கதைகள்

நடுகைக்காரி!….தொடர் 18 ….. (குறுநாவல்)…. ஏலையா க.முருகதாசன்.

பாறுவைத் தனமும் பூரணியம் கிண்டலடித்துக் கதைச்சுக் கொண்டிருக்கும் போது ஞானம் சைக்கிளில் வந்து இறங்கினான்.

சைக்கிள் காண்டிலில் கொழுவியிருந்த பையை அட்டாளைக்கு கீழ் பாறுவின் பக்கத்தில் உட்கார்ந்தவன் பைக்குள்ளிருந்து முதலில் பத்திரிகைத் தாளுக்குள் வைச்சுக் கொண்டு வந்த நன்னாரிக் கிழங்குகளை கொதிச்சுக் கொண்டிருந்த கேத்தலுக்குள் எட்டிப் போட்டவன்,பைக்குள்ளிருந்து மூன்று பார்சல்களை வெளியில் எடுத்தான்.

ஒரு பார்சலில் தோசைகளும்,மற்றப் பார்சலில் வடைகளும், இன்னொன்றில் சுண்டலும் இருந்தன.சம்பல் புறம்பாக இருந்தது.கேத்தலிலிருந்த மூடி வழியாக ஆவியுடன் நன்னாரி வாசம் வந்து கொண்டிருந்தது.

„பாறு தேத்தண்ணியைப் போடுங்கோ நான் வாழையிலை வெட்டிக் கொண்டு வாறன் என்று சொல்லிக் கொண்டே எழுந்த ஞானத்திடம் „நீங்கள் இருங்கோ நான் வெட்டிக் கொண்டு வாறன் „ என்று எழுந்த பூரணியைத் தடுத்து „ இல்லை நீங்கள் பாறுவுடன் சேர்ந்து தேத்தண்ணி போடுங்கோ „ என்று சொன்ன ஞானம் கிணத்தடியோடு நின்ற வாழைத் தோட்டத்திற்குள் போய் தலைவாழை இலைகளை வெட்டிக் கொண்டு வந்து அவர்களோடு உட்கார்ந்தான்.

அகப்பை கரண்டி தேவைப்படும் என்பதால் வீட்டிலிருந்து அவற்றை ஞானம் கொண்டு வந்திருந்தான்.

எல்லாரிடமும் தலை வாழையிலைகளை கொடுத்தவன்’ நீங்களே உங்களுக்கு போதுமானதை எடுத்துச் சாப்பிடுங்கள்’ என்றான்.பாறு நன்னாரி வாசனையுடன் பித்தளை மூக்குப் பேணிகளில் தேத்தண்ணியை வார்த்து எல்லார் முன்னிலையிலும் வைச்சாள்.

மீண்டும்„ எல்லாரும் தோசையுடன் வடை சுண்டலையும் எடுத்துப் போட்டுச் சாப்பிடுங்கள் வெட்கப் படாதையுங்கள்’ என்று

சொன்னவன்,’பாறு சாப்பிடுங்கோ’ என்று சொல்ல பாறுவும் சாப்பிடத் தொடங்க அவனும் சாப்பிடத் தொடங்கினான்.

„தலையைக் குனிஞ்சபடியே சாப்பிட்ட பூரணியும், தனமும் ஞானத்தை நிமிர்ந்து பார்த்த போது அவர்களின் கண்கள் கலங்கியதைக் கண்ட ஞானம், „ஏன் உங்கள் இரண்டு பேற்றையும் கண்களும்; கலங்குது’ என்று கேட்க, சீலைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைச்சவர்களில் தனம்’ இப்படி யாருமே செய்ய மாட்டினம்,சிரட்டையிலும் போத்தலிலுந்தான் தேத்தண்ணி தருவினம், பக்கத்திலையிருத்தி ஒன்றாகச் சாப்பிட மாட்டினம்.சிலரின்ரை வீட்டுக்குப் போனால் கீழை படியிலை இருத்தி,முதல் நாள் சமைச்ச சாப்பாடு கிடக்குது சாப்பிட்டு போறியா என்று கேட்டுத் தரும் போது எங்கடை நிலையை நினைச்சு மனசுக்குள்ளை கவலைப்பட்டுக் கொண்டே படியிலை இருந்து சாப்பிட்டதை நினைக்கிறன்’

„ஆனால் நீங்கள் எங்களோடு ஒன்றாகவிருந்து சாப்பிடுகிறீர்கள்,நீங்கள் மட்டுமல்ல, உங்கடை அம்மா அப்பாவும் எங்களை பிறிம்பு காட்டிறதில்லை’ என்று சொல்ல’ எல்லாரும் மனுசர்தான், அவை வேறு இவை வேறு என்று யார் கொண்டு வந்தார்களோ, தெரியேலை,உங்களிலையும் பிழையிருக்கு நீங்களேன் மற்றவையிட்டை இருந்து பழைய சாப்பாட்டை வாங்கிறியள், இனிமேல் வாங்கவும் வேண்டாம் படியிலை இருந்து சாப்பிடவும் வேண்டாம்..

யாரிட்டையும் கையேந்தாதையுங்கோ எல்லாத்தையும்விட சுயமரியாதையும் தன்மானமும் பெரிசு, இங்கை ஊர்ந்து போற எறும்புக்குக்கூட ரோசமிருக்கு தன்மானம் இருக்கு சுயமரியாதை இருக்கு’ என்று சொன்ன ஞானத்தை பாறு பெருமையுடன் பார்த்தாள்.

„தம்பி நான் ஒரு விசயத்தைச் சொல்லப் போறன் கோபிக்காதையுங்கோ’ என்ற தனம் தயங்க….’ சொல்லுங்கோ சொல்ல வந்ததைச் சொல்லுங்கோ….ஏன் தயங்கிறியள்’ என்று ஞானம் தனத்தைப் பார்த்துச் சொல்ல,’இல்லை பாறுவின்ரை விதி உங்களை அவளை விரும்ப வைச்சுட்டுது அவள் உங்களை உயிராய் நினைக்கிறாள்.நீங்களும் அப்படித்தான் என்றவள்;.

தயவுசெய்து பாறுவைக் கைவிட்டிடாதையுங்கோ,ஆனால் எங்களுக்கு பயமாத்தான் இருக்குது இதாலை எதாவது சண்டை சச்சரவு வந்திடுமோ’

என்று சொல்லி முடிக்க,’நீங்கள் ஆரும் பயப்படத் தேவையில்லை, பாறுவை நான் என்ரை மனுசியாகத்தான் முடிவெடுத்திருக்கிறன்’ நீங்கள் ஒன்றுக்குமே யோசிக்க வேண்டாம் „ என்று ஞானம் சொன்னான்.

சாப்பிட்டு முடிஞ்சதும் தனமும் பூரணியும் வெங்காயத்துக்குள் புல்லுப்பிடுங்கப் போக „நானும் போய் புல்லுப் பிடுங்கவா’ என்று பாறு கேட்க „வேண்டாம் நான் அதற்கு உங்களை வரச் சொல்லேலை,நாங்கள் இரண்டு பேரும் பக்கத்திலையிருந்து கதைச்சுக் கொண்டிருக்கத்தான் கூட்டிக் கொண்டு வந்தனான் „ என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காராளபிள்ளையின் மனுசிக்காறி வருவதைக் கண்ட ஞானம்,’ பாறு அங்கை வாற பொம்பிளை ஒரு விடுப்புப் பிடுங்கிற ஆள், அவையின்ரை தோட்டம் இஞ்சையிருந்து கொஞ்சம் தள்ளி அங்கையிருக்கு, நீங்கள் ஏதேன் வேலை செய்யிற மாதிரி இருங்கள் „என்று ஞானம் சொல்ல, தேத்தண்ணி குடிச்ச மூக்குப் பேணிகளையும் சருவச்சட்டியையும் எடுத்து கழுவவெண்டு கிணத்தடிக்கு கொண்டு போய் வைச்சிட்டு தண்ணியை அள்ளிக் கொண்டிருக்க.

இதார் புது ஆள் என்பது போல நின்று பாறுவைப் பார்த்த காராளபிள்ளையின் மனுசிக்காறி பிறகு தன்ரை தோட்டத்தை நோக்கிப் போகும் போதும் நிண்டு நிண்டு பார்த்துக் கொண்டே போனாள்.

கழுவி முடிச்ச பேணிகளையும் சருவச்சட்டியையம் வெயில் படும்படி வைச்ச பாறு பிறகு அட்டாளைக்குள்ளைவ வந்து உட்காருகிறாள்.

ஞானமும் அவளுக்கருகில் உட்கார்ந்து சில விநாடிகள் பேசாமலிருந்தவன் மெதுவாக அவளின் விரல்களை பிடிக்க’சும்மா விடுங்கோ இது பகல் நேரம்,தங்கடை தோட்டத்துக்கென்று அங்கையிங்கை போறவை எங்களைப் பார்ப்பினம்.இப்ப விரலைத் தொடுவியள் பிறகு எங்கை போய் முடியுமென்று எனக்குத் தெரியும், இராத்திரி நடந்த பிரச்சனைக்கே அம்மா சந்தேகப்படுகிறா…..என்று பாறு சொல்ல „ இராத்திரியா…இராத்திரி அப்பிடி என்ன நடந்தது „ என்று ஞானம் தெரியாத மாதிரி கேட்க, „ ஏன் உங்களுக்குத் தெரியாதே உங்களை அனுப்ப வந்த என்னை படலையடியில் வைச்சு என்ரை சொண்டுகள் இரண்டையும் சிவப்பாக்கினது தெரியாதோ, அம்மா கேட்டா ஏன் சொண்டுகள் இரண்டும் சிவப்பாய்க் கிடக்குது என்று, நான் பூச்சி கடிச்சது என்று சொல்லச் சமாளிக்க அம்மா அதை நம்பேலை,….’என்றாள் பாறு.

அதற்கு ஞானம் „அதைப் பகலிலும் செய்யலாம், அது பிரச்சினையான விசயமில்லை „ என்று சொல்ல,’ஓகோ அந்த யோசனையும் இருக்குது போல இப்படியென்றால் புல்லுப் பிடுங்கப் போயிடுவன்’பாறு சொல்ல’நான் ஒன்றும் செய்ய மாட்டன் இருங்கோ’ என்கிறான் ஞானம்.

„ அதை என்ன செய்யப் போறியள்’ என்று பாறு கேட்க, „எதை „ என்று ஞானம் கேட்க, சாக்காலை மூடி ஒளிச்சு வைச்ச கள்ளுப் போத்தலைக் காட்டுகிறாள் பாறு.

கள்ளுப் போத்தலை கையிலெடுத்த ஞானம் குடிக்கவெண்டு போத்தலின் வாயை தனது வாய்க்கருகில் கொண்டு போக, போத்தலைப் பறிச்செடுத்த பாறு இப்பதான் சாப்பிட்டனீங்கள் இப்ப குடியாதையுங்கோ வயித்தைப்புரட்டிச் சத்தி வரும் என்றவள், கொஞ்சம் வேலை செய்து போட்டு வந்து குடியுங்கள் என்று சொன்னதும், „நீங்கள் சொல்றதும் சரிதான், நீங்கள் இங்கேயே இருங்கள், ஒரு ஐம்பது கண்டு புடலைக்கு குழி சுழிச்சு புடலங் கொட்டை ஊன்ற வேண்டும் , நான் அதைச் செய்கிறன் , நீங்கள் போய் சைக்கிள் காண்டிலில் ஆனந்தவிகடன் செருகி வைச்சிருக்கிறன் அதை எடுத்து கொண்டு வந்து வாசியுங்கள் என்கிறான், அதற்கு அவள் அப்போதே எடுத்துக் கொண்டு வந்திட்டன் என்று ஆனந்தவிகடன் சஞ்சிகையைக் காட்டுகிறாள்.

அகலம் குறைந்த அலகுள்ள மண்வெட்டியை எடுத்துக் கொண்டு போய் குப்iபை தாட்டு சாறியிருந்த இடத்தில் அளந்தளந்து மண்வெட்டியால் சிறு கிடங்காக வெட்டி முடிச்சவன் குனிஞ்சு ஒவ்வொரு கிடங்காக குழிசுழிக்கத் தொடங்கினான்.

அட்டாளைக் கப்போடு சாய்ஞ்சு கொண்டு பாறு ஆனந்தவிகடனை வாசிச்சக் கொண்டிருந்தவளுக்கு தனத்துடனும் பூரணியுடனும் கதைக்க வேண்டும் என்ற எண்ணம்வர வெங்காயத் தோட்டத்தடிக்குப் போனவளுக்கு வெங்காயத் தோட்டத்தில் எதிர்பார்த்தளவிற்கு புற்கள் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக புற்கள் இருப்பதைக் கண்டு „இதென்ன புற்களே இல்லை இதுக்கா மினக்கெட்டு உங்களைக் கூப்பிட்டவர்’ என்று பாறு சொல்ல, „பாறு எங்களைப் புல்லுப் பிடுங்க என்று கூப்பிட்டது ஒரு சாட்டு, உன்னை நாள் முழுதும் வச்சிருந்து பார்க்க வேண்டும் என்றுதான் எங்களையும் கூப்பிட்டவர் உன்ரை ஆள், உன்னைத் தனியக் கூப்பிட்டால், உன்ரை ஆளின்ரை தாய்தப்பனும் உன்ரை கொம்மாவும் கொப்பாவும் ஐமிச்சப் படுவினம் என்று

எங்களையும் வரச் சொல்லியிருக்கிறார்’ என்று பூரணி சொல்லி முடிக்க, „பாறு நாளைக்கு நாங்கள் இரண்டு பேரும் யாழ்ப்பாணத்திற்கு படம் பார்க்கப் போறம் வாறியா’ என்று தனம் கேட்க, „அவரைக் கேட்டிட்டுச் சொல்றன் சில நேரம் அவர் தானும் வாறனெண்டு சொல்லுவார், அவரும் வந்தால் சந்தோசமாயிருக்கும் „ என்று பாறு சொல்லிக் கொண்டிருக்கும் போதே’ இப்பவே அவரிட்டை கேட்டுத்தான் எல்லாம் செய்யப் போறாய் போல, நான் நினைச்சன் உன்ரை கொப்பா கொம்மாவிட்டை கேட்பாய் „ என்று பூரணி சொல்ல, பாறு, „இனி அவரோடைதான் என்ரை வாழ்க்கை என்றதற்கு பிறகு அவரிட்டைதான் கேட்கனும்’என்கிறாள்.

தனமும் பூரணியும் தொடர்ந்து புல்லுப் பிடுங்கிக் கொண்டிருக்க,புடலங் கொட்டையை நடுவதற்கு குழி சுழிக்கிறன் என்று சொன்னவர், போய் அதைப் பார்ப்பம் என்று ஞானத்தைப் பார்க்கப் போக அங்கை ஞானத்தைக் காணவில்லை,திரும்பி அட்டாளையடிக்கு போக அங்கை ஞானம் கள்ளை அப்படியே போத்தலைத் தூக்கிக் குடிச்சுக் கொண்டிருப்பதைக் கண்ட பாறு வேகமாக அட்டாளையை நோக்கி வந்தாள்.

அவள் போய்ச்சேர போத்தலுக்குள் ஒரு துளிக் கள்ளும் இல்லாமலிருப்பதைக் கண்ட பாறு’வாயிலை கைவைச்சு கடவுளே ஒரே மூச்சிலை முழுக்கள்ளையும் குடிச்சிட்டியளா, புரைக்கேறலையே’ என்றவளுக்கு’கள்ளு ஒரு மூலிகை அதற்கு இன்னொரு பெயர் இருக்குது தெரியுமோ என்றவன் அதற்கு காமபாணம் என்ற பெயரும் இருக்கு’ என்று ஞானம் சொல்ல, „புரியுது எங்கை தொட்டு எங்கை போகப் போறியள் „என்றவளுக்கு’ நேரஞ் செல்லச் செல்ல கள்ளுப் புளிக்கத் தொடங்கும், புளிச்ச கள்ளை குடிக்கிறது கஸ்டம் அதுதான் முழுசையும் குடிச்சனான், ஏன் புளிக்கிறதெண்டால் அல்ககோல் என்ற மதுசாரம் உற்பத்தியாகிறது என்பது இரசாயண றியக்சன் என்றவன் வெங்காயத் தோட்த்தை போய்ப்; பார்த்தனீங்களா கனக்கப் புல்லுக் கிடக்குதோ „ என்று ஒரு சிரிப்புடன் கேட்க,’ உங்கடை அப்பா அம்மா தோட்டப் பக்கம் வாறேலையோ,வெங்காயத்துக்குள்ளை புல்லையே காணேலை அவையிரண்டு பேரும் அங்கையொன்று இங்கையொன்று என்று பிடிங்கிக் கொண்டிருக்கினம்’ என்று பாறு சொல்ல,’ உங்களை நாள் முழுவதும் எனக்குப் பக்கத்திலை வைச்சிருக்க வேண்டும் என்றுதான் எல்லாம், என்னோடை வாங்கோ புடலைக்கு எப்படிக் குழி சுழிக்கிறது

என்று காட்டிறன் „ என்று பாறுவைக் கூட்டிக் கொண்டு போக, பாறு நிலத்தைப் பார்த்தபடி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சிரிக்க,’ஏன் சிரிக்கிறியள் என்று எனக்கும் தெரியும் நானும் தோட்டக்காரன்தான்,அது சரி நீங்கள் கொஞ்ச நாளாய்த்தானே தோட்ட வேலைக்கு வந்து போறியள் இதெல்லாம் எண்ணெண்டு தெரியும் என்று ஞானம் கேட்க, எல்லாம் அவையிட்டை இருந்து அறிஞ்சதுதான் என்ற பாறு ஞானத்தின் காதில் ஏதோ சொல்கிறான்.

தோட்டக்காரர்கள் மத்தியில் குழிசுழிக்கிறது என்பதற்கு என்ன உள் அர்த்தம் என்பது ஞானத்திற்கும் தெரியும் பாறுவுக்கும் தெரிஞ்சிருந்திருக்கின்றது.

ஞானத்தின் காதில் அவள் சொன்னதைக் கேட்டு, அவன் வாய்விட்டுச் சிரித்தான்.புடலைக் கொட்டை நடுவதற்கு குழிசுழிக்க பாறுவும் ஞானமும் போய்க் கொண்டிருந்தனர்…..

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *