கதைகள்

எனினும்!.. ( சிறுகதை ) …. அண்டனூர் சுரா.

சுப்ரமணி அவன் சோட்டுப் பிள்ளைகளின் மத்தியில் எப்படியோ ஹீரோவாகிவிட்டான். அவன் ட்ரைவரைப் போல வண்டி ஓட்டினால், அத்தனை பேரும் அவனைப் போலவே ட்டர்ர்ர்…..என ஓட்டுகிறார்கள். டீச்சரைப் போல கைநீட்டி பேசுகிறான். அவனது உத்தரவுக்குப் பணிந்து, அத்தனை பேரும் நடந்துகொள்கிறார்கள். அவன் உஷ்…, என்று சொன்னால், அனைவரின் விரலும் வாய்க்குச் சென்றுவிடுகிறது. ஒரு மாசமாகவே அவனது நடையென்ன, உடையென்ன, அதிகாரமென்ன. அவன் சோட்டுப் பையன்களுக்கு மத்தியில் அவன் ஹீரோதான்.

அந்த ஊர் பள்ளியில் படிக்கும் மாணவர்களில், அவனிடம் மட்டும்தான் ஆண்ட்ராய்டு போன் இருக்கிறது. அவனுக்கென அவனது அப்பா வெளிநாட்டில் வாங்கி அனுப்பிய போன் அது. காலை, மாலையானால், அதைத் தூக்கிக்கொண்டு, தெருவுக்கு வந்துவிடுகிறான். அவன் வருகையில் அவனது நடையைப் பார்க்க வேண்டுமே, அப்படியொரு குதியாட்டம். துள்ளல், கன்றுக்குட்டிப் பாய்ச்சல்.

பள்ளிக்கூட நாட்களில், ஒரு மூலையில் சப்பாணியாக உட்கார்ந்திருக்கிற பயல்தான் இந்தச் சுப்ரமணி. நான்காம் வகுப்புத் தாண்டி ஐந்தாம் வகுப்பு போகிறவன். பத்தாம் வாய்ப்பாடு ஒன்றைத் தவிர, அவனுக்கு வேறு வாய்ப்பாடு தெரியாது. சுப்பிரமணி என்கிற அவனது பெயரைக் கூட, சுப்ரமணி என்றுதான் சொல்வான். சொல்வான், எழுதத் தெரியாது. அப்பேர்ப்பட்ட சுப்ரமணிக்கு வந்திருக்கும் கிராக்கியைப் பாருங்களேன். ஒரு மாசமாக அவனைச் சுற்றிதான் பள்ளிக்கூடத்தின் சக்கரம் சுற்றவும், ஓடவுமாக இருக்கிறது.

பள்ளி திறந்துவிட்டால், குயிலிதான் லீடர். பள்ளியைத் திறக்கிறதும், போர்டுகளைச் சுத்தம் செய்றதும், தேதி எழுதுறதும், மணி அடிக்கிறதும், பிரேயருக்குப் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்து, ஸ்கூல் அட்டேன்சன், ஸ்டான் அட் ஈசி,…சொல்றதும் அவள்தான். டீச்சர் பள்ளிக்குத் தாமதமாக வரும் நாட்களில் முக்கால் டீச்சராகிவிடுகிறவள். கையில் ஸ்கேல் வைத்துக்கொண்டு, அவ்வளவு பிள்ளைகளையும் ஒன்றாக உட்கார வைத்து, ஓரெண்டு ஒரெண்டு, ரெண்டு ரெண்டு நாலு,…எனத் தொடங்கிவிடுவாள். மொத்தப் பள்ளிக்கூடமும் அவளது கை அசைவுக்கு வந்து நிற்கும். அப்பேர்ப்பட்ட குயிலிக்கூட சுப்ரமணி பின்னால் ஓடவும், அவன் சொல்வதைக் கேட்கவுமாக ஆகிவிட்டிருந்தாள்.

கீதா டீச்சர், வீடியோவில் பாடம் நடத்தி, சுப்ரமணி செல்போனுக்குத்தான் அனுப்பி வைப்பதாக இருந்தார். தினமும் ஏழு மணிக்கெல்லாம், அவனது செல்போனுக்கு வீடியோ வந்துவிடுவதாக இருந்தது. டீச்சர் என்ன நடத்துகிறார், என்பது அவனுக்கு அவ்வளவாகத் தெரியாது, ஆனால், அவனது வாட்ச்அப்புக்கு வரும் வீடியோவை அத்தனை நேர்த்தியாகப் பதிவிறக்கம் செய்து, மற்றவர்களுக்குக் காட்டிவிடும் திறமையால், அவன் கதாநாயகனாகியிருந்தான்.

‘‘ நம்ம டீச்சர் பாடம் அனுப்பியிருக்காங்கடோய்…” எனத் தெருவின் மையத்தில் நின்று உரக்கக் குரல் கொடுப்பான். அவ்வூர் பள்ளியில் இருபது பேர் படிக்க இருந்தார்கள். அத்தனை பேரும் அவனை நோக்கி ஓடிவருவதாக இருந்தார்கள். அவன் அழைத்து வராதவர்களை, வாய்ஸ் ரெக்கார்டில் பெயர்களைச் சொல்லி வாட்ச்அப்பில் அனுப்பி வைக்கும் வேலையைச் செய்தான். அவனால் காட்டிக் கொடுக்கப்படுபவர்களிடம் டீச்சர் தனியே பேசவும், கண்டிக்கவும் செய்தார். டீச்சருக்குப் பயப்படுவதைக் காட்டிலும் சுப்ரமணி மீது அவர்களுக்குப் பயம் வந்திருந்தது.

டீச்சர், அனுப்பியிருக்கும் வீடியோவை அவன் சட்டென திறந்துவிட மாட்டான். பாம்பாட்டி வித்தைக்காரனைப்போல, செல்போனை வைத்துக்கொண்டு அப்படி இப்படியென பாசாங்கு காட்டுவான். தெருவைச் சுற்றிவருவான். அப்படி நில், இப்படி நில், தள்ளி நில்லென உத்தரவு பிறப்பிப்பான்.

ஜெர்மன் கதையில், ஒரு மாயவித்தைக்காரனின் மகுடிக்குப் பின்னே ஓடும் எலிகளைப் போல, அவன் பின்னே பிள்ளைகள் ஓடுவதாக இருந்தார்கள். அவன் அங்கே, இங்கேயெனச் சுற்றி கடைசியில் அவனது வீட்டிற்கு அழைத்து வருவான். அவன் இரு கைகளையும் வீசிக்கொண்டு, பாம்பைப் போல வளைந்து, நெளிந்து, குதிக்க, தாவ,..நடக்கையில், அவனைப் போலவே மற்றவர்களும் நடக்க குதிக்க இருப்பதைப் பார்க்கையில், அவனது முகமெல்லாம் பூரிக்கும்.

‘‘ டீச்சர் இன்னைக்கு என்னடா சொல்லிருக்காங்க?”, ‘‘ எலே சுப்பு, என்ன பாடம்டா நடத்தியிருக்காங்க, ‘‘ டீச்சர், என்னை விசாரிச்சாங்களடா?’, ‘‘ சுப்ரமணி, டீச்சர் ஹோம் ஒர்க் எதுவும் கொடுக்கலையே?” இப்படியாக பலரும் முண்டியடித்து கேட்கும் கேள்வி, அவனைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தும். தலையைச் சிலுப்பிக்கொண்டு, முடியை விரல்களால் கோதிவிட்டவனாய், கொடும்புக்குள் சிரிக்கச் செய்வான். கண்களை மெல்ல மூடி, தலையை மேலும் கீழும் அசைப்பான்.

‘‘ இங்கே டவர் கிடைக்குதாடா?’

‘‘ இம் கிடைக்குது’

‘‘ வீடியோவை ஓட விடுடா. டீச்சர் என்ன நடத்துறாங்கனு பார்ப்போம்’

‘‘ யாரும் சத்தம் போடக் கூடாது. அமைதியா இருக்கணும்’

‘‘ இம், இம் இருக்கோம்டா’

சுப்ரமணி சொன்னதைக் கேட்டு அத்தனை பேரும் அமைதிக்கு வந்தார்கள். பள்ளி நாட்களில் லீடராக இருக்கும் குயிலிக்கு, சுப்ரமணிக்குத் திடீரென முளைத்துப்போன இறக்கையை நினைத்து, அவளால் வியக்காமல், சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

சுப்ரமணி வீடியோவை ஓடவிட்டான்.

‘‘ அய் டீச்சர் வந்திட்டாங்க. குட்மானிங் டீச்சர், குட்மானிங் டீச்சர்’

‘‘ ஹாய் குட்டீஸ், எல்லாம் நல்லா இருக்கீங்களா?’

‘‘ நல்லா இருக்கோ…ம் டீச்சர்’

சுப்ரமணி, வீடியோவை நிறுத்தினான். ‘‘ இது வீடியோடா. டீச்சர் பேசுறத மட்டும் கேளுங்க. நாம பேசுறது டீச்சருக்குக் கேட்காது’

‘‘ சரிடா சரிடா. ஓட விடு”

‘‘ எல்லாம் சாப்பிட்டீங்களா?’

‘‘ சாப்பிட்டோ…ம் டீச்சர்’

டீச்சரின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்படியாக எதிர்ப்பாட்டு பாடுபவர்களைப் பார்த்து, சுப்ரமணி முறைக்கச் செய்தான்.

‘‘ நான் வீடியோவில பாடம் நடத்துறத எல்லாரும் கவனமாக் கேட்கச் செய்யணும். கவனிக்காதவர்கள் யார், யாரென சுப்ரமணி என்னிடம் போட்டுக்கொடுத்துவிடுவான்..’

‘‘ கவனமாக் கேட்கிறோ…ம் டீச்சர்”

டீச்சர், சுப்ரமணியின் பெயரைச் சொன்னதும் அத்தனை பேரும் அவனை அதிசயத்தைப் பார்ப்பதைப்போல பார்த்தார்கள். அப்படியாகப் பார்ப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது. சுப்ரமணி தலையை ஒரு தாளத்திற்கு ஆட்டுவதைப்போல ஆட்டிக்கொண்டான். குயிலியை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவன், இனி நான்தான் லீடர் என்பதைப்போல பெருமிதம் பூரித்தான்.

‘‘ என்ன குழந்தைகளா கேட்பீங்கதானே?’

‘‘ கேட்போம் டீச்சர்’

‘‘ குணா இருக்கானா?’

‘‘ அய், டீச்சர் என்னைக் கேட்டுறாங்க. இருக்கேன் டீச்சர் இருக்கேன் டீச்சர்”

‘‘ வினோத், முருகன், கனகா ’

‘‘ வினோத், முருகன் இருக்கான்க டீச்சர். கனகா அம்மாச்சி ஊருக்குப் போயிட்டு இன்னும் வரல டீச்சர்’

‘‘ குயிலி எப்படி இருக்கா?’

குயிலியைக் கேட்டதும் அவளைப் பார்த்தார்கள். ‘‘ ஏய் குயிலி, டீச்சர் உன்னத்தான் கேட்குறாங்க. சொல்லடி, நல்லா இருக்கேனு’

குயிலி, பதிலுக்குப் பேசவில்லை. அவள் திண்ணையின் தூணை இறுகப் பிடித்துக்கொண்டு, செல்போனின் திரையைப் பார்த்தபடி, நின்ற இடத்தில் ஆடாது, அசையாது நின்றுகொண்டிருந்தாள்.

‘‘ குயிலி ஒன்னும் பேச மாட்டேங்கிறாள் டீச்சர்” கண்ணகி சொன்னதும், குயிலிக்குத் துணி கிழிவதைப்போல சிரிப்பு வந்தது. அவள், ஒரு கையை வாய்க்குக் கொடுத்து, உடல் குலுங்கச் சிரித்தாள்.

‘‘ ஏனடி சிரிக்கே?’

‘‘ பின்னே, சிரிக்காம என்ன செய்வாங்களாம். நீ சொல்றது டீச்சருக்குக் கேட்குமாக்கும்?”

‘‘ ஆமாம்ல,..” அவளுடன் சேர்ந்து மற்றவர்கள் சிரித்தார்கள்.

சுப்ரமணி வீடியோவை ஓடவிடவும், நிறுத்தவுமாக இருந்தான். ‘‘ இப்படியெல்லாம் சிரிச்சிங்கேனா நான் வீடியோவை ஓட விடமாட்டேன்…’

‘‘ ஏய் ஏய் ஓட விடுடா. நாங்க இனி சிரிக்கலடா’

அத்தனை பேரும் ஒன்றுபோல சிரிப்பை நிறுத்தி, ஒரு புள்ளி அமைதிக்கு வந்தார்கள். குயிலி மட்டும் தொடர்ந்து சிரித்தவளாக இருந்தாள்.

‘‘ குயிலியைச் சிரிக்க வேண்டானு சொல்லுங்க’

‘‘ ஏய், நிறுத்தடி. டீச்சர் பாடம் நடத்துறாங்கல்ல’

குயிலி வாயிலிருந்து கையை எடுத்து, பார்வையைத் தெரு பக்கமாகத் திருப்பி, சிரிப்பை நிறுத்திக்கொண்டாள்.

