தமிழ் ஓர் ஆலமரம்!…. சங்கர சுப்பிரமணியன்.

தமிழ் தனித்து நின்று வாழும் மொழி. வளரந்து ஆலமரம் போல் உலகெலாம் பரந்து நின்ற மொழி.

ஆதலால்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டு கடைசி நேரத்தில் கூட ” எலே எலே சபத்தாமி” வார்த்தைகளைக் கூறினார் என்றும் ஆப்ரிக்காவிலுள்ள காமரூன் நாட்டை அது காமனூர் என்றிருந்ததே மருவி காமரூன் என்று மாறியதாகவும்அங்குள்ள மண்டாரு மவுண்டன் என்பதே தமிழின் மண்தரை மலை என்பதன் திரிபே என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அதுபோன்றே ஆஸ்திரேலிய பழங்குடியினரின் மொழியிலும் ஏகப்பட்ட தமிழ் சொற்கள் மலிந்து கிடப்பதாக ஆய்வுகள் அறிவிக்கின்றன. அதனாலேலயே தமிழ்மொழி எத்தனையோ இடர்களையும் தாண்டி எழுந்து நிற்கிறது. தமிழ் ஆலமரம் என்பதால் அதற்கு யாரும் எதுவும் முட்டுக் கொடுத்து காக்க வேண்டிய அவசியமில்லை. அதன் விழுதுகள்போல நின்று தமிழ் ஆர்வலர்களும் தமிழ் பற்றாளர்களும் நாடு, மதம், இனமென்ற வேறுபாடுகளையும் தாண்டி அதைக்காப்பார்கள்.
திருநெல்வேலியிலுள்ள கீழப்பாவூரில் எனது வீட்டின் தோட்டத்தில் முருங்கை மரம், புளியமரம், கொடிக்காய்புளி மரம் என பலமரங்கள் இருந்தன. சில மரங்கள் சாய்ந்தும் சிலமரங்கள் நேராகவும் நின்றன. சாய்ந்து நின்ற மரங்களில் முருங்கை மரத்தைத் தவிர வேறெந்த மரத்திற்கும் முட்டுகொடுத்து நான்பார்த்ததில்லை. காரணம் எவ்வளவு பெரிய காற்றடித்தாலும் மற்ற சாய்ந்து நிற்கும் மரங்கள் விழுவதில்லை. ஆனால் முருங்கை மரம் மட்டும் சற்று வேகமாக காற்று வீசினால் கூட முறிந்து விழுந்துவிடும். அதனால் முருங்கை மரம்போன்ற வலுவிழந்த மொழிகளைத்தான் முட்டுக்கட்டை போட்டு காப்பாற்ற வேண்டுமேயொழிய தமிழுக்கு அது தேவைப்படாது.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் தமிழரில் சிலர் பக்தி இலக்கியங்களாலல்தான் தமிழ் வளர்ந்தது எனக் கூறித்திரிகிறார்கள். இது ஒன்றும் கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்ல முட்டையில் இருந்து கோழி வந்ததா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய ஒன்றல்ல. மனிதன் தோன்றியபின்தான் மதமே தோன்றியது. மதங்கள் தோன்றவே அவரவர் மதத்திற்கென ஒன்றோ ஓராயிரமோ கடவுளையும் தோற்றுவித்தனர்.
இவர்களுக்கு அவர்களின் கடவுளைப்பாடி வணங்க ஒருமொழி தேவைப்பட்டது. மதத்தைப் பரப்ப மதநூல் எழுத ஒருமொழி தேவைப்பட்டது. அதற்கு மற்ற மதத்தினர் அவரவர் மொழிகளில் அவரவர் மதநூல்களை எழுதினர்.
ஆனால் எம்மொழியினரும் அம்மத நூல்களால்தான் அவர்கள் மொழிகள் அழியாமல் காக்கப்பட்டன என்று கூறுவதில்லை. சான்றாக மத நூல்களை எழுதிய மொழிகளே மாண்டு போயிருக்கின்றன. ஆதலால் மத நூல்கள் எழுத உதவியதால்தான் அந்த மொழிகள் வாழ்ந்தன என்பதை முற்றிலும் சரியல்ல.
ஆனால் உலகின் மூத்தமொழி என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழரில் சிலர்தான் மத இலக்கியங்களால்தான் தமிழ்மொழி அழியாமல் காக்கப்பட்டது என்றுசொல்லி முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர். யார் கண்டது? இவர்களின் மதப்பற்று தாய்மொழியைவிட இன்னொரு மொழிதான் சிறந்தது என்று சொன்னால்கூட ஆச்சரியப்படத் தேவையில்லை.
எத்தனையோ மதநூல்களை எழுதிய மொழிகள் மாண்டுபோனதே என்றால் கூட உண்மையை உணர மாட்டார்கள்.
அதனால் ஒன்றும் பரவாயில்லை. இவர்களால்தான் தமிழின் பெருமை உலகுக்கு தெரியவேண்டும் என்ற நிலையிலும் தமிழ் இல்லை. ஒரு குடை கொண்டு வேண்டுமானால் பகலவனை மறைத்துவிடலாம் ஆனால் பகலவன் வானில் இருப்பதை யாராலும் மறைக்க முடியாது.
தமிழ்மண்ணில் ஜைனம், பௌத்தம், சைவம்,வைஷ்ணவம்,
கிறித்துவம், இஸ்லாம் என
பலமதங்கள் வலம் வந்துள்ளன. ஒன்றன் பின் மற்றொன்றாக
நிலைபெற்று வந்திருக்கின்றன. அப்படி மதத்தை நிலைநாட்ட அல்லது பரப்பி நிலைநாட்டத்தான் பக்தி இலக்கியங்கள் தேவைப்பட்டுள்ளன. அத்தகைய பக்தி இலக்கியங்களை எழுத தமிழ்மொழி கைகொடுத்து உதவியிருக்கிறது.
சிலர் அல்லது பலர் பக்தி இலக்கியங்களால் தான் தமிழ் வளர்ந்தது என்று சொல்லி வருகிறார்கள். இது ஏற்றுக் கொள்ளாத முடியாத ஒன்று. சமணமதம் வளர்ந்தபோது
அங்கே சிலப்பதிகாரம் எழுத தமிழ் உதவியது. புத்தமதம் வளர்ந்தபோது மணிமேகலை எழுத தமிழ் உதவியது. சைவமதம் வளர்ந்தபோது
தேவாரம், திருவாசகம் எழுத தமிழ் உதவியது. வைஷ்ணவம் வளர்ந்போது திவ்விய பிரபந்தம் எழுத தமிழ் உதவியது. கிறித்துவம் வளர்ந்தபோது
தேம்பாவணி எழுத தமிழ் உதவியது. இஸ்லாம் வளர்ந்தபோது சீறாப்புராணம் எழுத தமிழ் உதவியது.
இப்படி அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த மதங்களை விரிவு படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் பக்தி
இலக்கியங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இதுதான் உண்மை. எனவே பக்தி இலக்கியங்கள் தமிழ் மொழியில் எழதப்பட்டு அந்தந்த மதங்கள் வளர உதவியாய் இருந்ததே ஒழிய பக்தி இலக்கியங்களால் தமிழ் வளரவில்லை என்பதுதான் உண்மை.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியேயன்றி மதத்தொடு முன்தோன்றிய மூத்தகுடி என்று
வரலாற்றைத் திருத்தும் வகை செய்தல் தவிர்ப்போம். மக்கள் மக்களால் மக்களுக்காக அமைக்கப் படுவது மக்களாட்சி.![]()
அதுபோல் மனிதன் மனிதனால் மனிதனுக்காக அமைக்கப்பட்டதே மதம். இதையே கண்ணதாசன் மனிதன் மாறி விட்டான். மதத்தில் ஏறிவிட்டான் என்று பாடலில் எழுதியுள்ளார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()