்டிருந்தாள்.அம்மா வர எல்லாம் சொன்னாள்.

தேநீர் ஆறிப்போய் இருந்தது.’அவ அப்பாவைப்போல பிடிவாதக்காரி..ஓர்மம் அதிகம்’ என்றாள் அம்மா.அப்பாவைச் சரியாகணிக்கமுடிந்திருக்கிறது அம்மாவால்..எத்தனை வருட குடித்தன வாழ்க்கை.அன்றைய நிகழ்விற்குப்பிறகு பெரியய்யா எதுவும் நடவாதது போல வந்துசென்றார்.அப்பாவும் பேப்பர் வாங்கப்போகும் நேரத்தை மாற்றியிருந்தார்.ஏதாவது ஒரு சாக்கை பெரியய்யவிற்கு சொல்லுவார்.பேப்பரை வாசிக்கமுதல் யாராவது எடுத்துப்போனால் அதன் சுவாரஸ்யம் குன்றிப்போகும் என்பது அப்பாவைப்போன்ற வாசகர்களைத்தான் கேட்கவேண்டும்.பெரியய்யாவிற்காகத்தான் அப்பா சாட்டுச் சொல்வது நமக்குப் புரிந்தது. ‘கோபத்தை இப்படியும் காட்டலாமோ?ஒரே தாய்வயிற்றுபிள்ளைகளிடையே எத்தனை வேறுபாடுகள்?

வெளியே வானம் தெளிந்திருந்தது.

அப்பாச்சி வருவதை நிறுத்தி மாதங்களாயிற்று.

மழை தூறத்தொடங்கியது.

அன்றுதான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.

அப்பா பரபரத்தார்.அம்மா அப்பாவின் கைகளைத் தாங்கிக்கொண்டார்.

அப்பாச்சி இறந்துவிட்டதாக அச் செய்தி அமைந்தது.

‘நல்லா கதை சொல்லும் அப்பாச்சி எனி இல்லை’

‘பாடச் சொல்லிக் கேட்கமுடியாது..’

அப்பா அதிர்ந்துபோய் உடகார்ந்தமை நமக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.அப்பா பாவம்…தனக்கு என்று எதையும் சேமித்துவைக்கத் தெரியாதவர்.யாவருக்கும் அன்பையே கொடுக்க நினைப்பவர்.அம்மா அப்பாவின் கைகளை அழுத்திப்பிடித்தபடி ‘தேத்தண்ணி தரட்டே’எனக் கேட்க அப்பா எதுவும் பேசாது அமையாக இருந்தார்.

அம்மாவும் பாவம்.அப்பா மீதான பாசத்தை அன்றுதான் நாமும் உணர்ந்தோம்.அம்மாவின் அம்மா இறந்தபோது திருகோணமையில் இருந்தமையும்,கர்ப்பமாக இருந்தமையின் உடன் வரமுடியவில்லையாதலாலும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.அது இப்போது அப்பாச்சியின் மரணம் அவளையும் அசைத்துப்பார்த்திருக்கிறது. அம்மம்மாவின் ஸ்பரிசம் நமக்கும் கிடைத்ததில்லை.அம்மாவின் அப்பாவை ஒருமுறை பாரக்கப்போனபோது கயித்துக்கட்டிலில் சுருண்டுபோய்க் கிடந்தார்.மா தான் குளிப்பாட்டிவிடுவார்.அதிகமான நாட்களில் கோவணத்துடனேயே கட்டிலில் கிடப்பார்.அப்போது பார்த்ததுதான்.

அப்பா அம்மாவிற்கென்று எதையும் வாங்கிக்கொடுத்ததில்லை.சம்பளத்தை அப்படியே அம்மாவின் கையில் கொடுப்பார்.தேவையானபோது அம்மாவிடம் பெற்றுக்கொள்வார்.மற்றவர்களைப்போல பேர்ஸ் கொண்டிதிரிபவரில்லை.யாழ்ப்பாணம் வந்தபின் செலவு அதிகமாக சம்பளப் பணத்தை கடனை அடைக்ககொடுத்துவிடுவார்.பிறகும் கடன் தொங்கும்.பலசரக்குக்கடைக்கு…மரக்கறிக்காரிக்கு…தவிடு பிண்ணாக்கு,அரிசி வாங்கிய கடனுக்கு என பிய்த்தது போகவே கொப்பி வாங்கவும்,ரியூசனுக்கும் என நமக்குக் கிடைக்கும்.

செலவாளியில்லை.எனினும் கடன் இடிக்கும்.

அப்பாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

யாரோ கொழும்புக்கும் தகவல் சொல்லிவிட்டார்கள்.

இறுதிக் கிரியைகளுக்காக முத்துலிங்கம் மாமாவும்,இரதநாயகம் மாமாவும் ஓடிதிரிந்தனர்.

கொழும்பிலிருந்து வந்த சித்தப்பா கொஞ்சமாக அழுதுவிட்டு ஓரமாகப் போய் இருந்துகொண்டார்.அசல் கொழும்பு வாழ்க்கைக்குப் பழகிவிட்டவர் போலவும் நடந்துகொண்டார்.

பெரியய்யா மூலையில் முடங்கிக்கிடந்தார்.

வாசிகசாலைப் பெடியள் பந்தல் கட்டுவதிலும்,ஓடி ஓடி உழைத்தவண்ணமிருந்தனர்.வாசிகசாலை தொடங்கியதில் அப்பாவின் குடும்பத்தினர்க்கும் பங்கிருந்தது.அவரவர் குடும்பம்,தொழில் எனத் தூரமாகிப் போனாலும், ஒன்றுசேர்ந்து ஏதாவது பங்களிப்பை வழங்கியவண்ணமே இருப்பார்கள். பொங்கல் விழா,ஆண்டுவிழா,சரஸ்வதி பூசை

என நடைபெறும்.பத்திரிகைகள் ஒன்றிரண்டு வரும்..அப்பா போவதில்லை.நாங்களும் போவதில்லை..நாடகம் பார்க்க போவதுண்டு.

அப்பா மீதான மரியாதை பலரையும் கூடச்செய்திருந்தது என்பதே உண்மை.

அப்பாச்சி எனி இல்லை.

அவள் இல்லை…அவளின் பேச்சை கேட்கமுடியாது.காதில் தொங்கும் கடுக்கனை ஆட்டியபடி…பொக்கை வாயால் ஏதாவது குதப்பியபடி,பூவசர்ம் இலையில் பீப்பி செய்து அதனை தானும் ஊதி எங்களையும் ஊதத்தருகின்ற,ஏதாவது புறுபுறுத்தபடி, ஏதாவது கதை சொல்லியபடி,கூனல் விழுந்த உடலை அசைத்து அசைத்து துவரந்தடியால் ஊன்றிய வீதியில் தனித்து நடக்குமே அந்த ஆச்சி எனி இல்லை..

எங்கள் உறவுகளில் அதிக காலம் வாழ்ந்தவள் அப்பாச்சிதான்.அப்பா உடைந்து அழுதார்.அம்மா பெண்களுடன் கூடி ஒப்பாரிவைத்து அழுதுகொண்டிருந்தாள்.

தாங்கமுடியாத காட்சி..வானம் ஏனோ இறுக்கமாய் இருந்தது.

ஒளித்துவிளையாடுகையில் மருதமர வேருக்குள் ஒளிந்துகொள்ளும் போதெல்லாம் செல்லமாய் கைகளைக் காட்டிக்கொடுத்துவிடுவாள்.மருதங்காய்களுடன்,சருகுகளும் கனநாளைக்கு அப்படியே கிடக்கும்…வளவெல்லாம் இலுப்பைக்கொட்டைகளை பொறுக்கிச் சேர்த்துதரமாட்டாள்.இனிப்புப் புளியம்பழங்களை உடைத்து சாப்பிடு சாப்பிடு என தரவும் ஆளில்லை.

அப்பா எவ்வளவு பாசத்தை உள்ளுக்குள் கட்டிவளர்த்திருக்கிறார்?இதுவரை மௌனமாகக் கடந்துவந்தவர் இப்போது குலுங்கிக் குலுங்கி அழுவதைப்பார்க்க நமக்கும் அழுகையாய் வந்தது.தந்தை இறந்து போக தன்னைத் தானே உழைப்பாளியாக்கி அம்மா என்ற பெற்ற தெய்வத்திற்கு சம்பளத்தை அனுப்பியது மட்டும் தான் நமக்குத் தெரியும்.அம்மாவின் மீதான பாசத்தை இவ்வளவு வைத்திருந்தாரா என இப்போதுதான் பார்க்கமுடிந்தது.’அப்பா ஒரு அமசடக்கை’ எனப் பலரும் சொல்வதுண்டு.உண்மையோ என இப்போது உணரமுடிகிறது.

சின்னத்துரை மாமா பாரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தார்.

யாரோ நெய்ப்பந்தங்களைத் தயாரித்துக்கொண்டிருந்தனர். திருமணம் மனிதர்களைத் தனித்தனி தீவுகளாக்கிவிடுகின்றன.ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான்.அப்பா தனி..சித்தப்பா,பெரியய்யா தனித்தனி..மூலையில் அப்பாச்சியின் துவரந்தடி தேடுவாரற்றுக்கிடந்தது.

எப்பவாவது அப்பாவின் கோபம் அம்மாவைக் காயப்படுத்தியிருக்கலாம்.ஒரு பாட்டம் கோபத்தில் அழுது தீர்த்துமிருப்பாள்.தொடர்ச்சியான அழுகையோ,சிடுமூஞ்சியாகவோ பார்த்ததில்லை.ஆனால் இன்று அம்மா வெடித்து அழுதுகொண்டிருந்தாள்.சின்னம்மா கூட வந்து யாரோ போல குந்தியிருந்து பெண்களுடன் அழுதாள்.வெறும் நடிப்பாகவே தெரிந்தது.ஆனால் அம்மாவின் அழுகையை எம்மால் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை.

அம்மா என்பதால் கொஞ்சம் கரிசனை அதிகமாக இருந்திருக்கலாம்.சித்தப்பா ஒப்புக்கு கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தார்.பெரியய்யாவிற்கு முன்னரே மனைவி இறந்த சோகமும் இப்போது ஞாபகம் வந்திருக்கலாம்.

அப்பாச்சியின் அண்ணரின் மகளையே திருமணம் செய்துமிருந்தார்.மனைவியின் பெயரையே வீட்டிற்கும் வைத்திருந்தார்.

யாரோ திடிரென கையில் நெய்ப்பந்தத்தை தந்து சென்றது பூமிக்கு வரவழைத்தது.

தேவரண்ணை பாடிக்கொண்டிருந்தார்.

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

 

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

 

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

 

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

 

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

அப்பாச்சியை மரக்கட்டிலில் கிடத்தியிருந்தார்கள்.குளிக்கவார்த்து..வெள்ளைச் சேலையுடன் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தது போல கிடத்திவைத்திருந்தார்கள். அப்பாச்சி நிகழ்வுகளைக் கொண்டாடியதில்லை.யாழ்ப்பாணத்திற்கு விடுமுறைக்காக புறப்படும் போது அம்மா வாங்கிக்கொடுத்த வெள்ளைச்சேலையைதான் அவளுக்கு உடுத்தியிருந்தார்கள் என உணரும் போது நெஞ்சைப் பிழிந்தது.இளமையில் அவள் அழகாக இருந்திருக்கலாம்.நாம் பார்க்கத்தொடங்கிய நாளிலிருந்து கூனல் கிழவியாகவே இருந்தாள்.இப்போது மல்லாக்க கிடப்பதை முன்னர் பார்த்ததுமில்லை.அதிகமான நேரங்களில் ஒருக்கழித்தே படுத்திருப்பாள்.அதுவே அவளுக்கு சௌகரியமாக இருந்திருக்கும்.

உடலிலிருந்து ஏதோ உதிர்ந்ததுபோல ஒரு உணர்வு…

வயதாகி இயற்கையாக மரணித்திருந்தாலும் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

‘அப்பாச்சி பாவம்’ மரணம் பற்றிய தெளிவு இல்லாவிட்டாலும், இரத்த உறவின் பிரிவு மனதை ஆட்டிப்படைக்கவே செய்கிறது.அப்பாவின் அம்மா தான்..எனினும் ஒரு பரம்பரையின் அடிநாதம் அவளல்லவா? வேர்களில் ஒன்று அறுபட்டதான உணர்வு.. வளர்ந்தபிறகு சந்ததித் தொடர்ச்சி அப்பாச்சியிலிருந்தே ஆரம்பிக்கலாம்.அப்பாவிற்கும் மறந்து போகலாம்.

தூரத்திலிருந்து வேப்பம் பூக்களின் வாசம் காற்றில் வந்தது.

வெய்யிலின் உச்சம் கண்களைக் கூசவைத்தது.அக்காவைக் காணவில்லை.கண்கள் தேடின.அண்ணரும் அண்ணியும் வரவில்லை என்பதை உணரமுடிந்தது. பறைமேளம் அவற்றின் மொழியில் பேசிக்கொண்டிருந்தன. இசையை ரசிப்பவர்களுக்கு பறையின் ஒலி ஏதோ ஒன்றை இசைக்கும்.இல்லையெனில் செவிப்பறை கிழிகிறது என புலம்பவைக்கும்.

‘நாங்கள் இஞ்ச கனகாலம் இருக்கக்கூடாது..பிள்ளைகளுக்கு சொந்தங்கள் பற்றி மறந்துபோகும்.அதானால் தான் நாங்கள் மாற்றலெடுத்துப்போகிறோம்..பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கவேண்டியிருக்கிறது..ஒரு காலத்தில அரசியலும் எங்களைப் பிரிச்சுப்போடும்..’சிவராமலிங்கம் மாமா சொல்லியபடி யாழ்ப்பாணம் வந்திருந்தார். இப்போது அப்பாச்சியின் மரணம் சொந்தத்தின் அருமைபற்றி புரியவைத்துள்ளது.

அப்பாச்சி தன் பிள்ளைகளுக்காக உழைத்திருக்கிறார்.அப்பா நமக்காக உழைக்கிறார்.அப்பாவை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.அழுகை அழுகையாக வந்தது.

அப்பாச்சிக்கு கொள்ளிவைக்க சின்னையா மறுந்துவிட்டார்..ஏதேதோ காரணங்களை அடுக்கிக்கொண்டிருந்தார்.மிகக்கவனமாக நகைகளை வாங்கிக்கொண்டார்.

கடைசியிலும் கையறுநிலையை அப்பா புரிந்துகொண்டார்.

அம்மாவைப்பார்த்தார்.அப்பாவின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட அம்மா தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.

இந்த சோகத்துக்கிடையிலும் மனது பக்கத்து வளவுக்குள் போக பரபரத்தது.பந்துவிளையாடிக்கொண்டிருப்பவர்களுடன் இணைந்துகொள்ளலாமோ என மனது குறுகுறுத்தது. அப்பாச்சியைச் சுற்றி நின்றாலும் ஐயருக்குக் கொஞ்சம் தூரமாக நிற்கவேண்டும்போலிருந்தது.ஐயர் திடிரென தேவாரம் படி எண்டால் ஏலாது எண்டு சொல்லேலாது.தேவாரம் தெரியவில்லை என அடிவிழும்..

‘வாங்கோவன் பிள்ளைகள்..வரிசையாய் சவத்தைச் சுத்தி நில்லுங்கோ’.. வரிசையில் நிறுத்தப்பட்டாலும்,சடுதியாக அப்பாச்சியை சவம் என்று சொன்னதும் தாங்கமுடியவில்லை.ஓங்கிக் கத்தவேண்டும் போலிருந்தது. ‘யார் உங்களுக்கு அதிகாரம் தந்தது…சவம் எண்டு சொல்ல எவ்வளவு தைரியம் வந்தது..?’ சூழ்நிலை கத்துவதற்காக அமையப்பெறவில்லை என உணர்ந்ததும் ,அப்பாச்சியை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘எணை ஆச்சி…எழும்பணை..நான் சவம் இல்லை..ஒரு மனுசி எண்டு சொல்லணை’ அப்பாச்சி அசையாமல் கிடந்தாள்.நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை.ஒவ்வொருவரும் ஓடித்திரிந்து அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், சூழல் இறுக்கமாக இருந்தது.அம்மா அப்பாவைப் பார்த்தாள்.அதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன.வெயில் உச்சத்தைத் தொட்டது.அதிக பிள்ளைகளைப் பெற்றும் கடைசியில் பெரியய்யா,சித்தப்பா,அப்பா ஆகியோரே எஞ்சி நின்றனர்.இருந்தும்,அப்பாச்சியின் இறுதிக் காரியங்கள் தடைப்பாட்டுவிடுமோ என இழுபறி நடக்க,அப்பா உசாராகி அக்காரியத்தைச் செய்தார்.அப்பாச்சி தந்த இரட்டைப்பட்டுச் சங்கிலி அவளின் இறுதிக்காரியத்திற்காக ஏற்படும் செலவிற்கு பயன்பட அடைவுகடைக்குச் சென்றது. எல்லாம் ஆயிற்று. பெரியய்யாவின் வீடு பெரியதுதான்.ஆனால் அவரின் மனது அதுபோல இல்லை.ஆறு மணியானால் கூட விளக்கேற்றாத வீடு..முன்னர் அப்பாவின் அக்கா கொஞ்சநாள் அங்கிருந்தபோதும்…அப்பாச்சி வாழ்ந்திருந்தவரைக்கும் குசினி லைட் எரியும்.அதுவும் கொஞ்சநேரம்தான்.சாமி அறையிலாவது விளக்குப்போடும் மனம் யாருக்கும் இருந்ததில்லை.பெரியய்யா ஏதாவது சொல்லிவிடுவார் என்கிற பயம்..எனி அப்பாச்சி இல்லை என்றானபின் குசினி விளக்கும் எரியாது.கதிரனும் வெள்ளச்சியும் அவ்வப்போது வந்து மா இடிக்கவெனெ போடப்பட்ட பத்தியும் எனி யாரும் புழங்கப்போவதில்லை.சின்னய்யா கொழும்பைவிட்டு வரமாட்டார்.அப்பாச்சியைப் பார்க்க உரிமையோடு வரமுடிந்திருக்கிறது.எனி அதுவும் இல்லை.கொழும்புவாசியாகிவிட்டார்.அப்பாச்சிக்காகவென நிறையபேர் வந்திருந்தனர்.மாதகலிலிருந்தும்,நாயன்மார்கட்டிலிருந்தும் உறவுக்காரர்கள் வந்திருந்தனர்.’சொந்தம் விட்டுப்போகக்கூடாது’ என்று சிவராமலிங்கம் மாமா யாழ்ப்பாணம் மாற்றலாகி போகையில் சொன்னது ஞாபகம் வந்தது.உண்மைதான்.அப்பாவும் அதே கருத்தை உள்வாங்கியதால்தான் தனது மாற்றலுக்காக விண்ணப்பத்தையும் அனுப்பியிருந்தார்.இப்போது அப்பா உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.மனிதர்களிடத்தில்,மிருகங்களிடத்தில், மலர்கள்,செடிகளின் மீதான தனது அன்பை,கரிசனையை,பிரியத்தை மௌனமாக வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்.அப்பாச்சியும் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்.இறுதி வழியனுப்பு நிகழ்விற்கு வந்திருந்த சனம் பந்தலை நிறைத்திருந்தது.இளையவர்கள்,முதியவர்கள் என பலரும் சோகத்தில் காட்சிதந்தனர்.பெரிய திண்ணையை இடித்துவிட்டு பெரிதாக விறாந்தையாக்கியிருந்தார்.இதுதான் பெரியய்யா போன்றவர்கள் குறுகிப்போனார்கள். எல்லாமும் ஆகி அப்பாச்சியை தூக்கி பாடையில் வைத்தார்கள்.தண்டிகை வடிவத்தில் அமைந்திருந்தது அந்த பாடை.

ஐயர் ஏனோ அவசரப்படுத்தினார்.

பெண்கள் அனைவரதும் ஒப்பாரி வானுயர ஓங்கி ஒலித்தது.அப்பா கொள்ளிக்குடத்துடன் நடக்க,அப்பாச்சியின் ஊர்வலம் மெதுவாக செம்மணியை நோக்கி நகர்ந்தது.

அப்பாச்சியின் ஞாபகங்கள் எங்களுக்கு கனதியானவைதான்.சித்தப்பா எல்லாம் முடிந்ததும் ரயிலேறக்கூடும்..பெரியய்யா பெருமூச்சொன்றுடன் வாழப்பழகிவிடுவார்.

அப்பா….!

பறையின் ஒலி வானத்தை நிறைத்தது.

‘பாழ்பட்ட கிழவி பாயை விட்டெழும்படி…பாழ்பட்ட கிழவி பாயை விட்டெழும்படி..’

முல்லைஅமுதன்.   …..

ஓவியங்கள்: கிறிஸ்டி நல்லரெத்தினம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *