சாமானியனின் சரடு…..சரடு…4…. ( கட்டுரை )… சங்கர சுப்பிரமணியன்.

இந்த பேய்பற்றி ஆய்வு செய்திருப்பவர்கள் கருத்தைக்
காண்போம்.பேய் என்றால் இறந்தவர்களின் நிறைவேறாத ஆசைகள் அவர் இருந்த இடங்களைச் சுற்றி வருமாம். பேய்க்கு மறுபெயர்தான் பிசாசு.திருமணமாகாத கன்னிப் பெண்கள் இறந்து போனால் அதுவே மோகினிப் பிசாசு ஆகும். அப்படித்தான் பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. இது தவிர இடுகாடுகளில் இரண்டு வகைப் பிசாசுகள் உள்ளனவாம். ஒன்று கொள்ளிவாய்ப் பிசாசு மற்றொன்று குட்டிப் பிசாசு.
இடுகாடுகள் பெரும்பாலும் நீர் நிலைகள் அருகிலுள்ள சதுப்பு நிலங்களிலேயே இருக்கும். இதற்கு காரணம் பிரேதங்களை புதைத்துவிட்டு இடுகாட்டுக்கு வந்தவர்கள் குளித்துவிட்டு செல்வதற்கு வசதியாக இருப்பதாகும். இப்படிப்பட்ட சதுப்பு நிலங்களில் புதைக்கப்படும் பிணங்கள் மண்ணோடு மண்ணாக மக்கி
அதிலிருந்து வெளியேறும் வாயு புதைகுழிக்கு மேலுள்ள மண்ணின் வெடிப்புகளின் வழியாக வெளியேறும்போது தீப்பிடித்து எரியும். இரவு நேரங்களில் இது நன்றாகத் தெரியும். இடுகாடுகளில் தோன்றும் இந்த நெருப்பதான்
கொள்ளிவாய்ப் பிசாசு ஆனது. அதசரி அப்படியானால் குட்டிப்பிசாசு? சிறு குழந்தைகள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் இருந்து வெளியேறும் குறைவான அளவிலுள்ள வாயு பற்றி
எரியும் போதுண்டாகும் குறைந்த அளவு நெருப்புதான் குட்டிப்பிசாசு.
கிராமப் புறங்களில் ஒரு கண்மாய்க் கரையின் வழியாக நடந்து அருகிலுள்ள ஊர்களுக்கு செல்லலாம். நான் வளர்ந்த கிராமத்தில் விவசாயத்திற்காக நான்கு கண்மாய்கள உள்ளன. இந்த நான்கு கண்மாய் வழியாக நான்கு ஊருக்கு செல்லலாம். சில கண்மாய்க் கரையருகே இடுகாடு மற்றும் சுடுகாடு இருக்கும்.
சில கிராமங்களுக்கு செல்லும் பாதை வண்டித்தடமாகவும் இருக்கும். அப்படி என் கிராமத்துக்கு போக ஒரு வண்டித்தட பாதையும் உள்ளது. இது நான் சிறுவனாக இருந்த போதுள்ள நிலை. இப்போது அவ்வூர் மிகவும் முன்னேறி பேருந்து போக்குவரத்து
உள்ளது. அந்த வண்டித்தட பாதையில் என் ஊரிலிருந்து இரண்டு மைல் தூரத்துக்கு அப்பால் ஒரு சுமைதாங்கியும் அதனருகே பெரிய மரம் ஒன்றும் உள்ளது. அந்த
சுமைதாங்கியில் ஒரு மோகினிப் பிசாசு இரவு நேரங்களில் இருந்து அழுது
கொண்டிருக்குமாம்.
அதனால் இரவு நேரம் அந்த பாதையில் யாரும் தனியாக செல்வதில்லை. திருநெல்வேலி சென்று பேருந்தில்
திரும்புபவர்கள் பேட்டை என்ற ஊரில்
இறங்கி நான்கைந்து பேர் சேர்ந்தபின்தான் அப்பாதையில்
ஊருக்கு செல்வார்கள். நான் சில நாட்கள் பகல்நேரத்தில் தனியாய் அவ்வழியே சென்றிருக்கிறேன். அப்போது அந்த குறிப்பிட்ட இடத்தருகே வரும்போது பயத்தில் காதுகள் எல்லாம் வலிப்பது போல் ஓர் உணர்வு ஏற்படும்.
எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம். எனது தந்தை எனது பதின்மூன்றாம் வயதில் இறந்துவிட்டார். தந்தை இல்லாத காரணத்தால் என் தாய்வழித் தாத்தா ஆதரவை நாடினோம். பிழைக்க வழியின்றி தஞ்சம் அடைந்ததால்
போகப்போக பாசம் மாறி குடும்பத்தில் அவமானமும் ஏச்சும் பேச்சும்
கிடைத்தன. அந்த சமயம் அந்த சிறுவயதில் மனம் முழுக்க சோகம். ஏன் உயிரோடு இருக்கிறோம் என்ற எண்ணம் கூட ஏற்பட்டது.
அச்சூழலில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீடு திரும்ப தாமதமாகியது. எங்கள் கிராமத்துக்கு செல்ல கண்மாய்க்கரை வழியாக செல்ல
ஒருவழி இருக்கிறது. அந்த கண்மாய் கரையின் அடியில் பெரும்பாலும் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். அந்திசாய்ந்து இருள் சூழந்துவிட்டது. அச்சிறு வயதில் எனக்குள் குடி கொண்டிருந்த சோகம் அந்த கண்மாய்க் கரையில் நடப்பது நடக்கட்டும் என்று என்னை நடக்க வைத்தது.
கண்மாய் கரையில் நடந்து கொண்டிருந்தேன். இருள் சூழ்ந்து விட்டது. சற்று தூரத்தில் சுடுகாட்டில் வெளிச்சம் தெரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சுடுகாட்டை நெருங்கினேன். கண்மாய்க் கரையில் நான். ஒரு புறம் கண்மாயில் நிறைந்த நீரின் அலைகள் கரையின் வந்தமோதும் வினோதமான சத்தம். மறுபுறம் கரையின் அடியில் பிணம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
(தொடரும்)
-சங்கர சுப்பிரமணியன்.
![]()