கவிதைகள்

உன்கருணை மழைபொழிந்து உளம்மாற்று தாயே!…… ( கவிதை )….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கல்வியொடு செல்வம் தரவேண்டும் தாயே
கசடகல என்றும் துணையாவாய்  தாயே
உள்ளமதில் என்று முறுதிநிறை தாயே
உன்கமல பாதம் துணையெனக்கு  தாயே 

 

வாய்மையுடன் வாழ வரமருள வேண்டும்
வாழும்வரை நோய்கள் வராதிருக்க வேண்டும்
தாழ்வு மனப்பாங்கு தளர்ந்துவிட வேண்டும்
தாயே உன்பாதம் சரணடைந்தேன் அம்மா

 

வாதமது செய்யும் மனமகல வேண்டும்
போதைநிறை எண்ணம் பொசுங்கிவிட வேண்டும்
காதலுடன் வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும்
கருணையுடன் என்னைக் காத்திடுவாய்  தாயே
 
 
ஆசையெனும் தீயை அணைத்துவிடு தாயே
அகந்தையெனும் பேயை அழித்துவிடு தாயே 
பாசமெனும் உணர்வை நிறைத்துவிடு தாயே 
பக்தியுடன் உன்னைப் பரவிவிட அருள்தா 
 
 
அகவொழுக்கம் அமைய அருளிவிடு அம்மா
அறமதனை மனதில் நிறைத்துவிடு அம்மா 
குறைபகரும் குணத்தை கொன்றிடுவாய் அம்மா
குவலயத்தை நாளும் காத்திடுவாய் அம்மா 
 
 
முத்தமிழும் எனக்கு தந்திடுவாய் தாயே                         
முழுநிலவாய் நீயும் விளங்குகிறாய் தாயே
அத்தனைக்கும் காரணமாய் ஆகுகிறாய் தாயே
அடைக்கலமே தந்துவிடு அம்மாவே நீயும் 
 
 
அலைபாயும் மனமகல அம்மா பாராய்
நிலையான செல்வமதை நீயெனக்குத் தாராய்
உலைபோல கொதிக்கிறது மனமென்றும் தாயே
உன்கருணை மழைபொழிந்து உளம்மாற்று தாயே 
 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *