கதைகள்
அகதியின் நாட்குறிப்பு!…. அத்தியாயம் – 08 ….. குடத்தனை உதயன்.



நடேசன் இருமுறை சேட் பொக்கற்றுக்குள் கையை வைத்துப் பார்த்தான். இன்று எப்படியாவது இந்தக் கடிதத்தைக் கவிதாவிடம் கொடுக்க வேண்டுமென்ற நினைப்புடன், நந்தாவில் அம்மன் கோவிலைத் தாண்டி அவனது சைக்கிள் வேகமாக விரைந்தது. ஏனோ தெரியவில்லை நடேசன் வழமையை விட இன்று பட… படப்பு நிறைந்தவனாகக் காணப்பட்டான்..!
நடேசன் மெதுவாகச் சிவபாதம் வீட்டுக் கேற்றைத் திறந்து உள்ளே நுழைந்தான். வீடு அமைதியாக இருந்தது. முன்கதவு சாத்தியிருந்தது. எட்டி … எட்டிப் பார்த்தான். எவரும் கண்ணில் படவில்லை.
எங்கே போயிருப்பார்கள்..?
சிலவேளை பின்பக்கத் தோட்டத்தில் நிற்பார்களோ..?
என்ற நினைப்பில் திரும்பி வந்து எட்டிப் பார்த்தான்.
வானதி கண்களை மூடிக் கடந்து போன நினைவுகளில் திரும்பவும் தன் சிறகுகளை விரித்துத் தன்னிலை மறந்த வேளையில்…. அருகில் சென்ற நடேசன் தொண்டையைச் செருமி..
என்ன.. ஆழமான தியானம்..?
அப்போது தான் வானதி பழைய நினைவிலிருந்து விடு பட்டு..,
“ஆ… ஆ….” எப்ப வந்தீங்க..?
என நினைவுக்கு வந்தாள்.
எங்கே..? ஒருத்தரையும் காணோம்..
என்றவாறு அருகிலுள்ள கதிரையிலமர்ந்தான் நடேசன்.
“ஏன்..?”
என்னைக் கண்ணுக்குத் தெரியலையா..?
வானதியின் கேள்வி அவனை ஒரு வித சங்கடத்திலாழ்த்தியது. அவளின் குரலில் என்றுமில்லாதவாறு ஒரு கடுமையான தொனி இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
ஏனோ.. தெரியவில்லை கவிதாவிற்கான கடிதத்தைத் தானே அவளிடம் கொடுக்க வேண்டுமென்ற பிடிவாதம் அவனுள் இருந்தது. இத்தனை மாதங்களாக கவிதாவுக்குக் கடிதம் கொடுக்க வரும் போது ஏதோ ஒரு அபசகுணம் போன்று அந்தக் கடிதத்தை அவளிடம் கொடுக்க முடியாமல் சறுக்கிக் கொண்டே போகிறது.
அவனது தாய் அடிக்கடி சொல்லுவாள் “தம்பி” எந்த நல்ல காரியமும் தடக்கி வழுக்கித்தான் நிறைவேறும். அதன் பெறுமதி என்னவென்று, மனிதர்களைப் புரிய வைப்பதற்கான இறைவனின் விளையாட்டு என்று.
ஆனால்… இன்று கவிதா இல்லாதது.., ஏதோவொரு மனச் சஞ்சலத்தை அவனுள் உண்டாக்கியிருந்தது.
“வானதி” ஏன்.. ஒரு மாதிரி இருக்கிறீங்க..?
உடம்புக்கு முடியலையா. அல்லது கவிதாவுடன் ஏதாவது பிரச்சினையா..?
எனக் கேட்க நினைத்தான் ஆனால் கேட்கவில்லை.
நடேசன் அங்கு வருவதை வானதி வெறுத்தாள். இதற்கு முன்பு அவன் ஒருநாள் வரவில்லையென்றாலும் ஏன்..? இன்று வரவில்லை. என இருவரும் மாறி மாறிக் கேட்பார்கள். அவன் வராதா நாட்கள் அவர்களுக்கு விடியாத பொழுதுகளாக இருந்தன.
சுயநலம் மனித மனங்களை எப்படியெல்லாம் சிதைக்கிறது. சுயநலம் எவ்வளவு ஒரு “கொடிய நோய்” என்பதற்கு வானதி ஒரு எடுத்துக்காட்டு.
இன்று நடேசனின் மனதில் சொல்ல முடியாத கேள்விகள்.., வலிப்புக் கண்டவன் வாயிலிருந்து நுரை தள்ளுவது போன்று அவனுள் தள்ளிக் கொண்டிருந்தன.
நடேசன் பல நினைவுகளுக்கிடையில், வலிகளை மறைத்துக் கதை சொல்லிக் கொண்டிருந்தான். செல்லப்பாவும் ஆதியும் இமைகள் நொடிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நடேசன் தொடர்ந்தான்…
“அண்ண…”
அன்று தான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
கவிதாவுக்கு எனது காதலை நேரடியாகச் சொல்ல வேண்டும்.., இனிமேலும் தள்ளிப் போடக் கூடாதென்று.
“ தம்பியா..”
நீ சொல்வதைப் பார்த்தால் உங்கள் இருவருக்கும் வில்லி வானதி போல இருக்கு..!
அவளும் உன்னை விரும்பியிருக்கிறாள் என்று தான் எனது அபிமானம்.
என்றார் செல்லப்பா.
ஆதி மனதிற்குள் … அட ஒருத்தி ஒருவனை விரும்புவதே பெரிய விசயம், உந்தக் கரியனை இரண்டு பேர்..! என நினைத்தவாறு.. நடேசனைப் பார்த்தான்.
நடேசன் இருவரையும் பார்த்து ஒரு சிரிப்பொன்றை அவிழ்த்து விட்டான். அண்ண என்ர அம்மா, அப்பா, எனது முன்னோர்கள் செய்த பாக்கியம் எனக்கு நான் விரும்பிய வேலை கிடைத்தது. கவிதாவும் வாழ்க்கையில் இணைந்து விட்டாளென்றால்.. எவ்வளவு சந்தோசமா வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும். ஆனால்.. விதி என்ற ஒன்று உண்டல்லவா…. என நிறுத்தினான்
.
அன்றைய பொழுது இருள் சூழ்ந்து சேடமிழுப்பது போல் நகர்ந்து கொண்டிருந்தது. யாரும் எதிர் பார்க்காத நிகழ்வு நடப்பதற்கு யாழ் நகரம் தயாராகிக் கொண்டிருந்தது.
வானத்தில் கார்முகில்கள் ஒன்றையொன்று பார்த்துக் கவலை தேய்ந்த முகத்துடன் முழித்துக்கொண்டு திரிந்தன. நடக்கப் போவதை இயற்கை முன் கூட்டியே அறியுமோ..? என எண்ணத் தோன்றியது.
நடுச் சாமத்திற்கும் விடியலுக்குமான இடைப்பொழுதில் யாழ் நகரம் வெடியோசையினால் அதிர்ந்த வண்ணமிருந்தன. காலைப் பொழுது மிகவும் இறுக்கமாக இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

போராளிகளுக்கும், ஈழம் பெற்றுத்தரவென வந்த இந்திய இராணுவத்திற்கும், யுத்தம் மூண்டது. மக்கள் மனங்களில் மரணத்தின் சங்கு ஊதும் சத்தம் ஒலிக்கத்துவங்கின… திசையெங்கும் அழுகுரல்கள் பெருச்சாலிகளாக ஓலமிட்டு அலைந்து திரியத் துவங்கின. மீண்டும் வரலாறு இரத்தத்தால் எழுதத்துவங்கியது ஈழத்தில்.
