இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் பாலியல் தொழிலுக்கு மாறும் இளம்பெண்கள்!
இலங்கையில் சகோதரன் ராணுவ வீரராக இருந்தும், கடும் பொருளாதார நெருக்கடியால் சகோதரி பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இலங்கை தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிகளும் அவர்களை தாக்கி வருவதால், பாலியல் தொழில் அதிகரித்துள்ளது. இலங்கையில் பாலியல் தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் கொழும்பில் பாலியல் தொழிலுக்கு இடமில்லை.
ஆனால், இங்குள்ள மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் அமோகமாக நடக்கிறது. நிதி நெருக்கடி காரணமாக உயர்கல்வி படித்துக் கொண்டிருந்த மாணவிகள் கூட இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இஷா (21) என்பவர் கூறுகையில், ‘உயர்கல்வி படித்து பணிக்கு செல்ல விரும்பினேன். ஆனால், நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்ததால் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியவில்லை. எனது தந்தையில் உடல்நிலை சரியில்லை; தாய் காலமாகிவிட்டார். என்னுடைய சகோதரர் இலங்கை ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இருந்தும் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏற்கனவே மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினேன். அந்த நிறுவனமும் தற்போது மூடப்பட்டது. வேறுவழியின்றி வீட்டின் நிலைமையை உணர்ந்து ‘ஸ்பா’வில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு வரும் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. என்னை போன்ற சுமார் 40,000 இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர், கொழும்பில் உள்ளனர்.
கொழும்பில் செயல்படும் ஸ்பா மையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். ஆயுர்வேத சிகிச்சைகள், ஆரோக்கிய மையங்கள், மசாஜ் மையங்கள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வேலை தேடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஸ்பா மையத்தில் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு சேர்கின்றனர். அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்’ என்று வேதனையுடன் கூறினார்.
![]()