கவிதைகள்

நிமிர்ந்தபடி கொரனோமட்டும் தாவிக் குதிக்குது!

 வீட்டைவிட்டு வெளியில்
         போகவிருப்பம் வருகுது  
         ஆனால்  வீட்டைவிட்டு 
         வெளியில் போனால்
         வில்லங்கம் வருகுது 
          வீட்டுக்குள்ளே இருக்கவிருக்க 
          வெறுப்பாய் இருக்குது 
          வில்லன் கொரனோ
          செய்தசதியால் வெந்துநிற்கிறோம்  ! 
 
          ஓடுத்திரிந்த  கால்களெல்லாம்
          ஓய்வாய் கிடக்குது 
          ஆடித்திருந்த நிலைகளிப்போ
          அடங்கிக் கிடக்குது 
          தேடியலைந்து பொருளைவாங்கும்
          நிலைக்குள் தள்ளியே 
          ஆடியெங்கும் ஆட்டம்போட்டு
          கொரனோ திரியுது  ! 
 
           உண்டுகளித்த விடுதியெல்லாம்
           உறங்கிக் கிடக்குது
           ஊரைக்கூட்டும் சினிமாவரங்கு
           ஓய்ந்து படுக்குது 
           மண்டைகலக்கும் மதுக்கடைகள்
           மெளனம் காக்குது 
           மனிதவுயிரை காவுகொள்ள
           கொரனோ துடிக்குது  ! 
          
           பரப்பரப்பாம் விமானநிலையம்
           படுத்துக் கிடக்குது 
           பாயும்புலியாய் செல்லும்கார்கள்
           பதுங்கி நிற்குது 
           நிறைந்திருக்கும் வீதியெல்லாம்
           நித்திரை கொள்ளுது
           நிமிர்ந்தபடி கொரனோமட்டும்
           தாவிக் குதிக்குது  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *