கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்…. 10 … (உண்மைக் கதை)…. ஏலையா க.முருகதாசன்

(காதலர்களுக்கு சார்பாக நின்று, லீடரை வாடி போடி என்று பேசியது மட்டுமல்ல தூசண வார்த்தைகளால் லீடரைப் பேசியதுடன் அடிக்கவும் எத்தனித்த அந்த இரத்தினம் என்பவர் யாரென்றால்; அந்த இளைஞன் வேலை செய்த அதே கப்பல் கட்டும் பராமரிக்கும் துறைமுகத்தில் வேலை செய்தவர்.இவர்தான் பின்னாட்களில் தேசியப் போராட்டத்தில் இணைந்து தனது ஊரின் பெயரையும் இணைத்து கவிஞராக மாறிய புதுவை இரத்தினதுரை அவர்களாகும்;.)

 

சனிக்கிழமை இரவு முழுவதும் ஒழுங்:கான நித்திரையில்லாததால் யோகமலருடன் காலையில் கதைச்ச மனநிலையால் மகிழ்ச்சியடைந்த நான் சுவையான ஆட்டு இறைச்சிக் கறியுடனும் கத்தரிக்காய் கறியுடனும் நிறைவாகச் சாப்பிட்டதால் நித்திரை தூக்கியடிச்சதால் கண்ணயர்ந்து கொண்டிருந்த வேளை என்னைத் தேடி யாரோ வந்திருப்பதாக அறை நண்பன் கனகேஸ்வரன் வந்து சொல்ல அரைகுறை மனதுடன் எழும்பி வந்து பார்த்த பொழுது எனது மச்சாளின் மகள் நிற்பதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தேன்.

இவள் தற்செயலாகத்தான் வந்தாளா அல்லது கோவிலில் யோகமலருடன் கண்டதைத் தோழிகள் சொல்லி அதைப் பற்:றி அறிந்து கொள்ள வந்தாளா எனப் பலவாறு சிந்தித்துக் கொண்டே அவளை கதிரையில் உட்காரச் சொன்னேன்.

„சித்தப்பாவின் நித்திரையைக் குழப்பிப் போட்டனோ „என்றவளிடம் „ச்சா…ச்சா நித்திரை கொள்ளவில்லை சும்மா படுத்திருந்தனான் „ என்று  பதில் சொன்ன நான்

„தேத்தண்ணி போடுறன் இரண்டு பேரும் குடிப்பம் என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் போனேன்.

„நானும் வாறன்… நான் போடுறன், என்று கதிரையை விட்டெழுந்தவள் என்னை உற்றுப் பார்த்தவள் „ ஏன் முகம் காய்ஞ்சு போயிருக்கு, இராத்திரி நித்திரை சரியாக் கொள்ளவில்லையோ „ என்றவள் பைப்பைத் திறந்து தண்ணீரை கைப்பிடிச் சட்டியில் எடுத்து காஸ்குக்கரில் வைத்தவள் காஸைப் போட்டுவிட்டு காஸ்குக்கர் இருந்த சீமெந்துக் கட்டோடு சரிந்து நின்றபடி, „ நேற்றுச் சனிக்கிழமை லீவு நாளுக்கு ஒரு இடமும் போகவில்லையோ „என்றாள்.

„நான் ஒரு இடமும் போகவில்லை, இரண்டு நாள்தானே லீவு நாள் றெஸ்ட் எடுப்பம் என்று றூமிலேயே இருந்திட்டன் என்றவுடன்’ ஓகோ அப்படியென்றால் என்னட்டை வந்திருக்கலாமே, ஏதாவது படத்துக்குப் போயிருக்கலாம் „ என்றவள் „ ஏன் சித்தப்பா இப்ப நீங்கள் என்னைத் தேடி வருவதில்லை, உங்களுக்கு வேறு சினேகிதங்கள் கிடைச்சிட்டுதோ „ என்றவள் தண்ணீர் கொதித்தபடியால், தேயிலைப் பைக்கற் இரண்டை எடுத்து, ஒரு சட்டியில் வைத்து சுடுதண்ணியை ஊற்றிப் போட்டு…..மெதுவாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, „ அம்மா கடிதம் போட்டிருந்தா மச்சானரின் சுகத்தையும் கேட்டு எழுதச்: சொன்னவா என்றவள் கதைப்பதை நிறுத்திவிட்டு, தேத்தண்ணிக்கு சீனி போட்டு ஆத்தியவள் இரண்டு கிளாஸ்களில் அதை ஊற்றி எடுத்து எனக்கொன்றைத் தந்துவிட்டு, மற்றதை எடுத்துக் கொண்டு மீண்டும் போய் கதிரையில் உட்கார்ந்தாள்.

எனக்கு தந்தைக்கு நேரடி உறவுகளாக மருமகள்கள் இருவரும் மருமகன்கள் மூவரும் இருக்கிறார்கள்.பெரிய மச்சாளுக்கு மூன்று ஆம்பிளைப் பிள்ளைகள் அவர்களுக்குக் கிட்டத்தட்ட எனது வயது இருக்கும்.

இவள் இரண்டாவது மச்சாளின் மூத்த மகள்.இவளும் காதலித்துத்தான் கல்யாணம் செய்தவள்.எனது சக வகுப்பு மாணவனாக இருந்தவனைத்தான் கல்யாணம் செய்தவள்.அவன் சீமெந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.அவனுக்கு மச்சாளின் மகள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்ததில் அவ்வளவு விருப்பமில்லை. அவளுக்கு நான் நேரடி இரத்த உறவு என்பதால் அவளுக்கு என்மீது பாசம் உண்டு.

பெரிய மச்சாளும் சின்ன மச்சாளும் என்னை மச்சானார் என்று உறவு முறை சொல்லி பாசத்தோடு அழைப்பவர்கள். அவர்களின் வீடுகளுக்குப் போகும் போது தேத்தண்ணி மட்டுமல்ல சில வேளைகளில் எள்ளுப்பாவும் உரலில் இடித்துத் தருவார்கள்.

பெரிய மச்சாள் தேத்தண்ணிளேயாடு வறுத்துப் பொரித்து இடித்த அரிசு மாவுடன் வறுத்து இடித்த உழுத்தம் மாவும் தேங்காய்ப்பூவுடன் குழைத்துத் தருவா.அப்புவை சின்னம்மான் என்று பாசத்தோடு அழைத்துப் பழகியவர்கள்.

அம்மா உயிரோடு இருக்கும் வரையும் கிழமைக்கு ஒருமுறையாவது இரண்டு மச்சாள் மாரும் சின்ன மாமி என்று படலையடியிலேயே கூப்பிட்டவாறு வருவார்கள்.அம்மாவும் அவர்கள் மீது அக்கறையானவர்.எனக்கு அவர்கள் குழைத்துத் தந்த போல அரிசி உழுந்து மாவுக்குள் தேங்காய்ப்பூ போட்டு குழைத்துக் கொடுப்பார் சில வேளைகளில் பொரி விளாங்காய் செய்து வைத்திருந்தால் கொடுப்பார்.

சின்ன மச்சாள் அடிக்கடி நகைச்சுவையாக சின்ன மச்சானாருக்கு என்னைவிட வயது குறைவாய் போச்சுது நான் கல்யாணம் செய்யேக்கை அவர் படிச்சுக் கொண்டிருந்தவர்.

என்ரை வயசென்றால் சின்ன மச்சானாரை நான் செய்திருப்பன் என்று சொல்லி வாய்விட்டுச் சிர்ப்பார். உறவு முறையில் மச்சாள்மாரின் பிள்ளைகள் தாயின் மச்சானைச்

சித்தப்பா என்றுதான் கூப்பிடுவார்கள்.அவளும் அப்படித்தான் கூப்பிட்டாள்.

பெரிய மச்சாளும் சின்ன மச்சாளும் எங்களில் வைத்த பாசத்தை எனது சுயசரிதையின் இன்னொரு பகுதியில் குறிப்பிட இருக்கிறேன்.

பெண் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதை அவதானித்த அடுத்த அறைப் பொடியங்களில் ஒருவரான இராஜரட்ணம் கட்டிலில் இருந்து குதிச்சு வந்து மச்சாளின் மகள் இருப்பதைக் கண்டதும்,மீண்டும் அறைக்குள் போய் இரகசியமான குரலில் பொஸ்ஸின்ரை மச்சாளின்ரை மகள் வந்திருக்கிறார் என்று சொல்லியவர் பொஸ்ஸின்ரை விசயம் தெரிஞ்சுதான் வந்திருக்கிறாப் போல அவர் வில்லங்கப்படப் போகிறார் என்பது எனக்கும் கேட்டதும், மச்சாளின்ரை மகளுக்கும் கேட்க அவள் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்து சிரித்தவள் தேத்தண்ணியைக் குடிச்சிட்டு உடுப்பை மாற்றிக் கொண்டு வாருங்கள் வெளியிலை போவமென்றாள்.

தேத்தண்ணியைக் குடிச்சு முடிச்ச நான் நித்திரை வெறியிலை இருந்த முகத்தை கழுவி உடுப்பு மாத்திக் கொண்டு அவளுடன் லிப்டில் சென்று நூறு மீற்றர் தூரத்திலிருந்த பூங்காவிற்கு போகும் வரை அவளும் எதுவும் பேசவில்லை.

ஆனால் என்னிடம் ஏதாவது கள்ளத்தனம் இருக்குதா எதையாவது மறைக்கிறேனா என்பதை அறிந்து கொள்ள அடிக்கடி ஓரக் கண்ணால் பார்த்து ஆராய்ஞ்சு கொண்டே வந்தாள்.

பூங்காவிற்கு கிட்டப் போகும் பொழுது நான் என்ன திடீரென்று…என்று முடிக்குமுன் „ ஏன் நான் வந்தது உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குது போல, நீங்கள் கனநாள் வரவில்லை, என்ன நடக்குது என்று பார்க்க வந்தனான், அம்மாவும் சின்ன மச்சானாரின் சுகம் கேட்டு எழுதியிருந்தார்

அதுதான் …என்றவளின் சொல்லின் தோரணையிலிருந்து அவள் ஏதோ ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தேன்.

பூங்காவில் ஒரு இருக்கையைப் பிடித்து உட்கார்ந்தோம்.திடீரென்று அப்ப நீங்கள் நேற்று ஒரு இடமும் போகாமல் வீட்டிலைதான் இருந்தனீங்கள் என்று சொல்ல வாறியள்….என்றவள் சித்தியின் கடிதங்கள் வருகுதானே நீங்களும் ஒழுங்காக போட்டுக் கொண்டிருக்கிறியள்தானே…என்றவளுக்கு ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் எனக்குக் கடிதம் வரும் நானும் ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் கடிதம் போடுவன் என்று சொன்னன்.

கொஞ்ச நேரம் எதுவுமே கதைக்காமல் இருந்தவள், அது சரி நேற்று சவுத் பிரிட்ஜ் றோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குப் போனீர்களாமே, நான் வீட்டிலை சும்மாதான் இருந்தனான், வந்து என்னையும் கூட்டிக் கொண்டு போயிருக்கலாமே என்றவள் வெள்ளிக்கிழமைகளில் அல்லது ஏதாவது விசேச தினங்களில்தான் கோவிலுக்குப் போவார்கள், அது என்ன சனிக்கிழமை போய் கோவில் கும்பிட்டது என்றவள் அது சரி யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கு நெற்றியிலை குங்குமப் பொட்டு வைச்சு விட்டியளாமே என்று அவள் கேள்வியால் துளைக்க நான் நிலைமையை சமாளிக்கவென நினைத்து, அந்தப் பிள்ளை என்னோடை வேலை செய்யிறவா வைச்சுவிடச் சொல்லி கேட்டுது …என்று இழுக்க சித்தப்பா புருசன்தான் பெண்சாதிக்கு குங்குமப் பொட்டு வைப்பவர்;, நீங்கள் அவளின்ரை புருசனா….நீங்கள் எதையோ மூடி மறைக்கிறீர்கள், பெரிய தப்பு பண்ணுறியள் என்றவள், அவள் நீங்கள்தான் தன்ரை புருசன் என்று என்னோடை வேலை செய்யிற கேர்ள் பிரண்ட்ஸ்சுக்கு சொன்னதுடன் நீங்களும் அவள்தான் எனது மலேசிய மனைவி என்றியளாமே எனக்கு ஒன்றுமே புரியவில்லை, அவள் உங்களை மருந்து போட்டு மயக்கி வைச்சிருக்கிறாள் போல என்று சொன்னதும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

„சும்மா தேவையில்லாமல் மனம் போனபடி கதைக்க வேண்டாம்.தான் உங்களை மயக்கி வைச்சிருக்கவில்லை என்று அவளே பலமுறை சொல்லியிருக்கிறாள்.ஏதோ அவளுக்கு என்னிலை ஒரு விருப்பம் அவ்வளவுதான் என பலவீனமான பதிலைச் சொன்னன்.

அடுத்து அவள் சொன்னதுதான் எனக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது. உங்களுக்குத் தேவையென்றால் அவளை வைப்பாட்டியாக வைச்சிருங்கள்.பெண்சாதி அது இது என்று சொல்லி கேவலப்படாதீங்கள் இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியவில்லை என்ற போது அவளுக்கு இரண்டு சாத்து சாத்தினாள் என்னவென்று எனது கைநரம்புகள் புடைத்தன.ஆனால் யோகமலரின் நிலை என்ன என்பதை இவளுக்கு விளங்கப்படுத்துவது வீண் என்று பேசாமல் இருந்துவிட்டன்.

சில நிமிடங்கள் வரை இருவரும் எதுவும் பேசவில்லை.அவளே அதிலை இருக்கிற கோப்பிக் கடையிலை கேக்கும் சாப்பிட்டிட்டு கோப்பியும் குடிப்போமா என்று கேட்க அவளோடை முண்டக்கூடாது என்று நினைத்து அவளுடன் எதுவுமே பேசாமல் எழுந்து போனன்.

கேக்குக்கும் கோப்பிக்கும் நானே ஓடர் பண்ணினன்.மச்சானார் இஞ்சை ஒரு பெண்சாதியுடன் இருக்கிறார் என்று அம்மாவுக்கு கடிதம் எழுதட்டா என்றவள் …நான் எழுத மாட்டன் என்றவள் வாற சனிக்கிழமையும் கோவிலுக்குப் போவியளோ…என்று நக்கலாக கேட்டவள், சித்தப்பா வாற சனிக்கிழமை படத்துக்கு போவம் மறக்க வேண்டாம் என்றவள் பிறகு எதுவுமே பேசவில்லை.

வாற சனிக்கிழமையும் யோகமலர் வருவதாகச் சொன்னாளே இவள் படத்துக்குப் போவம் என்கிறாளே என நான் குழம்பிப் போனன்.சரி யோகமலரையும் கூட்டிக் கொண்டு படத்துக்குப் போவம் என்று தற்காலிகமாக முடிவெடுத்தன்.

நான் அமைதியாக கேக்கைச் சாப்பிட்டு கோப்பியைக் குடித்துக் கொண்டிருந்தன் கதைப்பதற்கு எதவுமே இல்லை.என்ன மௌனமாக இருக்கிறியள் என்றாள்.அதற்கும் நான் பதில் சொல்லவில்லை.சங்கடமான மனநிலை எனக்கு.

அந்த நேரம் பார்த்து எதிர்பில்டிங் பிள்ளைகளின்ரை லீடர் பேக்கரிக்கு பாண் வாங்க வந்தவர் எங்கள் இரண்டு பேரையும் கண்டுவிட்டு உள்ளே வந்தவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார்.மச்சாளின் மகளை அவருக்கு ஏற்கனவே தெரியுமாதலால், அண்ணை ஒரு விசயம் கேள்விப்பட்டனான்,சனங்கள் சும்மாவும் கதைக்கும் என்று லீடர் தொடங்க, பாத்தியளே சித்தப்பா உங்கடை விசயந்தான் இப்ப தலைப்புச் செய்தி என்று அவள் சொல்ல மெய்யே அண்ணை நான் கேள்விப்பட்டது உண்மையா என்ற லீடர் நான் சொன்னவைக்குச் சொன்னன் அண்ணை அப்படிப்பட்டவர் இல்லையென்று…அண்ணை நீங்கள் கவலைப்படாதையுங்கோ …சனத்துக்கு வேற வேலை ..இல்லை என்றவள் பாணை வாங்கிக் கொண்டு போய்விட்டாள்.

என்னை நிமிர்ந்து பார்த்தவள் „பார்த்தியளே சித்தப்பா …எவ்வளவு நம்பிக்கை வைச்சிருக்கினம் என்றவள்…..கேக் சாப்பிட்டு முடிந்து கோப்பியையும் குடிச்சு முடிச்சவள்…சரி சித்தப்பா நான் வாறன் என்று எழுந்தவளை பேக்கரிக்காரருக்கு காசைக் கொடுத்துவிட்டு அவளை பஸ் ஸ்ராண்ட் வரையும் கூட்டிக் கொண்டு போகும் போது…கவனமாயிருங்கோ….முகமெல்லாம் காய்ஞ்சு போச்சுது …தேவையற்ற வேலையொன்றும் பார்க்காதையுங்கோ…அம்மாவும் சித்தியிட்டை போறவாவாம்…சித்தியும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு அம்மாவிடம் வாறவாவாம்…நீங்கள் அம்மாவின்ரை மச்சான்…எங்கள் இரண்டு பேற்றை உடம்பிலையும் ஓடுறது ஒரே இரத்தம்….அதுதான் கவலையாயிருக்கு….யோசிக்காமல் நேரத்தோடு சாப்பிட்டிட்டு படுங்கள்…வாற சனிக்கிழமை

காலை ஒன்பது மணிக்கு வெளிக்கிட்டு நிற்பன் …..வீட்டை வாங்கோ அங்கையிருந்து படத்துக்கு போவம் என்று சொல்லும் போதே பஸ் வர …அவள் பஸ்ஸில் ஏறி உட்கார பஸ் புறப்பட அவள் கைகாட்ட நானும் அந்த இடத்தைவிட்டு புறப்பட்டன்.

யோகமலர் பின்னேரமும் ரெலிபோன் எடுங்கள் என்று சொல்லியதால்,பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் இருந்த பொது ரெலிபோன் நிலையத்திலிருந்து அவளுக்கு ரெலிபோன் எடுத்தன்.

நான் உங்க ரெலிபோனைத்தாங்க எதிர்பார்த்திட்டு இருந்தேங்;க எடுக்க ஏன் லேட்டாயிடுச்சு என்றாள்.எனது மச்சாளின் மகள் திடீரென்று வந்த விசயத்தைச் சொன்னேன்.புரியுதுங்க நேற்று கோவில்ல அவோட பிரண்ட்ஸ் பார்தாங்க அல்லவா அதுதான் நியூஸ் அறிய வந்திருக்காங்க, ஆமா என்ன பேசினாங்க என்றாள்.நாளைக்குச் சொல்றேனே என்றன்.

சரிங்க அவங்க என்ன சொல்லியிருப்பாங்க என்னு எனக்குப் புரியுமுங்க,மலேசியாக்காரி மருந்து போட்டு மயக்கிட்டாள் என்றும் சொல்லியிருப்பாங்க…நீங்க அவ சொன்னதை நினைச்சு மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க எல்லாம் நம்ம விதிப்படித்தாங்க நடக்கும் நிம்மதியா தூங்கிட்டு நாளைக்கு பிறஸ்ஸாக வேலக்கு வாங்க ..சரிங்க நா வைக்கிறன்…பொறுங்க இரவுச் சாப்பாடு ரூமிலதானே என்றவளுக்கு இரவு றொட்டி சுட்டுச் சாப்பிடப் போகிறோம் என்று சொல்ல…சரிங்க என்று சொல்லி ரெலிபோனை வைச்சாள்.

அவளுக்கு ரெலிபோன் செய்ததற்குப் பிறகு அங்கிருந்து வந்து எனது பில்டிங் லிப்டில் ஏறி எனது மாடி நடை விறாந்தாவில் எனது அறையை நோக்கி நடந்து கொண்டே எதிர் பில்டிங்கை பார்த்தன்.

மூன்று பொம்பிளைப் பிள்ளையளும் லீடரும் விரலைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல இருந்தது. என்னைக் கண்ட லீடர் இரண்டு கைகளையும் அவசரமாக வாருங்கள் என்பது போல காட்ட நான் மீண்டும் லிப்டடிக்கு போய் லிப்டில் கீழே இறங்கி எதிர் பில்டிங்கடிக்குப் போய் லிப்டில் ஏறி அவர்கள் இருந்த மாடிக்குப் போகும் போது என்னவாக இருக்கும் எதற்காக லீடர் அவசரமாக வரச் சொன்னவர் என்ற யோசனையுடன் போன எனக்கு…ஒருவேளை எல்லாப் பிள்ளையளுக்கும் என்ரை விசயம் தெரிஞ்சு போச்சோ…என்ற நினைத்துக் கொண்டு போக அங்கே…

அங்கேயும் காதல் விவகாரந்தான்.அங்குள்ள ஒரு பொம்பிளைப் பிள்ளைக்கும் சிறீலங்காவிலிருந்து வந்து சிங்கப்பூர்; கப்பல் கட்டும் பராமரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞனுக்கும் இடையில் உள்ள காதல் பிரச்சினைதான் வாக்குவாதமாக வெடிச்சுக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு வகையில் எங்கேயோ சந்தித்த போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அந்த இளைஞன் தனது காதலியை அவளின் அறைக்கு வந்து சந்திப்பது மற்றைய பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதால் அதை லீடர் விரும்பவில்லை.

அதுமட்டுமல்ல அந்தப் பொம்பிளைப் பிள்ளை அந்த இளைஞனை தனது பில்டிங்க்கு கீழே போய் சந்திப்பதையும் லீடர் விரும்பவில்லை.அதே வேளை இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்தும் வந்திருக்கிறது.

அந்தப் பொம்பிளைப் பிள்ளை லீடர் தன்னோடு முரண்படுகிறார் என்று சொன்னதைக் கேட்டு லீடர் என்னை அழைத்த அந்த நேரத்தில் இளைஞன் இரத்தினம் என்பவரையும் கூட்டிக் கொண்டு வர இரத்தினம் என்பவர் லீடரோடு வாக்குவாதப்பட்டது மட்டுமல்ல, லீடரை „வாடி கீழே

என்று சொன்னதுடன் அவரை தூசண வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

காதலர்களுக்கு சார்பாக நின்று லீடரை வாடி போடி என்று பேசியது மட்டுமல்ல தூசண வார்த்தைகளால் லீடரைப் பேசியதுடன் அடிக்கவும் எத்தனித்த அந்த இரத்தினம் என்பவர் யாரென்றால் அந்த இளைஞன் வேலை செய்த அதே கப்பல் கட்டும் பராமரிக்கும் துறைமுகத்தில் வேலை செய்தவர்.இவர்தான் பின்னாட்களில் தேசியப் போராட்டத்தில் இணைந்து தனது ஊரின் பெயரையும் இணைத்து கவிஞராக மாறிய புதுவை இரத்தினதுரை அவர்களாகும்;.

அந்தக் காதலர்கள் திருமணம் செய்து ஜேர்மனியில் இருக்கிறார்கள்.அந்தப் பொம்பிளைப் பிள்ளையின் தமையனும், அவருடன் இருந்த இன்னொரு பொம்பிளைப் பிள்ளையைக் காதலிச்சுக் கல்யாணம் செய்து அவரும் ஜேர்மனியில்தானிருக்கிறார்கள்.

லீடர் வரச் சொல்லி நான் அங்கே போனபோது, லீடர்’ அண்ணை இரத்தினம் என்ற கட்டையன் மோட்டார் சைக்கிளில் வந்து பில்டிங்கு கீழே நின்று என்னைக் கண்டபடி தூசணத்தால் பேசிக் கொண்டிருக்கிறான் அடிக்கப் போறன் என்கிறான் என்று சொன்னாள்.

லீடர் சொன்னதும் எட்டிப் பார்த்தேன் அங்கே மோட்டார் சைக்கிளுடன் இருவர் நிற்பது தெரிந்தது.நான்பார்த்த போது வெளியே நின்று வாக்குவாதப்பட்ட அந்தப் பொம்பிளைப் பிள்ளையும் அவருக்குப் பின்னாட்களில் மைத்துனியாக வந்தவரும் நான் போகும் போது அறைக்குள் இருந்து லீடருக்கெதிராக சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

நான் விபரத்தைக் கேட்டதும் லீடர் இவளாலை மற்றப் பிள்ளைகளுக்கும் கெட்ட பெயர் வரப் போகுது என்றார்.

நான் மெதுவாகச் சொன்னன் இதைப் பிரச்சனைப்படுத்த வேண்டாம்.ஆனால் இரத்தினம் என்ற அந்த ஆள் உங்களைக் கண்டபடி கதைச்சது பிழைதான் என்றன்.

இரு சோடிக் காதலர்களும் திருமணம் செய்து ஜேர்மனிக்கு வந்திருந்தார்கள்.அவர்களை எனக்கு நன்கு தெரியும்.அவர்களில் அந்தப் பொம்பிளைப் பிள்ளையின் தமையனின் குடும்பம் எனது நகரத்திலேயே பல ஆண்டுகளாகவிருந்தவர்கள்.

அந்தப் பொம்பிளைப் பிள்ளையின் தமையன் வீட்டுக்குப் போன போது அவரின் மனைவி, ; ஊரில் யாருடையதோ கல்யாண வீட்டில் லீடர் இருந்த படத்தைக் காட்டி அண்ணை உங்கடை ஆள் இந்தப் படத்தில் இருக்கிறார் என்று பொருள் பதிந்த சிரிப்புச் சிரிக்க யாரைச் சொல்கிறீர்கள் என்று நான் கேட்க லீடரின் பெயரைச் சொல்லி மஞ்சள் சாறியோடு இருப்பவர்தான் என்றார்.

நானும் உற்றுப் பார்த்:தேன் லீடர்தான்.ஆனால் லீடர் மேல் உள்ள கோபம் தீரவில்லையென்பது „லீடரைப் பற்றி அலட்சியமாகச் சொன்னதிலிருந்தே தெரிய வந்தது.அவரைப் பற்றிச் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காதே என்றார்.

எனக்கு ஏன் கோபம் வருகுது என்றேன், எங்களுக்கும் எல்லாம் தெரியுமென்றார்.என்ன தெரியுமென்றன்……சரி…சரி விடுங்கள் என்றார்.

கதையைத் தொடக்கியதும் அவர் நிறுத்தச் சொன்னதும் அவர். நானும் அதனைத் தொடர விரும்பவில்லை…

லீடரிடம் சொன்னன் „நீங்கள் இதைத் தலையில் போட்டு மண்டையைக் குழப்ப வேண்டாம்.தமையன் தங்கச்சியாரைப் பார்க்க வருகிற போது சொல்லுங்கள் என்றேன்.

தங்கச்சியாரைப் பார்க்க வந்த தமையனுக்கு தங்கச்சியாரின் சினேகிதியுடன் காதல் ஏற்பட்டதால், „தமையனிடம் சொன்னனான் ஆனால் அவர் தங்கச்சியாரைக் கண்டிக்கவில்லை என்னோடை வாக்குவாதப்பட்டவர் என்றார்; லீடர்.

அப்படியென்றால் நீங்கள் எது நடந்தாலும் நடக்கட்டும் என்று பேசாமல் இருங்கள் என்று சொல்லிவிட்டு எனது அறைக்கு வந்துவிட்டன்.

அன்றிரவும் நித்திரைவர நேரஞ் சென்றது.மச்சாளின் மகள் அடுத்த சனிக்கிழமை படத்துக்குப் போக வேணும் என்று சொல்லிவிடடுபு; போய்விட்டாள்.நான் தயங்கினாலோ வேறு காரணத்தைச் சொன்னாலோ அவள் உடனடியாக தாய்க்கு எனது நிலவரத்தை எழுத வாய்ப்புண்டு.

யோகமலரும் என்எம்பி பக்ரறிக்குப் போகும் வரைக்கும் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்களிட்டை வருவன் என்று சொல்லிவிட்டாள்.நாளைக்கு யோகமலரைச் சந்திக்கும் போது மச்சாளின் மகள் வந்து சந்திச்சுக் கதைச்சதைச் சொல்லி அவளையும் படத்துக்கு கூட்டிக் கொண்டு போக வேணுமென்று முடிவெடுத்தன்.எனது வாழ்க்கையில் நான் எதிர்பாரத விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *