Featureகட்டுரைகள்

மனிதனென்பவன் தெய்வமாகலாம்!… அங்கம் – 03…. சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன்.

அருட் தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் நினைவுகள்

செல்வத்துரை ரவீந்திரன் – அவுஸ்திரேலியா

( தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம்)

அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களுடன் இணைந்து இறைபணியும் சமூகப்பணியும் மேற்கொண்ட சில பாதிரிமாரும் கன்னியாஸ்திரிகளும் அவரது பாதுகாப்புத் தொடர்பாக மிகுந்த கவலையோடுதான் இருந்தனர். அங்கிருந்து தப்பி வெளியேறுமாறும், இயக்கங்களின் துணையுடன் வள்ளத்தில் இந்தியாவுக்கு தப்பிச்செல்லுமாறும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அதனையெல்லாம் அவர் முற்றாக மறுதலித்தார். எக்காரணம்கொண்டும் தன்னை நம்பியிருக்கும் மக்களை விட்டு அகலமாட்டேன் என்று மிகவும் பிடிவாதமாகவும் உறுதியோடும் நின்றார்.

அவர் உறவு முறையில் எனது குடும்பத்தில் ஒருவர். அத்துடன் சமூகப்பணிகளில் என்னோடு எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் இணைந்து நின்றவர். நான் அவரை அதற்கு இழுத்துவந்தவன். இத்தகைய உணர்வுபூர்வமான நட்பினால், அவரது பாதுகாப்பு எனது தோளிலும் விழுந்தது.

கத்தி நெற்றிக்கு மேல் தொங்கியது.

அதனால், அவரை உடனடியாகவே பாதுகாக்கவேண்டியதாயிற்று.

மாற்று வழிமுறை உத்திகளின் மூலம் தாமதமின்றி அவரை கொழும்புக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு வந்த அவர், எதுவித அசுகையுமின்றி இரண்டொரு நாட்களில் சென்னைக்குப் பயணமானார். அக்காலப்பகுதியில் இந்திய தூதரகத்துடன் எமக்கிருந்த நல்லுறவினால், ஒரே நாளில் – அதுவும் ஒரு வாரவிடுமுறை தினத்தில் இந்திய விசாவை பெறக்கூடியதாக இருந்தது.

நானும் மனைவியும் அவரை காரில் அழைத்துச்சென்று விமானம் ஏற்றினோம். கொழும்பில் அவரது பாதுகாப்புத் தொடர்பாக

எமக்கிருந்த சஞ்சலங்கள், மன உபாதைகள், காரில் விமான நிலையத்திற்கு அழைத்துச்செல்லும்போது தோன்றிய மனப்பதட்டங்கள் எவற்றையுமே எழுத்தில் வடிக்கமுடியாது. வர்ணிக்க முடியாது.

அவர் விமானத்தில் ஏறிவிட்டார் என்பதையும் அந்த விமானம் புறப்பட்டுவிட்டது என்பதையும் உறுதிப்படுத்தும் வரையில் அந்த விமான நிலைய வளாகத்திலேயே காரில் இருந்தோம். விமானம் புறப்பட்டது தெரிந்ததும்தான், நாம் அதுவரையில் வயிற்றை காயப்போட்டவாறு அங்கே நின்றிருக்கின்றோம் என்ற உணர்வு வந்தது. மனப்பீதி – பதட்டம் என்பன பசியையும் மறக்கச்செய்திருந்தது.

ஒரு சீன உணவகம் சென்று தகித்துக்கொண்டிருந்த வயிற்றுப்பசியை போக்கிக்கொண்டதை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாகவே இருக்கிறது.

இன்றளவும் அந்தக்காட்சிகள் மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன. அவர் வெளியில் சென்றதையடுத்து, மறுநாள் அவரது படத்துடன் அவர் தேடப்படுபவராக சகல உள்நாட்டு விமான நிலையங்களிலும் துறைமுகங்களிலும் பிரசுரம் ஒட்டப்பட்டது.

அருட் தந்தை ஜேம்ஸ் அவர்கள் சிறிதுகாலம் சென்னையிலிருந்துவிட்டு, அங்கிருந்து லண்டனுக்கு பயணமானார். அங்கு இயங்கிக்கொண்டிருந்த CBFTR (Central British Forum For Tamil Refugees) மற்றும் தமிழர் தகவல் நிலையம் முதலானவற்றில் இணைந்து பணியாற்றினார்.

சர்வதேச நிறுவனங்களிடம் ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் நலன்கள் குறித்தும், அவர்களின் தேவைகள் தொடர்பாகவும் உதவிகள் கோரி பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

வருடங்களும் உருண்டோடின. இலங்கையில் தமிழ்மக்களின் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தன. பல இளைஞர்கள் சித்திரவதைகளுக்குட்பட்டார்கள்.

1977 இல் நிகழ்ந்த இனவாத வன்செயல்களையடுத்து அன்றைய அதிபர் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் நியமிக்கப்பட்ட சன்சோனி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் தோன்றிய சாட்சியங்கள் ஊடகங்களில் வெளியானதையடுத்து, பொலிஸாருக்கும் ஆயுதப்படையினருக்கும் தனித்தனியாக மனதில் பீதி ஏற்படத்தொடங்கியது.

அந்தப்பீதியை இனவாத அரசியல் வாதிகளும் ஊடகங்களும் ஊதிப்பெருக்கவைத்தமையால், பின்னர் 1981 இலும் 1983 இலும் கலவரங்கள் வெடித்தன.

1983 கலவரத்தினால் , இந்தியா நேரடியாக தலையிடும் வகையில் நிலைமைகள் மோசமடைந்தன. தமிழ்ப்பிரதேசங்களிலும் மலையகத்திலும் வாழ்ந்த மக்கள் நிர்க்கதியானதுடன், ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த தமிழர்கள் கொல்லப்பட்டும் அடித்துத் துன்புறுத்தப்பட்டும் அவர்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் இலங்கை குறிப்பாக தலைநகரமே ஸ்தம்பிதமடைந்தது. இதுபற்றி விரிவான வரலாற்றுப்பதிவுகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

அவ்வேளையில் உயிரைக் கையில் பிடித்தவாறு குடும்பம் குடும்பமாக தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேறி தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அகதிமுகாம்களில் தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமும் வாழ்வாதாரங்களும் தேவைப்பட்டன.

எமது தமிழ்த்தலைவர்களால் அதுபற்றி கூக்குரலிட்டதைத்தவிர வேறு எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியம்தான். அந்த மக்களின் சுமையும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம்தான் சென்று விழுந்தது.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மு. சிவசிதம்பரம், வவுனியா சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி, மாவை சேனாதிராஜா, சந்திரகாசன், சம்பந்தன் முதலானோர் இந்திய மத்திய அரசினதும் தமிழக அரசினதும் அரவணைப்பில் தஞ்சமடைந்தனர்.

இவ்வேளையில் ஏராளமான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் விடுதலை இயக்கங்களுடன் இணைந்தனர். இந்த இயக்கங்களின் அனுசரணையுடன் இந்தியா சென்றடைந்தனர். படிப்படியாக தமிழ் மக்களும் ஐரோப்பிய நாடுகளுக்குப் படையெடுத்து, புலம்பெயர் தமிழர்கள் என்றானார்கள்.

இந்தியா சென்றவர்கள் அகதித் தமிழராயினர்!

இதனையடுத்து அருட் தந்தை ஜேம்ஸினதும் , இலண்டனில் அவர் இணைந்திருந்த தன்னார்வ சமூகத்தொண்டர் அமைப்புகளின் பணிகள் பன்மடங்காகின.

தமிழர் தகவல் நிலையத்திற்கு இலங்கையிலிருந்து நம்பகத்தன்மையுள்ள செய்திகளை பெறுதல், அவற்றை செம்மைப்படுத்தி ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் கையளித்தல், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித

உரிமை இயக்கங்கள், செஞ்சிலுவைச்சங்கம் முதலானவற்றின் கவனத்திற்கு சமர்ப்பித்தல், முதலான பணிகளை அர்ப்பணிப்போடு செய்யநேர்ந்தது.

Central British Forum for Tamil Refugees என்ற ஏற்கனவே இந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ள அமைப்பின் வழிகாட்டலின் கீழ், புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் இயங்கிய தமிழர் அமைப்புகளுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு, உடனுக்குடன் சேவைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது.

இந்தப்பணிகளில் எல்லாம் தம்மை வருத்தி ஈடுபட்டவர்களை எவருமே திசை திருப்ப முடியாதிருந்தது.

அவர்கள் ஏதோ ஒருவகையில் தமிழ் மக்களின்நீடித்த பிரச்சினைகளுக்காக – விடுதலைக்காக – தமிழ்த்தேசியத்தை பேணிப் பாதுகாப்பதற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்தான்.

அதன்பின்னர் எனது வாழ்விடம் சிறிதுகாலம் இங்கிலாந்தாகியது. பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்தேன்.

அருட்தந்தை ஜேம்ஸ், லண்டனில் தமிழ் தகவல் நிலையத்திற்கு நம்பகமான செய்திகளை சேகரித்து அனுப்புதல், அத்துடன் அவற்றை ஐரோப்பிய நாடுகளில் முக்கியமாக கத்தோலிக்க நிறுவனங்களுக்கு பகிர்வதிலும், மருத்துவ உதவிகளுக்காக நிதியுதவிக்கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்புவதிலும் அத்துடன் அறிக்கைகளை சமர்ப்பிப்பதிலும் பாரிய பொறுப்புகளை சுமந்தார்.

அவரது இந்தப்பணிகளிலெல்லாம், ஒன்றை ஒன்று அறிந்தோ அறியாமலோ பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தேவைகளின் நிமித்தம் அவர்களுக்கான நிரந்தரமான தீர்வை நோக்கிய பயணமாகவே இருந்தது.

அக்காலகட்டத்தில், பொதுப்பணிகளிலிருந்தவர்கள் எவரையுமே ஒரு கட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஏதோ ஒரு வழியில் விடுதலையை ஆதரிப்பவராகவோ, தமிழ்த்தேசியத்தை எடுத்துரைப்பவராகவோ பார்க்கப்பட்டார். எவர் அவரை எவ்வாறு பார்த்தாலும், சிங்கள அரசும் அதன் அதிகாரத்தின் காவல்துறையும் அரச படையும் அவரை அவ்வாறுதான் பார்த்தன.

இந்தப்பார்வைதான் என்னையும் எனது குடும்பத்துடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்தப்படுத்தியது. வெளியேறுவதற்கு மனம் விரும்பாவிட்டாலும், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் அங்கத்தவர்கள் யாவரும், நானும் எனது நண்பர் சட்டத்தரணி கே. கந்தசாமியும் அருட்தந்தை ஜேம்ஸைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தால், எமது அமைப்பினை எதிர்காலத்தில்

பராமரிப்பதானது பெரும் சோதனையாக இருக்கும் என்று கருதினார்கள்.

ஆனாலும், சன்சோனி ஆணைக்குழுவின் தொடர்ச்சியான விசாரணைகளினாலும் காவல் துறையின் கெடுபிடிகளினாலும், தனிப்பட்ட ரீதியில் ஆபத்து அதிகரித்தது. தொடர்ந்தும் நான்காம் மாடி விசாரணைகளுக்கான அழைப்புகள் வந்தன.

அவற்றை தெரிந்தவர்கள் ஊடாக சமாளிப்பது பெரிய பிரயத்தனமாக இருந்தது. இவ்வாறு மனம் அல்லாடிக்கொண்டிருந்தபோது, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து, என்னை புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறும், என்னை தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான மனுவில் கையொப்பம் இடாமல் காலம் கடத்துவதாகவும், அக்காலப்பகுதிக்குள் நாட்டை விட்டு வெளியேறிவிடுமாறும் அந்த தொலைபேசி அழைப்பின் குரல் புத்திமதி சொன்னது.

இந்த எச்சரிக்கையானது நான் எனது தாயகத்தில் இருப்பதா..? வெளியேறுவதா..? என்ற திண்டாட்டத்திற்கு என்னை மீறிய தீர்மானத்தை தந்தது.

நாட்டை விட்டு அவசர அவசரமாக வெளியேறி, 1984 ஓகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு வதிவிடத்திற்கு வந்தேன்.

பல நிகழ்வுகள் இடைப்பட்ட காலத்தில் நடந்தாலும், அவைகள் கால – சம்பவ ரீதியாக முக்கியமானாலும் விரிவஞ்சி இங்கு தவிர்க்கின்றேன்.

இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் வடமராட்சி மீது ஆக்கிரமிப்பு நடந்தது. அதனைத் தொடர்ந்து 1987 இல் இலங்கை – இந்திய ஒப்பந்தம் அரங்கேறி, இந்திய அமைதிப்படையினர் இலங்கை வந்து நிலைகொண்டனர்.

ஈழத்தமிழ் மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இலங்கையில் முக்கியமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் ஒரு நிலையான – ஸ்திரமான அரசியல் பாதுகாப்பு சூழ்நிலை ஏற்படும் என்ற நம்பிக்கை எழுந்தது.

1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகம் சமர்ப்பித்த நிதிக்கோரிக்கை விண்ணப்பங்களுக்கு 1986 ஆம் ஆண்டு வரையில் மூன்றே மூன்று நிறுவனங்களே நிதியுதவி வழங்க முன்வந்தன.

வடமராட்சி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மற்றும் ஒரு நிறுவனமும் உதவமுன்வந்தது. ஆயினும், அருட்தந்தை ஜேம்ஸ், கந்தசாமி முதலானோரின் கடும் பிரயத்தனத்தினால், 1986 வரையில்

தொடர்ந்தும் 25 நிறுவனங்கள் முன்வந்து, வடக்கு கிழக்கை மீளக்கட்டி எழுப்புவதற்கு ஆர்வம் காண்பித்தன.

இந்தத் திட்டங்களின் அன்றைய நாணயப்பெறுமதி ஆயிரம் கோடிக்கும் மேலாகும். ஆகவே, இவ்வளவு நிதியையும் முறையாக செலவிட்டு, வரவு – செலவுக் கணக்குகளை சரிபார்த்து, கணக்காய்வறிக்கை வழங்கி, நிறுவனங்களுக்கு தெரிவிக்க நம்பிக்கையான நிர்வாகம் தேவைப்பட்டது. இந்த நிதியங்களின் நம்பிக்கைக்குரிய முகங்களாக தென்பட்டவர்கள்தான் அருட் தந்தை ஜேம்ஸ் மற்றும் சட்டத்தரணி கந்தசாமி.

கிடைத்த செய்திகளின் பிரகாரம், தமிழ்ப்பிரதேசங்களின் நிலைமையும் அனைத்து இயக்கங்களின் சிரமங்களும் தெரியவந்தது. ஆகவே, நாட்டிலும் இந்த நிருவாகப்பணிகளை பொறுப்பேற்று நடத்துவதற்காக, தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் முன்னோடிகளான அருட்தந்தை ஜேம்ஸ், கந்தசாமியுடன் நானும் நாடு திரும்புவதென்றும், சென்னையிலிருந்து சந்திரகாசன், மகேஸ்வரி வேலாயுதம், சிவநாயகம் போன்றோர் எங்களைத் தொடர்ந்து அங்கு வருவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

சிவநாயகம், முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான Saturday Review பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றிவிட்டு, பின்னர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்து அங்கிருந்து இயங்கிய தமிழ் தகவல் நிலையத்தை நடத்திவந்தார். மகேஸ்வரியும் அங்கு பணியாற்றினார். கந்தசாமி முதலிலும் அவரைத்தொடர்ந்து நானும் ஜேம்ஸ் அவர்களும் செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், என்னளவிலும் சிவநாயகத்தை பொறுத்தளவிலும் கந்தசாமி, நாட்டுக்குத் திரும்புவதோ, அவரைத்தொடர்ந்து மற்றவர்களும் புறப்படுவதோ சரியாகப்படவில்லை. அருட்தந்தை ஜேம்ஸ், தொடர்ந்தும் லண்டனில் தங்கியிருந்து பணியாற்றி, நிலைமைகள் சீரடைந்தபின்னர் நாடு திரும்புவது என்ற அபிப்பிராயம் பலரிடையே நிலவியது. ஆனால், கந்தசாமியும் ஜேம்ஸ் அவர்களும் அந்த யோசனையை ஏற்கும் மனப்பாங்கில் இருக்கவில்லை.

லண்டனில் இயங்கிவந்த தமிழர் தகவல் நிலையத்தை கேந்திர மையமாக நடத்தாது, அங்கிருந்த ஆவணங்கள், புத்தகங்கள் யாவற்றையும் சென்னையிலிருக்கும் நிலையத்திற்கு மாற்றி அங்கிருந்து செயற்படவேண்டும் என்ற தீர்மானத்தை கந்தசாமி எடுத்தார். இதனால், அங்கிருந்த சில ஆர்வலர்களிடம் கசப்புணர்வுகள் தோன்றின. எனினும் தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிதியம் தொடர்ந்தும் தமிழர் தகவல் நிலையம் ஐரோப்பாவுக்கு ஒரு மையமாக

இயங்கலாம் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதற்குச்சில அரசியல் காரணங்களும் ஊட்டப்பட்டன.

ஆனாலும், கந்தசாமி தனது நிலைப்பாட்டில் ஆர்வம் காண்பித்து, அனைத்து ஆவணங்களையும் புத்தகங்களையும் ஒரு கொள்கலனில் (Container) சென்னைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அவரும் சென்னை வந்து சிவநாயகத்திடம் நிர்வாக அலுவல்கள் பற்றி உரையாடினார். ஆயினும், நானும் கந்தசாமியும் ஜேம்ஸ் அவர்களும் நாடு திரும்புவதை வரவேற்கவில்லை.

( தொடரும் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *