கவிதைகள்
தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா!…. ( கவிதை ) ….. கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா.
தேர்தல் என்பது திருவிழா 

திரவியம் தேடும் பெருவிழா
வென்றால் பொக்கிஷம் நிச்சயம்
தோற்றால் பொக்கிஷம் அன்னியம் !
பொய்களே உண்மையாய் குவிந்திடும்
உண்மைகள் ஒதுங்கியே நின்றிடும்
கண்ணியம் காற்றிலே பறந்திடும்
கருத்துகள் மக்களை உலுக்கிடும் !
நல்லவர் தேர்தலில் வந்திடார்
வல்லவர் வாய்மையை கண்டிடார்
கள்ளமும் கபடமும் துள்ளிடும்
கயமைகள் கட்டிலில் அமர்ந்திடும் !
மக்களின் மனங்களில் மாயையை
இருத்திடும் வித்தையை அறிந்தவர்
மாநில முதல்வராய் வந்துமே
வாழ்ந்திடச் செல்வத்தை ஈட்டுவார் !
ஏழைகள் கண்களில் தென்படார்
வறுமையை மனமதில் கொண்டிடார்
வாழ்ந்திட வசதியைத் தேடுவார்
வரும்பொருள் மனமதில் எண்ணுவார் !
அதிகாரம் கைகளில் அமர்ந்திடும்

ஆணவம் சாமரை வீசிடும்
ஆதிக்கம் மட்டுமே பெருகிடும்
ஆட்சியில் அவர்சுகம் மலர்ந்திடும் !
தேர்தலால் நல்லன நடந்திட
நினைத்திடும் மக்களோ கலங்குவர்
தேர்தலில் வென்றவர் துள்ளுவார்
தினமுமே செல்வத்தை அள்ளுவார் !
![]()
திரு. ஜெயராம சர்மா ஐயா அவர்களின் தேர்தல் கவிதை தமிழக தேர்தல்கள நிலவரத்தை தோலுரித்து காட்டுகிறது. மாற்று அரசியல் வேண்டும் என்பதில்
ஒவ்வொருவர் கருத்து ஒவ்வொரு மாதிரி. ஒருவர் இனத்தைக் காக்க போட்டியிட்டால் மற்றவர் பணத்தைக் காக்க போட்டியிடுகிறார். இன்னும் பணம் சேர்க்க ஒருவர் போட்டியிட்டால் இனிமேலாவது பணம் சேர்க்கலாம் என்று ஒருவர் போட்டியிடுகிறார். தேர்தல் திருவிழாவில் ஒவ்வொருவரும் கடைவிரித்துள்ளனர். மக்கள் எதை வாங்கப்போகிறார்கள் எனபது அவரவர் தேவையை பொருத்தது. யாருக்கு எவ்வளவு வியாபாரம் ஆகிறது என்பது இல்கே கடையில் உள்ள பொருள், விற்பவரின் திறமை வாங்குபவர்களின் தேவை என்பதை பொருத்தது. இந்திய அரசியலிலேயே தமிழ் நாட்டு அரசியல் எப்போதுமே வித்தியாசமானது. ஐயா அவர்கள் கூறும் அத்தனையும் அங்கே காணக்கூடியதாகவே இருக்கிறது. ஏதாவது அதிசயமான மற்றும் அற்புதமான மாற்றம் நிகழ்கிறதா என்று பார்ப்போம்?