“ பிள்ளைகள்….. பிள்ளைகள்…. “
ஷெல் அடிக்கிறாங்கள் ஓடி வாங்கோ…
பங்கறுக்குள் ஓடுங்கோ….
எனக் காட்டுக் குரலாகக் கத்தினார் சிவபாதம். அவரின் குரல் சாவின் எச்சமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
ஒரே மாதிரி உடை அணிந்தவர்கள், ஒரே நிறத்தில் செருப்புப் போட்டவர்கள்..!
அங்கு தான் விதி அவர்கள் வாழ்க்கையில் சதிராடியது. எல்லோரும் பின் கதவால் ஓடினார்கள்.
ஆனால்…
இவள் பாவி மட்டும் முன் காதவால் ஓடினாள்.
முற்றத்தில் விழுந்த ஷெல்..
என்ர……கவிதாவை …..
நடேசன் விக்கி விக்கி அழுதான். ஆதிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. செல்லப்பா எழுந்து நடேசனை மார்புடன் அணைத்துக் கொண்டார். நடேசன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு.., இப்படிச் சொன்னான்…
“அண்ண..”
என்ர வாழ்க்கை இன்று வரை ஒரு விசித்திரம்.
“அண்ண” நான் கவிதாவின் சாவு வீட்டுக்கு சென்றிருந்தன்..
என்னத்தைச் சொல்கிறது. சரியான கஸ்ரப்பட்ட குடும்பம். அவர்களின் குடும்பத்திலிருந்து நீண்ட கனவுடன் பல்கலைக்கழகம் காலடி வைத்த முதல் வாரிசும், கடைசி வாரிசும் அவள் தான்.
செல்லப்பா ஏன் என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தார்..!
அவள் அவர்களுக்கு ஒரே ஒரு பிள்ளை. சாவீடு முடிந்து நான் புறப்படத் தயாரானேன். வானதி என்னருகில் வந்தாள்.
“நீங்கள்” இன்று போகனுமா..?
இரண்டு நாள் எங்கள் வீட்டில் தங்கிப் போங்கோ என்றாள்.
எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. நான் தங்குவதற்கான ஏற்பாட்டிலும் போகல.
அவளின் சாவுக்கு வந்திட்டு நீங்கள் உடனே போவது சரியில்லை.
நீங்கள் இங்கு நின்றால் எனக்கும் மனம் ஆறுதலாக இருக்கும்.
அவளின் நிலையைப்புரிந்து கொண்டேன். இல்லை என்றும் என்னால் சொல்ல முடியல, ஆம் என்றும் சொல்ல முடியாத இரண்டும் கெட்டான் நிலையிலிருந்தேன்.
அவளது தாயும் எங்களருகில் வந்து தம்பி தங்கிப் போங்கோ என்றார். நாங்களிருவரும் கவிதா வீட்டிலிருந்து வெளியில் மௌனமாக வர.. முன்னாலுள்ள ஆலமர நிழலில் எனது மைத்துனன் ஒரு பயணப்பையுடன் நின்று கொண்டிருப்பதை வானதிதான் முதல் கண்டு கொண்டாள்.
ஏய் சதீஸ்…
என்றவாறு பதட்டத்துடன் அவனை நோக்கி விரைந்தேன்.
டேய் என்னடா..?
என அமைதியாகக் கேட்டேன்.
“ அத்தான்..”
உங்களைத்தேடி இரண்டு தரம் வீட்ட வந்திட்டாங்கள்.
மாமி சொன்னவா.. உங்களை உடனடியாக் கொழும்பு போகட்டாம்.
நடேசன் எதிர் பார்த்தது தான். ஆனால்…. இவளவு வேகமா வருவார்களென்று அவன் நினைக்கவில்லை. வானதி சதீஸிடம் பையை வாங்க முயற்சித்தவாறு…
சரி வாங்க..
என முன்னால் நடந்தாள்.
நடேசன் யோசனையுடன் நடந்தான். எங்களைக் கண்டதும் கிணற்றடியில் நிண்ட வானதியின் தாயார் தண்ணி வாளியுடன் வந்து மூன்று முறை நீர் தெளித்துப் பேய் ஓட்டினார்.
“அம்மா..”
ஒரு துவாயும், சாரமும் தாங்கோ.. என்றாள்.
நடேசனைப் பார்த்து..
நீங்க குளிச்சிட்டு வாங்கோ.. என்றாள்.
நடேசனுக்கும் குளிச்சால் நல்லதென்று தோனிச்சு.
கிணற்றடி.. வாழைகளாலும், தென்னைகளாலும் நிறைந்திருந்தது. வாழைகளைப் பார்க்கும் போது.. அவனுக்கு ஞாபகம் வந்தது.
வாழைத்தோட்டத்திற்க நின்று இயக்கம் சண்டை பிடித்ததாம்..! அந்த தோட்டத்தையையே செயின்பிளக்கால் அழித்தே போட்டாங்களாம்..! மனிசன எங்க விடப் போறாங்கள்.
“அத்தான்”
மாமி சொன்னவா மினக்கடாமல் உங்களைக் கொழும்பு போகட்டாம்.
இவங்கட கையில் மாட்டுப் பட்டால் உயிருடன் விட மாட்டாங்கள்.
கொலைப் பசியுடன் திரியுறாங்கள்.
அவன் சொன்னதை நினைத்துப் பார்த்தான். சாவுக்கு அவன் பயப்பிட வில்லை அநியாயமா இவங்கட கையால சாகக்கூடாதென்பதில்.. நடேசன் உறுதியாக இருந்தான். யமன் வீடு தேடி வந்திட்டுது. இனி மதியால் தான் வெல்ல வேண்டும். என அவன் புத்தியில், மதி அறைந்து சொன்னது.
இரவு வானதியும், நடேசனும் நீண்ட நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடன் கதைத்ததில் நீண்ட முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டது.. இடையிடையே நடேசனிடம் மன்னிப்புக் கோரினாள். கவிதாவின் இழப்பு இருவர் மனங்களையும் புரட்டிப் போட்டு விட்டது.
நடேசன் இரவு முழுவதும் தூங்கவில்லை. எப்படி..? வவுனியாவைத் தாண்டுவது. ச்சா.. அம்மாவாவது வந்திருக்கலாம், அவாவுடன் வவுனியா மட்டும் போனால்.. ஒருவித பாதுகாப்பாக இருந்திருக்கும். அந்த நினைவுகளுக்கிடையில் சதீஸ் சொன்னது. நினைவில் வந்தது.
“அத்தான்..”
மாமி சொன்னவா.. தான் வந்தா ஊருக்க சந்தேகம் வருமாம்.
மனத் தையிரியத்தை வரவைத்துக் கொண்டு போகட்டாம் என்றவா.”
வானதியின் தந்தை இரவு மனைவியிடம் ஒரு யோசனை சொன்னார்.
“இஞ்சரும்..”
வானதியை இங்க வைத்திருப்பது எனக்கு நல்லதாப் படல..
தம்பியிட்ட கொழும்புக்கு அனுப்புவம். அங்க கொஞ்ச நாள் போயிருக்கட்டும்.
வானதியின் தாய் யோசித்தாள். “மனிசன் லேசில பிள்ளைகளைத் தனிய விடச் சம்மதிக்க மாட்டார். அவர் சொல்வதில் ஏதோ ஒரு உள்ளர்த்தம் இருக்கும். என நினைத்தவாறு உறங்கி விட்டாள்.”
வானதியின் தாய் சரசு காலையில் தேநீருடன் தோட்டதிற்குப் புறப்பட்டாள்.
“ஏனப்பா… இப்படியொரு முடிவெடுத்தனீங்கள்..?”
நீ.. ஒன்றும் அறியலையே.
இல்லையப்பா.. சொன்னாத்தானே தெரியும்.
உங்க காரக்காட்டுப் பக்கம் இரண்டு, மூன்று பிள்ளைகள் இயக்கத்திற்கு போட்டுதுகளாம். கொஞ்ச நாள் தம்பியோட போய் இருக்கட்டும். கவிதாவின் சாவும் அவளை நல்லாப் பாதிச்சுப் போட்டடுது.”
சரசு யோசனையில் ஆழ்ந்தாள்.
மெல்லிய தென்றல் காற்று மேனி தழுவிச் சென்றது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம், குணம், வாசமிருக்கும். அதை மனிதன் எல்லா நேரமும் உணர்வதில்லை. ஆனால் இயற்கை எப்படியோ உணர்த்திப் போடும்.
அந்தக் காலைப் பொழுது ஒரு வெய்யிலற்ற கார் காலப் பொழுதை நடேசனுக்கு உணர்த்தி நின்றது. தன்னையறியாமல் அந்தக் கிராமத்தின் அழகை ரசித்தவாறிருந்தான். மனதிற்குள் அன்னியோன்யமான ஒரு பாச உணர்வு அவனைறியாமல் அவனுள் ஊர்ந்து கொண்டிருந்தது.
கவிதாவுடன் இந்த ஊருக்கு வர வேண்டுமென்று எத்தனை இரவுகள் அவன் கனவு கண்டிருப்பான். அவளின் நினைவே அந்தக் கிராமத்தில் ஒரு பிடிப்பு அவன் மனதிலேற்படக் காரணமாயிற்று. போவதற்கு முன்பு கவிதாவின் தாய், தந்தை, அவள் ஓடி விளையாடிய வீடு எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென அவன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். அப்போது அவனருகில் வந்த வானதி…
“என்னப்பா….” யோசனை.
“அவள் பாவி போய்ச் சேர்ந்திட்டாள். அதை நினைத்து என்ன வரப்போகிறது.”
அந்தக் காலை வேளையில் அவள் குரல் அன்பு கலந்து ஒலித்தது. நடேசன் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கவிதாவை இருவரும் மறப்பதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லையென அவன் மனதிற்குத் தெரிந்திருந்தது.
“என்ன… வேளைக்கு முழிச்சிட்டீங்களா…?“
நான்.. துங்கினாத்தானே முழிப்பதற்கு..
சொல்ல நினைத்தான். ஆனால்.. சொல்லவில்லை. வானதி நேற்று தூங்கப் போகும் முன்பு நடேசனிடம் மன்னிப்புக் கேட்டாள். அன்று சிவபாதம் வீட்டில் அவள் எதிர் மாறாக நடந்ததையிட்டு.
***************************************
நடேசன் அருகிலிருந்த செல்லப்பாவையும், ஆதியையும் பார்த்தான். இருவரும் அமைதியாக அவன் கதை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“அடேயப்பா…”
இவ்வளவு கவலைகளை வைத்துக் கொண்டு.. உன்னால் எப்படி சிரிக்க முடிஞ்சது.
செல்லப்பா ஆதங்கத்துடன் கேட்டார்.”
“அண்ண…”
இப்ப நாட்டில இருந்து வெளியேறுகிற ஒவ்வொருத்தர்க்கிட்டையும் பலநுறு கதைகள் உண்டு. ஆனால்.. காலம் செல்லச் செல்ல ஈழத் தமிழனிடம் இந்த உலகத்திற்கு சொல்லி முடியாதளவுக்கு கதைகள் கொட்டிச், சிதறுண்டு கிடக்கும் இருந்து பாருங்கோ என்றான் நடேசன்.
மூவரும் அமைதியாக நடக்கத் துவங்கினார்கள்..
தொடரும் ……………..
![]()