ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் நடந்த இரட்டைக் கொலை!…. அங்கம்…. 02 …. முருகபூபதி.

மரணதண்டனை தீர்ப்பை மாற்றி எழுதியது மேன்முறையீட்டு நீதிமன்றம் !!
துரத்திய துரோகம், மரணதண்டனையை நிறைவேற்றியது !!!
முருகபூபதி.

ஹக்மண பொலிஸ் நிலையத்தின் பின்புறத்திலிருந்த கராஜில் தன்னால் மறைத்துவைக்கப்பட்ட முக்கிய சாட்சி ஆர். கே. பியசேனாவை அழைத்துக்கொண்டு மாத்தறை ஆஸ்பத்திரிக்கு வருகிறார் பொலிஸ் பொறுப்பதிகாரி சமரநாயக்கா.
அங்கே வார்டில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் வேலைக்காரன் சூரசேனவுக்கு அருகில் சென்று அந்தக்கட்டிலிலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் பியசேனாவை நிறுத்தியவாறு, “ அவனைத்தெரிகிறதா?” என்று கேட்கிறார்.
“நடுநிசியில், வந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்தமையால் வீட்டில் இருள்கவிந்திருந்தது. அதனால் எவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. அத்துடன் தோள்பட்டையில் எனக்கு சூடு விழுந்து, நான் தவழ்ந்துசென்று ஒரு கட்டிலின் கீழே மறைந்து மயங்கிவிட்டேன்.” என்று சூரசேன சொல்கிறான். அந்த நாடக தயாரிப்பு இயக்குநருக்கு அந்த வாக்குமூலம் சற்று ஆறுதலைத்தருகிறது.
அப்படியானால் வேலைக்காரன் சூரசேன, இந்த பியசேனாவை பார்க்கவில்லை. எனவே இவனை இனியும் வைத்துக்கொண்டு காரிலும் ஜீப்பிலும் ஊர்காட்ட அழைத்துச்செல்ல வேண்டியதில்லை.
அவனை மாத்தறை பஸ் நிலையத்திற்கு கொண்டுவருகிறார். அவனிடம் ஒரு பத்துரூபா நோட்டை கொடுத்து,” இனி இந்தப்பக்கம் தலைவைத்தும் படுக்காதே… எங்காவது கண்காணாமல் ஓடிவிடு” என்கிறார். அவனும் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்துக்கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறி மாயமாகிவிடுகின்றான்.
சரத் ஹாமுவினதும் அவரது தம்பியினதும் இறுதிச்சடங்குகள் நடக்கின்றன. சமரநாயக்காவும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனுதாபம் தெரிவிக்கின்றார். சரத் ஹாமுவின் வயோதிப தந்தையாருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் வார்த்தைகளை அள்ளித்தெளிக்கிறார்.
ஜே.வி. பி. கிளர்ச்சி தணிந்துவிடுகிறது. சரத் ஹாமுவின் குடும்பத்தினரும் கவலையில் தோய்ந்து அமைதியடைகின்றனர். ஆனால், பெரிய குடும்பத்தின் மானத்தைக்காப்பதற்காக பல அந்தரங்கங்களை மூடி மறைத்த வேலைக்காரன் சூரசேனவுக்கு குற்ற உணர்வு தலைதூக்கியது.
அன்று ஒரு நாள் காலையில் அந்த பொலிஸ் அதிகாரி, ஹாமு வீட்டில் இல்லாதிருந்த சமயம் அங்கு தங்கியிருந்துவிட்டு மறுநாள் காலையில் ஹாமுவின் டவலை உடுத்தியவாறு நின்ற காட்சி அவனது கனவில் வரத்தொடங்கிவிட்டது. அவன் முதலில் தனது வீட்டில் இதுபற்றி பேசத்தொடங்கிவிட்டான். அந்தக்கிராமத்தில் அவனது சந்தேகம் நுளம்புகள் போன்று பரவத்தொடங்கின.
ஹாமுவின் வயோதிபத்தந்தையாரும் உறவினர்களும் உஷாரடைந்தனர். ஹக்மணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமரநாயக்கா அந்த கொலைச்சம்பவங்களின் விசாரணைகளை சரியாகத்தொடரவில்லை என்ற புகார்கள் பொதுமக்களிடமிருந்து காலி பொலிஸ் அத்தியட்சருக்கு வரத்தொடங்கியது.
வருடங்கள் நகர்ந்தன. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜே.வி.பி. தலைவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட குற்றவியல் ஆணைக்குழுவின் விசாரணை கொழும்பில் தொடர்ந்தமையால் ஹக்மணை கிராமத்துச்சம்பவம் கிணற்றில் விழுந்த கல்லாகவே பலமாதங்கள் கிடந்தது.
சரத்ஹாமு ஊருக்கு நல்ல மனிதர். அவர் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டார். அவருடன் அவரது தம்பியும் கொல்லப்பட்டார். நிச்சயமாக ஜே.வி.பி.யினர் இந்த இழிசெயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள். என்று ஊர்மக்கள் நம்பினார்கள். அவர்களின் அழுத்தம் நீடித்தது.
இறுதியில் காலி பொலிஸ் அத்தியட்சர் அந்த விசாரணையை புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைத்தார். சமரநாயக்கா தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் அவரது கடவுச்சீட்டும் மீளப்பெறப்பட்டது. இரவு பகலாக புலனாய்வுப்பிரிவினர் தென்னிலங்கை முழுவதும் அலைந்து திரிந்து நூறுக்கும் மேற்பட்ட சாட்சியங்களை ஒழுங்கு செய்துவிட்டு காலி நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் அந்த நாடகத்தின் முதல்
பாத்திரமாக அனுப்பப்பட்ட அல்பர்ட் என்ற ரவுடி வேறு ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டுவிட்டான். அவனது உறவினன் பியசேனா முதலில் கைதாகி பின்னர் அப்ரூவராகிவிட்டான். முதலாம் எதிரி ஹக்மணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி. சமரநாயக்கா, இரண்டாம் எதிரி இரவுக்காவல் வேலைக்கு அவரால் அனுப்பப்பட்ட கழு பியதாஸ. மற்றும் மூவர் மூன்றாம், நான்காம், ஐந்தாம் எதிரிகள்.
விசாரணை காலி நீதிமன்றத்திற்கு வந்ததும் ஹக்மணை மக்கள் அங்கே திரளத்தொடங்கினார். தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்று முதலாம் எதிரி நீதியரசரிடம் முறையிட்டார். அவரது முறையீட்டை ஏற்றுக்கொண்டபின்னர் அந்த வழக்கு காலியிலிருந்து சற்று தொலைதூரத்திலிருந்த எங்கள் நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு வந்தது.![]()
நீதியரசர் ஓ.எஸ்.எம். செனவிரத்தின. அரசதரப்பு வழக்கறிஞர் கென்னத்செனவிரத்தின. எதிரிகளுக்காக ஆஜரானவர்கள் ‘ பெண்றி ’ சொய்ஸா என அழைக்கப்பட்ட புகழ்பெற்ற வழக்கறிஞர் ஏ.ஸி.டி. செய்ஸா, மற்றும் எஸ். எல்..குணசேகரா.
வீரகேசரியின் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் ஒரு சட்டத்தரணி. இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து வீரகேசரியிலும் மித்திரனிலும் பிரசுரிக்க விரும்பினார்.
ஏற்கனவே பல கொலை வழக்குகளின் விசாரணைகளினால் இந்த இரண்டு பத்திரிகைகளினதும் விற்பனை அதிகரித்ததை நன்கு அறிந்தவர்.
அப்பொழுது நான் நீர்கொழும்பு பிரதேச நிருபராக பணியிலிருந்தேன். செய்தி ஆசிரியர் ஊடாக எனக்கு கடிதம் அனுப்பி என்னை அலுவலகத்திற்கு அழைத்து, ஹக்மணை இரட்டைக்கொலைவழக்கு விசாரணையை தொடர்ந்து எழுதுமாறு பணித்தார். விடுமுறை நாட்கள் தவிர்ந்து அனைத்து நாட்களும் அந்த விசாரணை காலை முதல் மாலை வரை தொடரவிருப்பதனால் நீதிமன்றத்திற்கு தவறாது சமுகமளித்து உடனுக்குடன் செய்திகளைத்தரவேண்டும் என்றும் பணித்தார். தினமும் அந்த விசாரணைச்செய்திகளுக்காக போதிய இடம் இரண்டு பத்திரிகைகளிலும் ஒதுக்கப்பட்டிருக்கும் என்றும் சொன்னார்.
அத்தருணம், எனக்கு கொழும்பில் காலி முகத்தில் வீதி அகலமாக்கும் வேலையில் தொழிலாளர்களை கவனிக்கும் ஓவர்ஸீயர் பணி கிடைத்தது. எனது நிலைமையை ஆசிரியரிடம் விளக்கினேன்.
“ ஒரு நிருபர் வேண்டும்.. கொழும்பிலிருந்து இதற்காக ஒருவரை தினமும் அனுப்ப முடியாது. நீரே நீர்கொழும்பில் ஒரு நிருபரை
தெரிவுசெய்து தந்துவிட்டு, கொழும்பு காலி முக வேலையை ஏற்றுக்கொள்ளும்,” என்று சொன்னார்.
நீர்கொழும்பு திரும்பியதும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள நிருபரை தேடினேன். எனது மனக்கண்ணில் வந்தார் நண்பர் செல்லையா செல்வரத்தினம். அவர் அவ்வப்போது கவிதை எழுதுபவர். மல்லிகையிலும் எழுதியிருக்கிறார். எமது ஊரில் என்னுடைய மாணவப்பராயத்து தோழன். அவர் படித்துவிட்டு மேலதிக கல்விக்காக கொழும்பில் ஒரு தனியார்கல்லூரிக்கு விண்ணப்பித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரைச்சந்தித்து நிலைமையை சொன்னேன். அவர் சம்மதித்தார் உடனே சைக்கிளில் அழைத்துக்கொண்டு எமது குடும்ப நண்பர் டொக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் நடத்திய கிளினிக்குக்கு வந்தேன். அவரிடம் அனுமதி பெற்று அங்கிருந்த தொலைபேசியை பாவித்து கொழும்பில் வீரகேசரி, மித்திரன் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் அவர்களுக்கு செல்வரத்தினத்தை அறிமுகப்படுத்தினேன்.
அவரும் மறுநாள் கொழும்பு சென்று நீர்கொழும்பு நிருபருக்கான நியமனக்கடிதம் பெற்றார். நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பமாகியது. நான் காலி முகத்தில் வேலையை பொறுப்பேற்றேன்.
முதல்நாள் விசாரணையில் அரசதரப்பு வழக்குரைஞர் கென்னத் செனவிரத்தின எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கியவாறு, நீண்டதொரு தொகுப்புரையை நிகழ்த்தினார். மறுநாள் வீரகேசரியில் கடைசிப்பக்கம் முழுவதும் அந்த தொகுப்புரையே வெளியாகியிருந்தது.
‘இன்ஸ்பெக்டர், ஹாமுவின் டவலை இடுப்பில் கட்டியிருந்தார்’ என்று தலைப்பு. மேலும் சில சலசலப்பூட்டும் உப தலைப்புகள். இனி கேட்கவா வேண்டும் அபிமான வாசகர்கள் காலைகடனுக்கு முன்பே பத்திரிகைகளை வாங்கிப்படிக்கத்தொடங்கினர். ஹக்மணை இரட்டைக்கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
எனது கொழும்பு வேலை தற்காலிக அடிப்படையிலானது என்பதை அதில் இணைந்தபின்பே அறிந்தேன். காலி முகத்தின் புதிய வீதி வேகவேகமாக நீண்டதுபோன்று நீர்கொழும்பில் அந்த வழக்கு விசாரணையும் நீண்டது.
ஒரு கட்டத்தில் காலி முக வீதி புனரமைப்பு நிறைவு பெற்றது, நண்பர் செல்வரத்தினத்திற்கு கொழும்பு தனியார் கல்லூரி படிப்பு ஆரம்பமானது. எனக்கு இனி கொழும்பில் வேலை இல்லை. அவருக்கு கொழும்பில் படிப்பு ஆரம்பம்.
இருவரும் யோசித்து ஓரு முடிவுக்கு வந்தோம். குறைந்த ஊதியம் கிடைத்தாலும் பத்திரிகைப்பணியை கைவிட முடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தோம். அவருக்கு கல்லூரி நாட்கள் இருக்கும்போது நான் நீதிமன்றம் சென்று செய்திகளை குறிப்புகளாக எழுதுவது என்றும். அவர் மாலை வந்ததும் சந்தித்து எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் செய்தி எழுதி கொழும்புக்கு சேர்ப்பிப்பது. தொடர்ந்து துரிதமாக இயங்கினோம்.
எனது வாழ்நாளில் முதலும் கடைசியுமாக நான் நேரில் பார்த்த விசாரணைதான் அந்த ஹக்மணை இரட்டைக்கொலைவழக்கு.
சில ஜூரிமார்கள் தினமும் வருவார்கள். விசாரணை தொடரும். எதிர்தரப்பும் அரச தரப்பும் சில நாட்கள் சட்டப்பிரச்சினைகளை கிளப்பும். அப்பொழுது அந்த ஜூரிமாரை நீதியரசர் உள்ளே வேறு அறைக்கு அனுப்பிவிடுவார்.
கொலைச்சம்பவம் எப்படி நடந்தது என்பது மாத்திரம்தான் ஜூரிமாருக்கு தெரியவேண்டும். சட்டப்பிரச்சினைகள் அல்ல என்பது நீதிமன்ற விதிமுறைகள் என்பதை அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
சரத்ஹாமுவின் மனைவியும் முதலாம் எதிரியின் ஆசைநாயகியுமான அந்த ஆசிரியை தனது பெண்குழந்தையுடன் வந்து நீதிமன்ற பிரதம லிகிதரின் அறையில் இருப்பார். பல நாட்கள் கண்டிருக்கின்றோம்.
நீதிமன்ற குற்றவாளிக்கூண்டிலே முதலாம் எதிரி வெள்ளை நீளக்காற்சட்டையும் வெள்ளை சேர்ட்டும் டையும் அணிந்து காட்சி தருவார். மற்றவர்கள் சாரம் சேர்ட்டுடன் காட்சியளிப்பர்.
முதலாம் எதிரியின் கையில் ஒரு புத்தகம் எப்பொழுதும் இருக்கும். அதனுள்ளே ஒரு அரசமர இலை பழுப்பு நிறத்திலிருக்கும். அவ்வப்போது அதனை எடுத்து முகத்தில் முகர்ந்துகொள்ளுவார். அப்படித்தான் அவர் பாவ சங்கீர்த்தனம் செய்கிறார் எனப்புரிந்துகொள்வோம்.
அந்தக்குகூண்டுக்கு அருகில்தான் நிருபர்களுக்கான நீளமான மேசையும் ஆசனங்களும் இருந்தன. எதிரிகள் சிங்களத்தில் கூண்டுக்குள்ளிருந்து மெதுவாக பேசுவது சன்னமாகக்கேட்கும்.
தினமும் வழக்குவிசாரணை தொடங்கு முன்பே நாம் அங்கே பிரசன்னமாகிவிடுவோம்.
நீர்கொழும்பு சிறையிலிருந்து அந்த எதிரிகள் கைவிலங்குகளுடன் அழைத்துவரப்படுவார்கள். கூண்டுக்குள் வந்ததும் சிறை அதிகாரிகள் அந்த விலங்குகளை கழற்றிவிடுவார்கள்.
நான் அந்த எதிரிகளுக்கு ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் காலை வணக்கம் சொல்வேன்.
நானும் செல்வரத்தினமும் இணைந்து தமிழில் எழுதிய செய்திகளை தங்களினால் வாசிக்க முடியவில்லை என்பார்கள் அந்த எதிரிகள். ஆனால் ஆங்கில, சிங்கள நாளேடுகளில் வெளியானவற்றை அந்தந்த நிருபர்களிடம் வாங்கிப்படிப்பார்கள். தங்கள் பெயர் பத்திரிகைகளில் வெளிவரும் பெருமிதம் அவர்களின் முகத்தில் படிந்திருந்தது.
அவர்களுக்காக வாதாடும் சொய்ஸா பிரபலமான வழக்கறிஞர். இலங்கையில் முன்பொரு சந்தர்ப்பத்தில் நடந்த அரசைக்கவிழ்க்கும் புரட்சிச்சதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் பரம்பரையில் வந்தவர். அந்த வழக்கு தள்ளுபடியானது. அதனால் இந்த வழக்கிலும் தாங்கள் அனைவரும் விடுதலையாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.![]()
அரச தரப்பு வழக்கறிஞர் கென்னத் செனவிரத்தின, புலனாய்வுப்பிரிவினரின் ஆதாரங்களை வைத்துக்கொண்டு வாதாடினார்.
நாளுக்கு நாள் நீதிமன்றத்தில் பார்வையாளர்கள் அதிகரித்தனர். அனைவரும் அந்த ஆசைநாயகியை அரசதரப்பு வழக்கறிஞர் எப்போது ஆஜராக்கப்போகிறார்? என்ற ஆவலில் பல நாட்கள் காத்திருந்தனர். ஆனால், நிருபர்கள் உட்பட அனைத்துப்பொதுமக்களையும் சிறை அதிகாரிகளையும், உள்ளே அனுமதிக்காமலேயே அந்தப்பெண் சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் நீதியரசர் நடத்திவிட்டார்.
இது எல்லோருக்கும் பெரிய ஏமாற்றம்.
ஒருநாள் மதியபோசன இடைவேளையில், ஹக்மணையில் கொலைசெய்யப்பட்ட சரத்ஹாமுவின் வயோதிபத்தந்தையார் நீதிமன்றத்துக்கு வெளியே முன்றலில் என்னுடன் உரையாடினார்.
“ முடிவு எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.
“ சாட்சியங்கள் உறுதியாக இருப்பதுபோலத்தெரிகிறது. அதனால் எதிரிகள் தண்டனையை சந்திக்கக்கூடும்” என்றேன்.
“ என்ன தண்டனை அவர்களுக்கு கிடைத்தாலும் எனது அருமை மக்கள் இருவரும் திரும்பியா வரப்போகிறார்கள்.” என்று கண்ணீர் மல்க அவர் சொன்னபோது நெகிழ்ந்துபோனேன்.
நான் அவருக்கு ஆறுதல் சொன்னபோது, அவரிடமிருந்து வந்த வார்த்தைகள்தான் அவரை ஏறிட்டுப்பார்க்கவைத்தது.
“ பத்திரிகைக்காரங்களுக்கு நல்ல வருமானம். வருங்காலத்தில் இந்தக்கதையை நாவலாக அல்லது திரைப்படமாக எடுத்துவிடுவார்கள். ஆனால், எனது பிள்ளைகள் திரும்பி வரமாட்டார்கள்.”
அந்த வார்த்தைகள் சாட்டையாக விழுந்தன.
சில மாதங்கள் தொடர்ந்த அந்த விசாரணை ஒரு நாள்
மாலைப்பொழுதில் முடிவுக்கு வந்தது.
அன்றையதினத்தை வீரகேசரி ஆசிரியபீடம் எதிர்பார்த்து காத்திருந்தது. அன்று நண்பர் செல்வரத்தினமும் நீதிமன்றில் இருந்தார். நீதியரசர் தனது தீர்ப்பை வழங்கினார். அந்த மன்றில் அவரைத்தவிர அனைவரும் எழுந்துநின்றோம்.
மேடையில் அவரது மேசைக்கருகில் அமர்ந்து அதுநாள்வரையில் குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த நீதிமன்ற சுருக்கெழுத்து – தட்டெழுத்து பணியாளரான இளம் யுவதியும் அன்று எழுந்து நின்றே அந்தத்தீர்ப்பை எழுதினார். அவரது ஒரு கரம் கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டிருந்தது. தனது கரத்தினால் அப்படியொரு தீர்ப்பை எழுதநேர்ந்த துயரத்தில் அவர் விம்மினார். பார்க்கப்பாவமாக இருந்தது.
கூண்டுக்குள் நின்ற எதிரிகளின் முகம் உறைந்துவிட்டது. கூண்டுக்குள்ளிருந்து சன்னமான ஒரு குரல். “ மாத்தயா… இப்ப என்ன சொல்கிறீர்கள்? வெளியே நிற்கும் மரத்திலேயே எங்களை தொங்கவிடச்சொல்லுங்கள்” என்று முதலாம் எதிரி முன்னாள் பொலிஸ்பொறுப்பதிகாரி கே.டி.சமரநாயக்காவின் அருகிலிருந்த இரண்டாம் எதிரி கழுபியதாஸ சொல்கிறான்.
“ அமைதியாக இரு. அமைதியாக இரு” என்று சமரநாயக்கா சொல்கிறார்.
“எதிரிகள் அனைவருக்கும் மரணதண்டனை. அவர்களின் உயிர் அவர்களின் உடலில் இருந்து பிரியும் வரையில் அவர்கள் தூக்குக்கயிறில் இருக்கவேண்டும்” எனச்சொல்லி தீர்ப்பை வாசித்துவிட்டு நீதியரசர் எழுந்து பின்புறமுள்ள தனது அறைக்குள் பிரவேசிக்கின்றார்.
முதலாம் எதிரி தன்வசம் இருக்கும் புத்தகத்திலிருந்து அரசமர இலையை எடுத்து முகர்ந்துகொள்கிறார்.
இவர்களுக்காக அதுநாள்வரையில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் சொய்ஸா தீர்ப்பு வழங்கப்பட்ட அன்றைய தினம் நீதிமன்றுக்கு வரவில்லை. “தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும்” என்று சக நிருபர்கள் பேசிக்கொண்டார்கள்.
தீர்ப்பு வழங்கப்பட்டதும் கூண்டுக்கு அருகே ஓடிவந்தார் எதிரிகளின் மற்றுமொரு முக்கிய வழக்கறிஞர். அவர் எஸ். எல். குணசேகரா. அவர் தனது பொக்கட்டுக்குள்ளிருந்து இரண்டு சிகரட் பெட்டிகளை எடுத்து எதிரிகளிடம் நீட்டிவிட்டு ஏற்கனவே தட்டச்சில் தயாரிக்கப்பட்ட சில காகிதங்களில் எதிரிகளிடம் கையொப்பம் வாங்கினார்.
நிருபர்களைப்பார்த்து, “இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போகிறோம்” என்றார்.
“ எங்கே உங்களின் முதன்மை வழக்கறிஞர் சொய்ஸா?” என்று ஏக குரலில் கேட்டோம்.
“ அவர் அன்று காலை ஒரு அவசர வேலையாக லண்டனுக்கு பயணமாகிவிட்டார்”. என்ற பதில் வந்தது.
எதிரிகள் அனைவரும் சிறைச்சாலை வாகனத்தில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். நண்பர் செல்வரத்தினம் செய்தியுடன் கொழும்புக்கு பஸ் ஏறினார். மறுநாள் வீரகேசரியில் முன்பக்கத்தில் ‘ஹக்மணை இரட்டைக்கொலை வழக்கில் எதிரிகள் அனைவருக்கும் மரணதண்டனை’ என்ற பெரிய எழுத்து தலைப்புடன் விரிவான செய்தி வெளியானது.
……………
இத்துடன் இந்தச் சொல்ல மறந்த கதை முடிந்துவிட்டதா? என்று வாசகர்கள் யோசிக்கக்கூடும்.
எதிரிகள் கொழும்பில் மரணதண்டனைக்கைதிகளுடன் வைக்கப்பட்டார்கள். மேன்முறையீட்டு விசாரணை தாமதடைந்தது. 1977 இல் பொதுத்தேர்தல் நடந்தது. சரத்ஹாமுவின் உறவினர் என்று சொல்லப்பட்ட இடதுசாரி வேட்பாளர் ஏலியன் நாணயக்கார உட்பட அனைத்து இடதுசாரிகளும் அந்தத்தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். ஜே.ஆர். ஜயவர்தனா தலைமையிலான யூ.என்.பி. அந்தத்தேர்தலில் அமோக வெற்றியீட்டியது.
அதன்பின்னர் அந்த வழக்கு மேன்முறையீட்டுக்கு வந்தது. நீர்கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசரின் தீர்ப்பில் சில சட்டப்பிரச்சினைகள் சார்ந்த தவறுகள் இருப்பதனால் அனைத்து எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்ற செய்தி வெளியானது.
…….
இத்துடன் இந்தக்கதை முடிந்ததா…?
இல்லை…!
குறிப்பிட்ட முதலாம் எதிரிக்கு பொலிஸ் சேவையில் நிறுத்திவைக்கப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளுடனும் மீண்டும் பொலிஸ் அதிகாரி பதவி நியமனமும் கிடைத்தது.
……
இத்துடன் இந்தக்கதை முடிந்ததா…?
இல்லை….!
1977 இல் பதவிக்கு வந்த ஜே. ஆர். குற்றவியல் நீதி ஆணைக்குழுவை இரத்துச்செய்தார். அதனால் ஜே.வி. பி. தலைவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்புடன் விடுதலை கிடைத்தது. அவர்கள் தாம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலக்கப்போவதாகச்சொல்லிக்கொண்டு அடுத்து வந்த உள்ளுராட்சி மன்ற, மாவட்ட சபைத் தேர்தல்களிலும் ஜனாதிபதித்தேர்தலிலும் ஈடுபட்டார்கள்.
1983 இனக்கலவரத்தின் பழியை ஜே.வி.பி. யின் மீது சுமத்தி அதனை தடைசெய்தார் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. ஜே.வி. பி. தலைவர்கள் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார்கள்.
1987 இல் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜே.ஆரும், ராஜீவ் காந்தியும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அதனை தலைமறைவு இயக்கம் ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்து மீண்டும் தென்னிலங்கையில் கிளர்ச்சியில் ஈடுபட்டது. பலர் கொல்லப்பட்டார்கள்.
1971 காலப்பகுதியில் தனது சொந்த இச்சைக்காக எந்த இயக்கத்திற்கு களங்கம் கற்பித்துவிட்டு, இரண்டு படுகொலைகளின் சூத்திரதாரியாகியிருந்த அந்த பொலிஸ் அதிகாரி சமரநாயக்கா, சுமார் பதினாறு ஆண்டுகளின் பின்னர் அந்த இயக்கத்தினரால் எதிர்பாராதவிதமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச்செய்தி வெளியாவதற்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிலும் நண்பர் செல்வரத்தினம் பிரான்ஸுக்கும் எங்கள் பிரதம ஆசிரியர் கனடாவுக்கும் புலம்பெயர்ந்துவிட்டோம்.
சரத்ஹாமுவின் வயோதிப தந்தையாருக்கும் அந்தப்பெண்ணுக்கும் அவளின் குழந்தைக்கும் என்ன நடந்தது என்பது தெரியாது. இந்த ஆக்கத்திற்கு “துரோகம் துரத்தும்.” என்றும் தலைப்பிடலாமா?
—0—
![]()