சாவா மருந்தெனினும்….. ( சிறுகதை )… சங்கர சுப்பிரமணியன்.

தாயகத்தில் வாழ்பவர்களைவிட வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் பெரிய சிரமம் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியோருக்கு மதிப்பு கொடுக்கும் பண்பு தாய்மொழியை மறவாதிருக்க தாய்மொழிக்கல்வி போன்று எத்தனயோ அத்தியாவசங்களில் கவனம் செலுத்தவேண்டி உள்ளன.
இதையெல்லாம் நன்கறிந்தவர்களில் சடகோபனும் ஒருவர். இவருக்கு எது எப்படியோ நம் பண்பாட்டைக் கட்டிகாப்பதில் மட்டும் குறையேதும் வந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை. அதற்காகவே தன்மகன் ஜனார்த்தணன் பேச ஆரம்பித்தவுடனே தெய்வபக்தி பாடல்களை
எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டார். அத்தோடு தமிழ்பள்ளிக்கும் ஆலயத்துக்கும் அழைத்துச் செல்வதிலும் தவறியதில்லை.
தன் மகனை சிறந்த அறிவாளியாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பதால் தன்மகனிடம்,
“ஜனா, நீ மிகவும் கெட்டிக்காரனாக வரவேண்டும். ஆதலால் உனக்கு என்னவொரு சின்ன சந்தேகம் ஏற்பட்டாலும் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.” என்று சொன்னார்.
“நிச்சயம் அப்பா. தமிழ்ப்பள்ளியில் கூட நிறைய கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்கிறேன். ஆசிரியரே நான் கேள்வி கேட்பதைப் பார்த்து பாராட்டுவார்.”
“அப்படியா, நீ கெட்டிக்காரன்தான்”என்று அவரும் பாராட்டினார்.
சில நாட்கள் சென்றன. மகனை ஒருநாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவிலில் அப்போது அபிசேகம் நடந்தது. அதைக் கண்கொட்டாது பார்த்துவந்த ஜனார்த்தணன் அப்பாவைப் பார்த்து கடவுள் ரொம்ப பொறுமைசாலி என்றான். அதற்கு அவர் ஏன் அப்படிச்சொல்கிறாய் என்று கேட்க அவனும் பதிலைச்சொன்னான்.
அம்மா எனக்கு எண்ணெய் தேய்த்து சீயக்காய்த் தூள் மட்டும் குளிப்பாட்டி விடும் அந்த கொஞ்ச நேரத்தையே சமாளிக்க முடியவில்லை. ஆனால் இங்கு எண்ணெய் மட்டுமின்றி பால், தயிர், நெய், தேன் என்று எதை எதையெல்லாமோ கடவுளின்
தலையில் ஊற்றி குளிக்க வைக்கிறார்கள்.
அதுமட்டுமா இளநீர், ஆரஞ்சு, விபூதி போன்றவற்றையும் பஞ்சாமிர்தம் எல்லாவற்றையும் அவர்மீது அபிசேகம் செய்வதால் அவர் பொறுமைசாலிதானே அப்பா என்றான். அவரும் ஆமாம் என்று சொல்லி நிலைமையை சமாளித்தார்.
சிறிது நேரமானதும் கடவுளுக்கு
அலங்காரம் எல்லாம் நடந்து முடிந்ததும் திரைபோட்டனர். அப்போது ஜனார்தணன்
ஏன் திரைபோடுகின்றனர் என்று
அப்பாவிடம் கேள்விகேட்கவே அவரும் யதார்த்தமாக கடவுள் சாப்பிடுகிறார் அதனால்தான் திரைபோட்டுள்ளனர் என்றார். அதற்கு ஜனார்த்தணன்,
“அப்பா, திருக்குறளில் திருவள்ளுவர் விருந்தினரை வெளியே வைத்துவிட்டு சவாமருந்தெனினும் சாப்பிடக்கூடாது என்கிறார். ஆனால் எல்லோருக்கும் உணவளித்து காக்கும் இவரோ ஒரு சாதாரண உணவை அவரது பக்தர்கள் வெளியிருக்க திரைபோட்டு மூடிக்கொண்டு சாப்பிடுகிறாரே என்று கேட்டான்.
மகன் இவ்வாறு தர்மசங்கடமான கேள்வியை கேட்பான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்காக கேள்விகேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லிவளர்த்த
மகனிடம் இப்படியெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது என்று அதட்டவும் முடியாது. ஆதலால் அப்பாவுக்கு பதில் தெரிவில்லை யாரிடமாவது கேட்டு சொல்கிறேன் என்று அப்போதைய நிலைமையை சமாளித்தார்.
கோவிலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சடகோபன் பலவாறு எண்ணலானான். பண்பாடு பண்பாடு என்கிறார்களே இந்த பண்பாட்டில் நல்லது கெட்டது செய்யத்தகும் செயல் செய்யத்தகா செயல் எல்லாம் நிரம்பியே கிடக்கின்றனவே, பழையன கழிதலும் புதியன புகுத்தலும் என்கிறார்களே இதுபோன்ற சீர்திருத்தங்களை பண்பாட்டில் கொண்டுவர இயலாதா என்றெல்லாம் யோசித்தான். எல்லாவற்றிற்கும் மேலாக ஜனார்த்தணனின் கேள்விக்கு எந்த ஜாம்பவானிடம்
போய் பதிலைக் கேட்பது என்ற எண்ணமே மேலோங்க நின்றது.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()