கதைகள்

சமூக இடைவெளி!…. சங்கர சுப்பிரமணியன்.

நம் ஊசி தங்க ஊசி என்றால் அது கண்ணைக் குத்தாது விடுமா? நம் வீட்டு நெருப்பென்றால் கை வைத்தால் சுடாது போகுமா? இந்த உண்மையை சொன்னால் தப்பாகுமா? தப்பைத் தப்பென்று சொல்லமல் தப்பை தப்பு தப்பாய் சொல்லிக்கொடுத்தால் தப்பு தப்பில்லை என்றாகாது தப்பு
தப்புதான் என்பதை எத்தனபேர் தப்பின்றி அறிவார்கள்?

ஆனால் இந்த உண்மையைச் சொன்னல் மூடி மறைக்க முயல்கிறார்கள். என்னதான் பூனைபோல் கண்ணை மூடிக்கொண்டாலும் பூலோகம் இருட்டென்று எல்லோரும் நம்பி விடமாட்டார்கள். ஏன் அந்த பூனைக்கே தெரியும் பூலோகம் இருட்டல்ல நாம் தாம் வீம்புக்கு கண்ணை மூடிக்கொண்டிருக்கிறோம் என்று.

சரி, இனி விடயத்துக்கு வருவோம். ஒரு குடும்பத்தினர் பத்து நாள் விடுமுறையில் கோவில் குளம் என்று புண்ணியம் தேடி ஆன்மிக அரசியல் மாதிரி ஆன்மிக சுற்றுலா சென்றார்கள்.

ஒரு முருகன் திருத்தலத்தில் கோபுரத்தில் கட்டியிருந்த ஒலிபெருக்கியிலுருந்து “உள்ளம் உருகுதய்யா உன் எழில் காண்கையிலே” என்ற பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது. அப்போது
“எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் உன்னைப்போல் ஆவதில்லையே! முருகைய்யா உன்னைப்போல் ஆவதில்லையே!!” என்ற பாடலின் வரிகளைக் கேட்ட தாத்தா “எங்கப்பன் முருகன் அந்த தண்டாயுதபாணியின் பாடலைக் கேட்கும்போது இந்த திருத்தலத்திலேயே என் உயிர்போகாதா?” என்று தாத்தா சொன்னார். அதைக் கேட்டதும் அப்படியானால் நீங்கள் இங்கேயே இருங்கள் தாத்தா நாங்கள் போகிறோம் என்று பேரன் சொல்ல எல்லோரும் சிரிக்க சுற்றுலா மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்தது.

ஒரு வழியாக சுற்றுலா முடிந்து வீடு வந்து இரண்டு நாட்கள் ஆனதும் குடும்பத்தினர் கூடி கதைத்துக் கொண்டிருக்கும் போது பேரன் சிகாமணி தாத்தாவைப் பார்த்து,

“தாத்தா நமது மதம் பெரிய மதமா?” என்றான்.

“ஆமாம், அதில் உனக்கென்ன சந்தேகம்?” என்று கேட்டார்.

“அப்படியானால் உலகிலேயே முதல் மதமா?”

“இல்லை, மூன்றாவது பெரிய மதம்”

“ஆனால் மற்ற மதங்களில் ஒன்றிரெண்டு கடவுள்கள் தான் இருக்கிறார்கள். நம்ம மதத்தில் நான் கை விரல்களை வைத்து எண்ணினேன் பற்றாமல் கால் விரல்களையும் சேர்த்து கூட்டினேன் அப்படியும் பற்றவில்லை. அவ்வளவு கடவுள்கள். அப்படியிருந்தும் ஏன் முதலாம் இடத்தில் நாம் இல்லை?” என்று பேரன்
கேட்டதும்,

“போடா அபிஷ்டு. உன் அப்பனிடம் சேர்ந்து நீயும் கெட்டு விட்டாய். வீட்டில் எது நம் பேச்சைக் கேட்கிறது? பெருசு கேட்டாதானே சிறுசு கேட்கும். பகவானுக்கு நாமாவளி சொல்லுன்னா கடவுளாவது பூதமாவதுன்னு குதர்க்கம் பேசுறான் தகப்பன். அவன் சரியா இருந்தாதானே நீ சரியா இருப்ப” என்று புலம்பினார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிகாமணியின் அப்பா ரமணி மகனை அழைத்து சிகாமணி நம்மிடம் பரந்த மனப்பான்மை இல்லை அதனால்தான் மூன்றாம்
இடம் என்றான். சிகாமணி தந்தையிடம் அதற்கு ஒரு காரணம் சொல்லச் சொன்னான்.
ஒரு காரணம் என்ன இரண்டு காரணம் சொல்கிறேன் என்றார் அப்பா.

முதலாவதாக மற்ற மதங்களில் கடவுளுக்கு பூசை
பண்ண வேண்டுமானால் அதற்கென்று படிப்பு உள்ளது. அந்த படிப்பை அம்மதத்தைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் படித்து பூசை பண்ணலாம். நம் மதத்திரல் அது முடியாது. கல்வியில் முன்னோடியான கேரளாவிலேயே இப்போதுதான் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் சென்று பூசை
செய்யலாம் என்று சட்டத்தின் மூலம் அனுமதித்து அதன்படி பூசாரிகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். தந்தை சொல்வதை மகன் ஆர்வமாகக் கேட்டு வந்தான்.

இன்னொரு காரணம் சொல்வதாகச் சொன்னீர்களே சொல்லுங்கள் என்று மகன் கேட்கவே தந்தை தொடர்ந்தார். அல்பனியா நாட்டிலிருந்து வந்த தாயுள்ளம் கொண்ட மதர் தெரசா கல்கத்தா வந்து அடித்தட்டு மக்களுக்கு உதவினார். தொழுநோயாளிகளிடம் அன்புகொண்டு அவர்களைத் தொட்டு சிகிச்சை செய்தார். நம் மத குருமார்கள் சூடானுக்கோ எத்தியோப்பியாவுக்கோ சென்று அங்குள்ள நலிந்தோருடன் நெருங்கியாவது பழகுவார்களா?
தொற்று நோய் இல்லாமலேயே
சமூகஇடைவெளி என்ற
தீண்டாமை தத்துவத்தை அன்றே கண்டு பிடித்தவர்களேயிற்றே என்று ரமணி மகனுக்கு நல்ல விசயங்களை சொல்லிக் கொடுக்கவும் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தவர்,

“இவன் திருந்த மாட்டான். குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பாக நமக்கு சத்துரு இவனே போதும். வேறு
யாரும் வேண்டாம். தான் கெட்ட குரங்கு வனத்தையும் அழிக்குமாம் என்பது இதுதான்” என்று சொன்னபடியே வெடுக்கென்று எழுந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

குறிப்பு:
One India வில் நான் எழுதி வெளிவந்திருந்த “Caste system in India splitting Indians” என்ற ஆங்கில கட்டுரையை தழுவி எழுதப்பட்ட கதை.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *