கோவிட் ஊரடங்கு காலத்தில் 511 மாணவிகளுக்கு திருமணம்!

தமிழகத்தில் கோவிட் ஊரடங்கு காலத்தில் மட்டும் 511 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கோவிட் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் பள்ளிப்படிப்பை தொடராமல் இருந்துள்ளனர். இது குறித்து மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் வாயிலாக இடைநிற்றல் மாணவ, மாணவிகளை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அதேபோன்று மாணவிகளை பொருத்தவரை 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் குழந்தை திருமணத்தை நடத்தியது தெரியவந்தது.

13 வயதே ஆன 8ம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும், 9ம் வகுப்பு மாணவிகள் 37 பேருக்கும் , 10ம் வகுப்பு மாணவிகள் 45 பேருக்கும் கோவிட் ஊரடங்கு காலத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதேபோல், 11ம் வகுப்பில் 417 மாணவிகளுக்கும், 12ம் வகுப்பில் 2 மாணவிகளுக்கும் என மொத்தம் 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாணவிகள் பள்ளிக்கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு திருமணம் செய்துவைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Back to top button