கவிதைகள்
நிமிர்ந்தபடி கொரனோமட்டும் தாவிக் குதிக்குது!

வீட்டைவிட்டு வெளியில் 
போகவிருப்பம் வருகுது
ஆனால் வீட்டைவிட்டு
வெளியில் போனால்
வில்லங்கம் வருகுது
வீட்டுக்குள்ளே இருக்கவிருக்க
வெறுப்பாய் இருக்குது
வில்லன் கொரனோ
செய்தசதியால் வெந்துநிற்கிறோம் !
ஓடுத்திரிந்த கால்களெல்லாம்
ஓய்வாய் கிடக்குது
ஆடித்திருந்த நிலைகளிப்போ
அடங்கிக் கிடக்குது
தேடியலைந்து பொருளைவாங்கும்
நிலைக்குள் தள்ளியே
ஆடியெங்கும் ஆட்டம்போட்டு
கொரனோ திரியுது !
உண்டுகளித்த விடுதியெல்லாம்
உறங்கிக் கிடக்குது
ஊரைக்கூட்டும் சினிமாவரங்கு
ஓய்ந்து படுக்குது
மண்டைகலக்கும் மதுக்கடைகள்
மெளனம் காக்குது
மனிதவுயிரை காவுகொள்ள
கொரனோ துடிக்குது !
பரப்பரப்பாம் விமானநிலையம்
படுத்துக் கிடக்குது
பாயும்புலியாய் செல்லும்கார்கள்
பதுங்கி நிற்குது
நிறைந்திருக்கும் வீதியெல்லாம்
நித்திரை கொள்ளுது
நிமிர்ந்தபடி கொரனோமட்டும்
தாவிக் குதிக்குது !
![]()