‘‘ஆம், அவள் நிறுத்திட்டா. நீ பாடத்த ஓடவிடு ’

‘‘ குட்டீஸ், இன்னைக்கு நான், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய தமிழின் இனிமை பாடலை நடத்தப்போகிறேன்”

‘‘ நடத்துங்க டீச்சர்’

‘‘ அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு நான் ஆடுவேனாம். நீங்க எல்லாரும் என்னோட சேர்ந்து பாடவும் ஆடவும் செய்வீங்களாம்…’

‘‘ அய்,..ஆடுறோம் டீச்சர்’

திண்ணையில், கூடி குழுமி உட்கார்ந்திருந்தவர்கள் துள்ளிக்குதிக்க எழுந்தார்கள். அங்கே, இங்கேயென விரவி ஆடுவதற்குத் தகுந்தாற்போல நின்றார்கள்.

குயிலி, தூணைப் பிடித்திருந்த பிடியிலிருந்து சற்றும் அசையவில்லை. பின்னிக்கிடந்த அவளது இரட்டைச்சடைகள் கூட ஆடாது, அசையாது இருந்தன.

‘‘ குயிலி, நீயும் வாயேன்டி’

அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. வீடியோ மீது வைத்திருந்த கண்ணை வேறு பக்கமாகத் திருப்பாமல் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல அப்படியே நின்றாள்.

‘‘ கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்’‘

கீதா டீச்சர் ராகமாகப் பாடவும், அழகாகக் கைகளை அசைத்து, ஆடவும் செய்தார். அவரைப் போல ஒன்றிரண்டு குழந்தைகள் ஆட, அவர்களைப் பார்த்து மற்றக் குழந்தைகள் சிரிக்கச் செய்தார்கள். அவர்கள் சிரித்தச் சிரிப்பில், அந்த இடம் வண்டுகளின் ரீங்காரமாக இருந்தது.

‘‘ ஏன் இப்படி சிரிக்கிறீங்க. இப்படியெல்லாம் சிரிச்சா, நான் ஓட விடமாட்டேன் ” என்றவன் வீடியோவை நிறுத்தினான்.

‘‘ டேய், டேய் ப்ளீஸ்டா. ஓட விடுடா…’

‘‘ உங்களுக்குத்தான் அமைதியா கேட்கத் தெரியலையே…” என்றவன், செல்போனை எடுத்து சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டு திண்ணையிலிருந்து நடையைக் கட்டினான். அவனைக் கெஞ்சியபடி, அவன் பின்னே பிள்ளைகள் ஓடுவதாக இருந்தார்கள். அப்படியான கெஞ்சலைக் கேட்கையில், அவனுக்குள் கொம்பு முளைத்து, சிரிப்பு பூவாக சொரிந்தன. அவன் ஓரிடத்தில் நிற்பதாக இல்லை. ஒவ்வொரு வீடாக, மரங்களாக, சுற்றி வரச் செய்தான்.

குயிலி, அவன் பின்னே ஓடவில்லை. அவளது வீட்டில் நின்றபடி, சுப்ரமணியை வெறிக்கப் பார்த்தாள். இத்தனை நாட்கள், தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தவர்கள், சுப்ரமணியின் பின்னே ஓடுவதையும், அவனையே சுற்றுவதையும் பார்க்க, அவளுக்கு ஏமாற்றக் கிரக்கமாக இருந்தது.

அத்தனை பேரையும் தனக்குப் பின்னால் கொண்டுவர நினைத்தாள் குயிலி. என்ன செய்யலாமென தலையைக் குலுக்கி, யோசித்தாள். ‘‘ டீச்சர் விளையாட்டு விளையாடப் போறேன். வாரவங்க வரலாம்…” உரக்கக் கத்தினாள். சுப்ரமணிக்கும் பின்னே ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் அவளை நோக்கித் திரும்பியிருந்தார்கள்.

‘‘ நான் வாரேன்’‘, ‘‘ நானும் வாரேன்’, ‘‘ என்னையும் சேர்த்துக்கோடி’

‘‘ யாராம் டீச்சர்?’

‘‘ சாட், பூட், திரிஸ் போடுவோம். யாரு ஜெயிக்கிறாங்களோ, அவங்கதான் டீச்சர் ”

‘‘ அய்,.. விளையாடலாமே”

‘‘ நாங்க டீச்சர் விளையாட்டு விளையாடப் போறோமே. எங்கக் கூட விளையாட வாரவங்க வரலாம்…” கவிதா தன் பங்குக்குக் குரல் கொடுத்தாள். அக்குரலைக் கேட்டதும், சுப்ரமணியின் பின்னே ஓடிக்கொண்டிருந்த இன்னும் கொஞ்சப் பேர் நிற்கவும், திரும்பிப் பார்க்கவும், அவனிடமிருந்து விலகி, குயிலியை நோக்கி ஓடி வருவதுமாக இருந்தார்கள்.

நான்கைந்து பேர், என்றளவில் இருந்து வட்டம் இருபது பேராக விரிந்தது.

‘‘ சாட், பூட், திரிஸ்…”

‘‘ போடு சாட், பூட், திரிஸ்..”

அந்த இடத்தில் ஒரே குதூகுலச் சத்தம். யார் டீச்சர், என்பதைக் காணப் போகிற உற்சாக உற்சவம். ஒவ்வொரு ஆளாக விலக, கடைசியில் பூமாதேவியும் குயிலியும் எஞ்சி நின்றார்கள். இவர்களில் யார் டீச்சர்..? முதலில் அவுட்டான சித்ராவைச் சேர்த்துக்கொண்டு சாட், பூட், திரிஸ் போட்டார்கள். குயிலி டீச்சருக்குத் தேர்வாகியிருந்தாள்.

‘‘ அய், குயிலி டீச்சர்…” அத்தனை பேரும் குதியாட்டம் போட்டார்கள். அவரவர் வீட்டுக்கு ஓடி, புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். டீச்சர் விளையாட்டு, பள்ளி மைதான வேப்பமரத்தடியில் தொடங்கியது.

பள்ளிக்கூடத்து மைதானம் மூன்று மாத குப்பை, சருகுகளாக இருந்தது. அருகிலிருந்த குருவிப்பழ செடியின் குச்சிகளை ஒடித்து, தூர்வையாக்கி, மைதானத்தைக் கூட்டிப் பெருக்கினார்கள். விளையாட்டு, வழிப்பாட்டுக்கூடலுடன் தொடங்கியது. ‘‘ ஸ்கூல் அட்டேன்சன்,ஸ்டான் அட் ஈசி…”

‘‘ குட்மானிங்க் டீச்சர் ”

‘‘ குட்மானிங்க் குட்மானிங்க் ” என்றாள் குயிலி, கீதா டீச்சரைப் போலவே.

குயிலி கையில் ஸகேல் இருந்தது. பிள்ளைகளின் தலையில் மெல்லத் தட்டியபடி, எண்ணினாள். ‘‘ இன்னைக்கு யாரெல்லாம் ஸ்கூலுக்கு வரலை?”

‘‘ சுப்ரமணி வரலை டீச்சர் ”

‘‘ அவன் ஏன் வரலை? ”

‘‘ அவன் செல்போனை வச்சிக்கிட்டு ரொம்ப சீன் காட்டுறான் டீச்சர் ”

பூமாதேவி அப்படியாகச் சொன்னதும் அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்தது. குயிலியும் கூட, தான் டீச்சர் என்பதை மறந்து சிரிக்கச் செய்தாள்.

‘‘ சரி, சரி சிரிப்பை நிறுத்துங்க…” என்றதும் அத்தனை பேரும் வாய்க்கு விரலைக் கொடுத்து சிரிப்பைக் கொடும்புக்குள் அதக்கினார்கள்.

‘‘ இன்றைக்கு நான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய தமிழின் இனிமை பாடல் நடத்தப் போகிறேன் ”

‘‘ நடத்துங்க டீச்சர் ”

‘‘ நான் பாடிக்கொண்டே ஆடுவேனாம். நீங்க என்னைப்போலவே பாடவும் ஆடவும் செய்வீங்களாம்”

‘‘ செய்றோம் டீச்சர் ”

‘‘ கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும் ”

‘‘ இம், இம்..அப்படித்தான்… இன்னும் சத்தமாப் பாடுங்க.

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சும்

பாகிடை ஏறிய சுளையும்’

‘‘………..’

குழந்தைகள் பாடுவதை நிறுத்தி, தெருவை வேடிக்கைப் பார்ப்பதாக இருந்தார்கள். ‘‘அங்கே என்ன வேடிக்கப் பார்க்குறீங்க?” குயிலி கேட்டாள்.

‘‘ டீச்சர், சுப்ரமணி வர்றான் டீச்சர் ”

குயிலி, கையில் வைத்திருந்த ஸ்கேலை உள்ளங்கையில் தட்டியவளாக எட்டிப்பார்த்தாள். தூரத்தில், சுப்ரமணி புத்தகப் பையுடன் வந்துகொண்டிருந்தான்.

 

– அண்டனூர் சுரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *