ஹிட்லரும் கொரோனாவும்!… சங்கர சுப்பிரமணியன்.

ஒரு சமயம் ஹிட்லர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சலிப்புத் தட்டவே கப்பலின் மேல் தட்டுக்கு சென்றார். மேல்தட்டில் நின்றவாறு நாலாபுறமும் கடலைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அந்த மேல் தட்டில் ஓர் ஆங்கிலேயே அதிகாரியும் இவரைப்போலவே கடலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவரின் பார்வையில் ஹிட்லர் தென்பட்டார்.
அந்த அதிகாரிக்கு வெகுநாட்களாகவே அவரின் மனதில் ஹிட்லரிடம் நேரில் சந்தித்தால் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது ஹிட்லரே அருகில் நிற்பதால் தனது மனதின் நெடுநாளாய் இருந்த கேள்வியை கேட்கலாம் என்று
ஹிட்லரை நெருங்கி,
“வணக்கம். நீங்கள் மிகவும் கண்டிப்பானவர். எவ்வாறு இந்த உலகையே மிரளும்படி வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே ஹிட்லர் கைதட்டினார். அதைக்கேட்ட சிப்பாய் லெப்ட், ரைட் என்று சொல்லிக் கொண்டேவந்து சல்யூட் அடித்தார். அந்த சிப்பாயைப் பார்த்து ஹிட்லர் நீ இந்த கடலில் குதித்து இறந்துவிடு என்றார். அவரும் என்ன ஏது என்று கேளாமல் கடலில் விழுந்து இறந்தார். அதன்பின் அதிகாரியை அவர்பார்க்க,
“நான் நம்பமாட்டேன்” என்றார் அதிகாரி.
திரும்பவும் ஹிட்லர் கையைத்தட்ட சிப்பாய் ஒருவர்
வந்தார் சிப்பாயிடம் அவர் கட்டளையிட்டார். அவரும் என்ன ஏது என்று கேட்காமல் கடலில் விழுந்து இறந்து போனார்.
ஹிட்லர் அதிகாரியைப்
பார்த்தார். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திரும்பவும் கைதட்ட சிப்பாயும் வந்துகொண்டிருந்தார். இம்முறை சிப்பாய் ஹிட்லரை நெருங்குமுன் அதிகாரி அவரைத் தடுத்து அவரும் சொல்கிறார் என்று ஒவ்வொருவராக என்ன ஏது என்று கேட்காமல் இப்படி கடலில் விழுந்து மடிகிறீர்களே என்று கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் இவரிடம் பணிபுரிவதை விட கடலில் விழுந்து இறப்பது மேல் என்றாராம். சிப்பாயிடமிருந்து அந்த பதிலைக்கேட்டதும் எப்படி ஹிட்லர் உலகையே மிரட்டி வைத்திருந்தார் என்பது அந்த அதிகாரிக்கு தெரிந்ததாம்.
இந்த கதையை மணி தன் நண்பன் ராமனிடம் சொல்ல ராமன் இப்போதுதான் இந்த கொரோனா எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பது தெரிகிறது என்றவனிடம்,
“என்ன சொல்கிறாய் நீ” என்றான் மணி.
“மக்களிடம் எவ்வளவுதான் சமூக இடைவெளியைக் கடைப்பிடி, முகக்கவசம் அணி என்று சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறார்களே”
“சொல்லவருவதை விவரமா புரிகிற மாதிரி சொல்” என்று மணி சொன்னதும்,
ஹிட்லரிடம் பணிபுரிவதை விட கடலில் விழுந்து இறப்பதுமேல் என்று சிப்பாய்கள் நினைத்தது போல் இந்த பூமியில் வாழ்வதைவிட இறப்பதே மேல் என்று மக்கள் நினைத்து அரசாங்கம் சொல்வதை கேட்கவில்லையோ என்றான் ராமன்.

அதற்கு மணி வாழவும் வழியில்லை கடவுளும் காக்கவில்லை நோயை ஒழிக்க மருந்தும் கண்டுபிடிக்கவில்லை பணக்கார நாடுகளிலேயே ஆயிரக்கணக்கில் மக்கள் இறக்கிறார்கள். உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் என்ற எதுவுமே நிரந்தரமின்றி வாழ்வதை விட வருவது வரட்டும் என்ற விரக்தியின் நிலைக்கே சென்றுவிட்டார்களோ என்னவோ என்றான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()