பாலியல் பலாத்காரமும் மானிட மனோநிலையும்!…பகுதி…1…. ( கட்டுரை )…. சங்கர சுப்பிரமணியன்.

பாலியல் பலாத்காரம் என்பது எப்போதோ எங்கோ நடைபெற்ற ஒன்றாக இருந்த நிலைமாறி இப்போது வாடிக்கையாக நடக்கும் ஒன்றாகவே மாறிவிட்டது.
முதலில் பாலியல் பலாத்காரம் என்பதை ஒரு விபத்தாக எண்ண வேண்டும். அது எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் இப்போது விபத்து நடப்பதும் வாடிக்கையாக ஆகிவிட்டதே. பாலியல் பலாத்காரம் என்பது யாருக்கு நேர்ந்தாலும் எங்கு நேர்ந்தாலும் எச்சூழலில் நேர்ந்தாலும் பாலியல் பலாத்காரம் பலாத்காரமே. அதில் இங்கு நேர்ந்தால் ஒருமாதிரி அங்கு நடந்தால் ஒருமாதிரி என்றில்லை. எங்கு நடந்தாலும் பலாத்காரம்தான். அதை கேள்விப்படும் எவருக்கும் மனவருத்தம் ஏற்படவே செய்யும்.
சில சமயங்களில் ஒரு பெண்ணே அது மாதிரி நடக்க சந்நர்ப்பத்தை உருவாக்குவதால் நிகழ்கிறது. 
சந்தர்ப்பங்களை ஒரு பெண் உருவாக்குவாளா? என்ற முரண்படுபவர்களும் உண்டு. இதற்கு தனிமனித ஒழுக்கத்தை துணைக்கு அழைக்கிறேன். தனிமனித ஒழுக்கம்
என்பதை பலவகைகளில் காணலாம். உடை அணிவதிலிருந்தே தொடங்கலாம். அணியும் உடை அழகாக இருக்கலாம். அபத்தமாக இருக்கக்கூடாது.
ஆபாசமக உடை அணிவதை எதைக்கொண்டு நிர்ணயிப்பது என்று சிலர்
கேட்கலாம். உடை அணிவதற்கு முதற்காரணம் உடம்பை மறைப்பதற்குத்தான். அப்படி மறைக்கும் உடை நம்மை அழகாகக் காட்டினால் தவறில்லை. உண்ணும் உணவு உயிர்வாழத்தான். அது சுவையாக இருப்பின் தவறில்லை. அந்த சுவையே நம் ஆரோக்கியத்துக்கு உலை வைக்குமென்றால் அது கூடாது. அதேமாதிரி அழகைக் கொடுக்கும் உடையானது ஆபாசமாக இருந்து ஆபத்தை வரவழைக்குமானால் அப்படிப்பட்ட ஆடையை தவிர்த்தல் வேண்டும்.
சிலர் எதை வைத்து ஆபாச உடை என்கிறீர்கள்? என்று தெரிந்தும் தூங்குபவன் நடிப்பது மாதிரி கேள்வி கேட்பார்கள். மற்றவர் மனதை பாழ்படுத்தும்
எந்த ஆடையும் ஆபாசமான ஆடைதான். இப்போதுதான் மனிதனின் மனோநிலையை
பார்க்கவேண்டும். தனிமனித ஒழுக்கத்துடன் இந்த மனோநிலை சம்பந்தப் பட்டுள்ளது. பண்பாட்டில் சிறந்த நாடு. அந்த நாட்டில் வாழ்பவர்கள் பெண்களைக் கடவுளாக பார்ப்பவர்கள் என்று வெற்று வேதாந்தம் பேசும் நாடுகளில்
பெண்களுக்கு கூட்டாக பாலியல்
பலாத்காரம் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்த கூட்டு பலாத்காரத்துக்கு
காரணம் என்ன? என்றோ பண்பாட்டில் சிறந்த நாடென்றும் பெண்களை கடவுளாகப் பார்த்தவர்கள் என்றும் போற்றப்பட்ட நாட்டில் இன்று வாழ்பவர்களின் இன்றைய மனோநிலை என்ன? என்றோ கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்த கடவுள் இன்றும் துயர்துடைக்க கொரோனாவை ஒழிக்க ஓடிவராவிட்டாலும் நடந்தாவது வரலாமே? ஏன் வரவில்லை? நாம் இலாகா வாரியாக கடவுள்களைப் பெற்ற பேரருள் படைத்தவர்கள். கல்விக்கொரு கடவுள் செல்வத்துக்கொரு கடவுள் வீரத்துக்கொரு கடவுள் காதல் செய்ய ஒரு கடவுள் குழந்தை குட்டிகள் பெற ஒருகடவுள் என்று இருப்பது போல மருத்துவத்துக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். அவர்தான் பகவான் தன்வந்தரி. என்ன பயன்? நம்மால் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிடக்கூட தைரியமாக வெளியே போகமுடியவில்லை.
சரி…விசயத்துக்கு வருவோம். இந்நிலைக்கு காரணம் தொடர்ந்து பண்பாட்டை தலைமுறை தலைமுறையாக பின் பற்றாததும் தனிமனித ஒழுக்கத்தை காப்பாற்றதும்தான் காரணம்.
தனமனித ஒழுக்கத்தை காற்றில் பறக்கவிட இன்றைய சூழலும் ஒரு காரணம். மனதைச் சாக்கடையாக்கும் திரைப்படங்கள்,
திரைப்படப் பாடல்கள், பெண்கள் அணியும்உடைகள், சில பெண்களின் அத்துமீறிய துணிச்சல்கள், ஆண்களின் வக்கிரபுத்தி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இப்படி எளிதாக பழியைச்சுமத்தி தப்பித்துக் கொள்ளமுடியாது. பெற்றோரும் ஒழுக்கமானவர்களாக இருந்து பெற்ற பிள்ளைகளையும் ஒழுக்கமானவர்களாக வளர்க்கவேண்டும். அடுத்து அரசாங்கமும் பொருப்புள்ள அரசாங்கமாகவும் தவறு செய்பவர்களுக்கு கடும்தண்டனை வழங்கக்கூடிய அரசாங்கமாகவும் இருக்கவேண்டும். கற்பழிப்பு செய்தவனிடம் காசை வாங்கிக்கொண்டு அவனை விட்டுவிட்டால் அவன் இன்னும் பலரைச் சேர்த்துக்கொண்டு கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்வதில் ஈடுபடுவான்.
பாலியல் துன்புறுத்தலில் சாதாரணமானவனைவிட அரசு பணியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை
பாதுகாப்புக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதிகாரத் திமிரில் ஆண்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாதபோது பெண்களின் கற்புக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? ஒருநாட்டில் பெண்ணின் கற்புக்கு காவல் நிலையத்தில் அதுவும் அந்த காவல் நிலையத்தின் காவலர்களுடன் எந்தவித முன் விரோதமும் இல்லாதபோதே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு ஒருநாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து
இருக்கிறது என்றால் என்ன செய்வது?
-சங்கர சுப்பிரமணியன்.
![]()