கதைகள்

நடுகைக்காரி!… 36….. ஏலையா க.முருகதாசன்.

பாறு அன்று நடந்த சம்பவத்தை சொல்லச் சொல்ல ஞானத்தின் மனதிலிருருந்த பாரம் இறங்கி சுகமான மனநிலையிலிருந்தான்.

„அம்மா கூப்பிட்டதும் தம்பி அடுப்படியை நோக்கிப் போக,கொஞ்ச நேரம் யாருமே பேசாமலிருந்தோம்’.

„ அங்கு ஒரு நிசப்தம் நிலவியது.நான் தலையைக் குனிஞ்சு கொண்டிருந்தன்.எனக்கெதிரேயிருந்த பெண் தமையனைத் திரும்பிப் பார்ப்பதும், பிறகு என்னைப் பார்ப்பதுமாக இருந்தாள்.அவள் முகத்தில் செந்தெழிப்பான ஒரு முகமலர்ச்சியிருந்தது’.

„அந்த முகமலர்ச்சி எனக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது போல இருந்தது.எங்கள் இருவரின் காதலுக்கும் தங்களால் எந்தவிதத் தடையும் இல்லை என்பது மட்டுமல்ல அது வேறொரு நிம்மதியையும் அவர்களுக்கு குடுத்திருப்பதாக தெரிவித்தது.தமையனும் ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல அமைதியாக உட்கார்ந்திருந்தார்’

„அந்த நிசப்தத்தை குலைத்து அப்பாதான் முதலில் பேசத் தொடங்கினார்.தம்பியின்ரை பேரை நாங்கள் கேட்கவில்லை….என்று அப்பா இழுக்க என்னுடைய பெயர் வரதராஜன் ஓபிசிலும் நண்பர்களும் வரதர் என்றுதான் என்னைக் கூப்பிடுவினம் „ என்று வரதர் சொன்னதும்,அப்பா நீங்கள் யாழ்ப்பாணக் கச்சேரியிலைதானே வேலை செய்கிறியள் என்று கேட்க அவரும் „ அங்கைதான் „ என்று பதிலளித்தார்.

அப்பாவைப் பொறுத்தவரை வரதர் என்னைக் கட்டுவதற்கு சம்மதிச்சுவிட்டார் என்ற நினைப்பில்தான் இருந்தார்.ஆனால் வரதரோ பெரும் சங்கடத்திலிருப்பதும் தானும் ஒரு விசயத்தை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொல்ல வேணும் என்பதும் அதை எப்படித் தொடக்குவது என்ற பதைபதைப்பு இருப்பதை அவரின் குரல் காட்டியது.

அந்த நேரம் பார்த்து அடுப்படிக்குள்ளிருந்து அம்மாவும் தம்பியும் தேத்தண்ணியும் வடை மோதகத்தை கொண்டுவர பிறகும் ஒரு நிசப்தம் நிலவியது.கொண்டு வந்தவற்றை ரீப்போவில் வைச்ச அம்மாவும் தம்பியும் பலகாரங்களை ஒவ்வொருவருக்கும் நீட்டினர்.

நான் வடையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மோதகத்தை எடுத்தன்.எனது காதல் வெற்றிபெறப்போகிறது நீங்கள் எனக்கு மனுசனாக வரப்போறியள் என்ற மகிழ்ச்சியை மனம் கொண்டாட நினைச்சே இனிப்பான பலகாரத்தை சாப்பிட்டதைக் கண்ட அம்மா அப்பாவின் பக்கம் திரும்பி கண்களால் வந்தவரை எனக்குப் பிடித்துவிட்டதை மோதகத்தில் உணர்த்துகிறாள் என அப்பாவிடம் சொல்வது போல இருந்தது.

ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தன்.மகிழ்ச்சியை வெளிக்காட்ட முடியாவிட்டாலும் மோதகத்தை இரசித்துச் சாப்பிட்டபடியே’ அம்மா இன்றைக்கு வழமைக்கு மாறாக மோதகம் நல்லாயிருக்குது „ என்று சொல்ல „ நான் எப்போதும் போலத்தான் மோதகம் பிடிச்சு அவிச்சனான், உன்ரை மனசிலை சந்தோசமிருக்கு அதுதான் இப்படிச் சொல்லுறாய் „ என்று அம்மா சொன்னா.

அம்மாவும் அப்பாவும் முடிவே கட்டிவிட்டார்கள் வந்தவரை எனக்கு பிடித்துவிட்டது என்று.

வந்தவரிடம் அம்மா கேட்டா „உங்களுக்கு எத்தனை சகோதரம் என்று அவரும் தனக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காக்களும் ஒரு தங்கச்சியுமென்றவர் இவள்தான் தங்கச்சி என்றவவர் அக்காக்களும் அண்ணையும் கல்யாணம் கட்டிவிட்டார்கள், இனி இவளுக்கு மாப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறம்…படிப்பு முடியட்டும் ஆனால் தங்கச்சி யூனிவேர்சிற்றிக்கு போக ஆசைப்படுகிறாள் ..ம்..அதற்கிடையிலை அம்மாவும் அப்பாவும் எனக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று விடாப்பிடியாய் நிக்கினம், தங்கச்சியின்ரை கல்யாணம் முடிஞ்சதற்குப் பிறகு நான் கல்யாணம் செய்யிறன் என்று சொல்லியும் கேட்கினம் இல்லை,தங்கச்சி யூனிவேர்சிற்றிக்குப் போகச் சந்தர்ப்பம் கிடைச்சால் காலம் போயிடும் என்று புரோக்கர் மூலமாக தெல்லிப்பழையிலை ஒரு பிள்ளை இருக்கிது என்று அறிஞ்சு என்னையும் தங்கச்சியையும் போய்ப் பார்த்திட்டு வரச் சொல்லி இஞ்சை அனுப்பி வைச்சிருக்கினம் ஆனால்….’ ஏன்று அவர் சொன்னதை நான் கவனமாகக் கேட்ட போதும் அவர் கடைசியிலை ஆனால் என்று சொன்னதை அப்பாவும் அம்மாவும் அவ்வளவாக கவனிக்கவில்லைப் போலை…அவர் பேசுவதை இடைமறித்த அப்பா, „ எங்களைவிட என்ரை மச்சானுக்கு அதுதான் என்ரை மனுசியின்ரை தம்பியாருக்கு பாறுவின்ரை மாமனுக்கு கெதியிலை பாறுவுக்கு செய்து வைக்க வேணும் எண்டு நெருக்கிக் கொண்டிருந்தார், பாறு யூனியன் கொலிஜ்ஜிலைதான் படிச்சவள் திருப்பியும் பிரைவேட்டாக எஸ்.எஸ.;சி சோதனை எடுக்கப் போறாள் சோதனை எடுத்ததுக்குப் பிறகு எல்லாத்தையும் ஒழுங்கு செய்வம் „ என்று இடைவெளியில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்பாவும் அம்மாவும் வந்தவர்தான் தங்கள் மருமகன் என்று தீர்மானிச்சுவிட்டார்கள்.தம்பி கொஞ்ச நேரம் எனது கதிரைச் சட்டத்தில் இருந்தவன் நண்பர்களுடன் விளையாடப் போவதாக சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அம்மா’ மத்தியானம் சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும் „ என்று சொல்ல, அதற்குத் தயங்கிய வரதர் தான் சொல்ல வந்ததை சொல்லுகிற நேரத்துக்காக காத்திருந்தது அவர் முகத்தில் தெரிந்தது.

அம்மா மத்தியானச் சாப்பாடு சாப்பிடச் சொல்லிக் கேட்டதும் அதற்கு மறுப்புச் சொல்லாதவர் தங்கச்சியாரின் பக்கம் திரும்ப அவளின் பார்வையை புரிந்து கொண்டு அவர் ஓமோம் என்பது போலத் தலையாட்டினார்.

கொஞ்ச நேரம் அப்பா அம்மாவுடன் கதைச்சுக் கொண்டிருந்தவர்களில் தங்கச்சியார் என்னைப் பார்த்து வாறியளா பிலாமரத்து நிழலிருந்து கதைப்பம் என்று சொல்லிக் கொண்டே எழுந்து அப்பா அம்மாவிடம் நாங்கள் அங்கையிருந்து கதைக்கிறம் எனச் சொல்ல வரதரும் எழுந்து வர சாப்பாட்டு மேசையடியிலிருந்த கதிரைகள் மூன்றையும் ஆளுக்கொருவராக எடுத்துக் கொண்டு பிலாமரத்தடியில் போட்டு அதில் உட்கார்ந்தவுடன்,வரதரின் தங்கச்சியாரான மேகலா „ நாங்கள் இங்கை வந்து போது எப்படி போற இடத்திலை சொல்றது என்று தயங்கிக் கொண்டுதான் வந்தம்,ஆனால் உங்களைப் பார்த்ததும் பெரும் பாரம் குறைஞ்ச மாதிரி இருந்தது.

நேற்று உங்களை தியேட்டரிலை, ஐஸ்கீறீம் கடையிலை உங்கடை லவ்வருடன் பார்த்தனாங்கள்.நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை இன்றைக்கு உங்களைத்தான் பார்க்க வருவமெண்டு.

அண்ணை என்னைக் கூட்டிக் கொண்டு வந்ததே தன்னுடைய காதலைப் பற்றி உங்கடை அப்பா அம்மாவுக்குச் சொல்லவென்றுதான்.

அது இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று நினைக்கவேயில்லை. அண்ணை தன்னோடை வேலை செய்யிற ஒரு பொம்பிளைப் பிள்ளையை ஐஞ்சு வருசமாக விரும்புகிறார்.

அதை அவராலை வீட்டிலை சொல்ல முடியவில்லை.உங்களுக்கு உங்கடை லவ்வர் எப்படி வேறாட்களோ அது போலத்தான் அண்ணைக்கும்.

அண்ணை ஐஞ்சு வருசமாக காதலிக்கிற பொம்பிளைப் பிள்ளையும் உங்கடை லவ்வரின்ரை ஆட்கள்தான்.அண்ணிக்கும் அண்ணை யாரென்று தெரியும்.அண்ணியும் பிடிவாதமாக இருக்கிறா என்று மேகலா சொல்லும் போது நான் „ என்ன இப்பவே அண்ணியென்று சொல்றியளே „ என்று கேட்க நான் எப்பவோ முடிவெடுத்துவிட்டன் அண்ணியோடை படத்துக்கெல்லாம் போயிருக்கிறன், நேற்றுக்கூட அவாவும் வருவதாக இருந்தார், பொம்பிளையளுக்கு இருக்கும் பிரச்சினையாலை வரமுடியாமல் போச்சுது என்றுவள் நிறுத்திவிட்டு கொஞ்ச நேரம் அமைதியாகவிருந்தாள்.

வரதர் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாதிருந்தவர்.உங்களைப் பற்றி விசாரித்தார்.இரண்டு பேற்றை பிரச்சினையும் ஒரே மாதிரியானதுதான், உங்களுடைய லவ்வர் துணிச்சல்காரர் யார் வெறுத்தாலும் யார் பக்கத்திலும் சாயாமல் உங்களோடு தனியாக வாழக்கூடியவர்.

ஆனால் என்னுடைய நிலைமை வேறு, அப்பாதான் எங்கடை ஆட்களுக்குள்ளை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிச்சு ஆசிரியராக இருக்கிறவர்.

அப்பா படிப்பிக்கிற பள்ளிக்கூடத்திலைதான் நான் விரும்புகிற பிள்ளையின்ரை தகப்பன் தலைமையாசிரியராக இருக்கிறார்.

அப்பாவும் அந்தப் பிள்ளையினுடைய தகப்பனும் பள்ளிக்கூட மட்டத்தில் நல்ல நண்பர்கள்.நானும் அந்தப் பிள்ளையும் ஒருவரையொருவர் விரும்புவது மெது

மெதுவாக எல்லாருக்கும் தெரிய வந்து இப்ப பள்ளிக்கூடத்திலும் தெரிய வந்திட்டுது.

அப்பாவும் அந்தப் பிள்ளையின் தகப்பனும் பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஏதாவது ஆலோசனை செய்ததைக் கண்டாலோ கதைத்ததைக் கண்டாலோ அவர்களின் முதுகுக்குப் பின்னால் „சம்பந்திகள் இரண்டு பேரும் நல்ல வாரப்பாடுதான்’ என்று கதைப்பது அப்பாவுக்கும் தெரியும் அந்தப் பிள்ளையின் தகப்பனுக்கும் தெரியும்…..

வரதர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கடை பிரச்சினையைவிட இவர்களுடைய காதல் சிக்கல் நிறைஞ்சதாக கிடக்குதே என்று நினைச்ச நான்,’அவையின்ரை வீட்டிலை பிரச்சினை இல்லையா, அவை சம்மதிப்பீனமா உங்கடை ஆள் தங்கடை வீட்டிலை என்ன சொல்லுகினம் என்று சொல்லவில்லையா எனக் கேட்க,’ அவர்களுக்கு இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் தொடங்கிவிட்டது,தெரிஞ்சவுடன் தாங்கள் தெரிஞ்சு கொண்டதைக் காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு கல்யாணம் பேசத் தொடங்க கல்யாணம் செய்தால் என்னைத்தான் செய்வன் இல்லாட்டி இப்படிக் கன்னியாக வாழ்ந்து சாவன் என்று சொல்லிட்டாள்

அதற்குப் பிறகு அவளுடைய வீட்டில் யாருமே கல்யாணப் பேச்சை எடுப்பதில்லை…

„உங்கடை லவ்வருக்கு சகோதரங்கள் இருக்கிறார்களா, அவர்கள் உங்கள் இருவரின் காதலையும் எதிர்க்கிறார்களா இல்லாட்டில் ஆதரிக்கிறார்களா……’என்று கேட்டன்.

„அவள் ஒரேயொரு பிள்ளைதான் ….அதாலை அவளின் உயிருக்கு ஏதேனும் ஆகிடுமோ என்று போகிற போக்கில் போகட்டும் என்று பேசாமலிருக்கிறார்களோ தெரியாது….பார்ப்பம் என்ன நடக்குதென்று….

„உங்கடை வீட்டிலை என்ன சொல்லுகினம்…….’என்று கேட்டன்,

வரதர் பதில் சொல்ல எத்தனிக்கையில் மேகலா’ வீட்டிலை எல்லாரும் எதிர்ப்புத்தான்.படிச்சனி நல்ல உத்தியோகத்திலிருக்கிறாய் இது சரிவராது என்று உனக்குத் தெரியாதா’ என்று அம்மா அண்ணை அக்காக்கள் எல்லாரும் சின்ணண்ணைக்கு புத்தி சொல்லிச்சினம்;,ஆனால் நான் மட்டுந்தான் சின்ணண்ணைக்கு ஆதரவாக இருக்கிறன்.

„அப்பா எதுவுமே சொல்லவில்லை. அண்ணியின் அப்பாவும் பெரிதாக தனது எதிர்ப்பை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை,நான் நினைக்கிறன் மாணவர்களுக்கு சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லிக் குடுக்கும் ஆசிரியர்களல்லவா அதுதான் அமைதியாக இருக்கிறார்களோ தெரியாது என்று வாய்விட்டுச் சிரித்தாள்.

மீண்டும் எம்மூவருக்குமிடையில் அமைதி மௌனம் நிலவியது.அமைதியாக இருந்த வரதர் எழுந்து மேகலாவை „வா சொல்லிவிடுவம் „ என்று கூப்பிட அவளும் எழுந்து போனாள்.

அம்மாவும் அப்பாவும் அப்பொழுதும் வீட்டு விறாந்தையில்தான் இருந்தார்கள்.அம்மா கைகளால் ஏதோ வேலை செய்வது போலத் தெரிந்தது.

வரதரையும் மேகலாவையும் கண்ட அவர்கள் என்னவாக இருக்கும் என யோசிப்பது போல அப்பாவும் அம்மாவும் அவர்களை ஏறெடுத்துப் பார்ப்பதிலிருந்து தெரிஞ்சுது.

முன்பிருந்த அதே கதிரையில் வரதரும் மேகலாவும் உட்கார்ந்தனர்.மாறி மாறி இருவரும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.அப்பாவின்ரை முகமும் அம்மாவின்ரை முகமும் கறுக்கத் தொடங்கியது.

கொஞ்ச நேரம் கதிரையில் உட்கார்ந்தவர்கள் எழுந்து மீண்டும் நானிருந்த பிலாமரத்தடிக்கு வந்தனர்.

„எழும்பிப் போய் அப்பா அம்மாவிடம் என்ன சொன்னனீங்கள் „ என்று கேட்டன்.

சின்ணண்ணை தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அவளைத்தான் கல்யாணம் செய்யப் போவதாகவும் சொன்னவர்…

„அதற்கு அவையொன்றும் சொல்லவில்லையா’ என்று கேட்டதற்கு, பாறு ஏதாவது சொன்னாளா என்று கேட்டார்கள்,நாங்கள் பாறு எதுவுமே சொல்லவில்லையென்று சொன்னம்…ஆனால் அவர்கள் என்னிடம் ஏதோ கேள்வி கேட்க நினைச்சு கேட்காமல் விட்டிருக்கிறார்கள் என்பது உங்கடை அப்பாவின் கண்ணில் தெரிஞ்சுது….இதற்காக சாப்பிடாமல் போக வேண்டாம் சாப்பிட்டிட்டுப் போங்கள் இதிலை கோபிக்கிறதுக்கு ஒண்டுமில்லையென்று சொன்னார்கள்.

அதற்கு நான், சிலநேரம் நீங்கள் ஒரு பெண்ணை காதலிச்சுக் கொண்டிருக்கும் போது பிறகு ஏன் இங்கை வந்தனீங்கள் என்று கேட்க நினைச்சுக் கேட்காமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறன்..அடுத்த எனது சந்தேகத்தை வரதரிடம் கேட்கலாம் என்று நினைச்ச போது அவரே நீங்கள்கூட நினைப்பியள் ஒருத்தியைக் காதலிக்கும் போது இன்னொரு பெண்ணை பெண் பார்க்கப் போவது தவறுதானே என்று, அதை நான் ஒத்துக் கொள்கிறன்,வீட்டிலை ஒரே பிரச்சினை நான் அதை என்னுடைய அகல்யாவிடம் சொன்ன போது பயப்படாமல் சாட்டுக்குத்தன்னும் போட்டு வாருங்கள்,நீங்கள் பார்க்கப் போற பெண்ணின் தாய் தகப்பனிடம் எங்கடை விசயத்தைச் சொல்லிவிட்டு வாருங்கள் என்ற வரதர் நேற்று உங்களையோ உங்கடை லவ்வரையோ யாழ்ப்பாணத் தியேட்டரில் சந்தித்திருக்காவிட்டாலும் இப்ப உங்கடை அப்பா அம்மாவுக்குச் சொன்னதைத்தான் சொல்லியிருப்பன் என்று முடிச்சார்.

அதற்குப் பிறகு அவரவர் பார்த்த படங்களைப் பற்றி அவரவர் அபிப்பராயங்களைப் பற்றிக் கதைச்சம்.

ஒரு நாளுக்குள் ஒரிரு மணித்தியாலத்துக்குள் எங்கள் இருவரின் காதல் சம்பந்தமான விசயங்களும் வரதரின் காதல் சம்பந்தமான விசயங்களும் பேசிப்பறைஞ்சு தீர்வுக்கு வந்தது எனக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அதற்குப் பிறகு மத்தியானச் சாப்பாட்டை வரதருக்கும் மேகலாவுக்கும் குடுத்தம்.அப்பாவும் அம்மாவும் எதையுமே காட்டிக் கொள்ளாமலிருந்தார்கள்.

ஆனால் அம்மா கூறுகுறிப்பாக என்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.அவருக்கு நான் உங்களை விரும்புகிறேனோ என ஒரு சந்தேகம் இருந்து கொண்டேயிருக்குது.

நான் அதை வரதருக்குச் சொல்ல வரதர் தான் யாரையோ காதலிப்பதாக எனக்காக பொய் சொல்கிறாரோ என அம்மா நினைச்சிருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் எனக்கு மன நிம்மதியாகவிருந்தது.நேரம் மெதுவாகப் போவது போலத் தெரிஞ்சுது.

பின்னேரத் தேத்தண்ணியைக் குடிச்சுவிட்டு வரதரும் மேகலாவும் அப்பா அம்மா என்னிடம் சொல்லிவிட்டுப் போகும் போதுதான் நீங்கள் வந்தீர்கள்.நல்லவேளை அவர்களைச் சந்திச்சீர்கள்…

பாறு அன்று நடந்தவற்றைச் சொல்லி முடிச்சதும் இருண்டிருந்த வானம் வெளிச்சமாகி நீலவானமும் சூரியனும் தெரிவது போல ஞானம் அதை உணர்ந்தான்.

பாறுவும் மகழ்ச்சியில் மிதந்தாள்.அவள் அடிக்கடி கடைக்கண்ணால் அம்மா எங்கையாவது மறைஞ்சு நின்று தங்களைக் கவனிக்கிறாரா என்பதையும் கவனிக்கத் தவறவில்லை.

அவள் சொன்ன செய்தியால் ஞானத்திற்கு அவளைக் கட்டியணைச்சு இதழோடு இதழ் சேர்த்து முத்தம் குடுக்க வேண்டுமென்று ஆசைதான்.அவனின் பார்வையை உணர்ந்த அவளும் தலையைக் குனிஞ்சு கண்ணை உயர்த்திப் பார்த்தாள்.

நாளைக்கு உங்களுக்குத் தெல்லிப்பழைச் சங்கத்திலை இன்ரர்வியூ இருக்குதல்லோ கெதியாய்ப் போய் நேரத்தோடை நித்திரை கொள்ளுங்கோ நான் புளியடி வைரவருக்கு நேருகிறன் உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று, நீங்களும் முத்துமாரியம்மனை நேருங்கோ என்றாள்.

ஞானம் விறாந்தையிலிருந்து எழுந்து பாறுவின் வீட்டுப் படலையடிக்குப் போக பாறுவும் அவனுடன் வர சைக்கிளை உருட்டியபடி படலையை நீக்கி ஒழுங்கைக்கு வந்தவன் பாறுவைப் பார்த்த பார்வையின் அரத்;தத்தை உணர்ந்த அவள்’ என்ன இப்ப இருட்டாக நல்லது என்று யோசிக்கிறியள் போல உங்களை நல்லாய்ப் புரிஞ்சு வைச்சிருக்கிறன் இன்ரர்வியூவை முடிச்சுப் போட்டு நாளைக்குப் பின்னேரம் வாங்கோ’ என்று சொன்னதும் அவளின் ஸ்பரிசம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் ஞானம் வீட்டை நோக்கிப் போகிறான்.

பாறுவின் வீட்டில் பாறுவுடனான சந்திப்பில் மேகங்களற்ற ஆகாயமாக அவனது மூளையும் மனமும் தெளிவாகப் பாரம் குறைஞ்சு இருந்தது.

ஆனால் ஞானத்தின் வீட்டில் பெரும் புயலே வீசுவதற்குத் தயாராக மேகங்கள் கன்னங்கரியாக கறுத்திருப்பது போன்று ஞானத்தின் அக்கா தனலட்சுமி ஞானம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள்…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *