சிங்கப்பூரில் சிலகாலம்!….. 37….. ஏலையா க.முருகதாசன்.

குளித்துவிட்டுப் போன யோகமலர் மார்புக்கு மேலேயும் கனுக்ககாலோடும் இருக்கத்தக்கதாக பெரிய துவாயைக் கட்டிக்கொண்டு இன்னொரு பெரிய துவாயால் போர்த்திக் கொண்டே படுக்கையறையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவள்,நான் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் „ ஏங்க என்னைப் பார்த்தது போதுமங்;க பாத்ரூமில உங்களுக்கு ரவல் வைச்சிருக்கேனுங்க போய்க் குளிங்க’என்று வெட்கச் சிரிப்புடன் சொல்லியவளின் காலில் இருந்த கால்சங்கிலிகள் மெதுவாகச் கிலிங் என்று சத்தமிட்டன.
சங்கிலிக் குமிழ்களிலிருந்து துளி துளியாக நீர் வடிந்து அவளின் பாதத்திலும் பிறங்காலிலும் முத்துக் கட்டி நின்றன.
நான் லோங்ஸ் சட்டையுடன் இருந்ததால் அதை எங்கே கழட்டி வைப்பது என்று யோசித்த நான் படுக்கையறைக்குள் போய் யோகமலர் கதவைச் சாத்திக் கொண்டுவிட்டதால் இனிப் போய்க கதவைத்தட்டி அறைக்குள் நுழைவது நாகரீகமற்றது என்றெண்ணி குளியலறைக்குள் போய் எனது உடுப்புகளை கழட்டி வைச்சுவிட்டு குளிக்கத் தொடங்கினன்.
உடம்பில் தண்ணீர் பட்டதும் சுகமாக இருந்தது. குளிப்பை இரசித்துக் கொண்டே யோகமலரைக் காலையில் அவளுடைய அண்ணன்மார் அண்ணிமாருடன் சந்தித்த போது மஞ்சள் பச்சை கலந்த சீலைதானே உடுத்துக் கொண்டு வந்தவள் அதற்கிடையிலை எப்படி சல்வார் கம்மீஸ் உடுத்தவள் என்று கேட்க வேண்டும் என்று யோசித்தபடி குளித்த நான், குளிக்க குளிக்க சுகமாக இருந்ததால் மூன்றுமுறை சவர்க்காரம் போட்டுக் குளிச்சன்.
உடம்பில் தண்ணீர் முத்துமுத்தாக உருண்டு போகுவரைக்கும் குளித்தால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும்.ஊரில் கிணத்தடியில் குளிக்கும் காலத்திலேயே குளிப்பதற்கு அதிக நேரம் எடுப்பன்.
எனது மாமா குடும்பம் அச்சுவேலியில் இருந்தது.அவர்களின் மூத்த மகளை எனக்குச் சாணக்குறி போட்டு வைச்சிருந்தார்கள்.
மூத்த மகளுக்கு முருகாதேவி என்று பெயர் வைச்சிருந்தார்கள்.அவள் பெரிய பிள்ளையாவதற்கு முந்தி எங்கடை வீட்டுக்கு வரும் நாட்களில் ஒரு கிழமைக்கு எங்கடை வீட்டிலை தங்கி நிற்பாள்.
பெரியபிள்ளையானதற்குப் பிறகு வந்தாலும் எங்கடை வீட்டிலை தங்குவாள்.ஆனால் அம்மா எச்சரிக்கையாக இருப்பார்.
பெரியபிள்ளையாவதற்கு முந்தி ஒரு நாள் அவள் தங்கி நின்ற போது அவளுக்கும் எனக்கும் இடையில் ஏதோ ஒரு கொழுவல் வந்திட்டுது.
அவள் குளிக்க என்று போக நான் அவளை முந்திக் கொண்டு போய் குளிக்கத் தொடங்கினன்.என்னுடைய நோக்கம் அவளைக் குளிக்க விடக்கூடாது என்பதே.
அவள் கிணத்துக் கட்டிலிருந்து நான் வாளியை விடுவன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் நான் விடுவாதாயில்;லை.
ஒவ்வொருக்கா சவர்க்காரம் போடுவதும் முத்துமுத்தாய் நீர் உருண்டோடுதோ என்று பார்ப்பதுமாய் ஐஞ்சுதரம் சவரக்;காரம் போட்டுக் குளிச்சும் அவளைக் கடைக்கண்ணால் பார்ப்பதுமாய் குளித்துக் கொண்டிருக்க, மச்சாளும் ஒரு முடிவைக் காணுவம் என்று அசையாமல் கிணத்துக் கட்டிலேயே இருந்தாள்.
குளிக்கப் போன இரண்டுகளும் கிணத்தடியிலை என்ன செய்து கொண்படிருக்குதுகள் என்று பார்ப்பதற்காக கிணத்தடிக்கு அம்மா வர „மாமி அத்தான் என்னைக் குளிக்க விடாமல் வேணுமெண்டு குளிச்சுக் கொண்டிருக்கிறார் „ என்று போட்டுக் குடுக்க,வழமையாக நான் சொல்லெணாக் குழப்படிவிட்டால் பாவட்டம் தடியை இலையோடு புடுங்கி எனக்கும் நொந்தும் நோகாதது போலத்தான் அம்மா அடிப்பார்.
அன்றும் வேலியிலிருந்த பாவட்டம் தடியை இலையோடு அம்மா முறிச்சுக் கொண்டு என்னை நோக்கி வர,’அம்மா நான் நல்லாய்ச் சவக்காரம் போட்டு உரஞ்சிக் குளிச்சும் தண்ணி முத்துமுத்தாய் உடம்பில ஓடவில்லை’ என்று நான் சொல்ல,’மாமி நம்பாதையுங்கோ அத்தான் பொய் சொல்லுறார் ஐஞ்சுதரம் சவர்க்காரம் போட்டு தென்னம்பொச்சாலை உரஞ்சிக் குளிச்சவர்’ என்று மச்சாள் சொல்ல, இதற்கு மேல் என்ரை பொய் புரட்டுத் தாக்குப் பிடிக்காது என்று நினைச்ச நான் அதிலும் என்ரை வீராப்பை விட்டுக் கொடுக்காமல் „பாவமாய்க் கிடக்குது இந்தா வாளியைப் பிடியென்று’ சொல்லிக் குடுத்துவிட்டு, அங்கேயே நின்று துவாயால் ஈரம் எடுத்து கைலியைக் கட்டிக் கொண்டு வீட்டை போயிட்டன்.
சிங்கப்பூரில் சாய்ச்சி என்ற இடத்தில் வசதியான ஒரு கொட்டலில், அதுவும் முதலிரவுத் தம்பதியருக்கான அறைக் குளியறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எனது உடம்பில் நீர் முத்துமுத்தாய் உருளுவதைப் பார்த்து பல வருசங்களுக்கு முந்தி எனக்கும் மச்சாளுக்கும் குளியல் பிரச்சினையில் ஏற்பட்ட பிணக்கை நினைச்சு சிரிச்சுக் கொண்டன்.
ஜிஇயில் வேலை செய்த போது ஒரு நாள் யோகமலர் „உங்களை பலர் காதலித்திருக்கலாம் இல்லாட்டில் நீங்கள் காதலித்திருக்கலாம், பிறகு எனக்கு அதை விபரமாக சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தாள் அதையும் நினைச்சுக் கொண்டன்.
நான் குளிச்சு முடிஞ்சு வெளியே வந்த போது, யோமலர் கம்பாயம் போட்டுக் கொண்டு தலைமயிரை இழுத்து இருபக்கமும் கிளிப்புகள் குத்தி படியவிட்டு நீளமான மயிருக்கு இடைக்கிடை றப்பர்பாண்ட் போட்டு அழகாக சோபாவில் உட்கார்ந்து ரிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
குளியலறைக்குள்ளால் வெளியே வந்த என்னைக் கண்டதும் „சேர்ட்டும் ரவுசரும் அயேன்பண்ணி வச்சிருக்கேங்க சீக்கரமா உடுத்திட்டு வாங்க’ என்றாள்.
இந்த அறைக்குள் நானும் யோகமலரும் வந்த போது படுக்கையறைக்குள்; அயேர்ன் பொக்சும் அதற்கான மேசையும் இருப்பதைக் கவனிக்கவில்லை.கொஞ்ச நேரம் கட்டிலில் இருந்துவிட்டு சோபாவில் வந்து உட்கார்ந்துவிட்டம்.
யோகமலர் குளித்துவிட்டுப் போய் உடை மாற்றிய பொழுது அறையை முழுமையாகக் கவனித்ததால் அயேன்பொக்சும் உடுப்பை அயேன்பண்ணுவதற்குரிய மேசை இருப்பதை கண்டிருக்கிறாள் என்று நினைச்சுக் கொண்டன்.
யோகமலர் அயேன்பண்ணி வைச்ச உடுப்புக்களை போட்ட நான் சோபாவில் யோகமலருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தன்.
எப்பொழுதுமே நான் நீளக்கைச்சட்டை போடுகையில், முக்கால்வாசிக்கு மடிச்சு விடுவது வழக்கம்.நான் மடிச்சுவிட்டது குலைஞ்சு போயிருந்ததால் யோகமலர் கைமடிப்பை விரிச்சு மீண்டும் அழகாக முக்கால்கைவரை மடிச்சு விட்டாள்.
„ஆமாங்க நீங்க ரொம்ப நேரமாய்க் குளிச்சீங்களே இப்படித்தான் எப்பவும் குளிப்பீங்களா’என்று கேட்க „ம்..இப்படித்தான் குளிப்பன் உடம்பிலை தண்ணி முத்துமுத்தாய் உருளும் வரை சவர்க்காரம் போட்டுக் குளிப்பன்’ என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்கும் முறைமச்சாளுக்கும் நடந்த ஞாபகம் மீணடும் வர நான் அதை நினைச்சுச் சிரிக்க „ஏங்க சிரிக்கிறீங்க’ என்று அவள் கேட்க,’நான் ஒரு விசயம் சொல்லுவன் என்னைப் பிழையா நினைக்கக்கூடாது’ என்று சொல்ல,’சொல்லுங்க நான் உங்களைத் தப்பா நினைக்க மாட்டன்’ என்றாள்.
ஊரிலை நான் முறைமச்சாளை குளிக்கவிடாமல் கோபப்பட வைச்சதையும் அம்மா அடிக்க வந்ததையும் சொல்ல’ ஆமா எப்போ நடந்ததை இப்ப ஏங்க ஞாபாகப்பகத்து கொண்டு வந்தீங்க தாலி கட்டப் போற நேரத்தில அக்காவை நினைச்சீங்கன்னா அதில தப்பில்லை…ஆனால் …ஆமா நீங்க ஏன் முறைமச்சாளை கல்யாணம் பண்ணிக்கல…அவங்களுக்கு என்ன பெயருங்க „ என்று கேட்க, தயக்கத்துடன் „முருகாதேவி’ என்றன், என்னைக் குத்திட்டுப் பார்த்தவள்’ நாளையிலிருந்து உங்கட லவ்வேர்ஸ்ஸின்ரை கதையைச் சொல்லுங்க இன்னைக்கு ஒண்ணும் வேண்டாம், பிளாஸ்கிலிருந்து கோப்பி எடுத்துக் குடிப்பமா „என்றவள் ,ரீப்போலிலிருந்து கோப்பி பிளாஸ்கை எடுத்து அதிலிருந்து கோப்பியை இரண்டு கப்புகளில் வார்த்தவள் எனக்கு ஒன்றையும் தனக்கு ஒன்றையும் எடுத்துக் கொண்டாள்.
என் தோள்மீது சாய்ந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக கோப்பியைக் குடிச்சுக் கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது.
ஒரு நேரம் சோகமாயும் ஒரு நேரம் சந்தோசமாகவும் இருக்கிறாள்.அவளைச் சந்தித்த முதல் நாளிலிருந்து இப்ப வரைக்கும் அவள் அப்படித்தானிருந்தாள்.
„இவ்வளவு நேரமும் சந்தோசமாகத்தானே இருந்தனீங்கள்,ஏன் திடீரென்று அழுகிறீர்கள்’என்று கேட்க,நீங்க உங்க பழைய கதையைச் சொன்னீங்க, அதில அக்காவை நினைச்சன்,அங்கை அவங்க இருக்கத்தக்கதாக என்னை ஏற்றுக் கொண்டு
தாலிகட்டப் போறீங்கன்னு நினைச்சேங்க அதுதான் அழுகையா வந்துதுங்க’ என்றாள்.
நான் எதுவுமே பேசாது அமைதியாக இருந்தன். யோகமலரைத் திருப்திப்படுத்துவதற்காக அது பிரச்சினையில்லையென்றோ பரவாயில்லையென்றோ நான் சொல்ல முடியாது.
போகிற போக்கில் வாழ்வது போலவும்,கட்டுக்கடங்காத காட்டாற்றில் சருகொன்று ஆறு போகும் திசையில் அடித்துக்கொண்டு போவது போலவுமே நானிருந்தேன்.
அவளிடமிருந்து நான் சுகத்தை எதிர்பார்க்கிறேன் என்பதை எவ்வளவு நிராகரிக்க முடியாதோ அந்தளவுக்கு அவள் மீது பற்றுப்பாசம் கொண்ட காதலும் இருந்ததை நிராகரிக்க முடியாது.
இருவரும் கோப்பி குடித்து முடிந்ததும்,சாப்பிடுவதற்காக மூன்றாவது மாடியில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குப் போனோம்.
போகும் போது அந்த கொட்டலின் நவீனமும் பழமையான சீன கலை கலாச்சாரத்தின் ஓவியங்களையும் சீன கட்டிடக் கலைiயும் பார்த்து இரசித்தவண்ணம் போய்க்கொண்டிருந்தம்.
யோகமலர் எனது கைவிரலுக்குள் தனது கைவிரல்களை கோர்த்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தாள்.
சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்ததும் ஒரு அழகான பணிப் பெண் எங்களை நோக்கி வந்தாள்.அவள் தமிழ்ப் பெண் என்பதைக் கண்டு கொண்டன்.
தமிழில் நான் வணக்கம் சொல்வதற்கு முன்பே „குட்மோர்னிங் வெல்கம்’ என்று ஆங்கிலத்தில் வரவேற்றவள் „வணக்கம் நல்வரவு, வாருங்கள் „என்றவள்.நீங்கள் கனிமூன் கப்பிள்ஸ், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையிருக்கு என்று ஒரு அழகான மேசையில் கொண்டு போயிருத்தினாள்.
அந்த இடம் மிக நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது.சிங்கப்பூர் கொட்டல்கள் உலக தரத்திலேதான் எப்பொழுதுமிருக்கும் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறன்.
ஜிஇ பக்ரறியின் நத்தார் கொண்டாட்டத்தின் போது சங்கிரிலா கொட்டலில் அதைப் பார்த்திருக்கிறன்.அதை இந்தக் கொட்டலிலும் பார்க்கிறன்.
எங்களை இருத்திய பணிப்பெண்,மெனுக்காட்டைக் காட்டி „இன்றைக்கு இதிலையிருக்கிற சாப்பாடு எல்லாம் இங்கை இருக்குது,நீங்கள் போய் உங்களுக்கு விருப்பமான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வந்தும் சாப்பிடலாம்,நீங்கள் விரும்புகிறதைச் சொன்னால் கொண்டு வந்தும் தருவார்கள் „என்று பணிப்பெண் சொல்ல,’ நன்றிங்க,நாங்க போய் எடுத்திட்டு வந்து சாப்பபிடறமுங்க…நீங்க தமிழ் பேசறதைப் பார்த்தா இவரு பேசிற தமிழ் மாதிரி இருக்கே…நீங்க…’ என்று
யோகமலர் சொன்னவுடன்,’ நானும் சிறிலங்காதான், இங்கை கொட்டல் மனேஜ்மெண்ட் படிக்க வந்தன், படிச்சு முடிச்சதும் இந்த கொட்டல்ல எக்சிக்கியூட்டிவ் செக்கிரற்றறி இடமிருக்குது என்று அறிஞ்சு அப்பிளிகேசன் போட்டு இன்ரர்வியூ வைச்சு எடுத்தவங்கள் …..ஓகே..நான் பிறகு வந்து பார்க்கிறன் „ என்று புறப்பட்டவளிடம்’ நீங்கள் ஊரிலை எந்த இடம் „ என்று நான் கேட்க „சங்கானை’ என்று சொல்ல, யோகமலர்,’ இவரு தெல்லிப்பழை என்ற இடமுங்க’ என்று சொன்னவுடன்,’அப்படியா தெல்லிப்பழைல எங்களுடைய றிலேசன்ஸ் நிறைப்பேர் இருக்கிறாங்கள்’ என்று பணிப்பெண் சொன்னதும், எனக்குப் பகீர் என்றது…
(தொடரும்)
![]()