சாமானியனின் சரடு…சரடு!…10 ….. ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

இன்னும் இரண்டு தினங்களில் பெண்பார்க்க அம்மாவுடன் மதுரை செல்ல வேண்டும். அம்மா அதற்குண்டான ஏற்பாடுகள் எல்லாவற்றியும் பார்த்து வந்தார்கள். அன்று புதன்கிழமை. வெள்ளியன்று இரவு பேருந்தில் மதுரைசெல்ல வேண்டும். அன்றிரவு நெஞ்சு வலிப்பதாக அம்மா சொன்னார்கள். உடனே
பெங்களூர் அலசூர் கேம்பிரிட்ஜ் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையான அசோக் மருத்துவமனையில் சேர்த்தேன். சிகிச்சை தொடர்ந்தது. உறவினர் ஒருவரை உதவிக்கு வைத்துவிட்டு வியாழக்கிழமை காலையில் வேலைக்கு சென்றுவிட்டேன்.
காலை பதினொரு மணியளவில் எனது நண்பர்கள் என்னை வேலைசெய்யும் இடத்தில் இருந்து அவசரமாக வீட்டுக்கு போகவேண்டும் என்று சொல்லி வெளியே அழைத்து வந்தார்கள். மெதுவாக என்னிடம் எனது தாயார் இறந்து விட்டதாக சொன்னார்கள். என் காலடியில் இருந்த தரை என்னைவிட்டு விலகிச் சென்றதை மட்டும் உணர்ந்தேன். மாலை மூன்றுமணி இருக்கும். உயிரற்றிருந்த அம்மாவை தகனம் செய்யும் ஏற்பாடுகளை உறவினர்களும் நண்பர்களும் செய்து கொண்டிருந்தார்கள். அழதழுது கண்ணீர் வற்றி தொண்டையும் வரண்டிருந்தது.
அம்மாவின் உடல் லால்பாக் அருகேயுள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறநாள் காலை மின்மயானத்தில் அஸ்தியை வாங்கிக்கொண்டு நாலைந்துபேர் ஒருவாகனத்தில் மைசூர் சென்றோம். அங்கே போகும்வழியிலுள்ள ஶ்ரீரங்கபட்டிணத்தில் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். அதேசமயம் பகல் பதினொரு மணி இருக்கும் அலசூரிலுள்ள என் வீட்டில் ஒரு விசித்திரம் நடைபெற்றது.
நாங்கள் இருந்த காம்பவுண்டில் கீழே மூன்று குடும்பங்கள் மேலே மூன்று குடுடம்பங்களென வாடகைக்கு இருந்தோம். கீழேயுள்ள என் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் என் உறவினர் இருந்தனர். அவ்வீட்டில் பதினான்கு வயதில் ஒரு பருவமடைந்த பெண் தாத்தா பாட்டி மாமா என்று நால்வர் வசித்து வந்தனர். அப்பெண் மிகவும் கூச்ச சுபாவமுடையவள். நான் அப்பெண்ணுக்கு மாமா முறை. ஆனால் என்னிடம் அவ்வளவாகப் பேசியதில்லை. என் தலையைப் பார்த்தாலே வீட்டுக்குள் ஓடிவிடும் பெண் அவள். என் எதிரே வரமாட்டாள். நான் வீட்டில் இல்லாத சமயம் என்அம்மாவுடன் வந்து பேசிக்கொண்டிருக்கும் பெண் நான் வீட்டுக்கு வந்தவுடன் ஓடிவிடுவாள்.
அப்படிப்பட்ட பெண் நாங்கள் மைசூர் சென்று கொண்டிருக்கும்போது எனது தாயாரின் குரலில் “சங்கரா…சங்கரா…” என்று என்னை பெயர்சொல்லி அழைத்திருக்கிறாள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. என் முன் நிற்கக்கூட முடியாமல் வெட்கப்பட்டு மறையும் பெண் என் பெயரைச்சொல்லி என்தாயாரின் குரலில் கூப்பிடுகிறதே என்ற ஆச்சரியம் எல்லோரும் திகைத்து நின்றிருக்கிறார்கள். யாரும் எதுவும் சொல்லாததால் திரும்பவும் என் பெயரைச்சொல்லி கூப்பிட்டிருக்கிறாள். சிலருக்கு பயம் சிலருக்கு ஆச்சரியம். துணிந்த சிலர் அவன் மைசூர் சென்றிருக்கிறான் அவன் இப்போது இங்கில்லை என்றிருக்கின்றனர். அதற்கு அப்பெண் மீண்டும் என் தாயார் குரலில் பேசியிருக்கிறாள்.
அப்பெண் கூறியது அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதாவது அப்பெண் மீண்டும் நாளை இதே நேரத்தில் வருவதாகவும் என்னை வீட்டிலேயே இருக்கச் சொன்னதாகவும் சொல்லிவிட்டு அமைதியானாள். அதன்பின் அவள் குரலிலேயே பேசியிருக்கிறாள். அவளிடம் நடந்ததையெல்லாம் சொல்லி கேட்டதற்கு நடந்தது ஒன்றும் தெரியாதென்றாள். அது எப்படி நான் மாமாவின் எதிரிலேயே வராதவள் எப்படி பெயரை சொல்லி அழைத்திருப்பேன் என்று கேட்டிருக்கிறாள். ஶ்ரீரங்கப்பட்டணத்தில் காவிரி சங்கமத்தில் அம்மாவின் அஸ்தியை கரைத்துவிட்டு மாலை வீடு திரும்மிய எங்களுக்கு இச்செய்தி வியப்பாக இருந்ததுடன் நான் திரும்பவும் அழத்தொடங்கினேன்.
இச்செய்தி காட்டுத்தீ போல் பரவ மறுநாள் என் வீட்டின்முன் ஏகப்பட்ட கூட்டம். இங்கிருப்பது போல் அப்போது அங்கிருந்திருந்தால் தொலைக்காட்சிகளெல்லாம் இருந்து
வந்திருப்பர். எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்க நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சிலர் அந்த பெண் சொன்னதையெல்லாம் நம்ப முடியுமா என்று சொல்லிக்கொண்டே அவர்களும் காத்திருந்தனர். அது அப்படி எல்லாம் அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து வராது என்றனர். ஆனால் பதினொருமணியாகி சில நிமிடங்களில் அப்பெண் என் அம்மாவின் குரலில் என்னை பெயர்சொல்லி அழைத்தாள். எனக்கு நான் அன்றிருந்த மனநிலையில் அம்மா அழைப்பதாகவே தோன்றியது.
நானும் பதிலுக்கு என்னம்மா என்று அழுதுகொண்டே கேட்டேன். அப்பெண் குரலில் அம்மா என்னை அழாதே என்றார்கள். பின், மதுரைக்கு செல் நாம் போகவிருந்த பெண்வீட்டுக்கு செல். அந்த பெண்ணைக்கேட்டு வேறு மாப்பிள்ளை வீட்டாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் போய்க் கேளுங்கள். உனக்குத்தான் அப்பெண்ணைக் கொடுப்பார்கள். அப்பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று அப்பெண்ணின் வழியாக சொல்லிவிட்டு செல்லவும் அப்பெண் திரும்பவும் எதுவும் நடவாதது அதளது சொந்தக்குரலுக்கு திரும்பினாள். இது ஒன்றுதான் எனக்கு புரியாத புதிராக உள்ளது. என் அம்மா ஆவியாக வந்தார்களா? இறந்தவர்களின் ஆவி அப்படி வருமா? உங்களின் யூகத்துக்கே இதைவிடுகிறேன்.
அம்மா இறந்து சிலமாதங்கள் ஓடின. நான் என் அண்ணா மற்றும் சில உறவினர்களுடன் மதுரை சென்றேன். ஏற்கனவே குறிப்பிட்ட நாளில்
வரமுடியாமல் போனதற்கு காரணத்தை கூறியிருந்தோம். பெண் பார்க்க வரவிருந்தபோதே அம்மா இறந்து போனதால் அதை சரியான சகுணமில்லை என சொல்லி மறுத்துவிடுவார்கள் என்று எண்ணியிருந்த எங்களுக்கு அவர்கள் வரச்சொல்லி இருந்ததை நம்பமுடியவில்லை.![]()
அம்மா வந்து சொன்னதைப்போலவே சென்னையில் இருந்து பெண்கேட்கின்றனர் என்றும் எங்கள் முடிவைக் கேட்டுவிட்டு
அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றனர். எங்கள் விருப்பத்தைச் சொன்னதும் என் அம்மா குரலில் அப்பெண் சொன்னபடியே எனது திருமணம் சிலமாதங்களில் நடந்தது. அத்தோடு என்தாய்வழி உறவுகள் முறிந்தன.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()