கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 29… (உண்மைக்கதை) ஏலையா க.முருகதாசன்.

சாப்பிட்டு முடிஞ்சதும் வழமைபோல எனது வலது கைகளுக்குள் தனது இடது கையைச் செருகியபடியே மேலே வானத்தில் கட்டிடங்களின் இடைவெளியில் தெரிந்த வளர்பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தவள் இந்த இரவைவிட்டால் இன்னும் இரண்டு இரவுகள் மட்டுந்தான் நான் தனியாக தூங்குவன் பிறகு உங்கள கட்டி அணைச்சபடி நல்லாய்த் தூங்குவேணுங்க கடவள் இப்படி ஒரு வாழ்க்கையைத் தருவார்னு நான் கனவுலகூட நினைக்கேலீங்க என்று உருகிச் சொன்ன யோகமலரின் கண்களில் ததும்பிய கண்ணீரைத் துடைச்சபடி எனது தோளோடு சேர்த்து அவளுடைய தலையை வருடிக் குடுத்தன்.

வானத்தில் முகில்கள் எதுவுமில்லை.வளர்பிறைச் சந்திரனுடன் வானம் கரும் நீலநிறத்தில் காட்சியளித்தது.விமானம் ஒன்று பறந்து வந்து கொண்டிருக்கும் சத்தம் மெதுவாகக் கேட்கத் தொடங்கி அதிகரிக்கத் தொடங்கிய இரைச்சலுடன் அந்த விமானம் எமது தொழிற்சாலைக்கு மேலாக கடந்து பறந்து சென்றது.

சாப்பாட்டு இடைவேளையில் ஒவ்வொரு நாளும் விமானம் எமது தொழிற்சாலைக்கு மேலாக இந்த நேரத்தில் பறந்து செல்வது வழமையான ஒன்றுதான்.அதை யோகமலரும் பார்த்திருக்கிறாள்.ஆனால் இன்று அந்த விமானத்தைப் பார்த்ததும் அவள் முகம் சோர்வடைய’ ஏங்க உங்க வேர்க்பெமிற் முடிய நீங்க என்ன விட்டிட்டு இப்படி பிளைட்ல போய்விடுவீங்களா…..’என்று சொன்னவள் குலுங்கிக் குலுங்கி; அழுதவள்’உங்களுக்கு ஒரு அழகான பிள்ளயப் பெற்றிட்டு உங்க பிள்ளயோட உங்கள அனுப்பி வைக்க வேணுமேன்னு நினைக்கிற போது என்னால தாங்க முடியலைங்க, உங்கள என்னோட இருங்கன்னு சொல்ல முடியாதுங்க, கடவுளே நான் என்ன செய்வேனுங்க,நான் கும்பிற மாரியம்மா என்னுயிரை இவர் மடியிலே போக அருள்தாம்மா என்று விக்கி அழுதாள்.அழ வேண்டாம் என்று சொல்லியும் அவள், உங்கள விட்டிட்டு இருக்க மாட்;:டேனுங்க „ என்று தொடர்ந்து அழுதாள்.

அவள் அழுவதைக் கண்ட அவளுடைய தோழிகள் இருவரும் எழுந்து வந்து அவளுக்கு வலதுபுறத்தில் அமர்ந்தவர்களில் ஒருத்தி „பஸ்ஸில வரப்போவும் அழுதாய், இப்பவும் அழுகிறாய்.அதான் வெள்ளிக்கிழமை அவர் உனக்கு தாலிகட்டப் போறாரே பிறகென்ன அழுகை’ என்று

கேட்க,’அதில்ல அவர் என்னோடயே இருக்கணும்னு ஆசைப்படுறென், ஆனா ஆவர் வேர்க்பெமிற் முடிஞ்சதும் போயிடுவாறே, இப்ப போச்சே ஒரு பிளைட்டு அதப் பார்த்ததும் பல யோசன வந்திடுச்சு’ என்று யோகமலர் சொல்ல அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் தலையைக் குனிந்து நிமிர்ந்து என்னைப் பார்த்த அவளின் தோழி பேசாமல் இருந்துவிட்டாள்.

அதற்குப் பிறகு யாருமே எதுவும் பேசவில்லை.நான் மேலே அண்ணாந்து வானத்தைப் பார்ப்பதும் அவளின் முகத்தைப் பார்ப்பதுமாக இருந்தன்.

„நீங்கள் வேர்க்பெமிற் முடிஞ்சு சிறிலங்காவுக்கு திரும்பிப் போகும் போது,நான் எங்க பிள்ளையுடன் உங்கள ஊருக்கு அனுப்பி வைக்க எயர்போட்டுக்கு வருவதை நினைக்க முடியலங்க „ என்று அவள் குமுறியதை என்னாலும் தாங்க முடியவில்லை.

„அவளை விட்டு போகும் நிலை கட்டாயமானது….’ அதற்கு மேல் என்னால் சிந்திக்க முடியவில்லை.எனக்கும் அவளுக்கும் ஏற்படும் உடலுறவு மூலமாக குழந்தை பிறக்காமல் இருப்பதற்காக மருந்து பாவிக்கப் போவதாக தனது அண்ணிமாரிடம் சொல்லியவள் நான் உங்கள் பிள்ளையோடு எயர்போர்ட்டுக்கு வந்து உங்களை ஊருக்கு அனுப்பி வைப்பன் என்று அவள் சொல்லியது என்னை ஏதோ செய்தது.

பக்கத்தில் அவளின் தோழிகள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தும் அவளின் தலையையும் தோளையும் தடவிக் குடுத்தன் இன்னும் இறுக்கமாக என்னை அணைச்சுக் கொண்டே „ நானும் உங்களோட ஊருக்கு வந்து அக்காவோட இருக்கப் போறேனுங்க’என்று அவள் சொல்ல அவள் பலதையும் எண்ணி குழம்புகிறாள் என்று பேசாமலிருந்தன்.

„ஏங்க எதுவுமே பேசாமலிருக்கீங்க’ என்று யோகமலர் கேட்க „மனசைப் போட்டு குழப்பாதீங்கள்.நான்தான் உங்கடை கழுத்திலை தாலி கட்டிறன் என்று சொல்லிட்டேனே பிறகு ஏன் கவலைப்படுகிறியள், அழாமலிருங்கள்’ என்று அவளை ஆறுதல் படுத்தினன்.

„வேலை முடிஞ்சு ஜோகூர்பாருக்குப் போகும் போது என்னுடைய பெண்டாட்டியை அழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் „ என்று அவளுடைய தோழிகள் இருவருக்கும் சொன்னன்.

மீண்டும் வேலை ஆரம்பிச்சது.அன்றைக்கு பல மிசின்கள் தொல்லை குடுக்க ஆரம்பிச்சன.

நான் யோகமலர் பார்க்கக்கூடிய தூரத்தில் சீனப் பெண் தொழிலாளியின் மிசினைத் திருத்திக் கொண்டிருந்தன்.நான் திருத்தும் வரை சும்மா நிற்பானேன் என்று அவளும் கேள்விகளால் கொக்கி போட்டாள்.

„உங்களுக்கு எத்தனை பிள்கைள்’ என்றாள்,’மூன்றென்றன:’, இனி உங்களுக்கும் மலேசியன் கேர்ளுக்கும் எத்தனை பிள்ளைகள் பிறக்கும் என்றாள்.

அவள் அப்படிக் கேட்டது எனக்குப் பிடிக்கவே இல்லை கோபமாப் பார்த்தன்.எனது கோபமான முகத்தைப் பார்த்த அவள் எனது தோளில் கைவைத்து „சொறி பிரண்ட் சும்மா யோர்க்கிற்காக கேட்டன் „ என்றாள்.

தமிழர்கள்தான் ஆற்றையேன் விசயங்களை ஊர்ப்புதினமாக கதைக்கிறவர்கள் என்று நினைக்கிறம்.அது அப்படியல்ல உலகம் பூராவும் உள்ள சனங்கள் புதினம் கதைப்பவர்கள்தான்;.சிலர் மற்றவர்களிடம் இருந்து தெரிஞ்சு வைச்சிருக்கிற விசயத்தை ஒருவர் மாறி ஒருவருக்குச் சொல்வார்கள்.சிலர் சொல்ல மாட்டார்கள்,தம்மோடையே வைச்சிருப்பார்கள்.

ஏனக்கும் யோகமலருக்கும் இடையிலிருக்கிற உறவு பற்றியும் சிறீலங்காவில் எனக்கு மனைவி பிள்ளைகள் இருப்பது பற்றியும் அடுத்த கிழமையிலிருந்து என்எம்பி என்ற பக்ரறியில் வேலை செய்யப் போவது பற்றியும் ஒரே வீட்டில் தங்கப் போவது பற்றியும் பலருக்கும் தெரிந்திருக்கலாம் சிலர் அதைக் கேட்கிறார்கள் சிலர் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.

நல்ல வேளையாக யோகமலருக்கு நான் தாலிகட்டப் போவது யாருக்குமே தெரியவில்லை.

நான் திருத்திக் கொண்டே யோகமலரைப் பார்த்தன் குவாலிற்றி கொண்ரோலர் ஆசா யோகமலரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.

சீனாக்காரியின் மிசினை ஒழுங்குபண்ணிக் குடுத்ததும். யோகமலரின் இரண்டு தோழிகளின் மிசின்களும் ஒரே நேரத்தில் பழுதடைய இன்னொரு செற்றப் மென்னான மலாயக்காரனை கையைக் காட்டிக் கூப்பிட்டு ஒரு மிசினை அவனைத் திருத்தச் சொல்லிவிட்டு மற்றதை நான்

திருத்திக் கொண்டிருக்கும் போது யோகமலரை திரும்பிப் பார்த்தன் ஆசா இரண்டு கைளையும் தனது கழுத்தைச் சுற்றிக் கொண்டு வந்து யோகமலரிடம் ஏதோ கேட்பது தெரிந்தது.

யோகமலருக்கு மலேய் மொழி தெரியுமென்பதால் ஆசா அவளுடன் மலேயில் கதைச்சுக் கொண்டிருந்தாள்.

ஆசா என்ன கதைச்சவள் என்பதை கேட்க வேண்டுமென்று நினைச்ச போது வேலை முடிவதற்கான மணி அடிச்சது.

யோகமலரின் பஸ்ஸடிக்கு அவளைக் கொண்டுபோய் விடப் போனபோது ஆசா என்ன கதைச்சவள் என்று கேட்க யோகமலரின் முகம் சிவக்கத் தொடங்கியது.

எனது கைகளுக்கள் தனது கைகளை செருகி இறுக்கிப் பிடிச்சவள் „நாளக்கு சொல்றேனுங்க, ஆமா என்னை இரவெல்லாம் நினைப்பீங்களா’ என்று கேட்டாள்.’இரவில நித்திரை வரும் வரைக்கும் மனைவி பிள்ளைகள் உங்களை என எல்லாரையும் நினைப்பன் என்று சொன்னன்.

வழமை போல அவள் பஸ்ஸில் ஏறும்வரை காத்திருந்து பஸ் புறப்பட அவளக்கு கைகாட்டிவிட்டு எனது பஸ்ஸில் ஏறி சூரியகுமாருக்கு பக்கத்தில் போய் இருந்தன்.

„பொஸ் வியாழக்கிழமைக்குப் பிறகு நீங்கள் என்எம்பி பக்ரறிக்கு போய்விடுவியள்,நாங்கள் யூறோங் பொடியளின்ரை ரூமிலை இரண்டு நாட்களுக்கு இருந்துவிட்டு வேற பக்ரறிக்குப் போய்விடுவம் „ என்று சொன்னான்.

„எங்கடை பக்ரறிக்கு வேறை யார் யார் வருகினம் என்று கேட்க, இராஜரட்ணம் மட்டுந்தான் வருகிறார்.நான் அறிஞ்சன் வேறை பக்ரறிப் பொடியங்களும் நீங்கள் வேலை செய்யப் போற பக்ரறிக்கு வருவதாக’ என்று சூரியகுமார் சொல்ல நான் அமைதியாக இருந்தன்.

யோகமலருடன் ஒரே வீட்டில் இருக்கப் போவதை நான் சூரியகுமாருக்குச் சொல்லவில்லை.

அடுத்த நாள் வேலைக்குப் போய் எனது வேலைப்பகுதியில் யோகமலருக்காக காத்துக் கொண்டிருந்தன.;

அவள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.எனக்கருகில் வந்து நின்றவள் டொரியான் பழச் சுவையுள்ள சொக்லேட்டை எடுத்து ஈயப் பேப்பரைக் கிழிச்சு சொக்லேட்டை உடைச்சு வாயைத் திறக்கச் சொல்லி வாய்க்குள் வைச்சவள் தானும் சொக்லேட்டை உடைச்சு வாயக்குள் போட்டிட்டு தோழிகளுக்கும் குடுத்தாள். நேற்று பலதையும் யோசிச்சுக் குழம்பிப் போயிருந்தவளின் முகம் இன்று பிரகாசமாகயிருந்தது. அவளையே உற்றுப் பார்த்தன்.

„என்ன புருசனாரே புதுசா பார்க்கிற மாதிரி பெண்டாட்டியைப் பார்க்கிறீங்க’ என்று கேட்டவள் „நான் எப்படி இருக்கிறன் „ என்று கேட்டாள்.இளஞ்சிவப்பு பஞ்சாபியும் மஞ்சள் நிற சால்வையும் போட்டு உச்சி நெற்றியிலும் நடுநெற்றியிலும் குங்குமப் பொட்டு வைச்சு அழகாக இருந்தாள்.

„நல்ல அழகாக இருக்கிறியள்’ என்றன.இன்னும் ஒரு நாள்தான் பிறகு எனக்கு தாலிகட்டி உரிமையுள்ள மனைவியாக்கிடுவீங்க’ என்றாள் கனிவாக.தோழிகளைப் பார்த்துக் கேட்டன் „பஸ்ஸில போகேக்கை அழுதவாவா’ என்று,’ இல்லை ஆனா ஒரு நாள் இருக்கு இரண்டு நாளிருக்கு’ என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.அவள் பாவமங்க, அவளைச் சந்தோசமா வைச்சிருங்க „ என்றார்கள் தோழிகள்.

எனது மனதிலை பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன…

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *