கவிதைகள்
புன் நகையே அழகாகும்!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கழுத்தில் நகை போடலாம்
கையில் நகை போடலாம் 
கண்ட இடத்தி லெல்லாம்
கணக் கின்றி போடலாம்
எங்கு நகை போட்டாலும்
புன்நகைதான் பெரும் நகையே
பொன் நகையை புறந்தள்ளி
புன் நகையே சிறப்பளிக்கும் !
பட்டம் பல பெற்றிடுவார்
பதவி பல வகித்திடுவார்
திட்டம் போட்டுச் சொத்துக்களை
சேர்த்து நிற்பார் பலவழியில்
எத்தனைதான் பெற்று மவர்
புன்நகையை தொலைத்து நின்றால்
மொத்த உள்ள அவர்வாழ்வு
முழுமை அற்றே போகுமன்றோ !
சேதாரமில்லை செலவழிப்பு ஏதுமில்லை
ஆதாயம் என்று எண்ணி
அதிக பணம் இதற்குவேண்டாம்
நாள் முழுக்க உழைத்தாலும்
நல்ல சொத்துச் சேர்த்தாலும்
ஆள் முகத்தில் புன்னகையே
அவர் சொத்தாய் ஆகுமன்றோ !
பிரசங்கம் பல செய்வார்
பிறர் பார்க்கப் புன்னகையார்
அறம் பற்றி பலவற்றை
அடுக்காக எடுத் துரைப்பார்
முகம் தன்னைக் கடுகடுப்பாய்
நாள் முழுக்க வைத்திருப்பார்
நிலமீது இவர் வாழ்வு
நிறை வதனை இழந்துவிடும் ! 

என்ன நகை போட்டாலும்
எம் அழகைக் காட்டுதற்கு
புன் நகையை விட்டுவிட்டால்
பொருந்தும் நகை ஏதுமுண்டோ
நல்ல நகை புன்னகையை
நாம் என்றும் வைத்திருந்தால்
நாம் வாழும் வாழ்வெமக்கு
நாநிலத்தில் சொர்க்க மன்றோ !
![]()