
![]()
திரிகூடராசப்ப கவிராயரின் பிறந்த ஊரான தென்காசியை அடுத்த மேலகரத்தை சேர்ந்தவர்கள் அருண்மொழியும்
ஆதித்தனும். சிறுவயதிலிருந்தே
அக்கிராமத்தில் நண்பர்களாக வளர்ந்து வந்தவர்கள் தென்காசி, திருநெல்வேலியென்று படிப்பெல்லாம் முடித்து பெங்களூரில் இருக்கும் அருண்மொழியின் தாய்மாமாவின்உதவியால் அங்கு சென்று அங்குள்ள விமானத் தொழிற்சாலையில் பணிபுரிந்தனர்.
அல்சூர் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டுவிட்டு பெங்களூர் தமிழ்ச் சங்கம் வந்து கொஞ்சநேரம் தினசரிகளை வாசித்துவிட்டு அப்படியே கென்சிங்டன் ரோடு வழியாக நடந்து அங்குள்ள பூங்காவை அடைந்தனர். பூங்காவில் ஏரிக்கரையோரம் போடப்பட்டிருந்த சாய்வுஇருக்கையில் வந்து அமர்ந்தனர்.
ஏரியலிருந்து வந்த சில்லென்ற காற்று முகத்தில்பட அந்த சுகமான உணர்வில் மெய்மறந்தனர். ஏரியினுள்
தூரத்திலிருந்த தீவுகளில் பசுமையாய் நின்றிருந்த பெரியபெரிய குல்மோகர் மரங்களில் கொட்டிக்கிடந்த சிவப்பு நிறப்பூக்கள் கண்ணுக்கு விருந்தளித்தன. ஆங்காங்கே சிலபடகுகள் நகர்ந்து கொண்டிருந்தன. அருகிலொரு படகில் இளஞ்சிட்டுக்கள் தெரிந்தனர். அதில் ஒருவன் மடியில் ஒருத்தி சாய்ந்திருக்க அந்த ஒருவன் துடுப்பால் நீரைத்தள்ளியபடியே செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்தனை இவ்வுலகுக்கு அழைத்துவந்த அருண்மொழி,
“மச்சான் அதெல்லாம் பார்த்துட்டுருந்தா வேலைக்கு ஆவாது. இன்னும் பத்து நாளில் நாம் ஆஸ்திரேலியா போகப் போறோம்” என்றான்.
“புரியுதுடா, அதான் கோவில், தமிழ்ச் சங்கம், ஏரிக்கரை என்று வந்தோம். இனிமேல் எப்போ இங்கெல்லாம் வரப்போறமோ தெரியல” என்றான்.
இருபது ஆண்டுகள் வாழ்ந்த அழகான நகரை விட்டுப்போகிறோம் என்பதைவிட இளவயதுமுதல் திருமணமாகி குழந்தைகள் பெற்று வாலிபவயதை வளங்கொழிக்க வாழ்ந்த ஊரைவிட்டு பிரியப்போகிறோமே என்ற ஆதங்கம் நெஞ்சில் கனத்தது. இங்கே நன்றாகத்தானே இருக்கிறோம். நல்ல வேலை, கைநிறைய சம்பளம், உறவுகள் நண்பர்கள் என சுற்றியொரு கூட்டம். தமிழ்நாட்டை விட்டு பிரிந்திருந்தாலும் சொந்த ஊரிலேயே இருப்பதுபோன்ற சூழ்நிலை என எல்லாம் இருந்தும் இம்மண்ணை விட்டு செல்கிறோம் என்றால் மாயையாய் கண்ணை மறைக்கும் வெளிநாட்டு மோகமென்பதை அவர்களுக்கு உள்ளுணர்வு உணர்த்தியது.
பத்தாண்டுகள் பறந்தோடின. ஆஸ்திரேலியாவில் மெல்பனுக்கு வந்து குடியேறி ஆதித்தன் என்டேவர்ஹில்ஸிலும் அருண்மொழி மில் பார்க்கிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அருண்மொழி ஆதித்தனை தன் வீட்டுக்கு வந்து தான் போட்டிருக்கும் தோட்டத்தை வந்து பார்க்குமாறு அழைத்துக் கொண்டேயிருந்தான். ஆதித்தன் குடும்பத்தினர் அவனது மாமியாருக்கு உடல் நலம் சரியில்லை என்று
சென்றிருந்ததால் தனிமையில் இருந்தவன் அருண்மொழி அழைத்துக்கொண்டே இருந்ததால் அங்கு சென்றான்.
“ வா…வா…ஆதி எவ்வளவு நாளா கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். வீட்டிலே யாருமில்லை, பொழுது போகவில்ல என்றதும்தான் எங்க ஞாபகம் வருகிறதா?” என்று கேட்டபடியே வாசல் கதவை
திறந்தவன்,
“பானு, வராத விருந்தாளி ஆதி வந்திருக்கான்” என்று சொன்னபடியே ஆதித்தனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.
பானு வந்து வரவேற்றவள் சிறிது நேரம் கழித்து காபி கொண்டு வர இருவரும் காபி குடித்துவிட்டு தோட்டத்துக்கு சென்றனர். அங்கே உயரமாக மண் போட்டு சுற்றி மரப்பலகைகளால் மண்சரிவு ஏற்படாமல் தடுத்து அழகாக காய்கறித் தோட்டம் போட்டிருந்தான். கத்திரிக்காய், வெண்டை, மிளகாய், தக்காளி என்று காய்கறிகள் நன்றாகக் காய்த்து தொங்கின.
“என்னடா தோட்டம் எப்படி இருக்கு?”
“நல்லாவே இருக்கு. ஆனா ஒன்னு, நம்ம ஊர் மேலகரத்திலே வீட்டுக்கு முன் இருக்கும் பள்ளத்தில் மண்ணைப் போட்டு மூடாதவன், இங்க மண்ணை மேடுமாதிரி குவித்து தோட்டம் போட்டிருக்க. பாராட்டுக்கள்டா” என்றான்.

“பாராட்டுக்கு நன்றி. ஆனால் இந்த பூச்சி தொல்லைதான் தாங்க முடியல. பூச்சிக்கொல்லி மருந்தோ அநியாய விலை. கிடைக்கும் காய்கறிகளை வைத்து கணக்கு போட்டால் எந்த கடினமான வேலையும் செய்யாமல் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கினாலே நல்ல லாபம்தான்” என்று அங்கலாய்த்தான் அருண்மொழி.
அதைக்கேட்ட ஆதித்தன் அட என்னடா நீ வெளியுலகம் தெரியாதவனா இருக்க. ட்விட்டர், வாட்ஸ்அப் எல்லாம் பார்க்கிறதில்லாயா? சமீபத்தில கொரானா கிருமியைக் கொல்ல அதர்வண வேதத்தில் ஒரு மந்திரம் இருப்பதாக செய்தி வந்திருக்கிறது என்றான். அதற்கு அருண்மொழி ஆமாண்டா நானும் படித்தேன். அதற்கும் நீ
சொல்வதற்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்கவே,
“டேய்! கண்ணுக்கு தெரியாத
கிருமிகளுக்கே வேதத்தில் மந்திரம் இருக்கும்போது கண்ணுக்கு தெரிகிற பூச்சியைக் கொல்ல ஒரு மந்திரம் இல்லாமலா போய்விடும். கொஞ்சம் பொறு, யாராவது அந்த மந்திரத்தை சொல்வார்கள்” என்றான்.
அதற்கு அருண்மொழி, “இந்தா பாரு ஆதி நீ இந்த ட்விட்டர், வாட்ஸ்அப் எல்லாம் பார்த்து ரெம்பவும் கெட்டுத்தான் போயிட்ட” என்று பதில் சொன்னான்.
நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பானு இருவரையும் சாப்பிட வரும்படி அழைக்கவும் அருண்மொழி ஆதியிடம் வாடா சாப்பிடலாம் என்றதும் ஆதி நான் தோட்டத்தை பார்த்துட்டு போயிடலாம்னுதான் வந்தேன்
நீ என்னடான்னா சாப்பிட்டுட்டு போகச் சொல்லுற என்றான். பரவாயில்லை, சாப்பிட்டுட்டு போடா ரொம்பவும் அலட்டிக்காதே. விருத்தோம்பல் தமிழர் பண்பாடு, திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் வேதத்தில் இருக்கிறது என்று சொல்லிடப்போற என்றதும் இருவரும் சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றனர்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()