நடுகைக்காரி!…. 29 …. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

![]()
பாறுவுக்குப் பக்கத்தில தானிருப்பதை பார்த்துவிட்ட பஸ் கண்டக்டர் சவாரி பாறு யாரென்பதை யாரிடமாவது துருவித் துருவி ஆராய்ஞ்சு கேட்காமல் விடமாட்டார், அத்துடன் தனத்துக்கும் பூரணிக்கும் தானே பஸ் ரிக்கற்றை வாங்கியதையும் யார் அவை இரண்டு பேரும் என்பதையும் ஆராயாமல் விடமாட்டார் என்று யோச்ச ஞானம்,மீண்டும் பாறுவிடம் „ நான் கேட்டதற்கு பதில் எதுவுமே சொல்லாமல் இருக்கிறியள், முகம் ஏன் ஒரு மாதிரியாய்க் கிடக்குது „ என்று கேட்க, யாருக்குமே கேட்காதவாறு வாயை மெதுவாக கையால் அணைத்தவாறு முதல்நாள் இரவு தகப்பன் தனக்குக் கல்யாணம் செய்து வைக்க முடிவாயிருக்கிறார், எனக்குப் பார்த்த மாப்பிளை யாழ்ப்பாணம் கச்சேரியிலை கிளறிக்கல் சேவன்ராக வேலை பார்க்கிறவராம்…’ என்று சோர்வாகச் சொல்லியவள் „தயவு செய்து நீங்கள் கெதியிலை வேலையாகி என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள்,உங்களைக் காதலிச்சு உங்களைத்தான் கட்டப் போகிறன் என்று வெளிப:படையாகச் சொல்லுற சூழ்நிலைச் சுதந்திரத்திலையா நான் இருக்கிறன் தயவு செய்து ஏதாவது செய்யுங்கள், இண்டைக்கு படத்துக்கு வர்றதுக்குகூட விருப்பமில்லாமலிருந்தது ஆனால் உங்களைப் பார்க்க வேணும், உங்களுடன் அருகிலிருக்க வேண்டுமென்று சொன்ன பாறுவின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வழிந்தது.
அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்ட ஞானம் தனது இருக்கையின் பின்பக்கமாக தனது கையைக் கொண்டு போய் அவளின் தோள் மீது ஆதரவாக மெதுவாக தட்டிக் கொடுக்க தன்னை மறந்த நிலையில் ஞானத்தின் தோள்மீது சாயப் போனவள் மற்றவர்கள் கவனிப்பார்களே என்று நினைச்சு ஞானத்தின் தோள் மீது சாயாமல் சமாளித்துக் கொள்கிறாள்.
ஆனால் இருக்கையில் ஊன்றியபடி இருந்த ஞானத்தின் கைவிரல்ககளுக்குள் தனைது விரல்களை இணைத்து மனதுக்கு ஆறுதல் தேடிக் கொண்டாள்.
எல்லாருக்கும் ரிக்கற்றை எழுதி கிழித்துக் குடுத்த கொண்டக்ரர் பஸ்ஸின் முன் கதவடியில் வெறுமனையான இருக்கையில் இருந்தபடியே ஞானத்தைத் தவிர மற்றைய மூவரும் யாராக இருக்குமென கண்களால் ஆராய்ந்த அவர் கூறுகுறிப்பாக தனத்தையும் பூரணியையும் ஞானத்திற்கு பக்கத்திலிருந்த பாறுவையும் பார்த்து அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்ட திருப்தியில் மெதுவாகத் தலையை ஆட்டியபடி திரும்பிக் கொள்கிறார்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பஸ் நின்றதும்,ஞானம்,பாறு,பூரணி தனம் ஆகியோர் பஸ்ஸைவிட்டு கீழிறங்கி நடக்கத் தொடங்க பின்னாலிருந்து கொண்டக்ரர் சவாரி’ஞானம் கொஞ்சம் நில் „ என்று கூப்பிட்டபடியே நடந்து வந்து கொண்டிருக்க, தன் பெயரைச் சொல்லி கூப்பிட்ட கொண்டக்ரரை பார்த்தபடியே நிற்க, அவனுடன் தோளோடு தோள் சேர்ந்தும் சேராமலும் வந்த பாறு அப்படியே நிற்க, இரண்டடி கொண்டக்ரரை நோக்கி நடந்து கொண்டே „ என்னண்ணை’ என்று கேட்டவாறு போக, கோபமான முகத்துடன் „ நீ சுப்பையா மாமாவின்ரை பெயரைக்
கெடுக்கவென்றே பிறந்தனியோ இவளவை யார்? எங்கடை தோட்டங்களிலை புல்லுப் பிடுங்கி வயிறு வளக்கிறளவை,எங்கடை ஆட்களின்ரை வாசப்படியிலை இருந்து கொண்டு சிரட்டையிலை தேத்தண்ணி வாங்கிக் குடிக்கிறளவை, எங்களைக் கண்டால் அவளவையின்ரை ஆம்பிளையள் கட்டியிருக்கிற சால்வையைக் இடுப்பிலை கட்டுவினம் இல்லாட்டி கக்கத்திலை வைக்கிறவை, சினி மணக்கிறளவை அவளவையோடு சேர்ந்து அவளவைக்கு பஸ்சுக்கு ரிக்கற் வாங்கிக் குடுத்து கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்,நான் கேள்விப்பட்டனான் ஒரு குமரி தோட்டத்துக்குள்ளை உன்னோடு சுத்துது என்று.
உங்கடை அட்டாளைக்குள்ளை நீயும் அந்தக் குமரியும் சேர்ந்து கொஞ்சிக் குலாவிறியள் என்றும், அந்த வெக்கங்கெட்ட நாய் உதுதானோ, ஓகோ அவாவுக்கு எங்கடை ஆட்களின்ரை …அதுதான் உன்ரை ……..அது தேவைப்படுதோ….எடுத்துத் திரியறாளாக்கும்,புளியங் கொம்பாய் தேவைப்படுதோ, உனக்கென்ன விசரோ,இப்ப எங்கை அந்த நாயளைக் கூட்டிக் கொண்டு போறாய்……’ மூச்சுவிடாமல் கோபமாகச் சொல்ல,மெதுவாக பாறுவையையும் பூரணி தனத்தையும் திரும்பிப் பார்த்துவிட்டு சவாரியின் பக்கம் முகத்தை திரும்பியவனின் கண்கள் சிவக்க இரண்டு கை நரம்புகளும்; வெடிப்பது போல முறுக்கேறி நிற்க, கைவிரல்களை மடக்கி கோபத்தில் முஸ்டியாக்கியவன் விறைத்து நின்றவாறே சவாரியைப் பார்த்து’ அண்ணை நிற்பாட்டுங்கோ, இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினாலும் நீங்கள் மரியாதை கெடுவீங்கள் எனக்கும் டேய் என்று சொல்லத் தெரியும் தூசணமும் பேசத் தெரியும் வயசுக்கு மூத்தவர் என்றதாலும் சொந்தக்காரன் என்றதாலும் கோபத்தை அடக்கிக் கொண்டு நிற்கிறன்,அவைக்கு முன்னாலை உங்களை மரியாதை கெடுத்தக்கூடாதென்று கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாக நிற்கிறன்,இது என்னுடைய சொந்த விசயம் நீங்கள் யார் தலையிடுவதற்கு, அது சரி அவையைப் பார்த்து சினி மணக்கிற ஆட்கள் என்று சொல்றியளே, அவை உங்களைவிட பலமடங்கு துப்பரவானவை, அங்கை பாருங்கள் அந்த மூன்று பேரையும் எவ்வளவு துப்பரவாயும் அழகாயும் கம்பீரமாயும் நிற்கினம் என்று….
„நீங்களும் இரண்டு நாளைக்கு குளிக்காமல் பல்லு மினுக்காமல் விட்டால் உங்கடை உடம்பும் வாயும் நாறும்,கமக்கட்டும் கவடும் முகமும் கோமணுமும் முகம் குடுக்க முடியாதளவுக்கு நாற்றமடிக்கும், அருவருக்கும் உங்களோடை அறுதலாய்க் கதைக்கிறன், உங்கடை வீட்டுக்கே வந்து கதைக்கிறன்,எனக்குப் பக்கத்திலை வந்த பிள்ளையைத்தான் நான் கட்டப் போறன்,, உங்களாலை மட்டுமல்ல ஊராலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கோபமாகச் சொன்னவன், பாறுவையும் பூரணியையும்,தனத்தையும் கூட்டிக் கொண்டு வின்ஸர் தியேட்டரை நோக்கிப் போய் கொண்டிருக்கையில்’ ஏன் உங்கடை கண்ணிரண்டும் சிவந்திருக்கு, முகமும் மாறியிருக்கு, அந்த கொண்டக்ரர் ஏதோ கேபமாக பேசினமாதிரிக் காதிலை கேட்டுது எங்களோடை வந்ததைத்தான் கேட்டவரோ என்று நினைக்கிறன், என்னவாம்’ என்று பூரணிக்கும் தனத்திற்கும் கேட்காதவாறு ஞானத்தின் தோளோடு
நெருங்கி நின்றபடி அவன் காதருகில்: பாறு கேட்க’ உங்கள் ஆரைப்பற்றியும் அவர் கதைக்கவில்லை என்ன படத்திற்கு போகிறாய் என்றுதான் கேட்டவர்’ என்று ஞானம் சொல்ல, „நல்லாய்ப் பொய் சொல்லத் தொடங்கிவிட்டியள்;,சரி பரவாயில்லை’ என்ற பாறு அதற்கு மேல் எதுவுமே சொல்லாமல் ஞானத்துடன் அருகருகாக நடந்து கொண்டிருந்தாள்.
தியேட்டருக்குப் பொகும் வழியில் கடலைவறுத்து விற்கும் கடை இருந்தது.ஞானம் „கச்சான் கடலை வாங்கினால் படம் பார்க்கேக்கை கொறிக்கலாம்’ என்று கடைப் படியில் ஏறப் போக „ வாங்க வேண்டாம் நான் கச்சான் கடலை வறுத்துக் கொண்டு வந்திருக்கிறன்’ என்று தனம் சொல்ல, „நன்றி அக்கா’ என்று ஞானம் சொல்ல, „ நான் முறுக்குச் சுட்டுக் கொண்டு வந்திருக்கிறன்’ என்று பூரணி சொல்ல, „ அட ஆளாளுக்கு ஒவ்வொன்று கொண்டு வந்திருக்கிறியள், ஆனால் நம்மாள் என்ன கொண்டு வந்தவா என்று தெரியேலையே’ என்று பாறுவைப் பார்த்துப் பூடகச் சிரிப்புடன் கேட்க, „உங்களுக்கு மட்டும் ஸ்பெசலா ஒரு பொருள் கொண்டு வந்திருக்கிறன் „ என்று பாறு சொல்ல, „ஸ்பெசலாகவா…’ என்று ஞானம் பாறுவைப் பார்க்க’ பீடா….’ ஏன்று தனது சிறிய கைப்பைக்குள்ளிருந்து இரண்டு பீடாக்களை எடுத்துக் காட்டி, „ ஒன்று உங்களுக்கு மற்றது எனக்கு’ என்று சொல்ல,’ அப்ப எங்கள் இரண்டு பேருக்கும் இல்லையா’ என்று பூரணி கேட்க, „ இல்லை’ என்று வேகமாகப் பதில் சொல்லிச் சிரிக்கிறாள்.
கதைச்சுக் கொண்டே வின்ஸர் தியேட்டருக்கு வந்த போது அங்கே சனக்கூட்டமாக இருந்தது.ஆனால் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் ஞானம் முதலாம் வகுப்பு வரிசையில் நின்று நால்வருக்கும் ரிக்கற்றை வாங்கியவன் வெறுமையான இருக்கைகளைத் தேடி உட்கார்ந்தனர்.
பாறு ஞானத்திற்குப் பக்கத்தில் உட்கார தனமும் புரணியும் பாறுவுக்குப் பக்கத்தில் அடுத்தடுத்து உட்கார்ந்தனர்.
அந்த வரிசையில் இரண்டு இருக்கைகளே வெறுமனையாக இருந்தன.தியேட்டருக்குள் இருக்கும் நடைபாதையோடு இருந்த இருக்கையும் அதற்கடுத்த இருக்கை மட்டுமே வெறுமனையாக இருந்தன.
படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்துக் கொண்டிருக்கும் போது,ஒரு இளைஞனும் யுவதியும் வெறுமனையான இருக்கைகளை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் போது இரண்டாவது மணி அடித்துக் கொண்டிருக்கும் போதே மின் விளக்குகள் அணையத் தொடங்கின.
அப்பொழுது ஞானம் தலையைத் திருப்பிப் பார்க்க, ஒரு ஆணும் பெண்ணும் வெறுமனையான இருக்கைளை தேடி நோட்டம் விட்டவாறு தடுமாறிக் கொண்டிருக்க அவர்களை நோக்கி கையசைத்து வெறுமனையாக இருக்கும் இருக்கைகளைக் காட்டுகிறான்.பாறு எழுந்து ஞானம் இருந்த இடத்தில் இருக்க ஞானம் பூரணிக்கு பக்கமாக பாறு இருந்த இருக்கையில் உட்காருகிறான்.பாறு ஞானத்தின் இடதுகைப் பக்கம் உள்ள இருக்கையில் உட்கார அவளருகில் அந்தப்
பெண் உட்காருகிறாள்.ஆண் அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் உட்காருகிறான்.இருவரும் ஞானத்திற்கு புன்னகையுடன் தாங்ஸ் என்று சொல்லுகிறார்கள்.
படம் ஆரம்பித்தவுடன் „பாறு அதை எடு வாயிலை போடுவம் „என்று ஞானம் கேட்க ஒரு பீடாவை எடுத்து பாதி பாதியாகப் பிய்ச்சு ஞானத்திற்கு பாதியைக் குடுத்து மற்றப் பாதியை தானும் வாய்க்குள் போட்டு மெதுவாக வாய்க்குள் மெல்லத் தொடங்க ஏலக்காய் வாசனை பரவத் தொடங்குகிறது.
ஏலக்காயின் நறுமணத்தை விரும்பியவர்களில் சிலர்’ யாரோ ஏலக்காய் சாப்பிடுகினம்’ என்று சொல்வது ஞானத்திற்கும் பாறுவுக்கும் கேட்கிறது.பாறுவுக்குப் பக்கத்திலிருந்த பெண் „ உங்களுக்கு ஏலக்காயில் விருப்பமா’ என்று படத்தைப் பார்த்துக் கொண்டே கேட்க,’ அவருக்கும் விருப்பம், ஆனால் இது ஏலக்காய் வைச்சு மடிச்ச பீடா வெற்றிலை பாக்கு’ என்று சொன்ன பாறு உங்களுக்கு பாக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருக்கிதா’ என்று கேட்க, அந்தப் பெண்ணும் „ம் போடுவன்’ என்று தலையாட்டுகிறாள்.
உடனே தனது கைப்பைக்குள்ளிருந்து இன்னொரு பீடாவை எடுத்துக் குடுத்து „ சாப்பிடுங்கள்’ என்கிறாள்.’தாங்ஸ்’ என்று சொல்லிய அந்தப் பெண்’ ஏலக்காய் சரியான விலை,நீங்கள் பாக்கு வெத்திலைக்கே வைச்சே சாப்பிடுகிறியள்’ என்று சொல்லிக் கொண்டே வாங்கியவள் பாதியாக பிய்ச்சு பக்கத்திலிருந்த ஆணிடம் குடுக்கிறாள்.
நால்வரும் பீடா மெல்வதால் முதலாம் வகுப்பு வரிசை எங்கும் ஏலக்காய் மணக்கத் தொடங்குகிறது.
இடைவேளை விட ஞானம் சோடா வாங்கவென எழுந்து போகிறான்.அதற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கு பக்கத்திலிருந்த ஆண் „சோடா வாங்கிக் கொண்டு வாறன்’ என்று எழுந்து „ உனக்கு எந்தச் சோடா’ என்று கேட்க’ஐஸ்கிறீம் சோடா’ என்கிறாள்.
பாறுவைப் பார்த்து அந்தப் பெண் „ இவர் என்னுடைய அண்ணை’ என்றவள் „ உங்களுக்குப் பக்கத்திலிருந்தவர்……..’ என்று இழுக்க,’ அவர் என்னுடைய லவ்வர்’ என்று மிக இயல்பாகச் சொல்ல, „ என்ன லவ்வரா பயப்படாமல் சொல்றியள்’ என்று வியப்புடன் அந்தப் பெண் கேட்க ‘ ஏன் பயப்படுவான் கல்யாணம் செய்யப் போறவருடன் வந்திருக்கிறன்’ என்றவள் அந்த இரண்டு பேரும் எங்களோடைதான் வந்தவை சொந்தக்காரர்’ என்று பாறு சொல்ல, „ உங்கள் இருவரின் லவ்வும் வெற்றி பெற்று கல்யாணத்தில் நிறைவேற வாழ்த்துக்கள்’ என்ற அந்தப் பெண் வாழ்த்திவிட்டு,அவர் உங்களுக்குச் சொந்தமா’என்று கேட்க, தடுமாறிய பாறு „சொந்தந்தான்’ என்று பதில் சொல்கிறாள்.
„பாறு கச்சான் தரவா’ என்று தனம் கேட்க’ எப்படியக்கா சாப்பிடுறது கோதுகள் கீழை கொட்டுமே’ என்று பதில், சொல்ல பேப்பர் தாறன் அதை மடியிலை வைச்சு உடைச்சு இரண்டு பேரும் சாப்பிடுங்கள் „என்றவளுக்கு, „அக்கா கொஞ்சம் கூடத் தாருங்கள், பக்கத்திலை பிரண்ட் இருக்கிறா, அவாவுக்கும் அவான்ரை அண்ணணுக்கும்„ என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டி தனத்திடமிருந்து கச்சான் கடலையையும் பேப்பர் துண்டையும் வாங்குகிறாள்.
பேப்பரை மடியில் வைச்சுக் கொண்டே கச்சான் கடலையை உடைச்ச பாறு „ நான் உடைச்சு உடைச்சத் தாறன் வாங்கிறியளா’ என்று பக்கத்தில் இருந்த பெண்ணிடம் கேட்க, „ஓமோம் பிரச்சினையில்லை தாருங்கோ „ என்று அந்தப் பெண் சொல்ல, தன்னிடம் இருந்த பேப்பரில் பாதியை கவனமாக கிழித்தெடுத்த பாறு அதை அந்தப் பெண்ணிடம் குடுத்தவிட்டு கச்சான் கடலையை உடைச்சு உடைச்சுக் கொடுக்க, „மண்ணிறத் தோலோடை தாறியளே’ என்று அவள் கேட்க „மண்ணிறத் தோலோடு சாப்பிட்டால் ஏதாவது காயம் ஏற்பட்டு இரத்தம் வந்தால் இந்த மண்ணிறத் தோலில் உள்ள ஒரு கெமிக்கல் இரத்தம் வெளிவருவதைக் கட்டுப்படுத்தும்,அது எப்படியென்றால் ஒரு வலைப்பின்னல் மாதிரி இரத்தக் காயத்துக்கு மேலே ஏற்படுத்தும்….’ என்று பாறு சொல்வதைக் கேட்டு ஆர்வமான அவள் „நீங்கள் சயன்ஸா படிச்சனீங்கள்’ என்று; கேட்க, „இல்லை இல்லை நான் ஆர்ட்ஸ்தான், நான் சொன்னது பொதறிவுதான், நான் இதைக் கல்கியில் வாசித்திருக்கிறன் „ அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ பாறு இந்தா இதைப் பிடி „ பூரணியின் குரல் கேட்டு திரும்பியவளின் கைகளில் பூரணி எட்டி முறுக்குகளை நீட்ட அதை வாங்கிய பாறு „ இதையம் வைச்சிருங்கோ இதை உடைச்சு முடிஞ்சதும் வாங்கிறன் „என்று முறுக்குகளை அவளின் கைகளில்: வைக்க’ என்ன நீங்கள் படம் பார்க்க வரேக்கிலை கச்சான் கடலை , பலகாரம் எல்லாம் கொண்டு வந்திருக்கிறியள் சோறு கறியும் கொண்டு வந்திருப்பியள் போல’ என்று அவள் சிரிக்க, பாறுவும் சிரிச்சுக் கொண்டே „ ச்சாச்சாய் அதெல்லாம் கொண்டு வரேலை படம் முடிஞ்சதும் கடையிலை சாப்பிடப் போகிறம்’ என்கிறாள்.
„படம் முடிஞ்சதும் சாப்பிட்டிட்டு நேரே வீட்டுக்குப் போயிடுவியளோ’ என்றவளுக்கு,’இல்லை சாப்பிட்டிட்டு,தமிழ்ப் பண்ணை புத்தகக் கடைக்கும் பிறகு பூபாலசிங்கம் புத்தகக் கடைக்கும் போய் கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, முற்றவெளியிலை இருக்கிற லைப்பிரரிக்குப் போயிட்டுத்தான் வீட்டை போவம் „ என்று சொல்ல,’அப்ப நீங்கள் கதைப் புத்தகங்கள் வாசிப்பியளோ’என்றவளுக்கு „நான் கொஞ்சம் வாசிப்பன் அவர் ஒரு புத்தகப் பூச்சி’என்று சொல்லிக் கொண்டே உடைச்ச கச்சான் கடலைக் கோதுகளை பேப்பரில் மடிச்சவள் பூரணியின் பக்கம் திரும்பி „அக்கா இதைப் பைக்குள்ளை வையுங்கள், வெளியிலை எங்கையாவது குப்பைக் கூடைக்குள் போடுவம் „ என்று சொல்லிக் கொண்டே கச்சான் கடலைக் கோதுகளைக் குடுக்கிறாள்.
அந்தப் பெண்ணின் அண்ணணும் ஞானமும் சோடாப் போத்தல்களுடன் வந்து ஊட்காருகின்றனர்.
„கச்சான் கடலையையும் முறுக்குகளையும் நீங்களே வைச்சிருங்கள்,நாங்கள் உங்களிட்டையிருந்து எடுத்துச் சாப்பிடுறன் நீங்கள் இரண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கள்….’ என்று சொல்லி முடிக்கமுந்தி’ பார்க்கிறவை நினைக்கப் போயினம் நாங்கள்தான் உங்களுக்குத் தருகிறம் „ என்று சிரிச்சுக் கொண்டு சொல்ல’ „அதற்கென்ன பரவாயில்லை, அப்படி நினைக்கிறவை நினைக்கட்டும் „ என்று பாறு சொல்கிறாள்.
பாறு கதைப்பதைக் கேட்டு இரசித்தபடி பாறு அந்தப் பெண் கையிலிருந்து எடுத்துத் தந்த கச்சானையும் முறுக்கையும் சாப்பிட்டு ஓரேஞ்பார்லி சோடாவையும் குடிக்கிறான் ஞானம்.
இடைவேளை முடிஞ்சு படம் தொடங்க முறுக்குச் சத்தம் „ர்….டி..ர் „ என்று அமைதியான சூழலில் கேட்க முன் வரிசையில் இருந்த யாரோ ஒருவர் „முறுக்கைச் சத்தம் போடாமல் சாப்பிடுங்கள்’ என்று சொல்ல அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் முறுக்குச் சாப்பிடும் சத்தம் வரும் திசையைப் பார்க்கின்றனர்.
வந்த சிரிப்பை கைகளால் வாயைப் பொத்தி சிரிக்கின்றனர் பாறுவும் பூரணி தனமும் அந்தப் பெண்ணும் மெதுவாக முறுக்கையும் கச்சான் கடலையையும் சாப்பிட்டுக் கொண்டே….
(தொடரும்)
![]()