கற்றது கைமண் அளவு!… சங்கர சுப்பிரமணியன்.

கற்றது கைமண் அளவு, கற்றது கைமண் அளவு என்கிறார்களே அப்படி என்றால் என்ன? இதைப்பற்றி வெகுநாட்கள்
யோசித்தேன்… யோசித்தேன்… யோசித்துக் கொண்டே இருந்தேன். என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. அப்படி எளிதாக எட்டிவிடுமா என்ன? சொன்னவர் யார்? ஔவைப்பிராட்டி ஆயிற்றே?
ஔவைப்பிராட்டியின் பாடல் எளிதாக இருக்கும் ஆனால் பொருள் குவிந்திருக்கும். வள்ளுவன் சொன்னது போல எவ்வளவு தோண்டுகிறோமோ
அவ்வளவே நீர் கிடைக்கும் என்பதுபோல்தான். ஔவையார் மேல் எனக்கு திடீரென ஒரு சந்தேகம். அது என்ன வெனில் அவர் பொதுவுடமைவாதியா? என்பதே அச்சந்தேகம்.
அச்சந்தேகத்துக்கும் காரணத்தை வள்ளுவரின் துணையோடு தோண்டி எடுத்தேன். தோண்டியதற்கு பலன் கிடைத்தது. அது கற்றது, கைமண் அளவு என்பது, முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு எதிராக இருக்கிறது என்பதே கண்ட பலன். ஆம், கற்றது கைமண் அளவு என்றால் குறைவாகப் படித்தவர்களையும் நிறைய படித்தவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்ப்பதா?
மேலும் ஐந்தாவது படித்தவனும் ஐந்து பட்டங்கள் வாங்கியவனும் ஒன்றா? அப்படிக்கேட்டால் கற்றது கைமண் அளவு என்பதன்படி ஒன்றுதான். ஏனென்றால் கம்பனும் வள்ளுவனும் எந்த பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தமிழ் இலக்கியத்தில் முதுகலை அல்லது முனைவர் பட்டம் பெற்றார்கள் என்றால் நம்மிடம் பதிலில்லை.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது கல்வி வேறு அறிவு வேறு என்பதை அறிய முடிகிறதல்லவா? அதனால்தான் கல்லாதது உலகளவு என்கிறார். அந்த கல்லாத உலக அளவு என்பதுதான் அறிவு. இதனால் நிறையப் படித்தவர்களை அறிவாளிகளென்றும் குறைவாகப் படித்தவர்களை அறிவற்றவர்களாகவும் சொல்லிவிட முடியாது.
அறிவு என்பது வேறு. அதிகம் படித்தவர்கள் அதைவைத்துக் கொண்டு அதிகம் பணம் ஈட்டலாம். அறிவை ஈட்ட
முடியுமா? அதுவே குறைவாகப் படித்தவர்கள் கூட அறிவை ஈட்டலாம். பின் அந்த அறிவின் துணைகொண்டு பணத்தையும்
ஈட்டலாம். குழப்பமாக இருக்கிறதா? குழப்பமாக இருக்கிறதென்றாலே ஆலோசணை தேவை. ஆலோசனையைத் தேடுவோம்.
சரி, ஆலோசகர் யார்? வேறு யார்? மறைந்த நம் நடிகர் சந்திரபாபுதான். அவர்தானே சொன்னார் “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை” என்று. இப்போது இன்னொரு சான்றுடன் விளக்குகிறேன்.
இரு வியாபாரிகள் பழம் விற்கின்றனர். ஒருவரிடம் மட்டமான பழங்கள் உள்ளன. ஆனால் பழங்களை விற்கும் திறமை இருக்கிறது. கவர்ச்சிகரமாகவும் இனிமையாகவும் பேசி பழங்களை விற்கிறான். இன்னொருவனிடம் மிகவும் நல்ல பழங்கள் இருக்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து பழங்களை விற்கும் சாதுர்யம் இல்லாததால் பழங்களை விற்கமுடிவதில்லை.
இனி முடிவுக்கு வருவோம். சுமாராகவே படித்த ஒருவர் வாழ்க்கையில் முன்னேறிவிடுகிறார். ஆனால் நிறைய படித்தவர் வாழ்க்கையில் பின் தங்கிவிடுகிறார். இதை சமுதாயத்தில் கண்கூடாகவே காண்கிறோம். இதில் எல்லாவற்றிலும் போல விதிவிலக்குகள் உண்டு. ஆனால் அதை விதி என்று பழமைவாதிகளின் பின் சென்று விடதீர்கள். இதைத்தான் ஔவையார் “கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு”என்று சுருங்கக்கூறி விளக்குகிறார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()