வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ!… ( கவிதை ) … கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

நீரிடை மீனும் நெடுங்கான மானும்
பாரிடை முயலும் பறந்திடு புறாவும்
ஆடிடும் மயிலும் அழைத்திடும் கிளியும்
பாடிடும் குயிலும் பரவசம் அன்றோ !
பூத்திடு மலரும் புலர்ந்திடு பொழுதும்
காத்திடு வரவும் கண்டிடு கனவும்
கேட்டிடும் இசையும் கிளர்தெழும் உணர்வும்
கூட்டிடும் நிலையும் குதூகலம் அன்றோ !
பலாவது சுளையும் பசுவது பாலும்
பாகொடு கலந்த பருப்புள உணவும்
நிலாவது வரவும் நெருங்கிய துணையும்
அமைந்திடு நிலமை ஆனந்தம் அன்றோ !
நிறைந்திடு தென்னை நெருங்கிடு கமுகு
வளர்ந்திடு மூங்கில் வாய்த்த நல்காணி
ஓடிடும் அருவி உரசிடும் தென்றல்
வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ ! ![]()
பாட்டியின் கதையும் ஊட்டிய உணவும்
ஆட்டிய தொட்டிலும் அம்மாவின் இசையும்
தோழினில் தூக்கிய அப்பாவின் பரிவும்
வாழ்வினில் வசந்தம் சேர்த்திடும் அன்றோ !
![]()