கவிதைகள்
நுண் அறிவாய் விரி முதலே!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

நீள் விசும்பாய் நீள் நிலமாய்
ஆழ் கடலில் ஆணி முத்தாய்
வீழ் மழையாய் வெந் தீயாய்
ஊழ் அறுக்கும் உயர் பொருளாய்
வாழ் வளிக்கும் மா மருந்தாய்
வள மளிக்கும் பெரு நிதியாய்
நோய் அகற்றும் மருத் துவனாய்
நுண் அறிவாய் விரி முதலே !
கல் ஆனாய் கடல் ஆனாய்
காற் றானாய் காடா னாய்
புல் லானாய் புழு வானாய்
புல னெல்லாம் நீ யானாய்
நெல் ஆனாய் மணி ஆனாய்
நீர் அதனுள் சுவை ஆனாய்
எல்லா மாய் ஆகி நின்றாய்
இறப் பிறப்பை அறு முதலே !
சொல் ஆனாய் பொருள் ஆனாய்
சுவை நல்கும் இசை ஆனாய்
வில் லானாய் கணை யானாய்
வினை அகற்றும் விறல் ஆனாய்
யாழ் ஆனாய் குழல் ஆனாய்
நற் சுரமாய் ஆகி நின்றாய்
வேல் ஆனாய் வாள் ஆனாய்
வெறி அடக்கும் முதல் ஆனாய் !
![]()