Featureகதைகள்

தர்மினி!…. ( சிறுகதை ) ஏலையா க.முருகதாசன்.

முக்கியமான குடும்ப நண்பரின் கல்யாண வீட்டுக்குப் போவதற்காக விசேச அலங்கரிப்பான தலைக்கு சாயம் பூசுவதில் அதி சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

ஒரு கிழமைக்கு முந்தித்தான் காது குத்தி கடுக்கன் மாதிரி தோடு போட்டனான்;.

மனைவிக்கு காய்ச்சல், அங்கை வந்து சனத்துக்குள்ளை ஏன் கஸ்டப்படவேண்டும்; என்று சொல்லி ‘நீங்கள் போட்டு வாங்கோ, சாப்பிட்டமா, பொம்பிளை மாப்பிளையை வாழ்த்தினமா, காசைக் கொடுத்தமா ‘ என்று கெதியிலை வரவேண்டும்.’அங்கை பல்லிளித்துக் கொண்டு நிற்க வேண்டாம்,சுவீடனிலையிருந்து யாரோ வாறதாக என்ரை காதிலை விழுந்தது….தேவையில்லாமல் ஏதேன் கதை வந்துதோ…’ என்று சொல்லியும் சொல்லாமல் மனைவி இழுக்க’ ஆர் வருகினமாம்’ என்றேன்.

‘ஆரோ வருகினமாம் விட்ட குறை தொட்ட குறை என்று … வேண்டாம் கெதியிலை வாங்கோ, உங்களைப் பற்றித் தெரியுந்தானே’ என்று இழுத்தாள்.

நானும் கிண்டிக்கிளறி விலாவாரியாக, அது ஆரப்பா சுவீடனிலிருந்து வருகிறதெண்டு கேட்கலை, ஏதோ அறிஞ்சு வைச்சிட்டு மனைவி எச்சரிக்கிறள் என நினைச்சு பேசாமலிருந்தன்.

கல்யாண வீட்டுக்குப் போய்ச் சேர்கையில் தாலி கட்டிறதுக்கு ஆயத்தம்.ஆட்களை விலத்திக் கொண்டு, இரண்டு பிள்ளைகள் நீட்டிய பூத்தட்டத்திலிருந்து பூவை அள்ளிய நான் மணமக்களுக்கு எறியத் தயாராக நின்றேன்.பூவை மணமக்கள் தலையில் பொழிய வேணடும், ஆனால் இப்ப கல்யாண வீடுகளிலை பூவை எறியிற வேலைதான் நடக்குது.எறியிற பூவும் மணமக்களுக்கு போய் விழுவதில்லை, யார் யாருக்கோ போய் விழுது.

ஆட்களை விலத்திக் கொண்டு போய் பூவை எறியத் தயாராக நின்ற என்னிடம் எனக்குப் பக்கத்தில் நின்ற சொந்தக்காரப் பெண் ‘அண்ணை அக்கா வரேலையோ’ என்றாள், ‘சரியான காய்ச்சல்’ என்றேன். ‘அதுதான் சாட்டென்று அக்காவை விட்டிட்டு வந்திட்டியள் போல ,நல்ல அலங்காரமா ஸ்மாட்டாத்தான் வந்திருக்கிறியள், சுவீடனிலிருந்து ஆள் வருதென்று தெரிஞ்சுதானே இப்படிச்சுப்பராக வந்திருக்கிறியளோ’என்றாள் அந்தப் பெண். தாலி கட்டப் போறதை தவிலும் நாயனமும் கட்டியம்கூற பூவை எறிய தயாரானேன்.பிந்திப் பூவை எறிந்ததால் அது மணமக்களுக்கு மேல் விழவில்லை.யாருக்கோ போய் விழுந்திருக்க வேண்டும்.’சரியான ஆளுக்குத்தான் எறிந்திருக்கிறியள்’ என்றாள் சொந்தக்காரி.

மனைவியும் சுவீடனைச் சொல்லுகிறாள், சொந்தக்காரியும் சுவீடன் என்று சொல்லுகிறாள், என்னுடைய பழைய கதைகளில் ஒன்றிரண்டு கசிந்திருக்கு போல

என்று எண்ணியவாறு, திரும்பி வந்து நாலு கதிரைகளிருந்தும் அதில் யாருமே உட்கார்ந்து இருக்கவில்லை. அதில் ஒன்றில் உட்கார்ந்தேன். நான் வந்ததைக் கண்டவர்கள் தேநீரும் பலகாரமும் கொண்டு வைத்து வைத்தார்கள்,சாப்பாடும் வந்தது, கலகலப்பாகப் பேசிக் கொண்டும், சிரித்தபடியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது கண்களை அலைபாயவிட்டபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எனது கண்கள் அனைவரையும் விலத்திச் சென்று கடைக்கிற இடைவெளியூடாக ஒரு பெண்ணின் மீது விழுந்தது.

எனது உடலில் இனம்புரியாத உணர்வு,பலரைத் தாண்டி என் கண்கள் அவளைக் கண்ட போதும், அங்குமிங்குமாக கழுத்தைத் திருப்பியும், அசைந்தும் கொண்டிருந்தவர்களை தாண்டி எண் கண்கள் பார்த்த சில விநாடிகளில் அவள்தான் என நான் உறுதிப்பட்டேன்.எனது மனைவியும் சொந்தக்காரியும் சொன்னதும் இவளைத்தானோ என நினைத்தவாறு வேகமாக சாப்பிட்டு முடித்த நான் கையைக் கழுவிவிட்டு அவளை நோக்கி சென்றேன்.நான் வருவதைக் கண்டதும், உற்றுப் பார்த்த அவள்,சடாரென்று தலையைத் திருப்பி மேசையைப் பார்த்படியே இருந்தாள். என்னை உற்றுப் பார்த்தவுடனேயே தலையைத் திருப்பியதைக் கண்ட அவளுடன் கதைத்துக் கொண்டிருந்த பெண்கள், என்னை ஒருவிதமாக பார்த்து அதே பார்வையுடன் அவளையும் பார்த்தார்கள்.

அவளருகில் சென்ற நான் ‘எப்படியிருக்கிறீர்கள் தர்மினி’ என்றேன்.சில விநாடிகள் எதுவுமே பேசாமலிருந்த அவள், கோபத்துடன் ‘நான் எப்படி இருந்தால்தான் உனக்கென்ன, சாகாமல் உயிரோடு இருக்கிறன், நான் செத்திடுவேன் என்று நினைச்சியோ’ என்றாள்.அவள் இப்படிக் கோபமாகப் பதில் சொல்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவள் எனக்குக் கோபமாக பதில் சொன்னதுகூட பெரிதாகத் தெரியவில்லை,மரியாதையில்லாமல் ஒருமையில் சொன்னதால் நான் பலபேருக்கு முன்னாள் கூனிக்குறுகி நின்றேன்.அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று எதுவுமே எனக்குத் தெரியவில்லை.அவளோடு இருத்தவளில் ஒருத்தி’ என்னடி இப்படிக் கதைக்கிறாய் மட்டுமரியாதை இல்லாமல்’ என்று அவள் தோளை உலுக்கினாள்.

கண்கள் குளமாக,சிவந்த அவள் கண்கள் எனனை நோக்கி கோபமாகப் பார்த்து ‘வேறு எப்படிப் பேசச் சொல்கிறாய், ஒரு துரோகியுடன் இப்படித்தான் பேசுவேன், இவரெல்லாம் ஒரு மனுசனா’ என்றாள்.

தீரமுடியாத, தீர்க்க முடியாத பெரும் கோபம் இருப்பதாக உணர்ந்தேன். கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையை மனதுக்குள் வைத்திருக்கிறாள் என்பது மட்டும் புரிந்தது. அவமானத்தால் முகத்தில் வியர்த்த வியர்வையைக்கூட துடைக்க முடியவில்லை,முகம் இருள எனது இடத்தில் வந்து ஊட்கார்ந்தேன்.

தர்மினி

எனது உறவுக்காரப் பெண்.மைத்துனி முறையானவள்.அவள் தனியார்

மருத்துவமனையில் வேலை செய்தவள்.எனது நண்பனும்,உறவுக்காரனுமான ஒருவன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தான்.

தர்மினி வீட்டுக்குப் போகும் போதெல்லாம், உறவு நிலையில் தொடங்கிய பேச்சவார்த்தை நாளடைவில் இருவருக்குமிடையில் காதலாக மாறியது.தர்மினிக்கு மூன்று தமக்கைமார் இரண்டு தங்கைகள். அவர்களும் எமது நிலையை உணர்ந்து நான் போகும் போதெல்லாம்’தர்மினி உன்னுடைய ஆள் வந்திருக்கிறார் ‘என்பார்கள்.தர்மினியும் அவர்களின் வீட்டோடு இருந்த சிறிய நடைபாதையில் நின்று கதைப்பாள்.தமக்கைமார் போட்டுக் கொடுத்த தேநீரைத் தருவாள்.

அவள் மருத்துமனையில் வேலை தாதியாக வேலை செய்ததால், நண்பனைப் பார்க்கப் போகும் நாட்களில்,தர்மினி தான் தங்கியிருக்கும் விடுதியில் வந்து சந்திக்குமாறு நண்பனிடம் சொல்வாள்.அவனும் ‘உனக்காக காத்திருக்கிறாள் போய்ப் பார்’ என்பான்.விடுதியிலுள்ள விருந்தினர் அறையில் அவளைச் சந்திப்பேன்.அவள் எனக்காகச் செய்த பலகாரங்கள் தேநீர் எனத் தந்து உபசரிப்பாள்;, எதிர்காலத் திட்டங்கள் பற்றிக் கதைப்பாள்.எமது காதலும், சந்திப்பும் கிட்டத்தட்ட ஒருவருடம் கழிந்த நிலையில்,அவசரமாக பார்க்க வரட்டாம் என நண்பன் சொன்னான். போய்ப் பார்த்தேன்.முன்பு போல அவள் முகத்தில் காதல் ரேகைகளோ, அதை வெளிப்படுத்தும் புன்னகையோ இல்லை.அழுது களைத்துப் போய் சோர்ந்த முகத்துடன் இருந்தாள்.அவளை நான் சந்திக்கும் நேரங்களில் ‘சாப்பிட்டீங்களா’ எனத் தொடங்கி அவள்தான் கதைப்பாள்.அன்று எதுவுமே பேசாதிருந்தாள்.என்னை ஒருமுறை பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்தவள் அழத் தொடங்கினாள்.மேசையில் கண்ணீர் சிதறியது.’என்ன நடந்தது ஏன் அழுகிறீர்கள்’என்று சொல்லியவாறு அவள் கண்ணீரைத் துடைக்கப் போனேன்.’தொட வேண்டாம்’ எனக் கையைத் தட்டிவிட்டாள்.அழுது கொண்டே ‘இன்றோடு எங்கள் காதல் முடிகிறது’ இனி என்றுமே சந்திக்க முயற்சிக்காதீர்கள்,நான், என் உயிருள்ள வரைக்கும் உங்களைச் சந்திக்க மாட்டேன்’ என்றாள்.அழுகை சிறிது தணிந்து அவள் கோபம் கொப்பளித்து நின்றது.

‘ஏன், என்ன நடந்தது’ என்றேன்.’ உங்களைக் காதலித்ததற்கு இது போதுமென்றாள், என்னை எதுவும் கேட்க வேண்டாம், இவ்வளவு கேவலமான மனிதன் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை’ என்றாள்.எனக்கும் கோபம் வந்தது’ என்னவென்றாலும் சொல்லித் தொலையுங்கள்’ என்றேன்.சொல்ல மாட்டேன், சொன்னால் எனக்குத்தான் அசிங்கம் ,எழுந்து போங்கள்’ என்று சொல்லிவிட்டு அவள் அறைக்குள் போய்விட்டாள்.அவளின் தோழி தேநீரைக் கொண்டு வந்து நீட்டினாள்.’வேண்டாம், என்ன நடந்தது ‘ என்று தோழியிடம் கேட்டேன.; ‘தெரியாது இன்று முழுக்க அவள் அழுது கொண்டிருந்தாள்,கேட்டும் பதில் சொல்லகிறாள் இல்லை’ என்றாள் தோழி .

நடைப்பிணமாக அவளின் விடுதியைவிட்டு வெளியே வந்தேன் மூளைக்குள் ஏதோ செய்தது. நண்பனுக்குச் சொல்லாமல் அந்த இடத்தைவிட்டுப்

போய்விட்டேன்.தனியனாக வசித்து வந்த எனக்கு அவள் ஆதரவாக பிடிமானமாக இருப்பாள் என எண்ணினேன். அதுவுமில்லாமல் போய்விட்டது.இரவினில் நித்திரையில்லாமல் தவித்தேன்.’ ஏன் கோபித்தாள், ஏன் என்னை வெறுத்தாள், விடைகாண முடியாமல் தவித்தேன்.ஒருவருடமாக எங்கும் போகாமல், வீட்டுக்குள்ளேயே என்னைச் சுருக்கிக் கொண்டேன்.தற்கொலை செய்து என்றுகூட யோசித்தேன்.

நாட்கள் செல்லச் செல்ல ஏமாற்றத்திலிருந்து விடுபடத் தொடங்கினேன்.’என்னை எங்கும் சந்திக்க வேண்டாம் என்றதால் நான் போகும் இடங்களான கோவில் திருவிழாக்களில்கூட அவள் என் கண்களில் எத்துப்படக்கூடாது என்று எண்ணினேன்.

ஒருநாள் அவள் வீட்டுப் பக்கம் போனேன்.அவளும் அவளுடைய சகோதரிகளும் முற்றத்தில் நிற்பதைக் கண்டேன்.என்னைக் கண்டதும் அவர்கள் அனைவருமே வீட்டுக்குள் போய்விட்டார்கள்.அவளின் தங்கைகள் என்னை வீதிகளில் கண்டால் ஏளனமாகப் பார்த்தார்கள்.எனக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.எல்லோருக்கும் முன்னாள் குற்றவாளியாக நின்றேன்.

ஒரு வருடத்திற்குப் பின்னர் எனது நண்பனை அவள் கல்யாணம் செய்து கொண்டாள் என அறிந்தேன்.

எனக்குள் பலவாயிரம் கேள்விகளும், கோபமும், வேதனைகளும்.இரண்டு வருடம் கழிந்து எனக்கும் எனது மாமன் மகளுக்கும் கல்யாணம் நடந்தது.எனது காதல் பற்றி மாமி அரசல்புரசலாக அறிந்திருந்ததால் முதலில் அவர் எங்கள் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை.மாமாவின் வற்புறுத்தலால்தான் கல்யாணம் நடந்தது.மாமன் மகள் மனைவியானதன் பின்புகூட எனது காதல் பற்றி எதுவும் கேட்கவில்லை.

இருபது ஆண்டுகள் ஓடிமறைந்துவிட்டன.எனது காதல் தோல்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.என்னை கடைசியாகச் சந்தித்த அதே வெறுப்பையே இன்றும் என்னிடம் காட்டினாள். உற்சாகமற்ற நிலையில் மாப்பிளை பொம்பிளையை வாழ்த்திவிட்டுப் போவம் என்று எழுந்த போது’ இருங்கள் ‘ என்று சொல்லிவாறு எனக்கெதிர் கதிரையில் உட்கார்ந்தாள்.என்னை உற்றுப் பார்த்தவள்,’மூடிமறைக்காமல் உண்மையைச் சொல்லுங்கள்,உங்களுடைய நண்பரும் எனது கணவருமான இராஜேஸ்வரனிடம் ‘ சொன்னீர்களா இல்லையா’ என்றாள். ‘நான் என்ன சொன்னனான் என்று அவன் சொன்னவன், இப்பவாவது சொல்லுங்கள்’ என்றேன்.மீண்டும் அவள் கண்கள் கலங்க அடக்கமுடியாத அழுகையை அடக்கியபடி’ நான் நர்ஸாய் இருக்கிறதால,நிறைய குளிசைகளோடு பழகுகிறவள், நான் கெட்டுப் போனாலும், குளிசையால்; பத்தினி மாதிரி சரிப்படுத்திப் போடுவாள் ‘என்று சொன்னீர்களா இல்லையா’ என்று அவள் சொல்லி முடிக்குமுன், கோபத்தில் கதிரையை தள்ளிவிட்டு எழுந்தேன் முகத்தில் அத்தனை இரத்தமும் பரவுவதை உணர்ந்தேன் ‘ என்ன விசர்க்கதை கதைக்கிறாய், அவனிட்டை நான் ஒருநாளுமே அப்படிச் சொன்னதேயில்லை’ என்றேன் சத்தமாக.

‘அப்படியென்றால் சத்தியம்’ செய் என்றாள்.’யார் மீதென்றேன்’ ‘உங்களுடைய மனைவி மீதும், பிள்ளைகள் மீதும்’என்றாள்.ஒரு விநாடிகூட யோசிக்கவில்லை, அவர்கள் மீது சத்தியம் செய்தேன்.அதே வேகத்தில் அவள் தலையில் அடித்து ‘உன்னில் வைத்த உண்iமான காதல் சாட்சியாகச் சொல்கிறேன், நான் ஒருநாளும் அப்படி நினைக்கவும் இல்லை சொல்லவும் இல்லையென்றேன்.

அப்படியே அவள் சிலையானாள்.’நம்பிறன்’ என்றவள் என் கைகள் மீது முகத்தை வைத்து விக்கி விக்கி அழுதாள். எனது சொந்தக்காரி நடப்பதைக் கவனித்துக் கொண்டேயிருந்தாள்.சிலர் எங்களைக் கவனித்துக் கொண்டேயிருந்தார்கள்.

‘எல்லாரும் பார்க்கினம்’ அழாதை என்றேன். ‘பார்த்தால் பார்க்கட்டும்’ என்றவளின் இருபது வருசம் பாரம் கண்ணீராய் என் கைகளில் வழிந்தது.

அப்பொழுது ஒரு பதினைந்து மதிக்கத்தக்க ஒரு பெண்பிள்ளை வேகமாக எங்களை நோக்கி வந்தது. அவள்’ அம்மா ஏனம்மா அழுகிறாய், இவர் யாரம்மா’ என்றாள். ‘இவள் என்னுடைய மகள்’ என்ற தர்மினி’ இவரா எனது அவசர புத்தியால் கிடைக்காமல் போன உத்தமன், உனக்கு அப்பாவாக வரவேண்டியவர்’ என்று அமைதியானாள்.கண்ணீரை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.எல்லாரும் பார்க்கினம் அழாதை என்று சொல்லியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.

ஏதோ முடிவெடுத்தவளாக அவள் முகம் இறுகியது.நான் எழுந்து மணமக்களை நோக்கிப் போக, அவளும் மகளை அழைத்துக் கொண்டு என் பின்னாலேயே வந்தாள் . என்னுடைய சொந்தக்காரி என்னையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தாள்.

வரிசையில் காத்திருந்து மணமக்களுக்கருகில் போக அவளும் வந்தாள்.’இது சரியில்லை, பார்க்கிறவை ஏதாவது நினைப்பினம்’ என்றேன்.’பரவாயில்லை என்றவள்,மகளை நடுவில் விட்டு என்னுடன் நின்றாள்.

கீழே இறங்கி வந்தோம்’ சுவீடனுக்கு எப்ப போகிறீர்கள்’என்றேன்.இன்றைக்கே போகிறேன்’ என்றவள், சரியான முடிவெடுக்க வேணும்’ அதுதான் போகிறேன்’ என்றாள்.

‘சரி வாறன், மோட்டுத்தனமாய் எதுவும் செய்யாதீர்கள்’ என்று புறப்பட்டேன்.’ம்’ என்று மட்டும் தலையாட்டினாள்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, எனது சொந்தக்காரியை கடையொன்றில் சந்தித்தபோது,’ உங்களுடைய பழைய ஆள் தனது புருசனை உடனடி விவாகரத்துச் செய்துவிட்டாளாம், தெரியுமா’ என்றாள்,’தெரியாது’ என்றேன்.

தர்மினியை கல்யாண வீட்டில் சந்தித்து ஆறுமாதங்கள் கடந்த பின், தர்மினியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.மனைவி அந்தக் கடிதத்தை தந்தாள்.பிரித்து வாசித்தேன், அன்பின் உத்தமன்,இருபது வருசங்கள் ஒரு பொய்யுடன் வாழ்ந்ததை

நினைத்து வெட்கப்படுகிறேன். உங்களை நினைக்கையில் என்னை நினைத்துக் கூனிக்குறுகிறேன்.அவரிடமிருந்து நிரந்தரமாக விடுபட்டுவிட்டேன்.எனக்கு மஞ்சள் காமாலை தீவிரமாகிவிட்டது.வெகு சீக்கரத்தில் உங்கள் நினைவுடன் இறந்துவிடுவேன். அவன் என்னைக் கெட்டுப் போனவளாகவே இதுவரை போலியாக வாழ்ந்திருக்கிறான், நான் செத்தால் என்னைப் பார்க்க வருவீர்கள்தானே……………வரவேண்டும்’ கடிதத்தை முடிக்காமலே தர்மினி என கையொப்பமிட்டிருந்தாள்.

கடிதத்தை மனைவியிடம் கொடுத்தேன்,வாசித்தாள் எதுவுமே சொல்லாமல் திருப்பித் தந்தாள்.கடிதம் கிடைத்து மூன்றாம் நாள் வேலையில் இருந்தேன். மனைவி கைத்தொலைபேசிக்கு எடுத்தாள்,என்ன பிரச்சினையோ என்று பதட்டத்துடன் எடுத்தேன்.’தர்மினி……’என்றவள்,தயங்கினாள்; என்ன அவளுக்கு என்றேன்’போயிட்டாள்’ என்றாள், புரிந்து கொண்டேன்.மஞ்சள் காமாலை அவளைக் கொல்லவில்லை, பொய்யன் ஒருவனுடன் இருபது ஆண்டுகள் அருவருப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேனே என்ற வேதனை அவளைக் கொன்றுவிட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *