அவள்!…. (சிறுகதை) … சங்கர சுப்பிரமணியன்.

பத்மாவும் ருக்மணியும் பள்ளிப் பருவத்திலிருந்தே நல்ல நெருங்கிய சினேகிதிகள். ஆனால் இருவருக்குள்ளும் ஒரு பிளவு இருந்தது. அது வேறொன்றுமில்லை ஏழை பணக்காரி என்ற பிளவு. அந்தபிளவு அந்த இருவரைப் பொருத்தமட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. பள்ளி இறுதிஆண்டு தேர்வுக்குப்பின் கல்லூரிப் படிக்கும்போது வெவ்வேறு கல்லூரிக்கு சென்று விட்டனர். வெவ்வேறு கல்லூரிகளில் படித்தாலும் அவர்களுக்குள் தொடர்பு இருந்தது.
கல்லூரி படிப்பு முடிந்ததும் வசதிமிக்க பத்மா திருமணமாகி சிங்கப்பூர் சென்றுவிட்டாள். அதன்பின் அவர்களுக்கு இடையேயான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோனது. சிங்கப்பூர் சென்ற பத்மா அவளது கணவனின் வேலை ஒப்பந்தம் முடியவே கணவனின் ஊரான கோவையில் கணவனுடன் குடியேறினாள்.
காலத்தின் விளையாட்டு எப்படி எப்படியெல்லாமோ நிகழும். அதை உறுதி செய்வதுபோல பத்மா ஒரு பல்பொருள் அங்காடியில் ருக்மணியை சந்திக்க நேர்ந்தது. ருக்மணியை பத்மாவால் கண்டுபிடிக்க இயலாவிட்டாலும் ருக்மணி பத்மாவை இனம் கண்டுகொண்டாள். அவளை நெருங்கி,
“ஏய், பத்மா எப்பிடிடி இருக்க. சிங்கப்பூர்ல தான இருந்த. இங்க எப்படி வந்த?” என்றாள்.
“அடியே, ருக்கு நீயா? ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்ட?”
“ஆமடி, என்ன செய்ய? எனக்கு புகுந்த வீடும் அப்படியொன்றும் வசதியில்ல. வாழ்க்கையை ஓட்டுவதே சிரமம்தான். அதனால்தான் வாழ்க்கை என் வடிவத்தையே மாற்றிவிட்டது.”
“சாரி…டி. நாங்க இப்ப கோயம்புத்தூர் வந்துட்டம். அவருக்கும் ஒப்பந்தம் முடிஞ்சு போச்சு. நீயும் இங்கதான் இருக்கியா?”
“ஆம், நானும் இங்கதான் இருக்கன்”
சினேகிதிகள் இருவரும் ரெம்பநேரம் பேசிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. கடைசியாக இருவரும் தொலைபேசி எண்ணை மாற்றிக் கொண்டதுடன் ஒருவரை ஒருவர் வீட்டுக்கு வருமாறும் அழைத்தபடியே பிரிந்தனர்.
சில ஆண்டுகள் ஓடின. அவர்களது நட்பும் பழையபடியே தொடர்ந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவர் வீட்டுக்கு ஒருவரென சென்று நட்பை வலுப்படுத்தினர்.
ஒருநாள் பத்மா வீட்டுக்கு வந்திருந்த ருக்மணி தன் உறவினர் வீட்டுத் திருமணத்துக்குப் போகவேண்டும் கொஞ்சம் நகைகள் இரவல்தர முடியுமா எனக்கேட்டாள். அதற்கு பத்மா அதற்கென்னடி கொடுக்கிறேன் என்று இரண்டு கழுத்துசங்கிலி, நான்கு வளையல்கள், ஒலுமோதிரம் ஆகியவற்றை ஒரு நகைப்பெட்டியில் வைத்து கொடுக்க பத்மாவும் பெட்டியை திறந்து பார்க்காமலே வாங்கிச் சென்றாள்.
திருமணத்துக்கு சென்றுவந்த ருக்மணி இரவல் வாங்கிய நகைகளை கொடுக்க வந்தவள் பத்மாவிடம்,
“பத்மா, வளையல்களை தவிர மற்ற நகைகள் இதில் இருக்கிறது. வளையல்களை இன்னும் இரு தினங்களில் தருகிறேன்.” என்றாள்.
“சரி, பரவாயில்லை”
“கொஞ்சம் அவசரமா போகனும். வரட்டுமா?” என்று சொல்லி புறப்பட்டு சென்றாள்.
ருக்மணி சென்றதும் நகைப்பெட்டியை திறந்து பாரத்த பத்மா அதில் மோதிரம் இல்லாதை அறிந்து அதிர்ச்சியடைந்தாள். ஒருவேளை மறந்திருப்பாள் வளையளை கொடுக்க வரும்போது கொடுப்பாள் என்று சமாதானம் அடைந்தாள். இரண்டு நாட்களில் வந்து வளையல்களை கொடுப்பதாக சொன்னவளிடமிருந்து இரண்டு வாரங்கள் ஆகியும் எந்த பதிலுமில்லை. பொருத்திருந்து பார்த்த பத்மா தனது சினேகிதியிடம் வளையல்களைப் பற்றி கேட்டாள். உடனே ருக்மணி,
“அடடா, எப்படி மறந்தேன் என்றே தெரியல. சுத்தமா மறந்தே போயிட்டேன். இதோ வருகிறேன்” என்றாள்.
இதோ வருகிறேன் என்று சொன்னவள் இருதினங்கள் கழித்து வந்து மூன்று வளையல்களை மட்டும் கொடுத்துவிட்டு ஒருவளையலை தனது மகள் எங்கோ தவறுதலாக வைத்துவிட்டாள் கூடியசீக்கிரம் தேடி தந்துவிடுகிறேன் என்றவளிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலையைமட்டும் அசைத்தாள்.
அதுமட்டுமா மோதிரத்தைப் பற்றியும் ருக்மணி ஒன்றுமே சொல்லாதது பத்மாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
அவளிடம் நகையை கொடுக்கும்போதே நகைப்பெட்டியை திறந்து காண்பித்திருக்க வேண்டும். அவளாவது திறந்து பார்த்திருக்க வேண்டும். இருவருமே நட்பின் அடிப்படையில் அதைச் செய்யவில்லலை. இப்போது அவளிடம் நகைப்பெட்டியில் மோதிரத்தையும் வைத்துக் கொடுத்தேன் என்று சொல்லமுடியாது.
கொஞ்சநேரம் பேசிவிட்டு ருக்மணி சென்றதும் பத்மா பலவாறாக எண்ணி வருந்தினாள்.
தெரிந்த சினேகிதி என்பதால் சிறிதும் யோசிக்காமல் அத்தனை நகைகளை இரவலாகக் கொடுத்தோம். அதை முழுவதையும் கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக திருப்பித்தருகிறாள். அதையும் கேட்டுப் பெறவேண்டியுள்ளது. மோதிரம் திரும்பவராது. அதைப்பற்றி பேசவே மாட்டேங்குறா. போன போகட்டும்
நமக்கிருக்கும் வசதிக்கு கால்பவுண் மோதிரம் ஒன்றும் பெரிதல்ல. ஆனால் வளையல் அப்படி அல்ல இரண்டு பவுன் ஆயிற்றே. இவளிடம் எப்படியாவது கேட்டு வாங்கியே ஆக வேண்டும். இரவல் என்று கேட்டவுடன் கொஞ்சம்கூட யோசிக்காமல் கொடுத்தேன். கணவருக்கு தெரிய வந்தால் என்ன சொல்வாரோ? அதை ஒழுங்காகக் கொடுக்காமல் இப்படி கேட்டு கேட்டு வாங்கும்படி ஆகிவிட்டதே என்று பலவாறு வருந்தினாள்.
நட்பு புனிதமானது அது அவளுக்கு தெரியாமல் கொஞ்சம்கூட பதட்டப்படாமலும் இருக்கிறாள். இரவல் கொடுத்த என்னை இப்படி புலம்ப வைத்துவிட்டாளே என்று பலவாறு எண்ணியவள் இப்படியும் இவ்வுலகில் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அதனால்தானோ என்னவோ செல்வந்தர்கள் ஏழைகளை அதுவும் உறவினர்களைக்கூட அருகில் நெருங்க விடுவதில்லையோ? என்று பலவாறு எண்ணி குழம்பினாள்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()