அடையாளம்!…. பகுதி:2 …. …. ஏலையா க.முருகதாசன்.

சரசுவை ஊஞ்சலில் இருத்தி செந்தில் ஆட்டும் போது சரசு மகிழ்ச்சியாக இருப்பாள்.அதை வைத்த கண் வாங்காமல் மாணிக்கராசா பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் சரசு ஊஞ்சலில் இருந்து தானாக ஆடிக் கொண்டிருந்த போது அவளுக்குத் தெரியாமல் பின்பக்கமாக வந்த மாணிக்கராசா ஊஞ்சலைப் பிடித்து ஆட்டுவது போல பின்னுக்கு இழுத்து சரசுவை விழுத்துவதற்காகவே முன்னுக்கு ஊஞ்சலை வேகமாக தள்ளிவிட, ஊஞ்சல் இருக்கையிலிருந்து நிலைகுலைந்த சரசு முகம் தரையோடு முட்டிவிழ அவள் அழ அதைக் கண்ட செந்தில் ஓடிவந்து அவளைத் தூக்கிவிட்டு ஏன் விழுந்தனி என்று கேட்க பற்களில் இருந்து இரத்தம் கசியக் கசிய அழுதவாறே’அவன் மாணிக்கந்தான் வேண்டுமென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டவன் „ என்று சொன்னதுதான் தாமதம்,செந்தில் அவன் மீது பாய்ந்து அவனை அடிக்க, அவனும் செந்திலை அடிக்க இருவரும் தரையில் உருண்டு பிரண்டு சண்டை பிடிக்க அவர்கள் இருவரையும் விலத்திவிட சிறுவர் சிறுமிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைய வீதியால் போனவர்கள் விலக்குப் பிடித்துவிட வேண்டிய நிலைக்கு அந்தச் சிறு சண்டை பெருஞ்சண்டையாக மாறிவிட்டது.
மேலெழுந்தவாரியாக பார்த்த போது மாணிக்கராசாவிற்கும் செந்திலுக்கும் ஏற்பட்ட சண்டை விலக்குப் பிடித்துவிட்டதோடு முடிந்துவிட்டது என்று தோன்றினாலும் ஒருவரையொருவர் வெறுக்கத் தொடங்கிய அத்திவாரம் போட்ட நிகழ்வாகவே அது வளரத் தொடங்கியது.
அந்த இரு சிறுவர்கள் மத்தியிலும் அவ்வப்போது விளையாட்டு நேரங்களில் ஒற்றுமை ஏற்பட்ட போதும் அது நிரந்தரமானதாக இருக்கவில்லை.சரசு இருக்கும் போதெல்லாம் சிறு சிறு சச்சரவுகள் அவர்களுக்கிடையே வந்து கொண்டுதானிருந்தது.
சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தும் சுற்றுச்சூழலிருந்துமே பழக்க வழக்கங்களையும் வார்த்தைகளையும் கற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையை மெய்ப்பிப்பது போல ஒரு நாள் மாணிக்கராசா செந்திலைப் பார்த்து „ ஏண்டா எப்பவும் நீ அவள் சரசுவின்ரை பக்கம் நிற்கிறாய் அவள் உனக்கு என்ன பெண்டாட்டியா „ என்று கேட்க பதிலுக்கு „ஓமடா நான் அவளைத்தான் கட்டுவன் அதுக்கு உனக்கென்னடா’ என்று கோபமாகச் சொன்னான செந்தில்;.
அந்த வேப்பமரத்தடியில் விளையாட வரும் சிறுவர்கள் பெண்டாட்டி என்று சொல்லின் தாற்பரியத்தை முற்றுமுழுசாகத் தெரிஞ்சு கொள்ளாமலே சரசு வேப்பமரத்தடிக்கு விளையாட வரும்போதெல்லாம் „செந்திலின்ரை பெண்டாட்டி வாறா என்று கேலிபண்ணி கெக்கட்டம் போட்டு சிரிப்பதைக் கேட்டு ஆரம்பத்தில் சிணுங்கி அழுத சரசு நாள் செல்லச் செல்ல அதைப் பரவாய் பண்ணாமல் விட்டுவிட்டாள், அந்த வார்த்தை அவளுக்குப் பழக்கமாகிவிட்டது.
வேப்பமரத்தடியில் சிறுவர்கள் செய்யும் அட்டகாசங்கள்,சண்டைசச்சரவுகள் கேலிப் பேச்சுக்கள் யாவும் சிறுவர்கள் மூலமாக அவரவர் பெற்றோருக்குப் போய்ச் சேர்ந்து அது ஊர் முழுவதம் பரவத் தொடங்கியது.
சிறுவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்த பெரியவர்கள்’முளைச்சு மூன்று இலை விடவில்லை, பொடிப்பிள்ளையளின்ரை கதையைப் பாருங்கோ „ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் .
சிறுவர்கள் மெல்ல மெல்ல வளரத் தொடங்க அவர்களுடன் இருந்த நட்பும் குரோதமும் வளரத் தொடங்கியது.
சரசுவும் கொள்ளை அழகுடன் வளரத் தொடங்கினாள்.அரும்பு மீசையுடன் மாணிக்கராசவும் செந்திலும் இன்னும் சிலரும் வனப்புமிக்கவளாக சரசுவும் சித்திரமேழியில் இருந்த ஆரம்ப பள்ளிக்கூடத்திலிருந்து வகுப்பேற்றம் பெற்று மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே சரசு பூப்பெய்தி அவள் பள்ளிக்கூடம் வராமல்விட,அவளின் வீட்டில் ஓலிபெருக்கியுடன்; தவில் நாதஸ்வரச் சத்தத்துடன் பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது.
செந்தில் தனது தாய்தகப்பனுடன் அவ்விழாவிற்கு போயிருந்தான்.செந்தில் வருவானா என ஆவலாதிப்பட்ட கண்களின் ஆவலாதி தீர்ந்தது போல அவனைக் கண்டதும் சரசுவின் முகம் பூரித்ததை செந்திலும் கவனித்தான்,பந்தலுக்குள் இருந்த ஒருசிலரும் கவனித்தார்கள்.அவர்களில் ஒருத்தி பக்கத்திலிருந்த பொம்பிளைக்கு தோளால் இடித்து அங்கை பார் „ அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் நடக்குது கவனிச்சியா „ „ம்..ம் கவனிச்சனான்’ என்று இடிவாங்கிய இடிதாங்கிப் பொம்பிளை சொன்னாள்.
மாணிக்கராசா தன்னுடைய பெற்றோருடன் வந்ததைக் கண்ட சரசுவின் முகம் சுருங்கி கறுக்கத் தொடங்கியது.
„ நீ இஞ்சை ஏன் வந்தனி’ என்ற வெறுப்புடன் மாணிக்கராசாவைப் பார்த்தவள் அடிக்கடி தலையைக் குனிவதும் செந்திலைப் பார்ப்பதுமாகவே இருந்தாள்.
செந்திலுக்கும் சரசுவுக்குமிடையில் அவர்களையறியாமலே காதல் வளரத் தொடங்கி பல நாட்களாகவிட்டன.அவர்களிருவரும் சிறுவன் சிறுமியாக இருந்த போது அவர்களுக்கிடையிலிருந்த பிரியம் இப்பொழது காதலாகி விருட்சமாகி நின்றது.
சரசு பூப்புனித நீராட்டு விழா முடிஞ்சு மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவளைப் புதுமையாகவே சக மாணவர் மாணவிகள் பார்த்தனர்.
பொடியங்கள்’டேய் செந்தில் உன்னுடைய ஆள் சரோஜாதேவியைவிட அழகாயிருக்கிறளடா, நீ குடுத்து வைச்சவன் மெய்கண்டான் சரோஜாதேவியென்றே பெயரை வைச்சுவடுவம்’ என்றார்கள்.எல்லாவற்றையும் புரிந்து கொண்ட சக மாணவர்கள் „இனி மச்சான் செந்திலின்ரை காட்டிலை மழைதான்’ என ஒருத்தன்
சொல்ல, காட்டிலிலா இல்லாட்டி கட்டிலிலா „ என்று இன்னொருத்தன் கிண்டலடித்தான.;
ஒருவிதத்தில் தனது காதலியின் அழகைப் பற்றி தனது நண்பர்கள் பேசுகிற போது செந்திலுக்கு அது பெருமையாக இருந்தாலும் , இன்னொருவிதத்தில் அவளின் அழகைபற்றி எல்லாரும் பேசுவதை அவன் விரும்பவில்லை.
ஒரு அழகி செந்திலுக்கு கிடைத்திருக்கிறாளே என்ற பெறாமை மாணிக்கராசாவை வாட்டி வதைக்கத் தொடங்கியது.ஆனால் அவனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
செந்தில் சரசுவின் காதலைப் பற்றி அவர்களின் தாயும் தகப்பனும் தெரிந்து கொண்டிருந்த போதும் அதை அவர்கள் எதிர்க்கவில்லை.
மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.சி சோதனையில் சித்தியடைந்த செந்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் ஒரு கிளார்க்காக வேலையில் சேர்ந்தான்.
அவன் சீமெந்துக்கு தேவையான கற்களைத் தோண்டி எடுக்கும் பகுதியான குவாரிக்குப் பொதுவான அலவலகத்தில் அவன் வேலை செய்து கொண்டிருந்தான்.
எஸ்.எஸ்.சி சோதனையை எடுத்ததுடன் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிய சரசு வீட்டிலிருக்கப் பிடிக்காமல் பண்டத்தரிப்பு பலநோக்கக் கூட்டுறவுச் சங்கம் நடத்திய மின்தறி தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினாள்.
தான் வேலைக்குப் போவதை செந்தில் ஏற்றுக் கொள்வாரோ ஏற்றுக் கொள்ள மாட்டாரோ என்ற தயக்கத்தினாள் ஒரு நாள் செந்திலிடம்’சும்மாயிருக்க விசராயிருக்கு பண்டத்தரிப்பு வீவீங் சென்றருக்கு பொம்பிளைப் பிள்ளையளை வேலை செய்ய எடுக்கினமாம் போகட்டா, வேறை பிள்ளையளும் போகினமாம்,கனபேர் வேலைக்குப் போனால் யூனியன் வான் வந்து ஏற்றிக் கொண்டு போய் பிறகு கொண்டு வந்துவிடுமாம் பாதுகாப்பாக இருக்கும் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நான் போகேலை’என்று சரசு சொல்ல, „ எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை வேற பிள்ளையளும் வாறதாலை பயமில்லை நீ வேலைக்குப் போ’ என்று செந்தில் சொன்னதால் சரசுவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
தங்களுடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள், அதனால் கனநாள் வைச்சு அதை இழுத்தடிக்காமல் கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என்று எண்ணம் செந்திலின் தாய்தகப்பன் மனசிலும் சரசுவின் தாய்தகப்பன் மனசிலும் எழுந்த போதிலும் யார் முதலில் இந்தப் பேச்சைத் துவக்குவது என்பதை உடைத்தது சரசுவின் தாயும் தகப்பனுந்தான்.
பக்கத்து வீடு என்பதால் செந்திலின் வீட்டுக்குப் போன சரசுவின் தாயும் தகப்பனும் சரசுவும் செந்திலும் விரும்புவதையும் சொல்லி கல்யாணத்தை செய்து வைப்போமா என்று கேட்க, நாங்களும் அதைத்தான் உங்களிடம் கேட்பம் என்றிருந்தம் ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தம் என்று செந்திலின்
தாயும் தகப்பனும் சொல்ல அன்றிலிருந்து கல்யாண வேலைகளை ஆரம்பித்தனர் இரு வீட்டாரும்.
தமக்கு கல்யாணம் செய்து வைக்க ஆயத்தங்கள் செய்கிறார்கள் என்பதை செந்திலும் சரசுவும் அறிந்த போதும் எதுவுமே தெரியாதது போல நடந்து கொண்டார்கள்.ஆனால் சரசுவின் தாயும் செந்திலின் தாயும் இன்னும் இரண்டு மாதங்களில் கல்யாணம் நடக்கப் போவதைச் சொன்னதும் அவர்களிருவருமே தமது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டு கல்யாணம் வரையும் போய் நிற்பதை நினைத்துப் பூரித்துப் போனார்கள்.
சரசுவின் வீட்டுக்கு செந்தில் முன்பு போல எதார்த்தமாக போய் வந்து கொண்டிருந்தான் அன்றும் அப்படித்தான் சரசுவின் வீட்டுக்குப் போயிருந்தான்.அப்பொழுது அங்கே சரசுவின் தாய் தகப்பன் யாருமே இருக்கவில்லை.
செந்தில் சரசு வீட்டுக்கு தாய்தகப்பன் இல்லாத போது போனால் அவர்களிருவரும்; அருகருகே உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். ஆக மிஞ்சிப் போனால் சரசு செந்திலின் தோளில் சாய்ஞ்சபடி கதைச்சுக் கொண்டிருப்பாள்.
அன்று வீட்டுக்குள் நுழைந்த செந்தில் சரசு என்று கூப்பிட்டுப் பார்த்திருக்கிறான்.முன்பென்றால் சரசு எங்கை இருந்தாலும் கூடத்துக்கு வேகமாக வந்துவிடுவாள்.
ஆனால் இன்னும் இரண்டு மாதத்திலைதான் கல்யாணம் நடக்கப் போகின்றதே என்று உரிமையில்’ நான் இங்கை அறைக்குள்ளை இருக்கிறன் இங்கை வாங்க’ என்று சரசு கூப்பிட , சரசு இருந்த அறைக்குள் போன செந்தில் கட்டிலில் பரவிக் கிடந்த பட்டுச்சீலைகளையும், திறந்திருந்த வெல்வெட் பெட்டிக்குள் இருந்த நகைகளையும் பார்த்துக் கொண்டே „சரசு இதெல்லாம் எங்கடை கல்யாண வீட்டுக்கா வாங்கினது „ என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் உட்காருகிறான்.
„ம் அதுக்குத்தான் „ என்ற சொன்னபடியே அவனருகில் கட்டிலில் உட்காருகிறாள் சரசு.
உட்கார்ந்தவள் அவன் தோள்மீது தலை வைச்சபடி’இந்த இரண்டு மாதம் கெதியிலை போச்சுதென்றால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்’ என்று சொன்னவளின் முகத்தைப் பார்க்கிறான் செந்தில்.கல்யாணக்களை அவள் முகத்தில் பூரிப்பாகத் தெரிகிறது.அதை இரசித்தபடி தனது முகத்தை அவளின் முகத்தோடு நெருக்கமாக்கிக் கொள்கிறான்.
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காதது போல இதுவரை கட்டிக் காத்து வந்த இருவரின் மன அடக்கமும் தடம்புரள இனி என்ன புருசன் பெண்சாதியாகப் போகிறந்தானே என்று தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்ட செந்திலும் சரசுவும் தம்மை மறந்து உடலால் இணைந்து கொண்டனர். 
ஒரு வேகம்,அச்சூழ்நிலையில் தவிர்க்க முயன்றம் தவிர்க்கு முடியாத காமம் இரண்டும் கலந்து அவர்களை தடுமாற வைச்சாலும் எல்லாம் முடிஞ்ச பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஏதோ பெருந் தவறு செய்து விட்டதாக குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டார்கள்.
„பயமாயிருக்குது செந்தில், இரண்டு பேரும் அவசரப்பட்டிட்டமோ அடுத்த மாத விலக்கு வராமல் இருந்தால் என்ன செய்யிறது பயமாயிருக்குது ‘ என்று சரசு படபடப்புடன் சொல்ல,அவள் பயப்படக்கூடாது என்பதற்காக’ பயப்படாதை சரசு நீ தாலிகட்டாத என்னுடைய பெண்சாதி, புதுசா கல்யாணம் முடிச்ச பொம்பிளையளுக்கு அடுத்த மாசமே மாதவிலக்கு வராமல் விட்டிருக்குதா, சில பேருக்கு வயித்திலை உண்டாக பல மாதங்கள் சென்றிருக்குது…அப்படித்தான் இன்றைய விசயத்திலை முடிவு வரும், நீ பயப்பிட்டு காட்டிக் குடுத்திடாதை, என்னிலையும் பிழையிருக்கு இவ்வளவு நாளும் கட்டுப்பாடாய் இருந்தனான் இன்னும் இரண்டு மாசம் பொறுத்திருக்க வேணும் …சரி சரி இதை யோசித்து முகத்திலை காட்டாதை குழம்பின தலையை இழுத்து முகத்தைக் கழுவிப் போட்டு வா நான் கோலிலை இருக்கிறன்’ என்று சொல்லியவாறு செந்தில் கோலில் இருந்த கதிரையில் போய் உட்காருகிறான்.
தலையை இழுத்து முகத்தைக் கழுவிப் பவுடரையும் முகத்தில் பூசிக் கொண்ட சரசு செந்திலுக்கு தேத்தண்ணி கொண்டு வந்து கொடுக்கும் போது வெளியே போன சரசுவின் தாயும் தகப்பனும் வீட்டுக்குள் வருகிறார்கள்.
செந்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும்’மருமோன் எப்ப வந்தவர் „ என்று தாய் கேட்க „ அவர் வந்து ஐஞ்சு நிமிசமிருக்கும் „ என்று பதில் சொன்ன சரசு,செந்தில் ஐஞ்சு நிமிசத்துக்கு முந்திததான் வந்தவர் என்பதை அம்மா அப்பா நம்புவார்களா, ஐஞ்சு நிமிசத்துக்குள் அடுப்பு மூட்டி தேத்தண்ணி போட முடியமா என அம்மா யோசிக்கமாட்டாரா என யோசித்தபடியே செந்திலுக்கு தேத்தண்ணியைக் குடுக்கிறாள் தாயை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையைக் குனிஞ்சு கொள்கிறாள்.;
தானும் சரசுவும் அவசரப்பட்டு நடந்து கொண்டதை முகத்தில் காடட்hதிருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான் செந்தில்.தகப்பன் கண்டும் காணாத மாதிரி கைகால் கழுவவென கிணத்தடிக்குப் போக செந்திலையும் சரசுவையும் ஊடுருவிப் பார்த்தபடி உள்ளே போகிறாள் சரசுவின் தாய்…
(தொடரும்)
![]()