கட்டுரைகள்

கரையில்மோதும் நினைவலைகள்!…. தொடர் 6 …. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதி…. நடேசன்.

                                                                                                                                                                                                                                                                                                                                                               கரையில்மோதும் நினைவலைகள்!…. தொடர் 6 ….    நடேசன்.                                                                     

“எடேய், இதெல்லாம் சினிமா நடிகைகள். சரஸ்வதி சபதத்தில் நடித்தவர்கள். இவர்களைக் கும்பிட்டால் எப்படி படிப்பு வரும்?“

என் நண்பன் தூசண வார்த்தைகளைப் பேசி அடிக்க வந்தான் . நான் சிரித்தபடி மேல்மாடி விடுதியில் இருந்து கீழே ஓடி ஒளித்தேன். கிட்டத்தட்ட ஒரு கிழமை என்னுடன் அவன் முகம் கொடுத்துப் பேசவில்லை .

யாழ்ப்பாணம் இந்து கல்லுரியின் விடுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு கட்டிலும் ஒரு கபேட் எனப்படும் சிறிய அலுமாரியும் தருவார்கள். அந்த அலுமாரி, புத்தகங்கள் வைத்து எடுப்பதற்கானது. இவையே எமது சொத்துகள்.

அது விஜயதசமி வரும் ஓக்டோபர் மாசம். எனது பக்கத்துக் கட்டிலில் மாணவன் என்னைப்போல் தீவுப்பகுதியான புளியங்கூடலைச் சேர்ந்தவன். பக்கத்து கட்டிலான படியால் அவன் நட்பு அவசியம்.

பக்திப்பரவசமான சைவப்பழம் . ஒவ்வொரு நாளும் ஒழுங்காக அவன் நெத்தியில் வீபூதி இருக்கும்.

ஒரு நாள் ஒரு நாள் காலையில் கபேட்டைப் திறந்து வைத்து அதன் எதிரே பார்த்து கிட்டத்தட்ட அரை மணிநேரமாக பக்திப்பழமாக வணங்கிபடி யிருந்தான். அது சரஸ்வதி பூசைக்காலம் . பாடசாலைப் பரிட்சைகள் வருகிறது என்பதால் அவனது பக்தி கூடியுள்ளது என நினைத்தேன். நின்றபடி வணங்கும் அவனது பின்பகுதி மட்டும் எனக்குத் தெரிந்ததால் தோளில் திருநீறு பூசப்பட்டிருந்தது பார்க்க முடிந்தது.

இவ்வளவு பக்தி அதிகம் ! அதுவும் எட்டாம் தரத்தில் படிக்கும்போதே இவன் வளர்ந்து சாமியாராகி விடுவானோ?

இருவரும் கீழே காலையாகாரத்துக்கு ஒன்றாக செல்வோம் எனக் காத்திருந்தேன். அதிக நேரமானதால் மெதுவாக எழுந்து அவனுக்கு பின்னால் சென்று அவனது அலுமாரியுள் பார்த்தேன். கண்ணாடியில் பிரேம் பண்ணிய மூன்று அழகிய பெண்களது படங்கள் இருந்தது. அதன் முன்பு வீபூதி ,கும்குமம்,மற்றும் சந்தனம் மூன்று சிறிய தட்டுகளில் குவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படங்களில் முறையே சாவித்திரி, தேவிகா, பத்மினி என்ற A P நாகராஜனின்

சரஸ்வதி சபதத்தில் நடித்த நடிகைகள் இருந்தார்கள் .

“என்னடா இவ்வளவு நேரமாக கும்பிடுகிறாய் ? என்றேன்.

என்னை எதிபார்க்காததால் திடுக்கிட்டு திரும்பியவனது நெற்றி கழுத்தில் திருநீறு சந்தனம் வைத்து, சைவப் பழமாக இருந்தான் .

“நீ படிக்கிற பிள்ளை .சரஸ்வதி பூஜை என்பதால் அம்மா இந்த படத்தைத் தந்து பத்து நாளும் கும்பிடச் சொன்னார் “ என்றான் அப்பாவியாக .

சினிமா அறியாமை எல்லாம் கலந்து எம்மை ஆக்கிரமித்திருந்தகாலமது. இந்துக்கல்லுரியில் படித்த காலத்தில் என்னையறியாமல் என்னுடன் திராவிட கொள்கைகள் கலந்தது . அக்காலத்தில் அண்ணாத்துரையின் கம்பரசம் எனது வேதமாக, நாத்தீகத்தை வலுப்பமடுத்தும் ஆயுதமாக இருந்தது . யாழ்பாணத்தில் ஒலிபெருக்கிகளின் மூலம் அண்ணாத்துரையின் பேச்சுக்கள் அடுக்கு மொழிகள் எம்மைக் அவை எம்மைத் தேடி வந்தன. அதேபோல் தமிழ்ச் சினிமா எமது மாணவ வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்தது .

எம்ஜியார் அணி சிவாஜி அணியெனப் பிரிந்து அவர்களது நடையுடைகளை பின்பற்றினோம் . படங்களை அலசி ஆராய்ந்து மணிக்கணக்கில் விரயமாக்கினோம். முதல் நாள் படம் பார்பது முக்கிய இலட்சியமாக இருந்தது .

எமது விடுதியில் 20 மணவர்கள் ஒரே இடத்தில் வரும் ஐந்து நிமிடம் தண்ணியில் குளிப்பதும் அவர்கள் சவரக்காரம்போட அதன்பின் மற்ற 20 பேர் குளிப்பதற்கு மாறுவாரகள் . இப்படியான ஒரு நேரத்தில் எம்ஜியாரா , சிவாஜியா சண்டைவந்து நிலத்தில் புரண்டு சண்டை பிடித்து குளிக்கச் சென்றவர்கள் சேறாகியதைப் பார்த்தேன்.

அக்காலத்தில் படப்பெட்டிகள் நல்லூர் கோவிலுக்கு எடுத்துச் சென்று பின் ஊர்வலமாக தியேட்ருக்கு கொண்டு வருவார்கள். பெரிய கட்டவுட்டுகள், பானர்கள் வைப்பார்கள்.நகரெங்கும் திரைப்பட சுவரொட்டிகள் ஒட்டப்படும். வரிவையில் நின்று நசுங்கி இடிபட்டு படம் பார்த்து முடிந்த பின்பு அந்தப்படத்தின் பாடல்கள் கொண்ட ஒரு புத்தகம் எதிர்கடைகளில் விற்கப்படும். அவற்றோடு சேர்ந்து சரோஜாதேவி எழுதிய ஆபாச எழுத்துகள் கொண்ட புத்கங்கள் வாங்குவோம்.ஒன்றை சட்டையின் உள்ளேயும் மற்றதை வெளியிலும் வைத்துக்கொள்வோம்

தமிழகத்தில் இருந்து வந்த சினிமா ,அரசியல் சிறுவர்களாகிய எங்களை மட்டுமல்ல , பெரியவர்கள் மூளைகளையும் கறையானக அரித்தது. தமிழகத்தில் எழுந்த இந்தி எதிர்ப்பின் நிழலாக இங்கு சிங்கள எதிர்ப்பு நிஜமாகியது. அரசியல்வாதிகளில் தமிழ் நாட்டைப்போல் அடுக்கு வசனத்தில் பேசும் இராஜதுரை போன்றவர்கள் புகழ் பெற்றார்கள் .அந்தனிசில் ,காசியானந்தன் போன்றவர்கள் ஆதர்ச எழுத்தாளராகினார்கள் . யானைகள் விழுங்கி வெளிவந்த விளாங்கனிகளை பூசைக்குரிய பழமாகப் பார்த்தோம்.

தமிழ்நாடு போன்ற தொன்மையான பிரதேசம் எமக்குப் பக்கத்தில் இருந்தது. அதனது ஆதிக்கத்தில் இருந்த தப்ப முடியாது என்பதும் உண்மை. ஆனால் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து நடனம் , சிற்பம் , சித்திரம் , கிராமியக் கலைகளை பெற்றுக் கொள்ளவில்லை.

மாளிகை வீட்டின் அருகாமையில் இருந்து அதன் அசுத்தங்களை நுகரும் ஒரு சேரி வாழ்கையை நாம் வாழ்ந்ததை பிற்காலத்தில் தென்னிலங்கை போனபோதே உணர்ந்தேன். சிங்கள மக்கள் தங்களுக்கு தேவையான தொன்மமான திராவிடக் கலாச்சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு

தனியான வழியில் சென்று விட்டார்கள் என்பதை பேராதனையில் சிங்கள நாடகங்கள் ,சினிமாக்களைப் பார்த்தபோது என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது .

இந்தியா

இராமேஸ்வரத்தில் தொடங்கிய எனது இரயில் வண்டிப் பயணம் எக்மோர் இரயில் நிலையத்தில் முடிந்தது. எனக்குத் தெரிந்த கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் பத்து மடங்கு இருக்கும். எங்கும் வாரி இறைத்த மணல்போல் மக்கள் கூட்டம். சிறியநாடான இலங்கையில் இருந்து வந்த எனக்கு, இவ்வளவு கூட்டம் என்பது மிகவும் பிரமிப்பைக் கொடுத்தது. இந்தக் கூட்டத்தில் தனிமனிதன் வாழ்வதற்கு எவ்வளவு பாடுபடவேண்டும்? இயற்கை மற்றும் உற்பத்தி வளங்களை எவ்வாறு ஒவ்வொருவரும் பிரிப்பது?

அபரிமிதமான இயற்கை வளங்கள் கொண்ட இலங்கை நாட்டில் இருந்து போர் காரணமாக இந்தியா வந்திருக்கும் எனக்கு, இந்தியக் கரையில் இறங்கியதில் இருந்து இலங்கையில்

தோன்றியிருக்கும் இனப்பிரச்சினையானது, தாயின் அரவணைப்பிற்காக முரண்டு பிடிக்கும் இரண்டு குழந்தைகளின் செயலோ என்ற சிந்தனையும் மனதில் தோன்றியது.

பத்து வருடங்களுக்கு முன்புவரையும் தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ தமிழர்கள் படகுகளில் (கள்ளத்தோணி) பிழைப்பதற்கு இலங்கை வந்தார்கள். அவர்களில் பலர் எனது எழுவைதீவின் ஊடாக வந்திருக்கிறார்கள். அங்கு நான் பிறப்பதற்கு முன்பே சிறுபையனாக இராமனாதபுரத்தில் இருந்து எங்கள் ஊருக்கு வந்து, வளர்ந்து இளைஞனாக கள்ளிறக்கும் தொழில் செய்ததுடன், என்னைத் தூக்கி வளர்த்த இராமலிங்கண்ணையின் வேர்வை மணம் இன்னமும் நினைவில் இருக்கிறது.

வாட்டசாட்டமான விரிந்த தோள்கள் கொண்ட தேகம். சுருட்டைத்தலை. இருளுடன் போட்டி போடும் தோல் நிறம். ஆனால், அதில் எப்பொழுதும் மினுக்கம் இருந்தது. தோலின் வேர்வைத் துவாரங்களில் இருந்துவரும் வேர்வை கள்ளுமணத்துடன் கலந்திருக்கும். தேகத்தில் மழைக்கால ஆறாக உடலெங்கும்பெருக்கெடுத்தோடும் வேர்வையுடன் அவர் என்னை தூக்கித் தோளில் போடுவது அவரது வழக்கம்.

பலமுறை அம்மா ‘குளித்துப்போட்டு அவனைத் தூக்கடா’ எனக் கத்துவதும் அதற்கு இராமலிங்கண்ணை ‘நீ போ உன் வேலையை பார் சின்னம்மா’ எனக் கூறுவதும் எனது இளமைக்கால ஞாபகம். கள்ளத்தோணியாக பலர் வந்து தங்கி எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு தப்பிச்சென்றுவிடுவர். சிலர் பொலிசாரிடம் பிடிபடுவர். இக்காட்சிகள் சிறுவயதில் நான் பார்த்த சம்பவங்கள். இராமலிங்கம் மட்டும் பாதுகாப்பாக எங்கள் வீட்டில் பல வருடம் இருந்துவிட்டு மீண்டும் இராமநாதபுரம் சென்று தனது நாடார் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ததாக பிற்காலத்தில் அறிந்தேன்.

84ஆ ம் வருட காலத்தில் இலங்கையில் ஓட்டோ ரிக்க்ஷா இருக்கவில்லை சாணிவண்டுகளின் தோற்றத்தில் வரிசையாக எக்மோரில் அவற்றைப் பார்த்தது புதுமையாக இருந்தது. அக்கால சினிமா படங்களிலும் ஓட்டோவைப் பார்த்த ஞாபகம் இல்லை. அந்த இடத்தைவிட்டு விலகவேண்டும் என்பது குறிக்கோளாக இருந்ததால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஓட்டோ வாகனத்தில ஏறி அமர்ந்தேன்;

ஐந்தரை அடி உயரத்தில் ஒரு மெல்லிய இளைஞன் என்னை நோக்கி வந்தான். சுமார் இருபத்தைந்து வயது இருக்கும். சிறிது வாக்குக் கண் தோற்றமுள்ளவன்.

‘எங்கே போகணும் சார் ? என்றபடி சிரித்தபோது அவனது கண்கள் எனக்குப் பின்னால் நின்றவரைப் பார்ப்பது போல் இருந்தது.

என்னைக் கேட்கவில்லை என்ற எண்ணத்தில் மவுனமாக இருந்தேன்

‘உன்னைத்தான் சார் . எங்கே போகவேண்டும்?’;

படிப்பித்த ஆசிரியர்களையும் பிற்காலத்தில் பல்கலைக்கழகத்தில் கற்பித்த பேராசிரியர்களையும் தவிர்ந்த எவரையும் சேர் என சொல்லி பழக்கமில்லாத எனக்கு முன்பின் தெரியாத ஒரு இளைஞன் என்னை சேர் என்பதும் மெதுவான அதிர்ச்சியை கொடுத்தது.

‘மாம்பலம் பக்கம்’ ;

‘சிலோனா இல்லை மலையாளியா சார்”

‘சிலோன்’

‘குந்து சார். ஆமா எப்பிடி அங்க தமிழங்களை கொல்லுறாங்களாம் பேமானிங்க’

நான் அவனுடன் அரசியல் பேசத்தயாராக இருக்கவில்லை. மேலும் பயணக்களைப்பு வாயைக் கட்டிப்போட்டது.

‘எவ்வளவு காசு ?’

‘என்ன காசு? நீ நம்மாளாய் இருக்கிறாய். சரி முடிஞ்ஞா துட்டைத்தா’

‘இல்லை இன்றைக்குத்தான் இந்த நாட்டுக்கு வாறன் எவ்வளவு என்று சொன்னால் நல்லதுதானே’

‘இன்னா சார் நமக்குள்ளே’

‘இல்லை. எவ்வளவு சொல்லப்பா’

‘சரி ஐந்து ருபாய்’

‘எனக்கு அந்தக்கூலி சரியான கட்டணமா? அல்லது கூட்டித்தான் கேட்கிறானோ என்பது தெரியாது விட்டாலும் அவனது வெளிப்படையான பேச்சில் உண்மையான தன்மை தெரிந்தது.

‘எங்கே தங்கப் போற?”

‘அதுதான் மாப்பலம் போகிறேன்’

‘படிச்சது போல இருக்கிறாய். நல்ல ஹோட்டலுக்கு கூட்டிப் போகட்டுமா?”

‘அதிகம் பணமில்லை ஆனாலும் சுத்தமாக இருந்தால் சரி’

‘நாற்பது ரூபாயில் எல்லாம் இருக்கு. நல்ல வசதி.’

உண்மையில் அவன் காண்பித்த அந்த ஹோட்டலில் அடிப்படைவசதிகள் இருந்தன.

உடல் அலுப்புத்தீர குளித்துவிட்டு கீழே இருந்த சாப்பாட்டு கடைகளை தேடினேன். பெரும்பாலானவை சைவ உணவகங்களாக இருந்தன.

எழுவைதீவில் பிறந்து வளர்ந்தபோது மீன் குழம்பு, மீன்சொதி, மீன் பொரியல் , கத்தரிக்காய் பால்கறி அல்லது முருங்கைக்காய் மட்டும் உண்டு வளர்ந்ததால் எங்கு சென்றாலும் அசைவ உணவைத் தேடுவது எனது பழக்கமாகிவிட்டது. வெள்ளிக்கிழமை மச்சம் மாமிசம் சமைக்காத நாட்களில் குறைந்த பட்சம் பரணில் இருந்த கருவாட்டை நெருப்பில் சுட்டோ அல்லது முட்டையை பனை ஓலையில் வைத்து எரித்த பின்பு சாப்பிடுவது வழக்கம். ஆடி அமாவாசை போன்ற நாட்களில் மரக்கறி உணவும் வெந்தயக்குழம்பும் தொண்டைக்குள் கசாயம்போல் இறங்கும்

கப்பல் ஏறுவதற்கு முன்பு கடைசியாக மன்னாரில் மாமி கயல் மீனின் பொக்கணங்களை தனியே எடுத்து குழம்பு வைத்து எனக்கு விருந்து வைத்திருந்தார். இராமேஸ்வரத்தில் இறங்கிய நாளில் இருந்து கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு மணிநேரமாக மச்சம், மாமிசம் கண்ணில் கூட படவில்லை. இரயிலில் குறைந்த பட்சம் மாமிச மணமாவது மூக்கையடையாதா என்று நினைத்தேன். தயிரும் சாம்பாரும்

புளியோதரையுமாக நான் பயணித்த ரயில் மணம் பரப்பியது.

மச்சம் மாமிசத்திற்காக வேறு வழியில்லாமல் அரை மணித்தியாலம் நடந்து ஒரு மதுரா முனியாண்டி விலாஸை கண்டுபிடித்தேன். சென்னையில் அக்காலத்தில் மதுரை முனியாண்டி அல்லது கேரளத்து முஸ்லிம்களது கடைகள்தான் என் உயிருடன் உடலை ஒட்டவைத்தன.

மத்தியானம் படுத்துவிட்டு, படம் பார்க்க வேண்டும் என நினைத்தவாறு

ஹோட்டல் யன்னலால் வெளியே பார்த்த போது இலங்கை எதிர்கட்சித்தலைவர் என்ற எழுத்துக்கள் தூரத்தே தெரிந்த போஸ்டரில் தென்பட்டது. அமிர்தலிங்கம் அவர்களைக் குறிப்பதாக இருந்தாலும் எனக்கு அப்பொழுது செல்வநாயகம்தான் நினைவுக்கு வந்தார்.

ஏழு அல்லது எட்டு வயது எனக்கு இருக்கும் காலத்தில் ஒரு தேர்தல் நடந்தது. அப்பொழுது தமிழரசுக்கட்சித் தலைவர் செல்வநாயகம் அக்கால தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் வீ ஏ கந்தையாவுடன் எழுவைதீவுக்கு வந்தபோது எங்கள் வீட்டிற்கும் வந்தார். எனது தாய்வழிப் பேரனார்

நமசிவாயம் ஓய்வு பெற்ற வாத்தியார். அத்துடன் தபாலதிபராகவும் இருந்தவர். தீவுப்பகுதியில் மோட்டார் வள்ளங்களை ஓட்டியவர்கள் சங்கத்தில் முக்கியமானவர். இதனால் எங்கள் வீட்டுக்கு செல்வநாயகம் வந்தபோது தனது சாய்மனை கதிரையில் அவரை அமரச் சொல்லிவிட்டு எதிரில் இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அவருக்குப் பக்கத்தில் வீ ஏ கந்தையா அமர்ந்தார்.

செல்வநாயம் மிகவும் மெதுவான குரலில் ‘வாத்தியார் இந்த முறையும் தமிழரசுக்கட்சிக்குத்தான் நீங்கள் போடவேண்டும். உங்கள் உதவிவேண்டும்” என்றார்.

‘ஐயா இதற்காக ஏன் நீங்கள் போட் ஏறிவந்தீர்கள் . ஒரு கங்கு மட்டையை தமிழரசுக்கட்சியென்று நிறுத்துகள். உங்களுக்கு ஊர்சனம் போடும்.”

‘அது எனக்குத் தெரியும். உங்களையும் பார்க்க வந்தேன். மேலும் சிலர் மற்றவர்களுக்கு வேலை செய்வதாக கேள்விப்பட்டேன்’

‘சில நாய்கள் சாராயத்தை நக்குவதற்காக காசை வேண்டியிருக்கும். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்’.

இந்த சம்பாசணையை என்னோடு எங்களது ஊரில் பலர் எங்களது வீட்டு கொட்டகையில் நின்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

தமிழரசுக் கட்சித்தலைவர் செல்வநாயகமும் வீ ஏ கந்தையாவும்; எங்கள் வீட்டில் மதிய உணவு அருந்திவிட்டு மாலை நேரத்து மோட்டார் போட்டில் போய்விட்டார்கள்.

இதன்பிறகு அடுத்த கிழமை தமிழ்க் காங்கிரஸ்காரர்கள் ஊரில் உள்ள சிலரைப் பிடித்து ஒரு கூட்டத்திற்கு ஒழுங்கு பண்ணியிருந்தார்கள். எங்கள் ஊரில் அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாதபடியால் பெட்ரோல் மாக்ஸின் ஒளியில்தான் இரவில் கூட்டம் நடத்தவேண்டும்.

அந்தக்கூட்டத்திற்கு பத்துக்கும் குறைவானவர்கள்தான் போயிருப்பார்கள். ஆனால் கூட்டத்திற்கு ஒளி கொடுத்த பெட்ரோல்மக்ஸ் மீது சரியாக குறி பார்த்து கல்லெறிந்தபடியால் அந்தக் கூட்டம் கலைந்தது.

அந்தக்கூட்டத்தைக் கலைத்தவர்கள் எங்களது உறவினர்கள். மேலும் அவர்கள் நமசிவாயம் வாத்தியாரால் கண்டு பிடிக்கப்பட்டு திட்டப்பட்டார்கள்.

இதைவிட முக்கியமான விடயம் முழு எழுவைதீவிலும் தமிழரசுக்கட்சிக்குதான் ஆதரவு. ஆனால் எப்படி சிலபேர் மட்டும் தமிழ்காங்கிரஸ் பக்கம் சாய்ந்தார்கள்?

அதற்குக் காரணம் இருந்தது. சிலருக்கு நமசிவாயம் வாத்தியாரை பிடிக்காது அதனால் அவர்கள் எதிர்கட்சியின் பக்கம் நின்றார்கள்.

இந்தச் சிறு சம்பவம் பல விடயங்களை பிற்காலத்தில் எனக்குப் புரியவைத்தது

ஒரு பிரபலமான கட்சியை அரவணைத்துப் பிடித்தால் அதன் சார்பாக வாக்குக் கேட்பவர்களுக்கு எந்தவிதமான அறிவோ, திறமையே, ஏன் ஒழுக்கமோ கூடத்தேவையில்லை. எனது பாட்டனார் நாற்பது வருடகாலமாக ஆசிரியராகவும் தலைமையாசிரியராகவும் இருந்தவர் அத்துடன் பெரிய மனிதராக அக்காலத்தில் தீவுப்பகுதியெங்கும் அறியப்பட்டவர். அவரே

தமிழரசுக்கட்சி சார்பாக கங்கு மட்டைக்கும் போடுவோம் என்கிறார்.

பெட்ரோல்மாக்ஸ் மீது கல்லெறிந்த வன்முறை அக்காலத்தில் அற்பமாக இருந்தாலும் பிற்காலத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு ஒப்பானதுதான்.

என்ன…? . புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது அவ்வளவுதான்.

நமசிவாயம் வாத்தியார் சொல்லாமலே வன்முறை நடந்தது இதை நமசிவாய வாத்தியாரும் வரவேற்பார் உத்வேக உணர்வில் கல்லெறி நடந்தது.

இவை எல்லாவற்றிலும் முக்கியமானது – அக்காலத்தில் தமிழரசுக்கட்சியினருக்கு எதிர்கட்சியாக வேறு எந்தவொரு சிங்களக் கட்சியும் அங்கே இருக்கவில்லை. தமிழ் காங்கிரஸ் சார்பாக ஒரு சிலர் அங்கு வேலை செய்தது தமிழரசுக் கட்சியினருக்கு பொறுக்க முடியாததாக இருந்தது.

நமது ஊர் அரசியலை மூட்டை கட்டிவிட்டு அருகில் உள்ள தியேட்டரில் படம் பார்போம் என

பாண்டிபசாரை நோக்கி நடந்தேன். சிறிது தூரம் கூடச் செல்லவில்லை. எதிர்பார்க்காத காட்சியொன்று எனக்காக காத்திருந்தது. மக்கள் வட்டவடிவமாக தெருவை வளைத்து கூட்டமாக நின்றார்கள். நானும் உட்புகுந்து பார்த்தபோது திரைப்பட சூட்டிங் நடப்பது தெரிந்தது

படம் பார்க்க தியேட்டர் போக நினைத்த எனக்கு வழியில் படம் எடுப்பதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. வாழ்க்கையில் முதன் முறையாக திரைப்படம் எடுப்பதை பார்க்கும் வாய்ப்பு சென்னைக்கு வந்த முதல்நாளே கிடைத்திருக்கிறது. நான் எந்தப் படத்திலும் பார்க்காத நடிகர் ஒருவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உடையில் பாய்ந்து ஒருவரை பல முறை வித்தியாசமான கோணத்தில் காலால் உதைத்து அடித்துக்கொண்டிருந்தார். நல்ல கறுப்பு நிறம் கட்டுமஸ்தான தேகம். கண்கள் மட்டும் சிவப்பாக இருந்தது. கண்விழிகளில் சிறு இரத்த நாளங்கள் தெரிந்தன. இவ்வளவு காலமும் திரையில் பார்த்த கதாநாயகர்களின் தோற்றத்திற்கு நேர் எதிராக அவரது தோற்றம் இருந்தது எனக்கு வியப்பைத்தந்தது.

பக்கத்தில் நிற்பவரிடம் ‘யார் இவர்?’ எனக்கேட்டேன்.

அந்த மனிதர் என்னை வேற்றுலகவாசியாக விசித்திரமாக பார்த்து விட்டு ‘விஜயகாந்து சார்’ என்றார்.

‘புது நடிகரா?’

‘இரண்டாவது படம். ஆமா சார் நீ எங்கே இருந்து?’

‘சிலோன்காரன்’;

‘அப்படியா சார் அதான் தமில் டிபரண்டாக இருக்கு. நான் மதுரை பக்கமோ என நினைத்தேன். நம்ம விஜயகாந்த் இங்கு பக்கத்திலதான் இருக்கிறார் அவருக்கு இலங்கையர்மேல் மிகுந்த அன்பு ’ என தொடர்ந்து பேசினார்

விஜயகாந்த் பலதரம் பாய்ந்து பாய்ந்து அடித்தார். இடையில் கட் கட் சொன்னார்கள்.

ஓவ்வொரு அடிக்கும் விஜயகாந்தை குறைந்தது ஐந்து முறை பாய்ந்து அடிக்க வைத்தார்கள்.

சினிமா எடுப்பதைப் போன்ற போர் அடிக்கும் விடயம் வேறு எதுவும் இருக்குமா என நினைத்தேன். ஒவ்வொரு விடயத்தையும் பல முறை ஒருவர் செய்யவேண்டி இருந்தது. சடலத்தைக்கூட பல தடவை சூட்டிங் எடுக்க வேண்டி வரும் என நினைத்தேன்.அன்றே சினிமா பட சூட்டிங் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதை விட்டு அகன்றது..விரைவாக அந்த இடத்தை விட்டு விலகி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

எதுவும் பிரயோசனமாக செய்வதற்கு இல்லை என நினைத்தால் – வெய்யில் மழை மற்றும் வெக்கை என்பனவற்றில் இருந்து ஒதுங்குவதற்கு சினிமா தியேட்டர் எனக்கு புகலிடமாகியது. பிற்காலத்தில் பலதடவை நேரம் போக்குவதற்காக மட்டுமே தமிழ் சினிமாவை பயன் படுத்தினேன். நான் நினைக்கிறேன் தமிழ் சினிமாவின் முதலாவது நோக்கமும் அதுவாகத்தான் இன்னமும் இருக்கிறது. சில வேளையில் அதுவே இறுதி நோக்கமாகவும் உள்ளது.

இலங்கைத் தமிழரை இந்தியத் தமிழரோடு இணைப்பது பாக்கு நீரிணைக்கு அடுத்ததாக இந்த தமிழ்சினிமாவே சங்கிலியாக தொடர்ந்து வருகிறது. அரசியல் மொழி மற்றும் சங்கீதம் மற்றும் மதம் என்பனவெல்லாம் இரண்டாம் பட்சமானவை.

சிட்னியின் மேற்குப் பல்கலைக்கழகம்

தொழிலாளர் நிலையில் இருந்து விஞ்ஞான ஆய்வாளன் என தொழில் கிடைத்தபோது ஆரம்பத்தில் ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற நிலை ஏற்பட்டது . எந்த ஒரு வழிமுறையும் இல்லாது, என்னிடம் பொதுமக்கள் நலம் சம்பந்தமான ஒரு புறொயெக்ட் தரப்பட்டது .

சிட்னிக்கு வடக்கே சில நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள உல்லாச பிரயாணிகள் செல்லும் நகரம் கொஸ்காபர். இந்த நகரத்தில் வெளியேறும் மனித கழிவுகளின் திண்ணப்பகுதி வடிகட்டப்பட்டாலும் திரவப்பகுதி போசாக்குள்ளது. இந்த திரவக் கழிவு நீர் கடலில் கலக்கும் இடத்தில் கடல்பாசிகள் பெருகிவிடும். இந்தபாசிகளால், கடற்கரைக்கு நீந்திக் குளிக்கவரும் உல்லாச பிரயாணிகளுக்கு இடைஞ்சலாகிறது. இந்தக்கழிவு நீரை கடலில் விடாது மீண்டும் வாழைத் தோட்டங்களுக்கு பீச்சி அடித்து பசளையாக்குவது விவசாயத்துக்குப் பயனுள்ளது.. இந்தக்கழிவு நீரினால் ஏற்படும் மொத்தமான பாதிப்பு பற்றி ஆராய்ச்சி செய்வது எனது பொறுப்பு. இதில் வாழைமரங்களில் ஏதாவது தொற்றுகிருமிகள் செல்கிறதா. இதில் இந்த மனிதருக்கு கடத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி தரவுகளுடன் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். வாழைமரத்தின் பகுதிகள் வாரத்தில் ஒருநாள்

குளிர்பதனப் பெட்டியில் எனக்கு வந்து சேரும். இந்த பகுதிகளில் உள்ள நுண்ணுயிர்களை அறிவதே தற்போதைய ஆராய்வாக அமைந்தது.

சிட்னியின் மேற்க்குப்புறத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு செல்வதற்கு அதிகாலையில் செல்லவேண்டும் அதற்காக முதன் முறைகாக ஒரு கார் வேண்டுவதற்கு எனது நண்பன் பாஸ்கரனுடன் சென்றேன் அக்காலத்தில் சிட்னி பரமற்றா ரோட் எனும் தெருவே மேற்கப்புறத்திற்க்கு செல்லும் முக்கியமானது பாதை. இப்பொழுது நெடும் சாலைகள் எனப்படும் பிரிவேக்கள் வந்ததால் முக்கியத்துவம் குறைந்துவிட்டது அந்த தெருவிலே அதிகமான கார்களை விற்கும் கடைகள் உள்ளது.

முதல் முறையாக கார் வாங்கிய போதிலும் அதிகம் யோசிக்கவில்லை. இது நல்லது என்று பாஸ்கரன் காட்டிய கொண்டா சிவிக் என்ற இரண்டாம் தரமான காரொன்றை (வெள்ளை ஸ்ரேசன் வாகன்) வாங்கினேன் . அந்தக் காருக்கான பணம் முழுவதும் எனது மூன்று மாத பெயிண்ட பக்டரி வேலையில் வந்தது. வேர்வை சிந்திய உழைக்கவில்லை என்று சொன்னாலும் இரசாயனத் திரவியங்களை சுவாசித்து வந்த பணம் . பிற்காலத்தில் பலமடங்கு தேடிய பணத்திலும் அந்த மூன்று மாதங்கள் உழைத்த பணத்திற்கு அதிக பெறுமதியுண்டு.

பல்கலைக்கழகத்தில் வேலை செய்வது வித்தியாசமான அனுபவம் எவரும் என்னைக் கேட்பதில்லை . மாதமொருமுறை முடிவுகளைக் கொடுக்கவேண்டும்.

எனது ஆய்வில் முக்கிய நோக்கமாக வாழைப்பழத்திலோ அல்லது இலைகளிலோ தைபோயிட்டை உருவாக்கும் சல்மனெல்லா என்ற பக்டிரீரியா உள்ளதா எண்ணிப் பார்பதும் அவற்றோடு மனித மலத்திற்க்குரிய குறியீடாக பார்க்கும ஈகோலை பக்டீரியாக்களையும் எண்ணவேண்டும் . அவைகளின் தொகையை சிட்னியின் முக்கிய சந்தையான பிளமிங்ரன் சந்தையில் உள்ள வாழைப்பழங்களில் உள்ளவையோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

.1989 மார்கழி மாத இறுதியில் எனது பத்துமாத ஆய்வில் மனிதக்கழிவில் விளைந்த வாழைப்பழங்களிலோ பிளமிங்டன் சந்தையில் வாங்கிய பழங்களிலோ எந்த ஒரு சல்மனெல்லாவையும் பார்கவில்லை என்பதுடன் மலத்தில் காணப்படும் ஈகோலாய் எனப்படும் பக்டீரியா , பிளமிங்டன் சந்தையில் பழத்தின் அதிகமானது என்பதேயாகும்.

இந்தக் காலத்திலே எனது முதலாவது கட்டுரையை நண்பர் முருகபூபதி நடத்திய மக்கள் குரல் என்ற கையெழுத்துப்பத்திரிகைக்காக – அதுவும் எதைப்பற்றித் தெரியுமா?

இந்தியராணுவம் இலங்கையில் இருந்த காலத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆதரித்த மிகச் சிலரில் நான் ஒருவன் இந்தியாவையாவின் ஒருமைப்பாடு எதிர்காலத்தில் மதத்தாலோ மொழியாலோ அல்லது கலாச்சரத்தாலோ காக்கப்படாது தேசிய முதலாளிகளால் மட்டுமே காப்பாற்றப்படும் என எழுதினேன் .காஸ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையுமுள்ள நுகர்வோரை எந்த முதலாளியும் தவற விடமாட்டான். ஒரு நாட்டில் தேசிய முதலாளித்தும் தன்னை மட்டுமல்ல நுகர்வோரையும் ஒன்றாக வைத்திருக்க வித்தியாசமான வடிவங்களை எடுக்கும் . தற்போது கூட காங்கிரசால் உருவாக்கப்பட்ட இந்த வர்க்கத்தை தன்னுடன் வைத்திருக்க தவறிவிட்டதால் அது இப்பொழுது வேறு கட்சியை ஆதரிக்கிறது

இந்த ஆய்வு செய்த காலத்தில் எனது மிருக வைத்தியத்திற்கான ஒரு பகுதி பரீட்சையை ப் படித்து பாஸ்பண்ணிருந்தேன். மேலும் எனது ஆய்வு முடிந்தவிடுகிறது அதன் பின்பு வேலை இல்லை இதனால் பல இடங்களில் வேலைக்கு விண்ணப்பித்தேன்.

ஒரு நாள் அஸ்திரேலிய அரசின் பிரதான விஞ்ஞானப் நிறுவனத்தில் இருந்து நேர்முகத்திற்கு அழைத்திருந்தார்கள் அதில் ஆய்வு செய்தபடி எனக்கு பிஎச் டி பட்டத்திற்கான படிப்பை தொடவேண்டும். பணந்தந்து படிக்க சொல்லும்போது கசக்குமா ?

நானும் கோட்டு , ரை எல்லாம் அணிந்து கொண்டு நேர்முகத்திற்கு போனேன் . அங்கிருந்துவர்களில் பிரதான விஞ்ஞானி இந்தியர் உருவம் கொண்டவர் .மற்றவர் மற்றய இருவர் ஐரோப்பிய அஸ்திரேலியர்கள். என்னிடம் சில கேள்வி கேட்டு விட்டு நீரே இதற்கு சரியானவர் உங்களுக்கு கடிதம் வருமென்றனர். நம்பிக்கையுடன் இருந்தேன் . இரண்டு வாரங்களாக வரவில்லை.

என்னிடமிருந்த தொலைபேசியில் அந்த இந்திய விஞ்ஞானியிடம் விசாரித்தபோது அவர் சொன்னார்.

உமது பல்கலைக்கழக பொஸ் ஏற்கனவே மிருக வைத்திய பரீட்ச்சை பாஸ்பணணிவிட்டீர் என்று அதனால் எமது வேலைக்கு வரமாட்டீர் என நினைத்து வேறு ஒருவரை தெரிவு செய்கிறோம்

எனது சப்த நாடிகள் அடங்கிவிட்டது அவருக்கு பதில் சொல்லாமல் தொலைபேசியை வைத்தேன் .

எனது புறொயெக்ட் மேலாளரான பேராசிரியர் பாமரை போய்சந்தித்து என்ன நடந்தது என்றேன்.

“உம்மை பற்றி நன்றாகச் சொன்னேன் . ஆய்வு வேலைகளை செய்தபடியே மிருக வைத்திய பரிட்சையும் பாசாகினீர் எனஉம்மைப்பற்றி சொன்னேன். “

எனது புளியங்கூடலைச் சேர்ந்த நண்பன் சிறு வயதில் சொன்னதுபோல் அப்பாவியாகச் சொன்னார்

அப்பொழுது தான் எனக்கு புரிந்தது என்னை பற்றி நன்றாக சொல்ல நினைத்து சொல்லிய விடயம் எனக்கு கிடைக்கவிருந்த வேலை ஸ்கொலசிப் -பிஎச் டி – டாக்டர் பட்டம் எல்லாம் காற்றில் பறந்தது .

மீண்டும் நத்தார் விடுமுறைகாலங்களில் வேயைற்றவனாகினேன். நத்தார் விடுமுறைகாலங்கள் என்னளவில் கொடுமையானவை . அவுஸ்திரேலியாவில் கொண்டாட்டகாலங்கள். அக்காலத்திலே மட்டும்

வருட விற்பனையில் 70 வீதமான விளையாட்டுப் பொருட்கள் விற்பனையாகும் மிகவும் பெரிய விளம்பரங்கள் குழந்தைகளை மட்டுமல்ல பெற்றோரையும் கவரும் அந்தக்காலத்தில் வறுமையாக இருப்பது மற்றக்காலங்களிலும் கொடுமையானது ஏதாவது தொலைபேசியைப் பார்த்து காலம் தள்ளுவேம் என்றால் பழய நிகழ்வுகளை மீண்டும் காட்டுவார்கள் அல்லது பத்துக்கட்டளைகள் போன்ற திரைப்படங்களால் தொலைக்காட்சியை நிரப்புவார்கள் .

கவிஞர் T S எலியட் ஏப்பிரல் கொடுமையானது (April is the cruellest month) என்ற அவரது கவிதையை நான் திருப்பிப்போட்டு அக்காலத்தில் மார்கழி கொடுமையானது எனப்படிப்பேன் .

தொடரும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button